மதுரை பாண்டியர்களின் முடிவு

thiru

மன்னர்களின் சாதி

ஜெ,

ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்பட்டது.

இதை நான் வாசித்தது இணையத்தில் .கிருஷ்ணன் என்று ஒருவர் இதைச் சுட்டிக்காட்டி ஜெமோவும் அபத்தமாக எழுதுவார் என்று தெரிகிறது என்று எழுதியிருந்தார்.

அதற்கு ஒருவர் [ஜிரா] பாண்டியர்களுக்குப் பிறகு மதுரையில் சுல்தான்கள் ஆட்சி நடந்தது என்று படித்திருக்கிறேன். அது தொடர்பான இபின் பதூதா குறிப்புகளையும்

என பதிலளிக்க முதலாமர்  ஆமாம். நாயக்கர்கள் விரட்டியது மதுரை சுல்தான்களை, பாண்டியர்களை அல்ல. இதுபோன்ற வரலாற்றுப்பிழையை அவர் செய்வது அதிர்ச்சி அளிக்கிறது என்கிறார்.

நான் இதை முதலில் வாசித்துவிட்டுத்தான் அக்கட்டுரைக்குச் சென்றேன். நீங்கள் சொன்னது வரலாற்றுச்செய்தியா? அப்படியென்றால் ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? இபின் பதூதாவையெல்லாம் மேற்கோள்காட்டுகிறார்களே?

சுந்தர்

அன்புள்ள சுந்தர்,

இது இணைய யுகத்தின் சிக்கல். இந்தவகையான பேச்சு எப்போதும் சாதாரணமாக வாய்மொழியாக நடந்துகொண்டேதான் இருந்தது. இன்று பதிவாகிவிடுகிறது. கூகிள் தேடுபவர்களுக்கு இதையெல்லாம் கொண்டுசென்று கொட்டுகிறது. ஆகவே அறிவை விட அறியாமையே எவருக்கும் ஏராளமாகக் கிடைக்கிறது.

அப்பட்டமான பிழைகள் கூட ஓரளவு பிரச்சினையற்றவை. இதேபோன்ற அரைகுறை அறிவின் வெளிப்பாடான பிழைகள் எளிதில் களையப்படத்தக்கவை அல்ல. அதை எவரேனும் களைந்தாலொழிய நம்முள் அவை வளர்ந்தபடியே இருக்கும்

தகவல்பிழைகள், நினைவுப்பிழைகள் எவருக்கும் உரியவை. சுட்டிக்காட்டப்பட்டால் திருத்திக் கொள்ளக்கூடியவையும்கூட. இக்கூற்றுக்களில் உள்ள பெரும்பிழை அறியாமையால் வரும் ஆணவம். தன் தகுதி என்ன தன்னால் எள்ளிநகையாடப்படுபவரின் தகுதி என்ன என்ற குறைந்தபட்சப் புரிதல் இவர்களுக்கு இல்லாததே பிழை. எப்போதைக்குமாக அறிவதற்கான எல்லா வாயில்களையும் அடைத்துவிடுகிறது இந்த உளநிலை.

ஒரு இருநூறுபக்க தமிழகவரலாற்று நூலை, அல்லது விக்கிபீடியாவை, வாசித்தாலே தெளிவுபடுத்தத் தக்க செய்திதான் இது அதைக்கூடச் செய்யாமல் இதை எழுதுகிறார்கள்.

அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காபூர் 1311 ல் தென்னகம் மீது படைகொண்டுவந்து மதுரையை இருபகுதிகளை ஆண்ட பாண்டிய அரசர்களான  வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் இருவரையும் வென்றார். மதுரை சுல்தானிய ஆட்சியை தொடங்கிவைத்தார். 1377ல் விஜயநகர மன்னர் குமாரகம்பண உடையார் மதுரையைக் கைப்பற்றி சுல்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

அனால் பாண்டிய அரசவம்சம் முடிவுக்கு வரவில்லை. நாயக்கர் அரசின் அரசப்பிரதிநிதிகளின்கீழ் பாண்டிய அரசகுடியினரே மதுரையின் ஆட்சியாளர்களாக இருந்தனர். மதுரையை ஆண்ட இறுதி பாண்டிய அரசர் வீரபராக்ரமபாண்டியன் என்பவர்தான். இக்காலகட்டத்தின் வரலாறு உதிரிச் செய்திகளாகவே கிடைக்கிறது. முழுமையாக இன்னமும் எழுதப்படவில்லை.

லக்கண நாயக்கரால் தோற்கடிக்கப்பட  வீரபராக்ரம பாண்டியன் அன்று சேரநாட்டின் பகுதியாக இருந்த தென்காசியை தலைநகராகக் கொண்டு சிறு அரசு ஒன்றை அமைத்தார். பாண்டிய அரசகுடியில் எஞ்சியவர்கள் ஐவர் கயத்தாற்றை தலைமையாகக் கொண்டு ஆண்டனர். தென்காசிப்பாண்டியர்களும் கயத்தாறு பாண்டியர்களும் 1529ல் விஸ்வநாதநாயக்கர் நேரடியாக மதுரைஅரசப்பொறுப்பை ஏற்று மதுரை நாயக்கர் அரசமரபை உருவாக்குவது வரை நீடித்தனர்.

விஸ்வநாத நாயக்கரின் அமைச்சரான அரியநாத முதலியார் கயத்தாறை ஆண்ட பஞ்சவழுதிகள் என்னும் பாண்டியர்களை தோற்கடித்து முற்றாக அழித்தார். தென்காசிப்பாண்டியர்களும் அவரால் அழிக்கப்பட்டனர். தென்காசி பாண்டிய வம்சத்தின் இறுதி  இளவரசியை கொல்லம் அரசர் மணந்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு பாண்டிய அரசகுடி முடிவுக்கு வந்தது. நான் குறிப்பிட்டது இந்த வரலாற்றையே

இது ஒரு பெரிய விஷயம் அல்ல. இந்த நீண்ட பதிலை ஏன் எழுதுகிறேன் என்றால் இதைப்போன்ற கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன. எதை எழுதினாலும் இணையத்தில்தேடி இதைப்போல எதையாவது கேட்கிறார்கள் இளம் வாசகர்கள்.

இதைப்போன்ற எந்தச் செய்தியை வாசித்தாலும் அதைச் சொல்பவர் எவர், எதையேனும் இதுசார்ந்து குறிப்பிடும்படி எழுதியிருக்கிறாரா என்று பாருங்கள்.  அவருடைய அறிவுலகத் தகுதியே அவருடைய கருத்தின் மதிப்பை தீர்மானிக்கிறது. அந்த தகுதி இல்லாதவர்கள், அந்தத் தாழ்வுணர்ச்சியால்தான் இதைப்போன்ற ஏளனங்களையும் எகிறிக்குதித்தல்களையும் இணையவெளியில் செய்துகொண்டிருக்கிறார்கள்

ஜெ

***

முந்தைய கட்டுரைநடிகையும் நாடகமும் – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 23