பால்ஹிகபுரியைவிட்டு பயணம் தொடங்கி பதினாறு நாட்களுக்குப் பிறகு பால்ஹிகருடன் பூரிசிரவஸ் அஸ்தினபுரியை சென்றடைந்தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவன் விட்டுச்சென்ற நகரமாக அது இருக்கவில்லை. எறும்புப்புற்றுபோல இடைவெளியில்லாமல் மனிதத் தலைகளால் நிறைந்திருந்தது. தெருவெங்கும் புரவிகளும் தேர்களும் செறிந்து நெறித்தன. எவரும் எவரையும் விழிநோக்காமல், அறியாமல் ஆகிவிட்டிருந்தனர். ஒவ்வொருவரும் பிறரை நோக்கி கூச்சலிட்டனர். அக்கூச்சல் இணைந்து பெருமுழக்கமாக எழுந்தமையால் மேலும் கூச்சலிட்டே அவர்களால் பேச முடிந்தது. ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்றுவிட்டவர்கள்போல் தோன்றியது. வெறித்த முகங்களும் திறந்த வாய்களும் புடைத்த தொண்டைகளுமாக அத்தனை முகங்களும் அவனைச் சூழ்ந்து திரை கொண்டன. கால்கள் கலங்கிக் குழம்பின. கைகள் அலையடித்தன. தேர்முகடுகளும் தலைக்கவசங்களும் மிதந்து சுழித்தன.
அஸ்தினபுரியின் தரப்பைச் சேர்ந்த அனைத்துப் படையினருக்கும் பொதுவான படைக்கூறை வகுத்து அளிக்கப்பட்டிருந்தது. அவன் கிளம்பிச்சென்றபோது ஷத்ரியப்படைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணப் படைக்கூறையுடன் வந்தன. அனைத்து வண்ணங்களிலும் படைகள் பெருகி நகரைச் சூழ்ந்திருந்த குறுங்காட்டை நிரப்பி கங்கையின் எல்லைவரை விரிந்தன. காவல்மேடைமேல் நின்று நோக்கியபோது பச்சையும் சிவப்பும் நீலமும் மஞ்சளும் என நூறுநூறு வண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று ஊடுருவி கண்களை பித்தாக்கின. செந்நிறப் படை நகர்ந்து வந்தபோது எரி பற்றிப்பரவுவதுபோல தோன்றியது. நீலம் பெருவெள்ளமென விழி திகைக்கச் செய்தது. பச்சை காடு தளிர்த்ததுபோல.
படைக்கூறையை முடிவெடுக்க அமர்ந்த அவையில் பிறவிநாள் கணித்து கோள் ஆய்ந்து துரியோதனனுக்கு உகந்த நிறம் நீலம் என்று நிமித்திகர் கூறினர். “கருநீலம் நன்றல்ல, அதை அணிபவர்கள் உள்ளம் குன்றுவர். படைக்கூறை ஒளிவிடும் வண்ணத்தில் இருக்கவேண்டும். ஒருவர் தன் படைத்தோழரை நோக்கும்போது அவர் ஒளிர்ந்துகொண்டிருந்தால் உளம் மலர்ந்து நம்பிக்கை கொள்கிறார்” என்றான் ஜயத்ரதன். “ஒளிவிடும் வண்ணங்களில் ஆடையமைக்கலாகாது. அதில் குருதிபட்டால் மேலெழுந்து தெரியும். போர்நிகழ்கையில் அறியாது விழிதிருப்பும் படைவீரன் தன்னைச் சூழ்ந்துள்ள படையே குருதி பெருக்கிக்கொண்டிருப்பதைக் கண்டால் அஞ்சி செயலற்றுவிடுவான். குருதி தெரியாத ஆழ்செம்மையோ மண்செம்மையோ போருடையாக தெரிவுசெய்யப்படும் மரபு அதனால் உருவானதுதான்” என்றார் சகுனி. “ஆனால் அரசருக்குரிய வண்ணம் நீலம். அரசருக்கு நலம்செய்யும் தெய்வம் எழுந்து களம்நின்று துணையளிக்கவேண்டும்…” என்றார் முதுநிமித்திகர்.
துரியோதனன் மீசையை நீவியபடி கணிகரை நோக்க அவர் விழிதூக்காமல் தாழ்ந்த குரலில் “செந்நீலம்” என்று சொன்னார். நிமித்திகர் “ஆம், அதுவும் உகந்ததே” என்றார். “செந்நீலத்தில் குருதி தெரியாது” என்று கணிகர் தனக்குத்தானேபோல் முனகிக்கொண்டார். “ஆம், செந்நீலம் நன்று. எருக்கமலரின் நிறம் அது. முப்புரம் எரிக்கையில் மூவிழியன் சூடியிருந்தது. பெரும்பித்தின் வண்ணம்” என்றார் சல்யர். கணிகர் “அதர்வத்தின் ஆணைப்படி எருக்கணிந்து செருக்களம் செல்வோன் அழிவின் தெய்வங்களால் துணைக்கப்படுவான்” என்றார். அவையில் அமைதி நிலவியது.
