இலக்கியத்தில் மாற்றங்கள் -கடிதம்

 

அன்புள்ள ஜெ..

இன்றைய உரை சற்று வித்தியாசமானது…  இலக்கிய பரிச்சயமற்ற பொதுவான பார்வையாளர்கள் வந்திருப்பார்கள் என சரியாக கணித்து அதற்கேற்ப சற்று உங்கள் பாணியை மாறறி பேசினீர்கள்..   எனவே அனைவருக்குமே நீங்கள் பேசியவை போய் சேர்ந்ததை அவர்கள் எதிர்வினையில் காண முடிந்தது…

என்னதான் யூட்யூப்பில் நிகழ்ச்சியை பார்க்க முடியும் என்றாலும் உரை முடிந்ததும் பலதரப்பினரிடம் பலதரப்பட்ட விஷயங்களை நீங்கள் உரையாடுவதையும் உரையாடலை கேட்பதையும் நேரில் வராதவர்கள் மிஸ் செய்கிறார்கள்..  gita as it was நூலில் உங்கள் கை எழுத்து வாங்கி விட்டு அது குறித்து சில கேள்விகள் கேட்க நினைத்தேன்..   ஆனால் அதை விட சிறந்த கேள்விகளை பிற நண்பர்கள் கேட்டதும் அவற்றை ஆர்வமாக கவனித்தேன்..

உங்கள் உரையில் மகாபாரதத்துக்கும் வெண் முரசுக்கும் இடையேயான வித்தியாசத்தை சொன்னீர்கள்…

சமீபத்தில் காஞ்சிபுரம் சென்றிருந்தேன்..  வழக்கமாக அங்கு போனால் கைலாச நாதர் ஆலயம் ஏகாம்பரநாதர் ஆலயம் என போய்விட்டு வந்து விடுவேன்.. வைஷணவ ஆலயங்கள் மீதோ கிருஷ்ணர் மீதோ ஈடுபாடு இருந்ததில்லை..    பாண்டவதூது பெருமாள் ஆலயம் குறித்து நீங்களும் பிற நண்பர்களும் எழுதியதைப் பார்த்து அங்கே சென்றேன்…  ஆலய அமைப்பும் அந்ந பிரமாண்ட பெருமாளும் என்றும மறக்க முடியாது..  ஜனமேஜயனுக்கு கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் அளித்த இடம் என ஆலயத்தின ஓர் அறிவிப்பு சொல்கிறது..    அது பலருக்கு எந்த பொருளையும் அளித்திருக்காது..  ஆனால் முதற்கனல் படித்தவர்களுக்கு ஜனமேஜயன் கதாபாத்திரம் அளிக்கும் மன எழுச்சி சொல்லில் விளக்க முடியாதது…   உலகில் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்    ஏழ்மையை படைத்தவன் இறைவன் என்றால் இறைவன் என்பவன் எதற்காக .. ஏழ்மையை இறைவன் படைக்காவிட்டால் அவனை விட சக்தி வாய்ந்தவைதான  உலகை ஆள்கின்றனவா   எல்லாமே கற்பிதம்தானா நன்மை மட்டுமே நிலவும் உலகை உருவாக்க முடியாதா என்று குருட்டு நாய் முட்டி மோதி அலைவது போல அலையும் பலர் ஜனமேஜயனில் தம்மை காண்பார்கள்…  அவனது குழப்பத்தை தீர்க்க சொல்லப்பட்டதுதான் மகாபாரதம் என்ற வகையில் அவன் நமது நன்றிக்குரியவன்..   அந்த மன்னனை நினைத்தபடிதான் ஆலயத்தில் அமர்ந்திருந்தேன்..   ஜனமேஜயன் பெற்ற சாபம் குருட்டு நாயாக தன்னை உணர்தல்  உலகின் எதிர்மறைகளை அழிக்க அவன் செய்யும் யாகம் அந்த முயற்சி வென்றால் என்ன நடக்கும் என்ற பலவிஷயங்களும் அவை சொல்லப்பட்ட விதமும் எழுத்து என்பது மகாபாரத காலத்தில் இருந்து முதற்கனல் காலம் வரை அடைந்து வரும் மாற்றங்களை வேறுபாடுகளை புரிய வைக்கிறது…

