நவீன நாவல் -எதிர்வினைகள்

vishal

நவீன நாவல் -விஷால்ராஜா

நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்

நவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை

நவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை

அன்பு ஜெ,

எழுத ஆரம்பித்து முடிக்காத சிறுகதைகளும் கட்டுரைகளும் கடிதங்களும் கழற்றி நீக்க முடியாத குண்டலங்களைப்போல பலவடிவங்களில் என் உடலெங்கும் அசைந்தாடிக்கொண்டிருக்கின்றன. வரும் மாதங்களில் சிலவற்றையாவது முடித்து விடுவேன் என நினக்கிறேன். இப்போதைக்கு முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் சுருக்கமாக எழுதலாம் என நினைக்கிறேன்.

கடலூர் சீனுவின் கடித்தில் உள்ள //வீழ்ச்சி ,கசாக்கின் இதிகாசம் ,பதினெட்டாம் அட்சக்கோடு , விஷ்ணுபுரம் ,  இத்தகு நாவல்களில் ”துலங்கி வருவது ” வரலாற்றால் அறிவிக்கப்பட்ட தத்துவப் புரிதல் .  நாவல் எனும் தத்துவத்தின் கலை வடிவம் அளிக்கும் ”தரிசனம் ”இதை அடிப்படையாக கொண்டதே . இதை எழுத்தாளன் ”சிந்தித்து ” அல்லது ”பிரகடனம் ” செய்தது அதன் வழியே உருவாக்க இயலாது.  எழுத்தாளின் நுண்ணுணர்வு ,அவன் உருவாக்கிக்காட்டும் வாழ்வு ,அவன் படைப்பாற்றல் , அனைத்துக்கும் மேலாக அவன் அகத்தில் நின்றெரியும் உண்மை ,இவை கூடி உருவாகும் படைப்பில்,அதன் இயங்கு விசையில் திரண்டெழுந்து வருவது அது// -என்ற வரிகளை மறுவாசிப்பு செய்து அதன் உள்ளடக்கத்தை தெளிவு செய்ய விரும்புகிறேன்.

ஒரு நாவலின் உருவாக்கத்தையும் அதில் திரண்டு வரும் தரிசனத்தையும் சிந்திப்பதற்கும் பிரகடனத்திற்கும் அப்பாற்பட்ட அரியதொரு தெய்வீக நிகழ்வு என எண்ணுவோம் என்றால் நாவலின் உருவாக்கத்தின் பின்னால் உள்ள ஆய்வு, திட்டமிடல்,உழைப்பு, பிரக்ஞையின் கோர்ப்பு, மொழிதிருத்தம், கலையின் நேர்த்தியை நோக்கி செய்யப்படும் திருத்தங்கள்,வடிவமாற்றங்கள் ஆகியவற்றை நிராகரித்து புறந்தள்ளுகிறோம் என்றுதான் அர்த்தம்.