துரியோதனன் “நன்று, செந்நீலம். முடிவு செய்வோம். பாண்டவர் தரப்புக்கு செய்தி சொல்க!” என்றான். “அவர்கள் எந்த வண்ணத்தை முடிவு செய்துள்ளனர்?” என்று சல்யர் கேட்டார். “அவர்கள் எவ்வண்ணத்தையும் இன்னும் முடிவெடுக்கவில்லை. அது அவர்களுக்கு எளிதும் அல்ல. தொல்குடிகள் தங்கள் படைக்கூறைகளை குடிமரபின்படி அணிந்திருப்பார்கள். அவற்றை தெய்வங்கள் முன் வைத்து எடுத்திருப்பார்கள். பெரும்பாலான நிஷாதர்கள் கரியநிறப் படைக்கூறை அணிபவர்கள். பொதுவான படைக்கூறைக்கும் பொதுவான கொடிமொழிக்கும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் என்றால்தான் அவர்கள் படை என்றாவார்கள். அதுவரை வெறும் மக்கட்திரள்தான்” என்றான் ஜயத்ரதன். “என் படைகளில் இருந்த பாலைநிலத்துக் கிராதரை பொதுவான படைக்கூறையை அணியச்செய்ய ஓராண்டுகாலம் சொல்லாடி அவர்களின் குடித்தெய்வங்களை நிறைவுசெய்ய வேண்டியிருந்தது.”
சர்மாவதிக்கு அப்பால் பாறையிலிருந்து கூறைக்குரிய வண்ணங்களை வாற்றி எடுக்கும் நிஷாதர்குடிகள் அஸ்தினபுரிக்கு வந்தனர். அவர்களுடன் வந்த வண்டிகளில் பெரிய மரப்பீப்பாய்களில் வண்ணப்பொடி நிறைந்திருந்தது. அவ்வண்டிகள் சென்ற இடங்களிலெல்லாம் மூக்குமடல் எரியும் அனல்மணம் எழுந்தது. அக்குடிகள் அதற்கு பழகியிருந்தன. கங்கைக்கரையில் அவர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. அங்கே பெரிய சூளையடுப்புகளை நிறுவி அவற்றின்மேல் தாழிகளை வைத்து நீரில் அப்பொடியை இட்டு கொதிக்கச் செய்தனர். குமட்டவைக்கும் கந்தகவாடையுடன் இளநீலப்புகை எழுந்து காற்றை நிறைத்தது. அந்தக் குழம்புடன் வனநீலி மலர்களைப் போட்டு கொதிக்கச்செய்தனர். நாவல் மரப்பட்டை, வெட்டுபலாப் பட்டை ஆகியவற்றை இட்டு அதை சுண்டக் காய்ச்சி குழம்பாக்கினர். சாயம் முக்குவதற்கென்றே குயவர்கள் செய்தளித்த படகுபோன்ற பெரிய மண்கலங்களை அடுப்பிலேற்றி அதில் அக்குழம்பை ஊற்றி நீருடன் கலந்து கொதிக்கவைத்து மரவுரிகளையும் பருத்தியாடைகளையும் அதிலிட்டு ஒருநாழிகைப்பொழுது வேகவைத்து எடுத்து நிழலில் காயவைத்து எருக்குமலரிதழ்போல ஆக்கினர்.
அஸ்தினபுரியை நெருங்க நெருங்க மரங்களின் பசுமையைவிட எருக்கமலர் வண்ணமே மிகுந்திருப்பதாக தோன்றியது. முதலில் கண்களுக்குள் அவ்வண்ணம் கொப்பளித்து நுழைந்து எண்ணங்களையும் மாற்றியது. பின்னர் விழித்தாலும் மூடினாலும் அவ்வண்ணமே தெரிந்தது. மெல்ல அது பழகி அது பின்புலமாக விரிய பிற வண்ணங்கள் தென்படலாயின. அவ்வண்ணத்தைப் பார்ப்பதையே தவிர்த்துவிட்டது உள்ளம் என எண்ணியபோது வெயிலில் எதிரே வரும் ஒற்றைவீரன் செந்நீலமாக எரிந்தபடி நெருங்கிக் கடந்து மறைவான். “உறைந்த குருதியின் மணம்.” அவன் அச்சொற்களைக் கேட்டு திடுக்கிட்டான். திரும்பி உடன்வந்த படைவீரர்களை பார்த்தான். எவரேனும் சொன்னார்களா, அன்றி செவிமயக்கா என திகைத்தான்.
