செம்பன் துரை

pechi

படுகை – சிறுகதை

அன்புள்ள திரு ஜெயமோகன் அண்ணாவுக்கு ,

ஒவ்வொரு நாளும் உங்கள் இணையதள வாசிப்பிற்குப் பின், “படுகை” சிறுகதை படிக்காமல் வெளிவர முடிவதில்லை. என்னால் படித்துத் தீர்க்க முடியாத கதையது. வாசிப்பின் கணக்கு ஐம்பதைத் தாண்டியிருக்கும்.

சிங்கி எனும் கதைசொல்லி, கள்ளின் ஊக்கத்தில் அரைச் சன்னத நிலையில் தான் வியக்கும் இரு பெரும் வடிவங்களை விதந்தோதும் சித்திரம் இன்னும் என்னுள் உருவாகிக்கொண்டே இருக்கிறது.அந்த வைக்கோல் போரின் மீது நானும் படுத்துக்கொண்டு, கழுத்தும் காலும் கொள்ளும் நமநமப்பை சாவதானமாக நகங்களால் நீவிக்கொண்டு, காய்ந்த வறட்டுச் சரசரப்பின் ஒலியில், கண்ணயர இக்கதையைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

சிங்கிக்குத் தோதான பார்வையாளர்களாக இரு சிறுவர்கள், வாய்பிளந்து கதை கேட்கையில், கதை சொல்லி இன்னும் மாய வர்ணஜாலங்களைக் கதைக்குள் நிகழ்த்துகிறான்.

மானுடனான செம்பன் துரை, சிங்கியின் விவரிப்பில் பெரும் சக்தியாக உருவெடுப்பதும், வடிவற்ற பெருவியற்கைச் சக்தியான, அப்பள்ளத்தாக்கின் மலைக்காடுகள் பேச்சியென பூத உருக்கொள்வதும் அற்புதம்.

இன்னும் வசீகரிப்பது சிங்கியின் மொழி. “என்னத்தைத் தின்னுவானோ பய சிரிச்சாண்ணு சென்னா புலி வாயைப் பெளந்தது மாதிரியேன் இருக்கும்.பூதமில்லா அவன், செவலப்பூதம்!” என்று செம்பன் துரையை விவரிக்கும்போதும், “கொல நிண்ண வாளையையும் மண்டை பூத்த தெங்கயுமில்லியா பிளுதுகிட்டு வருவா மூடோட ? இப்பம் கண்டுதா மூதிக்க கெடப்ப ?” என்று வள்ளியை கரித்துக் கொட்டும்போதும் சிங்கியின் மொழி வியப்பையும் சலிப்பையும் அசலாக ஒலிக்கிறது. அதிலும் வெள்ளைக்காரர்களின் ரோஸ் நிற ஈற்றுச் சிரிப்பை, புலி வாயைப்பிளந்தது போன்று என்று வியக்கும் சிங்கி,அவன் காட்டின் பெருந் தொல்குடி என்பதை நமக்குள் ஆழமாக நிறுவுகிறான்.

அணைக்கட்டுதல் என்ற ஒரு பெரும் மானுட முயற்சியை, மேலை நாட்டு அறிவியல் தொழிற்நுட்பத்தை வியந்து பேசும் ஒரு படிப்பறிவில்லாத பாமரனின் அனுபவம் இலக்கியச் சிறுகதையாக ஆகிவரும் அற்புதம் தான் எனக்குள்ளிருக்கும் வளர்ந்த குழந்தையைக் கட்டிப்போட்டிருக்கக்கூடும்.தொண்ணூறுகளின் என்னைப்போன்ற டவுன் சிறுவர்களை, பேஜரும் கலர் டிவியும் கட்டிப்போட்டது மாதிரி.

கீழ்கண்ட இவ்வரிகள் தான், சமீபத்து வாசிப்பில் நான் கண்டுணர்ந்த திறப்பு. இக்கதையின் ஆன்மா மிகவனிச்சையாக வெளிப்படும் இடம். இக்கடிதத்தின் காரணம்.

“பச்ச நெறத்த அங்கு மாதிரி வேற எங்கயும் பாத்துக்கிட ஒக்காது கொச்சேமான்! வெயிலு கேறியாச்சிண்ணு சென்னா, ஆகெ ஒரு மணந்தேன். பச்சில மணம் கேட்டு தலை தரிச்சு நிக்கப் பளுதில்ல அங்க. செடி நெறச்சு பூக்க…. எல காணாம எதளு… செவலயும் மஞ்சயும் நீலமும்…. என்னத்துக்கு செல்லுயது, அங்க இல்லாத நெறம் உண்டுமா? அங்கு இல்லாத பூ உண்டுமா? அது பேச்சிக்க அடிவயிறுல்லா! அவ ஆரு? அம்மெயில்லா!”

