அன்புள்ள ஜெ.,
நீங்கள் இலங்கை சென்றிருக்கிறீர்களா? இந்த பதிவு இலங்கை சம்பந்தப்பட்டது.
சென்னைத் தொலைக்காட்சியின் கொடைக்கானல் ஒளிபரப்பு 1987-ல் தொடங்கப்பட்டது. அப்போது ஊருக்கு நான்கு வீடுகளில் டிவி இருந்தால் அதிசயம். பஞ்சாயத்து போர்டில் டிவி பார்க்க மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். 1987 உலகக்கோப்பையில் மரடோனாவின் சாகசங்களைப் பஞ்சாயத்து போர்டில் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. 1987க்கு முன்பு மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு வானொலி மட்டுமே. அதிலும் சிலோன் ரேடியோ என்று அன்போடு மக்களால் அழைக்கப்பட்ட இலங்கை வானொலி அளித்த பொழுதுபோக்கு இன்பத்தை என்றென்றும் மறக்க முடியாது. குறிப்பாக 1975-85 இடையேயான காலகட்டம் அப்போது பதின் வயதில் இருந்தவர்கள் மறக்க முடியாதவை.
சினிமாப் பாடல்களை இத்தனை விதமாய் வழங்க முடியுமா? நெஞ்சில் நிறைந்தவை, பொங்கும் பூம்புனல் – மாலை 5 மணிக்கு – இந்த நிகழ்ச்சியின் தொடக்க இசை மறக்க முடியாதது, நேயர் விருப்பம் – சங்களா மங்களா என்ற பெயர் அடிக்கடி வரும், ஒரு படப்பாடல்கள், பாட்டும் பதமும், இசையும் கதையும், இந்திப்பாடல்கள் – மதியம் 1.30-க்கு, விவசாயிகள் விருப்பம். சனி மற்றும் ஞாயிறுகளில் “திரை விருந்து” – பாசமலர் அடிக்கடி ஒலிபரப்புவார்கள் – பெண்கள் விசும்பி விசும்பி அழுது கொண்டிருப்பார்கள், பார்த்திருக்கிறேன். நல்ல தமிழ் கேட்போம் நிகழ்ச்சியில் அநேகமாக சிவாஜியின் பழைய படத்திலிருந்து எதாவது ஒலிச்சித்திரம் இருக்கும். ஜெமினி கணேசன் பாட்டு வாத்தியாராக நடிக்கும் ஒரு ஒலிச்சித்திரம் மிகவும் பிரபலம்.அடிக்கடி ஒலி பரப்புவார்கள். படம் ஞாபகமில்லை. சாயங்காலம் 5.30-க்கு “பிறந்தநாள் இன்று பிறந்தநாள். நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்” என்று டி.எம்.எஸ் ஆரம்பித்து விடுவார் – அதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகழ்ச்சி. காலையில் சிறிதுநேரம் பக்திப் பாடல்கள். இரவில் கொஞ்சம் கர்நாடக இசை. இரவு 9 மணிக்கு “இரவின் மடியி-லோடு தூங்க வைப்பார்கள். நடு நடுவே விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள், செய்திகள், பொப்பிசைப் பாடல்கள். தேர்ந்தெடுத்த பாடல்கள். மிகப் பழைய பாடல் கூட ஒலிபரப்புவார்கள். A.M. ராஜா, ஜிக்கி பாடல்கள் நிறைய போடுவார்கள். என்னுடைய வயது நாற்பத்தியொன்பது. நான் 40 மற்றும் 50களில் வெளிவந்த பாடல்களையும் பாடிக்கொண்டிருக்கிறேன் என்றால் ஒரே காரணம் இலங்கை வானொலிதான்.