அஸ்தினபுரியின் எல்லையிலமைந்த முதற்காவல்மாடத்திலிருந்து கோட்டை முகப்பு வரை செல்வதற்குள்ளாகவே ஒரு முழுப் பகலும் ஆயிற்று. ஒவ்வொரு ஆள்கூட்டமுடிச்சிலும் தயங்கி, முட்டி மோதி கூட்டத்தைப் பிளந்து வழி ஏற்படுத்தி, மேலே செல்லவேண்டியிருந்தது. எவருமே அவனை அறிந்தவர்கள்போல தென்படவில்லை. விழிகள் அனைத்துமே மானுடரை அறியாத தெய்வநோக்கு கொண்டிருந்தன. வெறியாட்டெழுந்தவர்கள் போல். அவை ஒழுங்கற்ற திரள்கள் அல்ல. முற்றிலும் சீரான அசைவுகள் ஒன்றுடன் ஒன்று பிழையின்றி ஒத்திசைவுகொண்ட படைப்பிரிவுகள். ஆனால் அச்சிறு நகரத்தின் அளவைவிட பெரிதாக அவை மாறியிருந்தமையால் அவ்வொழுங்கே தடையென்று ஆயிற்று. ஒரு படைப்பிரிவு பலநூறு கால்களும் கைகளும் கொண்ட ஒற்றை விலங்கு. அது ஒரு வழித்தடையில் தனிமனிதர்களாகப் பிரிந்து சிறு இடைவெளிகளினூடாக வழிகண்டு செல்ல இயலவில்லை. தன் அளவுக்கேற்ற இடைவெளி அமையும் வரை நின்ற இடத்திலேயே பெருவிலங்கு என அது தயங்கி நின்றது. மனிதர்கள் மட்டுமன்றி யானைகளும் புரவிகளும்கூட அந்த ஒழுங்கமைவுக்குள் முழுமையாக தங்களை பொருத்திக்கொண்டுவிட்டிருந்தன.
கோட்டை முகப்பிலிருந்த காவலனிடம் அவன் தன் கணையாழியை அளித்து நகர்நுழைவை அரண்மனைக்கு அறிவிக்கும்படி கோரினான். அவன் “இங்கிருந்து இப்போது முரசொலியினூடாக எச்செய்தியையும் அனுப்ப இயலாது, பால்ஹிகரே” என்றான். “ஏன்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “கேட்டீர்களல்லவா? இடைவெளி இல்லாமல் இந்நகரம் முழுவதும் முரசுகள் முழங்கிக்கொண்டிருக்கின்றன. ஆகவே முரசொலி என்பதே எவருக்கும் செவியில் விழுவதில்லை” என்றான். பூரிசிரவஸ் விந்தையுடன் தலையசைத்தான். “இங்கே பிறர் பேசும் எச்சொல்லும் எவர் செவியையும் அடைவதில்லை. நாவென்று இங்கு திகழ்பவை கொடிகள் மட்டுமே. கொடியசைவுகள் அவற்றுக்குரிய படைப்பிரிவுகளை சென்றடைகின்றன. திரளாகவே மனிதர்கள் செவியும் விழியும் கொண்டிருக்கிறார்கள். தனி விழி, தனிச் செவி என்று எதுவும் இல்லை” என்று காவலர்தலைவன் சொன்னான். “பறவைத்தூது அமைச்சருக்கு செல்லும். ஆனால் நீங்கள் அது செல்லவேண்டிய சிற்றமைச்சரை குறிப்பாக சொல்லவேண்டும். அவரிடம் செல்லும் பறவை இங்கு எஞ்சியிருக்கவும் வேண்டும்.” பூரிசிரவஸ் “வேண்டியதில்லை, நானே செல்கிறேன்” என்று முன்னால் சென்றான்.
அஸ்தினபுரியின் தெருக்களினூடாக அடிமேல் அடியென புரவியை நடக்கவிட்டு சென்றான். அவன் அறிந்த நகரடையாளங்கள் எவையும் அங்கில்லையென்று தோன்றியது. காவல்மாடங்களிலும் மாளிகைமுகப்புகளிலும் கொடிகள் அசைந்தன. கொடிகளைக் கண்டு கொடிகள் அசைய அதன்வழியாக நகரம் தன்னுள் தான் உரையாடிக்கொண்டிருந்தது. நூற்றுவர் தலைவர்கள் மஞ்சள் நிறத்திலும் ஆயிரத்தவர் நீல நிறத்திலும் அக்ஷௌகிணித்தலைவர்கள் கருஞ்செம்மை நிறத்திலும் கொடிகள் கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கருஞ்செம்மைக் கொடி ஒருமுறை அசைந்ததும் நீலநிறக் கொடிகளில் அவ்வசைவு பற்றிக்கொண்டு பரவியது. சற்றுநேரத்திலேயே மஞ்சள்நிறக் கொடிகளின் கொந்தளிப்பாக மாறியது. பெருகிச்செல்லும் புழுதிக்காற்று என அச்செய்தியை கண்ணால் பார்க்க முடிந்தது. மாளிகைகள் அனைத்திலும் வெவ்வேறு அரசர்களின் குலக்குறிகள் பொறிக்கப்பட்ட கொடிகள் பறந்துகொண்டிருந்தன. இருமருங்கும் எப்போதும் திரண்டு ததும்பும் அஸ்தினபுரியின் குடிகள் ஒருவர்கூட தெருக்களிலில்லை. உப்பரிகைகளிலோ இல்லமுகப்புகளிலோ அங்காடிகளிலோகூட எவருமில்லை. விழிசுழற்றித்தொடும் தொலைவனைத்திலுமே படைவீரர்கள்தான் தெரிந்தனர். பல்லாயிரம் படைக்கலங்களுடன் அஸ்தினபுரி ஒரு மாபெரும் முட்காடென மாறிவிட்டிருந்தது.
