அன்புள்ள ஜெயமோகன் ,
நேற்று நீங்கள் ஆற்றிய இலக்கியத்துறையில் மாற்றங்கள் உரை மிக செறிவாக அமைந்தது. வழக்கத்துக்கு மாறாக உரையில் சற்று கேளிகளும், நக்கல்களும் அதிகமாக தென்பட்டது, அது அவையை சற்று உயிர்ப்புடன் வைத்திருந்தது என்றே சொல்லலாம். மரபு இலக்கியத்தில் இருந்து நவீனத்துவம் வரை விவாதித்த தாங்கள், பின் நவீனத்துவத்தை பற்றியும் உரை நீண்டிருக்கலாம் என்றே தோன்றியது. அந்த உரையில் இருந்து சில கேள்விகள் மனதில் எழுந்தது. அவை,
முதலாவது, செவ்வியல் கலை பற்றி சொல்லும்போது, அதை ஒரு கட்டுமானத்துக்கள் முதலில் வடிவமைத்து விடுவார்கள் . பிறகு அதை காலம் செல்ல செல்ல அடுத்து வரும் கலைஞர்கள் சின்ன சின்ன முன்னேற்றங்கள் (improvisation) செய்து நிகழ்த்துவார்கள் என. உதாரணத்திற்கு கர்நாடக சங்கீதத்தை காலம் காலமாக அதே ராகங்களை எப்படி பாடுகிறார்கள் என்று சொன்னீர்கள். என்னுடைய கேள்வியானது, அந்த செவ்வியல் இசையை முதலில் கேட்கும்போது ஒரு பிரம்மாண்டம் தோன்றும். ஆனால் காலம் முழுக்க அதே ராகங்களை ரசிப்பது சாத்தியமா? கலைஞர்கள் வருடா வருடம் அந்த கலையில் செய்யும் சின்ன improvisation, கேட்கும் எல்லோராலும் உள்வாங்கிக் கொள்ளப்படுமா ? உதாரணத்திற்கு, நான் விக்கு விநாயகரம் ஐயா அவர்களின் இசையை கேட்டு மெய்மறந்து போவதுண்டு. ஆனால் அதிகமாக கேட்ட பின்பு, ஒரு monotonous feel வருகின்றது. அதை தவிர்க்க இயலவில்லை. செவ்வியல் கலைகள் மக்களிடம் பெருமளவு செல்வாக்கு இல்லாததற்கு இதை ஒரு காரணமாக சொல்லலாமா ?
மேலே கர்நாடக சங்கீதத்தை பற்றி பேசும்போது, ஹிந்துஸ்தானி இசை மனதில் எழுகின்றது. இதுவும் ஒரு செவ்வியல் கலை தான். முகலாய மன்னர்களால் பெருமளவுக்கு ரசிக்கப்பட்டு , பெரும் வளர்ச்சி கண்டது. ஆனால், இது கர்நாடக சங்கீதம் போல் மிக கட்டுக்கோப்பாக இல்லாமல், கலைஞர்களின் கற்பனை படைப்புகளுக்கு பெருமளவு இடம் அளிக்கிறது. இந்த தன்மையே, இதை ஒரு modern art form ஆக என்றென்றும் வைத்திருக்கும் என நம்புகிறேன். இந்த இரு செவ்வியல் கலைகளில் உள்ள வேறுபாடுகளை எப்படி அணுகுகிறீர்கள் ?