அவர்கள் ஒலிபரப்பும் சில பாடல்கள் நம்முடைய வானொலி நிலையங்களில் நாம் கேட்கக் கிடைக்காதவை “தசரதனுக்கு ஒன்பது பெண்கள்” “அக்ரஹாரத்தில் கழுதை” “புதுச்செருப்பு கடிக்கும்” போன்ற வெளிவராத படங்களில் இருந்து. “புத்தம் புது காலை…” (அலைகள் ஓய்வதில்லை) “தூரத்தில் நான் கண்ட உன் முகம்…”(நிழல்கள்), “மஞ்சள் வெயில்..மாலையிட்ட பூவே..” (நண்டு) போன்ற படங்களில் இல்லாத, படமாக்கப்படாத பாடல்களை முதன் முதலில் இலங்கை வானொலியில் தான் கேட்டேன். மலேசியா வாசுதேவன் பாடிய “ஒரு மூடன் கதை சொன்னான்.. ” (நெஞ்சில் ஆடும் பூ ஒன்று), பட்டுல சேலை…(பண்ணைப்புரத்து பாண்டவர்கள்) அநேகமாக தினமும் ஒரு முறையாவது போட்டு விடுவார்கள். இன்று ஒரு படத்தை பார்க்கிற பரபரப்பு அன்று ஒரு பாடலைக் கேட்பதில் இருக்கும் – நிகழ்ச்சி அறிவிப்பாளர்களின் பங்களிப்பு அந்த அளவிற்கு இருக்கும். மயில்வாகனம் சர்வானந்தா, சாய் விதூஷா, ஜெயகிருஷ்ணா, கே எஸ் ராஜா (இனக்கலவரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்), ராஜேஸ்வரி ஷண்முகம், அப்துல் ஹமீத் – மறக்கக் கூடிய பெயர்களா அவை. இன்று இவர்களை ஞாபகப்படுத்த சூரியன் பண்பலையில் யாழ் சுதாகர் இருக்கிறார்.
கூகுளின் உபயத்தில் “பொங்கும் பூம்புனலின்” தொடக்க இசையை மறுபடி கேட்டபோது நனவு மறைந்தது காலம் உறைந்தது. இசை முடிந்தவுடன் “அந்த நாள் போனதம்மா… ஆனந்தம் போனதம்மா…” என்ற டி எம் எஸின் பாடல் தான் நினைவுக்கு வந்தது.
பொங்கும் பூம்புனல் தொடக்க இசை
https://www.youtube.com/watch?v=qfLcy6gMLLY
https://www.youtube.com/watch?v=GN_h0ioona0
மறக்க முடியாத சில பாடல்கள்
https://www.youtube.com/watch?v=UwT5htkPn8I
https://www.youtube.com/watch?v=oijasCnOmNg
அன்புள்ள
கிருஷ்ணன் சங்கரன்.
***
அன்புள்ள கிருஷ்ணன்
உங்கள் கடிதம் வழியாக இணையத்தில் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சென்றடைந்தேன். என் வயதை ஒட்டியவர்களுக்கு அக்குரலின் கம்பீரமும் விரைவும் ஒரு பெரிய கனவை விதைப்பவை. அவருடைய வானொலி அறிவிப்பு அக்காலகட்டத்தின் முதன்மையான அடையாளத்தில் ஒன்று.
என் இளமையில் ரேடியோ அவ்வளவாக கிடையாது. மர்ஃபி வால்வ் ரேடியோதான். பெரிய தேக்குபெட்டியில் பச்சை ஒளிப்பரப்புடன் பொன்னிற திருகு குமிழ்களுடன் நவீனத் தொழில்நுட்பத்தின் காட்சி அடையாளமாக வீடுகளில் உயரமாக அமைக்கப்பட்ட பீடங்களில் அமர்ந்திருக்கும். ஒலிக்காதபோது மஞ்சள், நீலம், சிவப்பு நிறங்களில் வெல்வெட் திரைபோட்டு மூடி வைத்திருப்பார்கள். அப்பாக்களோ மூத்த அண்ணன்களோதான் தொடமுடியும். அக்காக்கள் கெஞ்சிக்கேட்டுத்தான் அதை போட்டு கேட்கவேண்டும்.
குமரிமாவட்ட்த்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெளிவாகவே எடுக்கும். நெல்லையும் திருவனந்தபுரமும் அதற்கு அடுத்தபடியாகத்தான். திருச்சியும் மதுரையும் கரகரக்கும். ஆகவே தமிழிசை என்றால் இலங்கை வானொலிதான். அன்றெல்லாம் படிப்பு முடித்து திருமணத்திற்குக் காத்திருக்கும் அக்காக்களின் உலகமே வானொலிதான். திரைப்படப் பாடல்கள், திரைப்பட ஒலிச்சித்திரங்கள், வானொலி நாடகங்கள் என அதிலேயே வாழ்வார்கள். மர்ஃபி வானொலிக்கு வலை போன்ற அதிர்வுவாங்கி தேவை. அதை வீட்டிலிருந்து அருகே உள்ள தென்னை மரம் வரை இழுத்துக் கட்டி வைப்போம். அப்படியும் மழைநாட்களில் கரகரப்புதான் மைய ஒலியொழுக்காக இருக்கும். பயிற்சி ஏட்டில் கோடுமீது எழுத்துக்கள் போல கரகரப்பின்மேல் பாடல்கள், பேச்சுக்கள்.