அரண்மனையை அவன் அடைந்ததும் அவனை வரவேற்ற துணை அமைச்சர் மனோதரர் ஒருகணம் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவன் தன் கணையாழியை நீட்டியதும் அதை வாங்கி நோக்காமல், விழிசந்திக்காமல் “தாங்கள் தங்கள் படைப்பிரிவுகளுக்கு செல்ல வேண்டுமென்று எண்ணுகின்றேன், வீரரே” என்றார். “மனோதரரே, நான் பூரிசிரவஸ், படைநகர்வின் முதன்மைக் குழுவில் பங்குபெறுபவன். அரசரைப் பார்க்கும்பொருட்டு வந்திருக்கிறேன்” என்றான். அதன்பின்னரே அவர் அவனை அடையாளம் கண்டுகொண்டு “ஆம், மறந்துவிட்டேன். மெய்யாகவே தங்கள் முகம் நினைவிலில்லை. பால்ஹிகரே, இச்சில நாட்கள் ஒவ்வொரு நாழிகையும் ஒரு நாளென நீண்டுவிட்டன. பல ஆண்டுகாலம் வாழ்ந்துவிட்டேன் என உணர்கிறேன்” என்றார்.
தலையை தட்டியபடி “ஒரு நாளைக்கு இரு நாழிகைகூட துயிலில்லை. மெய்யாக இங்கு எவருக்கும் என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை. அனைவருமே தங்களுக்குரிய பித்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு உள்ளத்தையும் பித்தெடுக்க வைத்த பின்னும் இங்கொரு நகரம் திகழ்கிறதென்றால் அது எங்கள் அனைவருக்குள்ளும் குடியிருக்கும் தெய்வங்களால்தான். சூதர்கள் சொல்வது மெய்யாக இருக்கலாம். விண்ணிலிருந்து போர்வெறி கொண்ட கந்தர்வர்களும் யட்சர்களும் கின்னரர்களும் நகரில் இறங்கி தங்களுக்குரியவர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றபின் “வருக!” என்று உள்ளே அழைத்துச் சென்றார் மனோதரர்.
செல்லும் வழியிலேயே மனோதரர் என்ன நிகழ்கிறதென்று சொன்னார். “பேரரசர் திருதராஷ்டிரரின் தலைமையில் இன்று மாலை அரசப்பேரவை கூடவிருக்கிறது. படைப்பிரிவுகளுக்கான தலைமைப் பொறுப்புகள் அளிக்கப்படவுள்ளன. அங்கே உபப்பிலாவ்யத்தில் நாளை மாலை அரசப்பேரவை கூடுமென்றும் படைப்பிரிவுகளுக்கான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் செய்தி வந்துள்ளது. மேலும் சில நாட்கள் கழித்து கொற்றவை பூசனைக்குப் பின்னரே அவர்களின் படை குருக்ஷேத்திரத்திற்குள் செல்லும். நாம் இங்கு நம்மை இன்னும் ஓரிரு நாட்கள்கூட தக்கவைக்க முடியாது. ஒவ்வொரு நாளுமென நமது படைகள் வந்து சூழ்ந்துகொண்டிருக்கின்றன. தாங்கள் வரும்போது பார்த்திருப்பீர்கள் அஸ்தினபுரியின் படை கங்கையின் எல்லையில் இருந்தே தொடங்கிவிட்டது.”
“ஆம், இங்கிருந்து எத்திசைக்குச் சென்றாலும் இரண்டு பகல்பொழுதுகள் பயணம் செய்தாலொழிய நமது படையின் மறு எல்லையை காண முடியாது” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அனைவருக்கும் உணவும் தங்குமிடமும் இங்கு ஒழுங்கு செய்வதற்கு முடியாமலாகிவிட்டது. ஆகவே பல படைப்பிரிவுகளை செல்லும் வழியிலேயே ஆங்காங்கு நிற்கச் சொல்லிவிட்டோம். முடிந்த விரைவில் படைகளை குருக்ஷேத்திரத்திற்கு கொண்டு செல்வதே ஒரே வழி என்று அரசரிடம் சொன்னேன். இங்கு கொற்றவை பூசனை நாளை முதற்பொழுதிலேயே முடிந்துவிடுகிறது. நாளையே இங்கிருந்து நமது படைகள் கிளம்பப்போகின்றன” என்றார். “அதன்பின்னரே நகர்மக்கள் வெளியே வரமுடியும்… அவர்கள் காணும் நகரில் வெறுமைதான் நிறைந்திருக்கும்” என்றார் மனோதரர்.
