வழி

 

கூட்டமில்லாத மதியப்பேருந்தில் ஒரு தாத்தா எழுந்து எழுந்து எட்டிப்பார்த்தார். நான் அவரிடம் ”எங்க எறங்கணும்?”என்றேன். ”ஆ?”என்றார் ”இல்ல எங்க எறங்கணும்?” அவர் என்னை சந்தேகமாகப்பார்த்து ”என்ன?” என்றார் ”பாட்டா, எங்க எறங்கணும்?” ”வில்லுக்குறி வெலக்கு”

”அய்யோ, வில்லுக்குறி வெலக்கு தாண்டியாச்சே…” என்றேன்.”ஏ?” ”வில்லுக்குறி வெலக்கு தாண்டியாச்சுண்ணு சொன்னேன்” ”இப்பம்தானே வில்லுக்குறிப்பாலம் போச்சு?”என்றார். ”ஆமா, வில்லுக்குறி வெலக்கு தாண்டித்தான் வில்லுக்குறிப்பாலம் வரும்” ”மொவ சொன்னது பாலம் தாண்டினாக்க வெலக்கு வரும்ணுல்லா? அங்கிண எறங்கி வரச்சொன்னாள்லா?”

ஒன்றும்புரியவில்லை. நிதானமாகத்தான் முள்ளுக்கும் சீலைக்கும் சேதமில்லாமல் கையாளவேண்டும் என்று முடிவு செய்தேன். ”பாட்டா எங்க எறங்கணும்?” ”வில்லுக்குறி வெலக்குலே…” ”வில்லுக்குறி வெலக்கு தாண்டி வந்தாச்சு..”என்றேன். ”பாலம் இண்ணால்லா வருது?” என்றார் பாட்டா. ”பாலம் வாறது வெலக்கு தாண்டின பெறகாக்கும்” ”மொவ சொன்னா பாலம்தாண்டித்தான் வெலக்குவருமுண்ணு”

மூச்சை நிதானமாக இழுத்துவிட்டேன். அமைதி. அறிவுடையார் ஆவதறிவார். பொறுத்தார் பூமியாள்வார். மெல்ல ”தாத்தா, நீங்க எங்கேருந்து வாறிய?”என்றேன். ”ஏ?” ”ஊரு எங்கே? எங்கிணேருந்து வாறீய?” ”நாகருகோவிலிலே இருந்து”. அது சரி என்று எண்ணிக்கொண்டேன். ”பாட்டா அது நாகருகோவிலிலே இருந்து  வாறப்ப அப்பிடி. பாலம் தாண்டி வெலக்கு வரும். இப்ப நீங்க தக்கலைலே இருந்து நாகருகோவிலுக்குப் போறீக. இப்பம் வெலக்கு தாண்டித்தான் பாலம் வரும்” என்றேன்

”மொவ சொன்னா….”என்றார் கிழவர். நான் அவரையே பார்த்தேன். பின்னர் சற்று கடுமையாக ”இப்பம் நீங்க எறங்கல்லேண்ணா நேரா நாகருகோவிலுக்குத்தான் போவீய. பாலத்துல எறங்குங்க. மொள்ள நடந்தா நேரா வெலக்குக்கு போவலாம்” ”மொவ சொன்னா…” எனக்கு கடுமையான கோபம் வந்தது. ”எறங்குறீயண்ணா எறங்குங்க” ”மொவ சொன்னா பாலம் தாண்டி…”

நான் வெளியே பார்த்து பேசாமலிருந்தேன். கிழவர் என்னிடம் ஈனஸ்வரத்தில் ”மொவ சொன்னா பாலம் தாண்டினாக்க வெலக்குண்ணு…அவ ஸ்கூளு வாத்திச்சியில்லா?’ஸென்று மன்றாடினார்.  நான் தலையைத் திருப்பவில்லை. ”பாலம் தாண்டினா..”என்றார் கிழவர். கண்டக்டர் விசில் அடித்து ”வேய் பாட்டா எறங்குதீரா? வில்லுக்குறியில்லாவே டிக்கெட்டு எடுத்தீரு?” ”வில்லுக்குறி வெலக்கு தாண்டியாச்சு” கிழவர் ”மொவ சொன்னா” என்றார்

கண்டக்டர் இரட்டைவிசில் கொடுக்க பஸ் முன்னால் சென்றது. நான் கிழவரையே பார்த்தேன். என் கண்களைச் சந்தித்ததும் அவர் ”மொவ சொன்னா…பாலம்தாண்டி வெலக்குண்ணு..அவ டிரெயியினிங்கு பாஸாயிட்டுண்டு”என்றார். பஸ் ஓடிக்கொண்டிருந்தது. கண்டக்டர் அருகே வந்தார். ”டிக்கெட் எடும்வே”என்றார் ..”ஏ?” ”டிக்கெட் எடும்…வில்லுக்குறி தாண்டியாச்சுல்லா?” ”எனக்க மொவ சொன்னது பாலம்தாண்டியில்லா வெலக்கு?” ”டிக்கெட்டெ எடும்வே” என்றார் கண்டக்டர்