எழுபதுகளில்தான் டிரான்ஸிஸ்டர் ரேடியோ பிரபலமாக ஆரம்பித்த்து. வால்வ் ரேடியோக்களின் கரகரப்பு மறைந்த்து. வானொலியை குழந்தைபோல அருகே வைத்துக்கொண்டு அக்காக்கள் இரவு துயில்கொண்டார்கள். மானசீக்க் காதலனைப்போல அது அவர்களை கொஞ்சிக்கொண்டே இருந்த்து. அதிலிருந்து கே.எஸ்.ராஜாவின் குரல், ஆண்மையின் சின்னம் அது. அவர்களில் அது எழுப்பிய கனவுகளை என்னால் இன்று ஊகிக்க முடிகிறது. சைக்கிள் சர்க்கஸ்கள், கிராமத்திருவிழாக்களில் கே.எஸ்.ராஜாவை குரல்போலி செய்யும் உள்ளூர் அண்ணன்கள் கே.எஸ்.ராஜாவின் புகழின் ஒரு பகுதியை தாங்களும் பெற்று காதலிகளை வென்றனர்.
கே.எஸ்.ராஜாவின் வாழ்க்கையைப்பற்றி குறைவாகவே இணையத்தில் உள்ளது. இலங்கை ஒலிபரப்புநிலைய ஊழியராக இருந்த கனகரத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா யாழ்ப்பாணம் காரைநகரில் பிறந்தார். தந்தை மருத்துவர். தாயார் ஆசிரியை. நான்கு தமக்கையரும் மருத்துவர்கள். 1966ல் கொழும்பு ராயல் கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இலங்கைப்பற்கலைக் கழகத்திலும் பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் வேதியியலில் பட்டம் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் இலங்கை வானொலியில் பணியில் சேர்ந்தார்.
1983ல் இலங்கையில் இனக்கலவரம் ஆரம்பித்தபோது ராஜா தமிழகத்திற்குச் சென்றார். அங்கே தமிழர்ஒற்றுமை சார்ந்த சில பாடல்களை ஒலிபரப்பியமையால் அவரை தமிழர் சிலரே காட்டிக்கொடுத்த்தாகவும், இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமையால் தமிழகத்திற்கு வந்த்தாகவும் அவர் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொன்னார். தமிழகத்தில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புடன் இணைந்து செயல்பட்டார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் அரசியல் ஈடுபாடு இருக்கவில்லை. எதனுடனும் இணைந்து அவர் செயல்படவுமில்லை. அனைத்து இயக்கங்களும் ஒன்றுபடவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதையும் விகடன் பேட்டியில் சொல்கிறார்
1987ல் இந்தியா இலங்கை அமைதி ஒப்பந்தம் உருவானது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இந்தியச் சார்புகொண்ட அமைப்பாதலால் இந்திய ஆதரவுடன் அது இலங்கையில் வேரூன்றியது. ராஜா இலங்கை திரும்பி வானொலி அறிவிப்பு வேலைக்கு மீண்டும் சேர்ந்தார். அவரை எவரோ கடத்தி கொன்று கொழும்பு கடற்கரையில் வீசிவிட்டுச் சென்றனர். அவருடைய கொலை விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டது என்றே பரவலாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் அன்று ஈபிஆர்எல்எஃப் அமைப்பின் முதன்மை எதிரியாக இருந்த்து புலிகள் அமைப்பே. ஆனால் டக்ளஸ் தேவானந்தாவால் நடத்தப்பட்ட அரசு ஆதரவு அமைப்பான ஈழ மக்கள் ஜனநாயக்க் கட்சியினரால் கொல்லப்பட்ட்தாக அக்கட்சியிலிருந்து வெளியேறிய டி.மதிவாணன் என்பவர் சொன்னதாக அனைத்து ஊடகங்களிலும் இப்போது செய்தி தொடர்ச்சியாகப் பதிவுசெய்யப்படுகிறது.டக்ளஸ் தேவானந்தாவின் அமைப்பு ஏன் கே.எஸ்.ராஜாவைக் கொல்லவேண்டும் என்ற கேள்விக்கு மறுமொழி இல்லை. உண்மையை இன்று உணர்வது மிகடினம்.
கே.எஸ்.ராஜா இலங்கைக்குத் திரும்பி மீண்டும் வானொலியில் வேலைசெய்யவேண்டும் என்பதை மட்டுமே தன் ஆசையாக விகடன் பேட்டியில் சொல்கிறார். அது எளிய கலைஞனின் ஆசை. அரசியல் இரும்புச்சக்கரம் கொண்ட வாகனம். அது மென்மையான நத்தைகளைத்தான் அரைத்துச்செல்கிறது. கலைஞர்கள் ஓடில்லாத நத்தைகள்.
ஜெ
***