பூரிசிரவஸ் “முதன்மைப் படைத்தலைவராக யார் பெயர் சுட்டப்பட்டுள்ளது?” என்றான். “அங்கநாட்டரசர் பெயர் தவிர அனைத்துப் பெயர்களும் சுட்டப்பட்டுவிட்டன. அவர் பெயர் சுட்டப்பட்டால்தான் அது சரியான தேர்வாக இருக்கும்” என்று மனோதரர் சொன்னார். “அவர் இப்போது காட்டுக்குள் இருக்கிறார். எந்தத் தொடர்பும் இல்லை. இங்குள்ளோர் அவரைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர் இருந்தால் வெற்றி உறுதி. அவர் வென்றால் புகழ் அவருக்கே. அவ்விரு நிலையில் உழல்கிறார்கள் ஷத்ரியர்.” பூரிசிரவஸ் இயல்பாக திரும்பிப்பார்த்து அதன் பின்னர்தான் பால்ஹிகரை நினைவுகூர்ந்தான். அவன் நகருக்குள் நுழைந்தபின் அவரை இயல்பாக திரும்பிப்பார்த்தன்றி நினைவுக்குள் கொள்ளவேயில்லை.
பதற்றத்துடன் “என்னுடன் பிதாமகர் வந்திருக்கிறார். பிதாமகர் பால்ஹிகர்!” என்று சொன்னான். “உங்கள் குடி மூதாதையா? இப்போர்க்காலத்தில் அவரை எதற்கு அழைத்து வந்தீர்கள்?” என்று மனோதரர் கேட்டார். “எனது குலமூதாதை மட்டும் அல்ல, அஸ்தினபுரியின் உயிர்வாழும் மூதாதை. தேவாபியின் இளையவராகிய பால்ஹிகர்” என்றான். “எவரை சொல்கிறீர்கள்?” என்று மனோதரர் திகைப்புடன் கேட்டார். “நமது அரசர் துரியோதனரின் தந்தையாகிய திருதராஷ்டிரரின் தந்தை விசித்திரவீரியரின் தந்தை சந்தனுவின் மூத்தவராகிய பால்ஹிகர்” என்று அவன் சொன்னான். மனோதரரின் இரு கைகளும் தளர்ந்தவைபோல் விழுந்தன. பின்னர் “தாங்கள் நகையாடவில்லையே?” என்றார்.
திரும்பி வாயிலுக்கு விரைந்தபடி “இல்லை, இது அதற்கான பொழுதா என்ன? மெய்யாகவே அவர் உயிருடன் இருக்கிறார். இன்று குருகுலத்தில் உயிருடன் இருப்பவர்களில் அவரே மூத்தவர். ஒருவேளை பாரதவர்ஷத்தில் உயிருடன் இருப்பவர்களிலும் அவரே மூத்தவராக இருக்கக்கூடும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “எங்கே அவர்?” என்றார் மனோதரர் அவனுடன் மூச்சுவாங்க வந்தபடி. “என்னுடன் வந்தார். தங்களைப் பார்த்ததும் எழுந்த குழப்பத்தில் அவரை மறந்துவிட்டேன். இருங்கள்” என்று சொல்லி பூரிசிரவஸ் வெளியே சென்றான்.
பதற்றமாக மனோதரர் உடன் வந்தபடி “அங்கே பெருங்கூட்டம் நெரிபடுகிறதே. எங்கென்று தேடுவது? மிக முதியவர் என்றால் நடமாட வாய்ப்பில்லை. பல்லக்கில்தானே வந்தார்? அதற்குள்தான் இருப்பார்” என்றார். அரண்மனை முற்றத்தில் நின்றிருந்த இரு போர்யானைகளின் நடுவே கவச உடையணிந்து இரு கைகளாலும் அவற்றின் தந்தங்களை பிடித்தபடி பால்ஹிகர் நின்றுகொண்டிருந்தார். “அவரா?” என்று மனோதரர் கூவினார். பின்னர் “மானுட உடலா அது?” என்று மூச்சொலியுடன் சொன்னார். பால்ஹிகரைச் சூழ்ந்து நின்றிருந்த அஸ்தினபுரியின் வீரர்களும் திகைப்புடன் இருந்தனர்.
“அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பேருடலர் என்று தொல்கதைகள் உரைக்கின்றன. மெய்யாகவே உயிருடன் இருக்கிறாரா?” என்று மனோதரர் கேட்டார். “உயிருடன் என்றாலும் எழுந்து நிற்க இயலுமா?” என்று அவர் சொன்னபோது பால்ஹிகர் இரு தந்தங்களையும் பற்றி உடலை உந்தி மேலெழுப்பி தந்தங்களில் மிதித்து மத்தகத்தின்மேல் ஏறினார். மனோதரர் “தெய்வங்களே!” என்றார். பால்ஹிகர் அங்கிருந்து அவனை நோக்கிக் கூவி நகைத்தபடி “மைந்தா, இவ்விரு யானைகளில் என்னை கொல்லப்போவது எது என்று அவற்றிடம் கேட்டேன். ஒன்று தலையாட்டுகிறது” என்றார்.
