க்ஷீரவதியை கடந்தபோது இந்திரமாயக்காரன் தன் கோலை வீசியதுபோல் பூரிசிரவஸின் உள்ளம் நிலைமாறியது. அதுவரை ஒவ்வொரு புரவிக்குளம்படிக்கும் உள்ளம் ஓரடி பின்னெடுத்து வைத்துக்கொண்டிருந்தது. அதன்பின் புரவிக்கு மிக முன்னால் சென்று வருக வருக என்று அது தவித்தது. அழைத்தது. மேலும் மேலுமென அதை குதிமுள்ளால் குத்தி ஊக்கினான். ஆனால் புழுதியும் உருளைக்கற்களும் பரவிய, சுழன்று சுழன்றேறும் சிறிய பாதையில் விரைவிலேயே புரவி வாயிலிருந்து நுரைவலை தொங்க தலைதாழ்த்தி உடலதிர்ந்து நின்றுவிட்டது.
அவன் கீழிறங்கி அதன் கழுத்தைத் தடவி ஆறுதல்படுத்தி கடிவாளத்தைப்பற்றி இழுத்துச் சென்றான். சற்று தொலைவிலிருந்த சிறிய சுனையைக் கண்டதும் அங்கே கொண்டு அதை நிறுத்தினான். மூச்சிளைப்பால் நீரருந்தாமல் வாய்திறந்து தலைதூக்கி ஏங்கியது புரவி. அவன் நீரில் இறங்கி பனிபோல் குளிர்ந்திருந்த நீரை அள்ளி முகத்திலும் கழுத்திலும் விட்டுக்கொண்டான். பின்னர் அங்கிருந்த பாறையில் கால்களை நீட்டியபடி சாய்ந்தமர்ந்தான். காலை வெயில் உறைக்கத் தொடங்கியிருந்தது. இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
கீழிருந்து ஒரு வணிகக்குழு வளைந்தேறி வருவது தெரிந்தது. அதிலிருந்தவர்களை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். பால்ஹிகநகரியிலிருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு மலைக்கு மேல் செல்லும் வணிகர்கள். மூன்றாவது வளைவை அவர்கள் கடந்தபோது அவர்கள் மலைமேல் வாழும் தொல்குடிகள் என்று தெரிந்தது. மஞ்சள் படிந்த பெரிய முகமும் இடுங்கிய சிறுவிழிகளும் கரிய நீள்மயிரும் கொண்டிருந்தனர். சென்ற பத்தாண்டுகளாகவே மலைக்கு மேலிருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு விற்றுவரும் தொல்குடி வணிகர்கள் உருவாகிவிட்டனர் என்று அவன் அறிந்திருந்தான். அவர்களை அங்கிருக்கும் பழங்குடிகள் எளிதில் நம்பியமையால் பிறரைவிட அவர்களால் வெற்றிகரமாக வணிகம் செய்யமுடிந்தது.
புரவி நீரை உறிஞ்சிக்குடித்து தலைதூக்கி முகத்தை விலாநோக்கி வீசி தாடையை உதறி துளிகளை தன்மேல் தெறித்துக்கொண்டது. மூச்சுசீறியபடி பிடரி சிலிர்த்து மீண்டும் குனிந்து நீரை அள்ளியது. பூரிசிரவஸ் வளைந்து மேலேறி வந்த அந்த வணிகக்குழுவை நோக்கிக்கொண்டிருந்தான். மேலும் நெருங்கி வந்தபின்னர்தான் அதில் ஒருவர் பெண் என்று தெரிந்தது. முதுமகள், ஆனால் உரம் மிக்க உடலும் பெரிய கைகளும் கொண்டிருந்தாள். பால்ஹிகக்குடியை சேர்ந்தவள் என்பது அவள் உடல் அளவுகளிலே தெரிந்தது. அவன் அவளருகே சென்றுநின்றால் அவள் தோள்களே தலைக்குமேல் இருக்குமென்று தோன்றியது.
நெஞ்சில் ஒரு திடுக்கிடலுடன் அவன் அம்முகத்தை பார்த்தான். அவளுக்கு எவ்வளவு அகவை இருக்கும்? அவன் மலைக்கு மேல் சென்றபோது பிரேமைக்கு அவனைவிட ஓரிரு அகவைகள் மிகுதியாகவே இருந்தன. அப்படியென்றால் அவள் இவளை போலிருப்பாள். அவர்கள் மிகச் சீரான விரைவில் வந்து அவனை அணுகி கடந்து சென்றனர். ஒவ்வொருவரும் திரும்பி அவனைப் பார்த்து தலைவணங்கி தங்கள் மொழியில் முகமனுரைத்துச் சென்றனர். புரவிகளின் வியர்வை மணமும் நிலப்பகுதியின் நீராவிபடிந்த மென்மயிராடைகள் உலர்வதன் புழுங்கல் மணமும் எழுந்து மெல்ல கரைந்தன. புரவிகளின் வால்கள் சுழல்வதை அவன் நோக்கிக்கொண்டு நின்றான்.