கிழவர் பொக்கைவாய் திறந்து விழிக்க ஒருவர் ”செரி பாட்டா தப்பு பண்ணிப்போட்டார். போட்டும். டிக்கெட்டெல்லாம் வேண்டாம். பாட்டா இங்க எறங்கும். அங்கிணேருந்து டவுன் பஸ் வரும் அதில ஏறி வில்லுக்குறி வெலக்குல எறங்கும். பைசா இருக்கா?” ”இருக்கு பிள்ள. மவ குடுத்தா…அவ வாத்திச்சியாக்கும் குதிரப்பந்திவெளை ஸ்கூலிலே”

”செரி எறங்கும்” ”இங்கிணயா?” ஆமா…எறங்கும்…வளி தெரியுமா? ”என்னது?” ”எங்க எறங்கணும் தெரியுமா?” கிழவர் என்னைச் சுட்டிக்காட்டி ”இந்த பிள்ள செல்லிச்சுல்லா, வெலக்கு தாண்டி பாலம்… ” எனக்கு பகீரென்றது. ”அய்யோ…பாட்டா இங்கேருந்து திரும்பி போறப்ப பாலம்தாண்டியாக்கும் வெலக்கு” கிழவர் அசடே என்பதுபோல என்னைப் பிரியமாகப் பார்த்து ”வெலக்கு தாண்டில்லா பாலம்?” என்றார். ”பாட்டா அது தக்கலையிலே இருந்து வாறப்ப. இப்ப நீரு திரும்பியாக்கும் போறீரு..இப்ப பாலம் தாண்டியாக்கும் வெலக்கு…நீங்க சொன்னது செரி…நான் சொன்னத மறந்து போடுங்க” என்றேன்

”நீ சொன்னது தப்பாக்குமா?” ”ஆமா நீங்க சொன்னதுதான் சரி ” ”அப்பம் செரி.. ”என்று பாட்டா மீண்டும் இருக்கையில் அமர்ந்துகொண்டார். என்னிடம் ”பாத்துட்டுல்லா சொல்லணும் மக்கா? நான் வயசானவனுல்லா?” என்றார்.

நான் உடம்பே திகுதிகுக்க கண்ணீர் மல்கினேன். ”பாட்டா அவரு சொன்னது செரிதான்…எறங்குங்க” என்றார் கண்டக்டர். ”அவன் தப்புண்ணுல்லா சொல்லுகான்?” ”அவர் சொல்லுகது பஸ்ஸுக்கு உள்ள இருக்கும்பம் உள்ள காரியம்..எறங்கினா அது தப்பு”என்று கண்டக்டர் தெளிவாக விளக்கினார். பாட்டா தலையை ஆட்டினார்

”எறங்குங்க” ”ஏ?” ”எறங்குங்க பாட்டா…எறங்கி டவுன்பஸ்ஸிலே கேறி வில்லுக்குறிக்குப் போங்க” கிழவர் தடுமாறியபடி இறங்கினார். ”பாலம் தாண்டியாக்கும் வெலக்கு, கேட்டுதா? பட்டாவுக்க மக சொன்னதாக்கும் செரி”  ”அப்பம் இவன் சொன்னது தப்பக்குமா?” ”ஆமா…பாட்டா எறங்கினதுமே இவர மறந்திடுங்க…நேராட்டு போங்க…பாட்டாவுக்க மக என்ன சொன்னாஅங்க?”

”வெலக்கு தாண்டினா பாலம் வரும்ணுல்லா மக சொன்னா… அவ வாத்திச்சியில்லா?” நான் ”அய்யோ” என்று கூவினேன். கண்டக்டர் ”பாட்டா அது இவரு சொன்னது…உம்ம மவ சொன்னது பாலம் தாண்டி வெலக்கு வரும்ணாக்கும்” பாட்டா என்னைக் கடுமையாக முறைத்துப் பார்த்தார். ” பாலம்தாண்டினா வெலக்கு…எறங்கி வேற பஸ்ஸிலே கேறும்வே” பாட்டா நடுங்கியபடி இறங்கினார். பஸ் நகர்ந்தது. பஸ் ஸ்டாண்டில் அவர் நிற்பதைப்பார்த்தேன்.

சட்டென்று ஓர் எண்ணம் நாகர்கோவிலில் இருந்து வருவதற்கான வழி சொல்லி அனுப்பப்பட்ட பாட்டா ஏன் தக்கலையில் இருந்து வருகிறார்? அப்படியானால் ஏற்கனவே அவர் வழி தவறித் தக்கலைக்குப் போய்த் திரும்பிவந்திருக்கிறார். பாவமே.

போய்விடுவாரா? கேயாஸ் தியரியின்படி எப்படியெல்லாம் குழம்பினாலும் கடைசியில் வில்லுக்குறி விலக்குக்குச் சென்று சேர்ந்துவிடுவார் என்றுதான் பட்டது. ஆனால் ஒரே இடம் நாம் வரும் திசைக்கு ஏற்பத் தலைகீழாக மாறி நம்மை அலைக்கழிப்பது சற்றும் நியாயமில்லை என்று தத்துவார்த்தமாக எண்ணிக்கொண்டேன்.

  • குறிச்சொற்கள்
  • வழி
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 1, ஜடாயு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 2, ஜடாயு