மனோதரர் பூரிசிரவஸை பார்க்க “அவரது உள்ளம் சற்று நிலைகுலைந்துள்ளது, முதுமையினால்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், வேறு வழியில்லை. இத்தனை நீண்ட காலத்தை ஒருவர் தன்னை சிதைத்துக் கொள்வதினூடாகவே எதிர்கொள்ள முடியும்” என்றார் மனோதரர். பால்ஹிகர் யானையிலிருந்து சரிந்திறங்கி அருகே வந்து “எனக்கு பசிக்கிறது. இங்கு அடுமனை எங்குள்ளது?” என்றார். மனோதரர் “இங்கே அருகில்தான். நான் உங்களை அழைத்துச்செல்ல ஆணையிடுகிறேன்” என்றபின் பூரிசிரவஸிடம் “ஐயமே இல்லை, இவர் குருகுலத்தவர், ஹஸ்தியின் குருதிதான்” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்தான்.
காவலர் வழிகாட்ட செல்கையில் பால்ஹிகர் “நான் சென்று உண்டுவருகிறேன், மைந்தா. இந்த யானைகள் எனக்கு பிடித்திருக்கின்றன. போதுமான அளவு பெரியவை” என்றார். “அவர் கவசங்களைக் கழற்ற ஏற்பாடு செய்க!” என்றார் மனோதரர். “அவர் கழற்றுவதில்லை, அமைச்சரே” என்றான் பூரிசிரவஸ். “உணவுண்ணும்போது…” என்று அவர் சொல்ல “துயில்கையிலும்” என்றான் பூரிசிரவஸ். மனோதரர் “தெய்வங்கள் நகையுணர்வு மிக்கவை. இத்தகைய ஒரு போரின் தருணத்தை கேலிசெய்ய வேண்டுமென்றே முதுமூதாதை ஒருவரை எஞ்சவைத்து அனுப்பியிருக்கின்றன” என்றார்.
பூரிசிரவஸ் அஸ்தினபுரியின் அரசப்பேரவைக்கூடத்தை நோக்கி செல்கையில் இடைநாழியின் இருபுறமும் திறந்திருந்த அமைச்சர்களின் அலுவல் அறைகளை மாறி மாறி பார்த்துக்கொண்டே நடந்தான். அவன் எண்ணியது போலவே துணையமைச்சர் ஒருவரின் சிற்றறைக்குள் கனகர் மடியில் எழுத்துப்பலகையை வைத்து சுவடிகளை பரப்பிக்கொண்டு பதற்றமாக அமர்ந்திருந்தார். சற்றே திறந்திருந்த கதவினூடாக அவன் அவருடைய முகத்தோற்றத்தின் ஒரு கீற்றைத்தான் பார்த்தான். மெல்ல கதவைத் தட்டிய பின் “அமைச்சரே” என்றான். “உள்ளே வருக!” என்று அவர் சொன்னார். அவன் உள்ளே சென்றதும் “கதவை மூடுங்கள்” என்று கனகர் பதறினார். அவன் கதவை மூடிவிட்டு அவர் முன் சென்று அமர்ந்தான்.
“இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்!” என்றான். “நான் இங்கிருப்பேன் என்று உங்களுக்கு தோன்றியிருக்கிறதே” என்று அவர் சொன்னார். “இந்த உச்சகட்டத்தில் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அனைவருமே செயலற்றுவிடுகிறார்கள். அரசரும் பிதாமகர் பீஷ்மரும் காந்தாரர் சகுனியும்கூட அப்படித்தான் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆகவே உங்களை எண்ணமுடியாத இடமொன்றில் எதிர்பார்த்தேன்.” கனகர் “மெய்தான். பேரமைச்சர் விதுரர் அனைத்திலிருந்தும் முற்றாக ஒதுங்கிவிட்டார். பெரும்பாலான பொழுதுகளில் தன்னுடைய அறைக்குள்ளேயே அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் நான் காலையில் சென்று முறையாக பணிந்து நிகழ்வன உரைத்து ஆணை பெற்று வருவதுண்டு. ஆனால் ஒரு சொல்லும் அவர் உள்ளத்தில் ஏறவில்லையென்று தெரிகிறது. ஆகவே என்னையறியாமலேயே அவருடைய இடத்திற்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன்” என்றார்.
