நடிகையும் நாடகமும் – கடிதங்கள்

jeya

நடிகையின் நாடகம்- கடிதங்கள்

நடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்

அன்புள்ள பார்கவி

மிகத்தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.[நடிகையின் நாடகம்- கடிதங்கள்] என்னுடைய இயல்பே இவ்விதம் தான். எனவே தான் எவருடனும் அதிகமாக பழகிக்கொள்ள இயலவில்லை. மிகவும் உந்தித்தான் ஒரு கட்டுரையை எழுத முடிகிறது. வாசிப்பு மட்டுமே எப்போதும் துணையிருக்கிறது அதில் ஜேகேயின் எழுத்துக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறேன்.

நீங்கள் சொன்னதுபோல இயல்பாக எவரும் பெண்ணின் கடந்துசெல்லலை எடுத்துக்கொள்வதில்லை. அவ்வியல்பு முழுக்க சுயநலமென்றே பார்க்கப்படுகிறது. அது உண்மை என்று நாமே நம்பும் அளவுக்கு திணிக்கப்படுகிறது. ஆம் சுயநலமே என்ன இப்போ? என்று எதிர்த்துக் கொண்டு அவ்வெண்ணத்திலிருந்தும் குற்ற உணர்ச்சியிலிருந்தும் வெளிவர வேண்டியிருக்கிறது. அதை நிகர் செய்யும் தத்துவங்களை தேடி படித்து நம் மனத்தை நிறுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது.

அப்படி எதிர்க்கும் தோறும் நாம் வலுவுள்ளவர்கள் என்று  அறியப்படுகிறோம் அறியப்படும்தோறும் தாங்கிக்கொள்கிறோம் சுமத்தப்படும் எடை மிகுந்துகொண்டே வருகிறது. மிக நேரடியாக அவர்களை அறியாமலேயே நம்மை இன்னொரு பெண்போலிரு என்று இந்த சமூகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அலுவலகத்தில், அண்டைய அயலில். மிக அரிதாக எப்போதேனும் நம்மை அறிந்து கொள்ளும் உறவுகள் வாய்க்கின்றன. என்னை என் தந்தை அறிந்துகொண்டதைவிட என்  தேடலை என் மகன் புரிந்துகொள்கிறான். அங்கும் தளர்ந்து சலித்து அமர முடியாது.

இவற்றிலிருந்து விடுபட்டுச் செல்வதே ஒரே வழி. ஆனால் எங்கு எப்படி? ஒருபோதும் இயலாது என்பதே விடை. அப்படிச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறதா என்று பின்னோக்கி யோசித்து மிகக்குழம்பி மீண்டும் இவர்கள் சொல்லும் அவ்விடத்திற்கே சென்று இருந்து தொலைத்தாலென்ன என்ற எரிச்சல்.

புறப்பாடு தொகுப்பில் ஜெ சொல்லியிருப்பார். ஒருமுறை வீடுவிட்டுச் சென்றபின் வருடம் கழித்து வருபவனால் மீண்டும் ஒரு மாதம் கூட தங்க முடியாது மீண்டும் கிளம்பிச் சென்றுகொண்டே இருக்கவேண்டியதுதான் என்று. ஏனெனில் சென்றவனை விட வந்தவன் இன்னும் அறிந்தவன், பெரியவன். உணர்வை கைவிட்டு அறிவை மட்டும் கொண்டு வாழ்ந்தால் மட்டுமே இங்கு நிலைக்க முடியும். அவ்விதம் முழுக்க உணர்வற்று அன்புகொண்டு இருத்தல் எளிதா என்ன?

ஜெயகாந்தனின் கல்யாணி அன்பும் அறிவும் நிகர்நிலைகொண்ட மனமும் கொண்டிருக்கிறாள். எனக்கு அவளோ கங்காவோ லலிதாவோ நெருக்கமாக இருக்கிறார்கள். நான் சென்று சேரவேண்டிய இடம் அவர்கள் என்று தோன்றுவதுண்டு.

நீங்கள் சொன்னதுபோல தனிப்பறவைகளுக்கும் அதே வானம் தான் சற்று வெளிச்சமிருந்தால் நன்று

நன்றி

கங்கா

***

அன்புள்ள ஜெ

கங்கா ஈஸ்வர் எழுதிய ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவலைப்பற்றிய மதிப்புரையை வாசித்தேன். ஜெயகாந்தனின் பார்வை என்பது வெளிப்படையாகவே ஆண்நோக்கு கொண்டது. ஆணாதிக்கம் என்று சொல்லமுடியாது. ஆனால் ஆண்தன்மை அதிலுண்டு. ஒருவகையில் அதுதான் நேர்மையானது. பெண்தன்மை என்று சொல்லிக்கொள்வது ஆண் மனதில் அமைவதில்லை. அமைந்தால் நன்றாகவும் இருப்பதில்லை. கங்கா அந்த ஆண்நோக்கிலான பெண்ணை பெண்ணாக நின்றுகொண்டு புரிந்துகொள்ள முயல்கிறார். அது ஒரு கூர்மையான பார்வையாக அமைகிறது. சமீபத்தில் உங்கள் தளத்தில் வாசிக்க நேர்ந்த இலக்கியவிவாதக் கட்டுரைகளில் இக்கட்டுரை மிகமுக்கியமானது என நினைக்கிறேன்

ஜெயகாந்தன் விடுதலையையே கருப்பொருளாகக் கொண்ட கலைஞன். அவர்காலகட்டத்தில் விடுதலையை அந்தளவுக்குக் கருப்பொருளாகக் கொண்டு எழுதியவர் எவருமில்லை. அந்தக்குரல் கொஞ்சம் உரத்ததாக இருந்தமையால் அது கலை அல்ல என்று ஒரு கூட்டம் நிராகரித்தது. ஆனால் அது மட்டுமல்ல அவர்களுக்கு அவர் சொன்ன விடுதலை என்ற கருத்தும் உவப்பானதாக இல்லை என்பதே மேலும் பெரிய காரணம். விடுதலைமேல் நம்பிக்கை இல்லாதவர்கள் க.நா.சு போன்றவர்கள். அவர்கள் அக்ரகாரங்களின் கடந்தகாலங்களை நினைத்து ஏங்கிக்கொண்டிருந்தவர்கள். அல்லது விடுதலைமேல் நம்பிக்கை இழந்தவர்கள் சுந்தர ராமசாமி போன்றவர்கள். விடுதலை என்ற கனவுமேல் நம்பிக்கைகொண்ட எவருக்கும் காந்தன் முக்கியமானவரே

பெண்ணியம் பேசாமலேயே பெண்ணின் விடுதலையை ஜெகே பேசியிருக்கிறார். அதற்குச் சிறந்த உதாரணம் ஒருநடிகை நாடகம்பார்க்கிறாள். அந்தக்கோணத்திலே எழுதியிருக்கிறார் கங்கா. முக்கியமான கட்டுரை. வாழ்த்துக்கள்

ராஜ்குமார்

***

முந்தைய கட்டுரைஇலக்கியத்தில் மாற்றங்கள் – கடிதம்
அடுத்த கட்டுரைமதுரை பாண்டியர்களின் முடிவு