அழியாச்சுடர்

சி மௌனகுரு
சி மௌனகுரு

அன்புள்ள ஜெயமோகன்

முன்னர் உங்களிடம் குறிப்பிட்ட மஹாகவி ருத்ரமூர்த்தியின் பா நாடகமான புதியதொரு வீட்டை உருவாக்கி விட்டேன். அது இவ்வாரம் 19 ஆம் 17 ஆம் திகதிகளில் காலை மாலை இரு காட்சிகளாக மேடை காண இருக்கிறது

எனது 75 ஆவது வயதை இம்மாதம் 9 ஆம் திகதிதான் கடந்தேன். 76 ஆம் வயதில் புதியதொரு வீடு. இதில் பல பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் நடிக்கிறார்கள் .14- வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டோர்

1960 களின் பிற் பகுதியில் ஈழத்துத் தமிழ் நாடக உலகில் புதிய நெறியொன்று உருவாகத் தொடங்கியது. இப்போக்கில் நெறியாளர்கள் பிரதானமானவர்கள் ஆனார்கள். .பாரம்பரிய நாடகத்தின் சாரத்தையும் மேற்கத்தைய நாடக நெறிமுறைகளையும் இணைத்த இவ்வகை நாடகங்கள் மோடி நாடகங்கள் அல்லது ஒயிலாக்க நாடகங்கள் என அழைக்கப்பட்டன.

இந்நாடகத்தின் ஈழத்தின் வடபகுதிக் கரையோரக் கிராமமொன்றில் மீனவக் குடும்பமொன்றில் நடந்த சம்பவமும் அம்மனிதர்கள் அதனை எதிர் கொண்ட விதமும் காட்டப்படுகிறது. இந்நாடகத்தின் பாத்திரங்கள் அனைத்தும் வாழ்க்கையை வாழ்ந்து கடக்க நினைக்கும் பாத்திரங்கள்.வாழும் ஆசைதான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும் வாழும் உறுதியையும் தருகிறது

இதனை நான் 1978இலும் 1989 இலும் யாழ் பல்கலைக்க்ழக மாணவரை வைத்துத் தயாரித்தேன். 1993இல் கிழக்குப்பல்கலைக்க்ழக மாணவர்களை வைத்துத் தயாரித்தேன். இப்போது 2018 இல் மட்டக்களப்பின் பாடசாலை மாணவரகளை வைத்துத் தயாரிக்கிறேன். இது நான்காவது தலை முறை.முதல் தலைமுறைக்கு இப்போது வயது 60 ஆகிவிட்டது. இரண்டாம் தலைமுறைக்கு இப்போது வயது 50 ஆகிவிட்டது. மூன்றாம் தலைமுறைக்கு இப்போது வயது 40 ஆகி விட்டது. நான்காம் தலைமுறைக்கு இப்போது வயது 16-20 வயதாகிவிட்டது. இதில்நடிக்கும் அதிகமான மாணவர்கள் 14-16 வயதானவர்கள்.11 ஆம் வகுப்புக்கு இந்நாடகம் பாட நூலாக இருக்கிறது

இச்சிறுவயதில் இந்தப்பாத்திரங்களையும் காத்திரமான இதன் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள விளையாட்டுப்புத்தியுடைய இம் மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். முறையான தொடர் பயிற்சிகள் அவர்களை காத்திரமானவர்களாக ஆக்கின அதன் பெறு பேற்றை மேடையில் நீங்கள் காணலாம்

ஒருவகையில் இந்நாடகம் இம்முறை எனக்கு ஒரு பெரும் சவாலாகவே அமைந்தது சவாலை எதிர்கொண்டு வென்றேனா என்பதை மேடையில்தான் பார்க்கவேண்டும்

அன்புடன்

மௌனகுரு

***

29598219_1628161977231317_2421774700342837013_n

அன்புள்ள மௌனகுரு அவர்களுக்கு

இன்று இக்கடிதம் எனக்கு ஒரு பெரிய மன எழுச்சியை உருவாக்கியது. நீங்கள் சொல்லும் இந்தத் தலைமுறைக் கணக்குக்கு வெளியே இலங்கையில் அரசியலில் பெரிய அலைகள் அடித்து ஓய்ந்துள்ளன. இறப்புகள், இழப்புகள். நிலம் மாறிவிட்டது. மக்கள் பெரும்பாலானவர்கள் அகன்றுவிட்டனர். அதன் நடுவே புயலில் சிற்றாலயத்தின் கருவறைக்குள் அணையாது எரியும் சுடர் போல கலை தன்னை தக்கவைத்துக்கொள்கிறது

கலையின் இந்தப்பிடிவாதத்தை அரசியலாளர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் உலகிலுள்ள அனைத்தையும் தன் அரசியலுக்குப் பயன்படுத்தும் வெறியில் கலையையும் அவர்கள் அவர்களுக்குரிய எளிய கருவியாகவே காண்கிறார்கள். அதன் தவமும் கனவும் வேறு என அவர்களிடம் சொல்லி விளங்கவைக்கவே முடியாது. அவர்களின் நோக்கில் வீணானதாக, ஒதுங்கிக்கொண்டதாக கலை தோற்றமளிக்கும். ஆனால் அதன் அழியாத உறுதியில் ஓர் அறைகூவல் உள்ளது. அது பிற அனைத்தும் தோற்றாலும் தோற்காத ஒரு போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டுள்ளது

என் வணக்கம்

ஜெ

***

முந்தைய கட்டுரைபாவண்ணன், பி.கே.சிவக்குமார் -சுட்டிகள்
அடுத்த கட்டுரைசெம்பன் துரை