தன் பெற்றோரைப் பலி கொண்ட, தன் சொத்துக்களைச் சூறையாடிய, தன்னினத்தை வேரோடு இடம்பெயரச் செய்த, ““கண்ணில்லாத மூளி, கொலம் கெடுத்த பாவி” எனச் சாபமிடப் பட்டும், தன் தோல்விக்குக் காரணமான வேற்றுநாடானின் வெற்றியைக் கொண்டாடும் சிங்கியின் பாமர மனதில் இன்னும் “அம்மெ” யாக அமர்ந்திருக்கும் பேச்சி அனிச்சையாக வெளிப்படும் இடம்.

எழுத்தாளர் கோணங்கியை காஸர்கோட்டுக்கு வரச் செய்த இக்கதை, உங்களுக்குள் உருவாகி வந்த கதையை எங்களுக்குக் கூற வேண்டுகிறேன்.

பேரன்பும் நன்றியும்

சங்கர் கிருஷ்ணன்

***

 

mincin

அன்புள்ள சங்கர் கிருஷ்ணன்

படுகை என் இளவயதிலேயே கேட்ட தொன்மம் வளர்ந்து உருவான கதை. அந்தத் தொன்மம் மிகச்சிறியது, ஒரு செம்பூதம் வந்து காட்டை வென்று அணையைக் கட்டியது. 1897 – 1906 ல் அன்றைய திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாள் ராமவர்மா. அதைக்கட்டிய பொறியாளர் ஹம்ப்ரே அலக்ஸாண்டர் மிஞ்சின். கூர்மூக்கு கொண்டவராதலால் மக்களால் மூக்கன்துரை என்றும் நிறம் காரணமாக செம்பன்துரை என்றும் அழைக்கப்பட்டார்

1868ல் ஜான் மிஞ்சினுக்கும் ஜூலி ஹில்லுக்கும் மகனாக லண்டனில் பிறந்தவர் ஹம்ப்ரே அலக்ஸாண்டர் மிஞ்சின். அவருடைய தந்தை ஊட்டியில் ஆங்கில அதிகாரியாக பணியாற்றினார். ஹம்ப்ரே படித்ததும் வளர்ந்ததும் ஊட்டியில். லண்டன் டல்விச் கல்லூரியில் 1883ல் சேர்ந்தார். 1885 படிப்பை முடித்து இந்தியாவந்தார். ஊட்டியில் கட்டிடப்பொறியாளராக பணியாற்றினார். ஆங்கில அரசின் பொறியாளராக அணைக்கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட மிஞ்சின் மூலம்திருநாள் மகாராஜாவின் அழைப்பின்பேரில்  திருவனந்தபுரம் வந்தார். அன்றைய திருவிதாங்கூரின் ஊழியரானார். ஃப்ரீமேசன் அமைப்பின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பாட்டாளராகவும் இருந்தார் மிஞ்சின். மதுரை, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் ஃப்ரீமேசன் அமைப்பின் விடுதிகளை உருவாக்கி நடத்தினார். ஃப்ரீமேசன் அமைப்பில் மாஸ்டர் காலர் எனும் உயரிய பட்டத்தைப் பெற்றிருந்தார். வழிபாட்டுக்குரிய ஆளுமை என்று இதற்குப்பொருள்.

mincin3

ஹம்ப்ரே 1906ல் ஆக்னீஸ் பாட்டிஸன் ஸ்டீல்- ஐ மணந்தார். அவருடைய தந்தை ராபர்ட் ஸ்டீல் மதுரையில் பணியாற்றினார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 1913ல் தன் நாற்பத்தைந்தாம் வயதில் பேச்சிப்பாறை வனப்பகுதியில் தொற்றிக்கொண்ட மலேரியாவால் உயிர்துறந்தார். பேச்சிப்பாறை அணையின் முன் அவருடைய சமாதி உள்ளது

பேச்சிப்பாறை அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்குப்பின் மிகப்பெரிய அணை. ஆனால் மேட்டூர் போல சமநிலத்தில் இந்த அணை இல்லை. ஆண்டு முழுக்க நீர் பெருகும் மூன்று காட்டாறுகள் சந்தித்து கோதையாறாக உருமாறும் மலைச்சரிவில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. பலமுறை பல இயற்கைப்பேரிடர்கள் நிகழ்ந்தபின்னர் தளரா மன உறுதியுடன் இதை மிஞ்சின் கட்டி முடித்தார். இதன் அன்றைய செலவு 26 லட்சம் ரூபாய். முதலில் 42 அடி உயரமிருந்தது. 1969ல் மேலும் ஆறு அடி உயரம் கூட்டப்பட்டது. 207.19 சதுர கிலோமீட்டர் அளவுக்கு விரிந்துள்ளது இதன் நீர்ப்பிடிப்புப் புலம். சராசரியாக 14 மீட்டர் ஆழமுள்ளது இந்த நீர்த்தேக்கம். அணை 425 மீட்டர் நீளமும் 120 .7 மீட்டர் உயரமும் கொண்டது இந்த அணை .