பெருமூச்சுடன் “நெடுங்காலமாக அவருடன் இருந்துகொண்டிருக்கிறேன். ஆனால் அவர் நிறைத்திருந்த இடமென்ன என்பது இப்போதுதான் தெரிகிறது. என் உடல் உடைந்து தெறித்து நூறு ஆயிரமாக பரவினாலொழிய அவ்விடத்தை நிரப்ப முடியாது” என்றபின் கையிலிருந்த எழுத்தாணியை சிறு பேழையில் போட்டு அதை மூடிவிட்டு சலிப்புடன் “மெய்யாகவே கடந்த பதினைந்து நாட்களாக இங்கு என்ன நிகழ்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. நாம் கடிவாளத்தை தெய்வங்களுக்கு கொடுத்துவிட்டோம். இனி அவர்கள் முடிவு செய்யட்டும்” என்றார். பூரிசிரவஸ் “ஆம், நானும் அதைத்தான் எண்ணிக்கொண்டுவந்தேன்” என்றான்.
கனகர் திடீரென்று விழித்துக்கொண்டு “தாங்கள் மட்டும் தனியாக வந்திருக்கிறீர்கள். பிதாமகர் எங்கே?” என்றார். “அவர் நேற்று நள்ளிரவில் படுக்கையிலிருந்து எழுந்து சென்றிருக்கிறார். அவருடன் இருந்த காவலன் அவர் யானைக்கொட்டிலில் இருப்பதாக எனக்கு செய்தி அனுப்பியிருந்தான். அவர் யானைகளை மட்டுமே பொருட்டென கருதுகிறார். அதுவும் நன்றே” என்றான் பூரிசிரவஸ். “அவரை அழைத்து வரவேண்டுமல்லவா? இன்று நம் அரசப்பேரவை முன்வைக்கப்போகும் முதன்மை உருவே அவருடையதுதான்” என்று சொன்ன கனகர் புன்னகைத்து “நன்று, இங்கிருக்கும் சூழலுக்கு முற்றிலும் சித்தம் கலங்கிய ஒருவரே சிறந்த முதல் அடையாளமாக இருக்கமுடியும்” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்து “சித்தம் கலங்கினாலும் இங்கிருக்கும் பிற எவரையும்விட அவரால் சிறப்பாக போரிட முடியும், அமைச்சரே” என்றான். “நானும் அதைத்தான் சொன்னேன். சித்தம் கலங்கியவர்கள்தான் இப்போரில் சிறப்பாக செயல்பட முடியும். எப்போரிலும் சற்று சித்தம் கலங்காமல் ஈடுபடமுடியாதென்றே எனக்கு இப்போது தோன்றுகிறது” என்றார்.
பூரிசிரவஸ் சிரித்து “அவர் அவைக்கு வருவார். நான் ஏற்பாடு செய்துள்ளேன். இப்போதே அவரை அங்கு அழைத்துச் சென்றால் எதுவுமே அவருக்கு ஒவ்வாது. அவ்வளவு நேரம் அவர் அவையில் அமரமாட்டார்” என்றான். “அவரை அரசரோ, பேரரசரோ சந்திக்கவில்லை என்பது விந்தைதான்!” என்று கனகர் குரல் மாற, விழிகள் கூர்கொள்ள சொன்னார். “அவர்களுக்கு அவரை சந்திக்கையில் என்ன செய்வதென்று தெரியவில்லை என எண்ணுகிறேன். தொல்நூல்களில் கதையென படித்தறிந்த மூதாதை உடலுடன் உயிருடன் எழுந்தருள்வதற்கு முன்நிகழ்வு இல்லை அல்லவா?” பூரிசிரவஸ் “அவை என்றால் எளிது, அங்கே எல்லாமே வெறும் முறைமைகள். அதை நடிக்க அவர்களுக்கு தெரியும். தனியாக சந்திப்பது இயல்வதல்ல” என்றான். கனகர் “நான் சொன்னேனே, அத்தனைபேரும் வெறியாட்டெழுந்த தெய்வங்கள் போலவோ கனவில் விழித்தெழுந்த மைந்தர்போலவோதான் இருக்கிறார்கள்” என்றார்.
“இது அவருடைய அரண்மனைதானே? அவர் இங்கே இருந்த காலம் முதல் இப்படித்தான் இருக்கிறது. இங்கே ஏன் அவர் தங்கமுடியவில்லை?” என்றார் கனகர். பூரிசிரவஸ் “அதுதான் எனக்கும் விந்தையாக இருந்தது. இந்த அரண்மனையின் ஒரு அறையைக்கூட அவர் நினைவுகூரவில்லை. அரண்மனை முகப்பில் வந்தபோது மேலே உப்பரிகைகளையும் சாளரங்களையும் நோக்கி திகைத்தவர் போலிருந்தார். அவருள் நினைவெழுகிறது என்று எண்ணினேன். ஆனால் சில கணங்களுக்குப் பின் இது எந்த இடம் என்று அவர் கேட்டபோது மெய்யாகவே அதிர்ச்சிதான் ஏற்பட்டது. நடிக்கிறாரா என்று அவர் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தேன். உண்மையிலேயே அவருக்கு இந்த இடம் தெரியவில்லை. இங்குள்ள எதுவுமே அவருக்கு அணுக்கமானதாக இல்லை” என்றான்.