இரண்டாவது, நீங்கள் அடிக்கடி சொல்லும் விஷயம் தான். நேற்று உரை உட்பட. “இலக்கியத்தை கல்லூரிகளில் பயில முடியாது என”. அப்படி என்றால், காலம் காலமாக, நாலந்தா பல்கலைக்கழகம் தொடங்கி இன்று இருக்கும் கல்லூரிகள் வரை இலக்கியம் கற்றுத்தருவதன் நோக்கம் தான் என்ன. இதை ஒரு பேராசிரியர் கூடவா உணர்ந்திருக்கமாட்டார் ? இது ஒருபுறமிருக்க, அரசாங்க போட்டித்தேர்வுகளில் கூட இலக்கிய பாடத்திற்கு பெரும் செல்வாக்கு உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் முதல் போட்டி தேர்வு நடத்திய சீனா, இலக்கிய பாடத்தை மட்டுமே கொண்டது. பிரிட்டிஷ் அரசாங்கமும் லத்தீன், ஆங்கில புலமையையே ICS (இப்போது IAS) தேர்வின் தகுதியாக வைத்திருந்தது. இன்னமும் கூட, மத்திய மாநில தேர்வாணையங்கள் இதை பின்பற்றுகிறார்கள். நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால், இவர்கள் செய்வது அனைத்துமே ஒரு வீண் வேலைகள் தானே. இதற்கு மாற்று என வேறு இல்லையா ? இலக்கியத்தை முறையாக பயில்வதற்கு குரு அவசியம் என்று நீங்கள் சொல்வதுண்டு. உங்களுக்கு சுந்தர ராமசாமியும், நித்ய சைதன்யா யதியும் கிடைத்த மாதிரி, எல்லோருக்கும் ஒரு குரு அமைந்து விடுவார்கள் என சொல்ல முடியாது அல்லவா? அந்த ஒரு வெற்றிடத்தை, உண்மையான இலக்கிய ஆர்வலர்கள் எப்படி நிரப்புவார்கள்? வருங்காலத்தில், கல்லூரிகளில் இலக்கியம் கற்பிக்கும் முறைமைகளில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதா? அல்லது இலக்கியத்தை முறையாக கற்க ஒரு பொது இயக்கம் எந்த அளவுக்கு சாத்தியம்?
அன்புடன் ,
கார்த்திக் குமார்
***
அன்புள்ள கார்த்திக் குமார்,
செவ்வியல் பற்றி நிறையப் பேசலாம். பலவிஷயங்கள் பேசப்பேசத்தான் விரிவாகி வரும். நீங்கள் பேசிய செவ்வியலில் புதுமை என்பது அதிலொன்று. பழையசெவ்வியல் புதுமைகளுக்கு இடமில்லாதது. புதுமைகளை அனுமதித்தால் அதன் தனித்தன்மை அழியும். அதேசமயம் அதில் திரும்பத்திரும்ப நிகழ்வதன் சலிப்பு ஓரளவுவரை தவிர்க்கமுடியாததே. தேங்கியதன்மை பழைய செவ்வியலின் குறை.
அதைக் கடக்கவே நவீனச்செவ்வியல் என்ற ஒன்று உருவாகிறது. நாட்டார் அம்சங்களை, சமகால வாழ்க்கைக்கூறுகளை எடுத்துக்கொண்டு செவ்வியல் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது. அயல் செவ்வியல்கூறுகளுடன் உரையாடி , பெற்றுக்கொண்டு தன்னை உருமாற்றிக்கொள்கிறது. கர்நாடக சங்கீதம் என நாம் சொல்வது முகலாயர் காலத்தில் இங்குவந்த அயல்இசைமரபுகளுடன் உரையாடி தன்னை புதுப்பித்துக்கொண்ட பழைய பண்ணிசையைத்தான். இன்று அது மீண்டும் தேங்கிவிட்டிருக்கிறது. பண்ணிசை மேலும் பழைய காலத்தில் தேங்கிக்கிடக்கிறது.
நான் அறிந்தவரை இந்துஸ்தானி இசைக்கும் தெளிவான கட்டமைப்பு உண்டு. ஆனால் கற்பனை, அதாவது விரிவாக்க வாய்ப்பு அதிகம். அது அவ்விசையின் துணைப்புலமாக உள்ள பவுல் போன்ற நாட்டார்க்கூறுமிக்க வெவ்வேறு இசைப்பாணிகளுடனான உறவால்தான்
இலக்கியத்தை கல்லூரிகளில் கற்றுக்கொடுக்க முடியாது என நான் சொல்லவில்லை – நானே கற்றுக்கொடுத்திருக்கிறேன். பேராசிரியர் ஜேசுதாஸன் போன்றவர்கள் கல்விக்கூடம் வழியாக இலக்கிய மரபையே உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அது இலக்கியமறிந்தவர்களால்தான் நிகழமுடியும், அத்தகையோர் நம் கல்விக்கூடங்களில் பெரும்பாலும் இல்லை என்றே சொல்கிறேன். நான் அறிந்த சில உள்ளனர், ஆனால் நம் கல்விநிலையங்களில் அவர்களுகான சூழல் இல்லை.
ஜெ
***