மிஞ்சினின் சமாதி பேச்சிப்பாறை அணையின் கீழ் உள்ளது. அதில் அவரைப்பற்றி கீழ்க்கண்ட குறிப்பு உள்ளது Mr. J.W. Minchin and his son Humphrey Alexander Minchin lived in India in the last quarter of 1800 and early 1900s. Humphrey died in 1913 at the age of 45. He was an Engineer and worked first as a Municipal Engineer in the City of Madurai in the erstwile British Province of Madras in India. Later he moved to the princely state of Travancore as Irrigation Engineer to construct an irrigation dam, which survives even today. He was buried near the dam and his tomb is still there. Both his father J.W Minchin and Humphrey were freemasons of high repute. Humphrey was born in 1868, according our records. He founded a freemasons lodge in Trivandrum, Travancore in 1897 under the English Constitution, which is still going strong under the name Lodge Minchin

ஃப்ரீமேசன் அமைப்பின் மதநம்பிக்கைகளின்படி மிஞ்சின் உயர்நிலையில் விடுதலை பெற்றவராகவும் ஞானத்தால் வழிபாட்டுக்குரியவராகவும் கருதப்படுகிறார். இப்போதுகூட லண்டனிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் ஃப்ரீமேசன்கள் அவ்வப்போது அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக சமாதிக்குத் தேடி வருவதுண்டு

 

minchin poster

மிஞ்சின் மரபான கிறித்தவ நம்பிக்கை கொண்டவரல்ல. ஃப்ரீமேசன் ஆகையால் விந்தையான பல சடங்குகளைச் செய்துவந்தார். திருவனந்தபுரத்திலும் மதுரையிலும் ஃப்ரீமேசன்களுக்கான விடுதிகளை அவர் நிறுவினார். அதில் வெள்ளையர்களுடன் இந்தியர்களும் உறுப்பினராக இருந்தனர். அவர்கள் ரகசிய வழிபாடுகள் கொண்டிருந்தனர். ஆகவே அவரைப்பற்றி ஏராளமான கதைகள் பரவின. அவர் சாத்தான் வழிபாட்டாளர் என்றுகூட சொல்லப்பட்டார்

ஆகவே அவருக்கு ஒரு புராணக்கதாபாத்திரத்தின் மர்மம் உருவாகி வந்தது. என் இளமையில் அவரைப்பற்றி ஏராளமான கதைகளை கேட்டிருக்கிறேன். அதிலிருந்து உருவானதே படுகை என்ற கதை. அதில் வரும் செம்பன் துரை ஒரு பூதம். பேராற்றல்கொண்டது, மலைத்தெய்வமாகிய பேச்சியை வென்று அக்காட்டை வயப்படுத்திவிட்டுச் செல்கிறது.

 

மிஞ்சின் சாமி
மிஞ்சின் சாமி

மிஞ்சின் இன்றும் நெல்லை குமரி மாவட்டத்தில் ஒரு நாட்டார்தெய்வ நிலையில் வழிபடப்படுகிறார். சில இடங்களில் மாடசாமிகோயிலில் அவருக்கு பீடம் உண்டு. கோழி வெட்டி குருதிபலி கொடுக்கிறார்கள். அவரைப்பற்றிய வாய்மொழிப்பாடல்களும் உள்ளன.

வரலாறே  ஒரு தொன்மமாகத்தான் உள்ளது. ஏராளமான விந்தைகளுடன், மர்மங்களுடன். அந்த வரலாற்றுச் சித்தரிப்பிலும் விடுபட்டுப்போகும் விந்தைகளால் ஆனது நாட்டார்த்தொன்மம். படுகை வரலாற்றையும் தொன்மங்களையும் ஊடுபாவாகக் கொண்டு நெய்த கதை. எப்போதேனும் பேச்சிப்பாறை சென்றால் வண்ணத்துப்பூச்சிகளின் படுகைக்கும் செல்லுங்கள்.மிகப்பெரிய சிறகுள்ள வண்ணத்துப்பூச்சிகளைக் காணலாம் அங்கே.

ஜெ

 மிஞ்சின் வழிபாடு

அலக்ஸாண்டர் மிஞ்சின் – ஃப்ரீமேசன் அமைப்பின் செய்தி

திருவனந்தபுரம் ஃப்ரீமேசன் விடுதிகள்

 

 

முந்தைய கட்டுரைஅழியாச்சுடர்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 24