ஆனாலும் உரை மீது கேள்விகளும் உள்ளன…

நவீனத்துவ காலம் முடிந்து விட்டது என்பது மற்ற நாடுகளுக்கு சரியாக இருக்கலாம்…  நம் நாட்டுக்கு எப்படி ? ஒரு மகன் காதல் திருமணம் செய்கிறான்  ஒரு மகள் கணவனை பிரிகிறாள் என எந்த விஷயம் என்றாலும் பெற்றோரின  முதல் அக்கறை என்பது பிறர் என்ன சொல்வார்கள் என்ற பயம்தான்..   என் வீட்டு பிரச்சனையில் தலையிட நீங்கள் யார் என கேட்ட கணவனைப் படைத்த ஜெயகாந்தனுக்கு இன்றும் தேவை இருக்கிறதே..

நாங்கள் வசிக்கும் இடத்தில் திருட்டு பயல் வசிக்க கூடாது என போலிஸ் உதவியுடன் அவனை துரத்த முயல்கையில் என் வீட்டை யாருக்கு வாடகைககு விட வேண்டும் என்பதில் தலையிட நீங்கள் யார் என கேட்ட ஆணமைமிகு வீட்டு உரிமையாரைப் படைத்த ஜெய காந்தன் இன்றும் தேவைப்படுகிறார் அல்லவா..

போன்ற அறிவார்ந்த விமர்சனங்களை உரக்க வைக்கின்ற எழுத்துகளின் தேவையை கடந்து விட்டதாக நினைக்கிறீர்களா

அன்புடன்
பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்,

இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்துமுறையோ, தரிசனமோ  ‘காலாவதியாகி’ அடுத்த எழுத்துமுறையோ தரிசனமோ வருவதில்லை. இந்தத்தெளிவு மிக முக்கியமானது. புதியவற்றைக் கொண்டுவருபவர்கள் போதிய முதிர்ச்சியோ இலக்கிய வாசிப்போ இல்லாதவர்களாக இருக்கும்போது அப்படி உண்மையில் நம்பி சொல்கிறார்கள். இலக்கியம் காட்டுவது அது அல்ல.

உதாரணமாக மரபுக்கவிதையே கூட இன்னும் செல்லுபடியாகக் கூடியதே. அந்த மனநிலை, அதற்கான மொழிப்பயிற்சியுடன் எழுதப்பட்டால். எல்லா இலக்கிய எழுத்துமுறைகளும் நீடிக்கும். அவற்றின் இடம் ஒன்று உண்டு. புதியவை முன்பிருப்பவற்றை நிரப்புகின்றன, தொடர்ச்சியாக நிலைகொள்கின்றன. நான் இலக்கியத்துறையில் நிகழும் மாற்றம் என்றபோது இதையே உத்தேசித்தேன்

தமிழ்ச்சமூகத்தில் தர்க்கபூர்வமான அறிவார்ந்த எழுத்தின் இடம் என்றுமிருக்கும். யதார்த்தவாத இயல்புவாத எழுத்தே முதன்மைப்போக்காவும் இன்னும் பலதலைமுறைகளுக்கு இருக்கும். அவ்வுரையிலேயே யதார்த்தவாதம் இன்னமும்கூட முழுமையாக எழுதப்படவில்லை, எழுதவேண்டியவையே மிகுதி என்றே குறிப்பிட்டேன்.

ஆனால் இலக்கியத்தில் ஒரு பேசுபொருள் காலாவதியாகும். பலசமயம் சமூகத்தில் அப்பிரச்சினை நீடிக்கையிலேயெ இலக்கியத்தில் எழுதிக்கடக்கப்படும். உதாரணமாக, விதவைமறுமணம் இன்று இலக்கியத்தின் பேசுபொருள் அல்ல. அது பழைய கரு. ஏறத்தாழ அனைத்துக்கோணங்களிலும் பேசப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ்ச்சமூகத்தில் இன்னமும்கூட அது முழுமையாக ஏற்கப்படவில்லை. இன்னும் அதுசார்ந்த தடைகள், உணர்ச்சிச் சிக்கல்கள் உள்ளன.

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 25
அடுத்த கட்டுரைநகுலனின் உலகம்