கனகர் “ஒருவகையில் அதுவும் இயல்புதான். இத்தனை பெரிய நினைவுச் சுமையை அவர் ஏற்றிக்கொண்டிருந்தாரென்றால் முதுகெலும்பு இத்தனை நிமிர்ந்து இருந்திருக்காது” என்றபின் “அவரை எப்போது அவைக்கு கொண்டுவரலாம்?” என்றார். “தெளிவாக ஆணைகளை பிறப்பித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். அவை கூடட்டும். அரசர் வந்து அவையமரட்டும். தாங்கள் மேடையேறி பிதாமகரைப் பற்றி சொல்லி இப்போரை வழிநடத்திக் கொடுக்கும்பொருட்டு மலைத்தெய்வங்களின் அருளுடன் அவர் இறங்கி வந்திருப்பதாக கூறும்பொழுது எனது அணுக்கர்கள் அவரை அவைக்கு கொண்டுவருவார்கள். ஆனால் ஒன்று நினைவுகூருங்கள். அவையில் அவர் நெடுநேரம் இருக்க முடியாது. இருப்பது நன்றும் அல்ல. பீடத்தில் அமர்ந்து அனைவருக்கும் வாழ்த்துரைத்த உடனேயே அவரை மீண்டும் கொண்டு சென்றுவிடவேண்டும். யானைக்கொட்டிலில் அவர் இருப்பது நன்று. அவருடைய உள்ளத்தை அது முழுமையாக கவர்ந்து கட்டிப்போட்டிருக்கிறது. வேறெங்குமிருந்தால் அரைநாழிகைக்குமேல் அவரால் உளம் நிலைக்க இயலவில்லை. ஆகவே எப்படியாவது வழி நடத்தி அவரை யானைக்கொட்டிலில் கொண்டுவிடும்படி எனது அணுக்கர்களுக்கு நான்தான் ஆணையிட்டிருந்தேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.
கனகர் பெருமூச்சுவிட்டு “தாங்கள் அவைக்கு செல்லுங்கள். நான் இந்த ஆணைகளை பிறப்பித்துவிட்டு வர இன்னும் பொழுதாகும்” என்றார். “என்ன ஆணைகள்?” என்றான். “படைப்பிரிவுகளை எவர் தலைமை கொள்வது என்ற ஆணைகள்தான். ஒரு மொத்த ஆணையிலிருந்து தனித்தனி ஆணைகளாக பிரித்து எழுதிக்கொண்டிருக்கிறேன்” என்றார். “நாளை படைநகர்வு என்றார்கள். இன்றுதான் படைபிரிவுகளுக்கு தலைவர்கள் அமைக்கப்படுகிறார்களா?” என்றான் பூரிசிரவஸ். “பால்ஹிகரே, ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் முன்னரே தலைவர்கள் இருக்கிறார்கள். சொல்லப்போனால் அப்படைப்பிரிவுகளே அத்தலைவர்களின் பொறுப்பில்தான் உருவாகி வந்திருக்கின்றன. பிறிதொருவரை எப்படைப்பிரிவுக்கும் அமைக்க முடியாது. ஆனால் இது ஓர் ஆவணம். இதை கையில் வைத்திருக்கையில் அப்படைத்தலைவன் தான் அரசஆணை பெற்றுவிட்டதாக எண்ணுகிறான். பிறருக்கும் அவன் புதிதாக மீண்டும் பொறுப்பேற்றுவிட்டது போன்ற மாயத் தோற்றம் உருவாகிறது. இவ்வாறு பலநூறு பாவனைகளினூடாகத்தான் மேலிருந்து கீழ் வரைக்கும் ஆட்சிமை சென்று சேர்கிறது” என்றார்.
பூரிசிரவஸ் தன் தொடைகளைத் தட்டியபடி சிரித்துக்கொண்டு எழுந்து “நான் அவைக்கு செல்கிறேன். உண்மையில் அஸ்தினபுரிக்கு வருவதுவரை பதற்றமும் நிலைகொள்ளாமையும் இருந்தது. இங்கிருக்கும் முழுமையான பித்தைப் பார்த்தபின் சிரிக்கத் தொடங்கிவிட்டேன். நேற்றிரவு துயில்கையில் என் முகத்தில் சிரிப்பிருப்பதை நானே உணர்ந்து அது ஏன் என்று எண்ணிப்பார்த்தேன். பித்தர் நடுவே பித்தில்லாதிருப்பது ஒரு பெரும்பேறு. முடிவில்லாது சிரிப்பதற்கு ஏதோ கிடைக்கிறது” என்றான். “முடிவில்லாது அழுவதற்கும் கிடைத்துக்கொண்டிருக்கும், ஒருநாள் இங்கு என் பீடத்தில் அமர்ந்துபாருங்கள்” என்றார் கனகர். பூரிசிரவஸ் புன்னகைத்து கதவைத் திறந்து வெளியே சென்றான்.