திருத்தி எழுதும்போது மிகவும் அத்தியாவசியமான வரிகளை மட்டும் வைத்துக்கொண்டு தேவையற்ற கொழுப்பின் ஒவ்வொரு வீசையையும் தயவு தாட்சண்யமின்றி வெட்டி நீக்க வேண்டும்.  குழந்தைகளை வெட்டிக்கொல்வதைப்போல வாதையானது ஆனால் செய்தே ஆக வேண்டியது”, என்கிறார் ஸ்டீபன் கிங். விஷ்ணுபுரம் நாவலின் வடிவத்தை சில பல முறைகள் மாற்றி திருத்தி படியெடுக்க வேண்டியிருந்தது பற்றி நீங்கள் குறிப்பிட்டதையும் நினைவுபடுத்திக்கொள்கிறேன். புனைவெழுத்து வகைமையின் ஆகப்பெரிய வடிவம் என்பதால் நாவல் இயற்றப்படும் முறைமையில் உள்ள இந்த அடிப்படையான வேறுபாடு அதன் உருவாக்கத்தில் முக்கியமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முழுமை சிதறாத நாவலை வடித்தெடுக்க தேவையான தீப்பொறியின் ஊற்று உருவாகும் அரிய கணத்தை, படைப்பாற்றல் என்ற இயங்கு விசையின் மர்மத்தை, படைப்பாற்றலின் எழுச்சியில் கூடிவரும் பித்து நிலையை நான் மறுக்கவில்லை. அதே சமயம் அப்பொறியை ஊதிப்பெரிதாக்கி நின்றெரிய வைக்கத்தேவைப்படும் அக ஆற்றலையும் தொடர் உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதுடன், எல்லாக்கலைகளையும் போல நாவலின் உருவாக்கத்தின் பின்னும் ஒரு தொழில்நுட்பம் என்ற ஒன்று உண்டு என்ற உண்மையையும் கவனத்தில் கொள்ளும்படி கோருகிறேன்.

எழுத்தாளனின் அகம் என்பது எண்ணற்ற உணர்வுகள் சொற்றொடர்கள், படிமங்கள் ஆகியவை இணைந்து முயங்கி கலை உருவாகும் கொள்கலம் என்கிறார் டி.எஸ்.எலியட். முதிர்ந்த எழுத்தாளன்(கவிஞன்) என்பவன் துல்லியமாகசுதியேற்றப்பட்ட ஒரு எளிய ஊடகம் எனும் கூற்றை ஏற்றுக்கொள்வோமென்றால், அதைப்போன்ற ஒரு ஊடகத்தின் உருவாக்கம் என்பது பயிற்சியும் தொடர்ந்த உழைப்பும் இன்றி சாத்தியமாகாது என்பதையும் மறுக்க முடியாதல்லவா?

-வேணு தயாநிதி

***

வேணு தயாநிதி

ஜெ

நவீன நாவல் குறித்த விவாதம் திசை திரும்பாமல் கூர்மையாக அமைந்திருந்தது. இன்றைய சூழலில் வேறெந்த தளத்திலும் இத்தகைய விவாதங்களை காணமுடிந்ததில்லை. விஷால்ராஜா சிறப்பாக பேசியிருக்கிறார். எதிர்வினைகளும் கூர்மையானவை

என் கருத்து இது. நவீன நாவலுக்கும் முந்தைய நாவல்களுக்கும் என்ன வேறுபாடு? உள்ளடக்கம் [அதாவது தத்துவம் தரிசனம்] கொண்டு அதை பிரிக்க முடியாது. இன்றுள்ள எந்த நவீன நாவலைவிடவும் தாமஸ் மன்னின் மேஜிக் மௌண்டெய்ன் நவீன சிந்தனைகளுக்கு எதிர்வினையாற்றுகிறது. ஷோப்பனோர்வர், ஹெகல் முதல் நீட்சே வரையிலான மேலைச் சிந்தனையின்மீதான கலைவெளிப்பாடு என்றால் அந்நாவல்தான். நவீன நாவல்கள் பக்கத்தில் கூடச் செல்லமுடியாது

ஆகவே வடிவரீதியாகவே நவீன நாவல்களை வகுக்கமுடியும். வடிவரீதியாக பலவகைச் சோதனைகளை அவை செய்யலாம். ஆனால் பொதுவான வரையறை இதுதான். நவீன நாவலில் ஒரு மெட்டாஃபிக்‌ஷன் அம்சம் கொஞ்சமேனும் இருக்கும். அது பிரைம் நெரேஷனாக இருக்காது. அது ஒரு சொல்லப்பட்ட விஷயத்தை திருப்பிச் சொல்வதாகவே இருக்கும்

அர்விந்த்

***

முந்தைய கட்டுரைஓஷோ, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஎன் உரைகள்-ஸ்ருதிடிவி இணைப்புக்கள்