ஓஷோ, ஒரு கடிதம்

1001_Rajneeshpuram

பக்தி,அறிவு,அப்பால்

அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

ஓஷாவை அவரது ஹிந்தி சொற்பொழிவுகளையும் வாசித்து அறிவதால் மட்டுமே மேலதிகமாக புரிந்து கொள்ள முடியும்… சில நூல்களின் மொழியாக்கங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.   அவற்றில் மரபார்ந்த துறவறத்தின் நேர்மறைக் கூறுகள் குறித்து மிக விரிவாக பேசியுள்ளார். அவரது முதன்மை சீடர்களில் ஒருவரான மா தர்ம ஜோதி துறவறம் குறித்து அவரிடம் கேட்டதற்கு அனைத்தையும் துறப்பவன் மேலான அனைத்தையும் அடைகிறான் என கூறியிருப்பதை தன் பத்தாயிரம் புத்தர்கள் நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் எப்போதும் அது அவரது வழிமுறையாக இருந்ததில்லை. வேறு அனைத்தையும் போலவும் துறவையும் எள்ளி நகையாடியிருக்கிறார். அவரது ஆன்மிக வளர்ச்சியில் அலையும் சாமியார்களின் முதன்மையான பங்களிப்பை அவர் கூற தவறியதில்லை. மக்கா பாபா பாகல் பாபா மஸ்தா பாபா போன்றோர் பற்றியெல்லாம் மிக விரிவாக கூறியுள்ளார்.

இன்றைக்கு அதிகமும் ஓஷோவை பின்பற்றுபவர்கள் அவரது ஒரு நூலைக் கூட முழுமையாக வாசித்தவர்கள் அல்ல ஓஷோ படத்துடன் வாட்சப் ஃபேஸ்புக்கில் வலம் வரும் நான்கைந்து வரிச் செய்திகளை மட்டுமே வாசித்தவர்கள். சமீபத்தில் Wild wild country என்னும் netflix தொடர் ஓஷோவின் அமெரிக்க கம்யூனை பற்றியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அது பெரும்பாலும் ஒரு தரப்புச் சார்பு கொண்டது என்பதை ஆறு எபிசோடுகளையும் பார்த்து புரிந்து கொண்டேன். ஆனால் இன்டர்நெட்டில் ஓஷோவின் ஒரு வரி செய்திகளை மட்டுமே அறிந்தவர்கள் ஒரு அதிர்ச்சிக்காக அவசியம் பார்க்க வேண்டிய தொடர் அது. வரலாற்று செய்திகளைப் பொறுத்தவரை மிகச் சரியாக எதையும் பேசுபவரல்ல அவர்… ஒரு நிகழ்வையே பல முறை பல மாற்று வடிவங்களிலும் கதைகளை தன் சொந்த வாழ்வில் நடந்தவைப் போலவும் சொந்த நிகழ்வுகளை நம்ப முடியாத புனைவுகள் போலவும் கூறியிருக்கிறார். இதன் காரணமாக அவர் கூறுவது தகவலின் பிண்ணனியைக் காட்டிலும் அது எவ்வகையில் உங்கள் ஆன்மிக வளர்ச்சிக்கு பயன் தருகிறது என்பதில் மட்டுமே தான் ஆர்வம் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்… தன்னை ஒரு அறிஞன் இல்லை என்றே வாழ் நாள் முழுவதும் கூறி வந்திருக்கிறார்.

siva

சென்னை தமிழ் மொழி(அவர் குறிப்பிட்டது வசைபாடுவது போல் இருக்கும் மெட்ராஸ் பாஷையை சென்னையில் முன்பெல்லாம் கத்தி கத்தி தான் சாதாரணமாகவே பேசுவார்கள் அது திட்டுவது போன்றே இருக்கும்) குறித்தெல்லாம் அவர் பேசியவை நேரடி சொற்பொழிவுகள் இல்லை . அவருடைய பல் சிகிச்சையின் போது nitrous oxide தாக்கத்தில் மனதில் தோன்றியதை எல்லாம் கொட்டியிருப்பார். அவை மூன்று முக்கிய நூல்களாக வந்தன என் இளமைக்கால நினைவுகள்(இதே நூலில் காந்தி குறித்து அவர் மிக உயர்வாக பேசியதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது) நான் நேசித்த புத்தகங்கள் மற்றும் ஒரு பைத்தியக்காரனின் குறிப்புகள் (notes of a madman) எனக்கு மிகவும் பிடித்த நூல் அது. அவரது சொற்பொழிவுகள் இப்படி இருந்தாலும் தனிப்பட்ட முறையில் சாதி மத இன அடிப்படையில் காழ்ப்புணர்வற்றவராகவே இருந்தார். ஆனால் அவர் தமிழ் நூல்களை குறித்தோ தென்னிந்திய ஆன்மிக மரபுகள் குறித்தோ பெரிதும் அறிந்திருக்கவில்லை என்பது உண்மைதான். ஆதி சங்கரர் முதல் செவ்விந்தியர்கள் ஒடுக்குமுறை வரை ஒன்றைக் குறித்தே ஓரிடத்தில் நேராகவும் பின்னர் அதற்கே எதிராகவும் பேசியிருக்கிறார். இது அவர் கல்லூரி மாணவராக இருந்த போதிலிருந்தே கடைப்பிடித்த யுக்தி.

இதனை இப்படி கூறலாம் தீவிர ஆன்மிக சாதனையில் இருப்போர் அவரை உள்ளார்ந்து புரிந்து கொள்ள முடியும் அப்போது அவருடைய அரசியல் மதம் சார்ந்த சீண்டும் கருத்துக்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஆனால் அறிவு தளத்தில் இருந்து அறிய முற்படுபவர்கள் ஒரு தரப்பினர் அவரை மரபார்ந்த தேக்க நிலையை கட்டுடைத்த மகத்தான சிந்தனையாளராகவோ அல்லது மோசடியாளராகவோ அயோக்கியராகவோ தான் அறிய முடியும்… இந்தியனாக அவரைக் குறித்து நான் பெருமையாகவே உணர்கிறேன்…

சிவக்குமார்

சென்னை

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 21
அடுத்த கட்டுரைநவீன நாவல் -எதிர்வினைகள்