அவர்கள் சீரான விரைவில் செல்வதனால் அங்கு நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டியிருக்கவில்லை. உள்ளத்தை எப்போதும் புரவிக்குப் பின்னால் நிறுத்தவேண்டும் என்று மலைப்பயணங்களை கற்றுத்தந்த முன்னோர்கள் சொன்னதை அவன் நினைவுகூர்ந்தான். புரவி தன் விரைவை தானே முடிவு செய்ய விடவேண்டும். அதை ஊக்கும்தோறும் அது வலுவிழக்கும். அவனுடைய புரவி நீரருந்திவிட்டு அங்கிருந்த பாறையொன்றில் தன்னுடலை மெல்ல சாய்த்து இடது முன்காலைத் தூக்கி கண்களை பாதி மூடி துயிலத்தொடங்கியது. அதன் வாயிலிருந்து அருந்திய நீரின் எச்சம் சிலந்தி வலையிழைபோல் தொங்கி ஆடியது.
அவன் புரவியை வெறுமனே நோக்கிக்கொண்டு எண்ணத்தில் அலைந்தான். அவள் எப்படியிருப்பாள்? முதுமை அணுகியிருக்கும். இந்த மலைப்பகுதிகளில் பெண்கள் மிக விரைவாக இளமையின் செழுமையை இழந்துவிடுகிறார்கள். முகம் பனியில் சிவந்து, கருகிய மலர்போல் ஆகிவிடுகிறது. கண்களைச் சுற்றியும் வாயோரங்களிலும் அடர் சுருக்கங்கள் உருவாகின்றன. நெற்றியில் ஆழ்ந்த வரிகள். பின்னர் அவர்களுக்கு அகவையே ஆவதில்லை. நாற்பது அகவைப் பெண்ணும் நூறு அகவையானவளும் எந்த வேறுபாடையும் காட்டுவதில்லை. இப்போது கடந்துசென்றவளுக்கு நாற்பது இருக்கலாம், நூறும் அதற்கு மேலும் கூட இருக்கலாம். இங்கு பெரும்பாலும் அனைவருமே நூற்றியிருபது வயது வரை வாழ்கிறார்கள்.
பனி மூடி, பின் உருகி, மீண்டும் மூடி இந்த மலைகளை பாதுகாக்கிறது. மாபெரும் வெண்ணிறப் பறவை மென்சிறகு சரித்து முட்டைகளை காப்பதுபோல என்பது தொல்பாடகர்களின் வரி. மண்ணிலிருந்து வரும் எந்த மாசும் மலையில் படிவதில்லை என்பார்கள். பனியைக் கடந்து எதுவும் செல்வதில்லை. நிகர்நிலத்தின் புழுதிப்புயல், நோய்கள், மானுடரின் மொழிகள், வஞ்சங்கள். மானுடரின் நாணயங்களுக்குக் கூட அங்கே மதிப்பில்லை.
பாதுகாக்கப்பட்ட செல்வம் அம்மக்கள். என்றோ ஒருநாள் விண்ணிலிருந்து அனலிறங்கி மனுக்குலமனைத்தையும் சாம்பலாக்குமென்றும், அதன்பிறகு கோபுரங்களுக்குமேல் கலங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் இவ்விதைமணிகளை புவியெங்கும் தெய்வங்கள் கொண்டுசென்று பரப்பும் என்றும், பேருடலும் நிலைமாறா உள்ளமும் குறைந்த சொற்களும் ஒருவரோடொருவர் உளம் கோத்துக்கொள்ளும் எளிமையும் கொண்ட மக்களின் பிறிதொரு யுகம் எழுமென்றும் பால்ஹிகத் தொல்கதைகளில் அவன் கேட்டிருந்தான்.
நீள்முச்சுடன் அவன் எழுந்தபோது புரவி விழித்துக்கொண்டு தலையை ஆட்டி சீறல் ஓசையெழுப்பியது. அவன் கைசொடுக்கியதும் சேணங்கள் இழுபட அருகே வந்து நின்றது. அதன் கழுத்தும் விலாவும் சிலிர்த்துக்கொண்டிருந்தன. அவன் அதன் பிடரியை மெல்ல அளைந்தபின் சேணத்தில் காலூன்றி ஏறிக்கொண்டான். செல்க என்று அதை மெல்ல ஊக்கினான். சீரான அடிகளுடன் தலையசைத்தபடி அது செல்லத்தொடங்கியது.
மலைகளுக்கு மேல் கோடைகாலத்தில் அந்தி மிகவும் பிந்தித்தான் வருமென்பதை அவன் அறிந்திருந்தான். அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் இருக்கும் நிகர்நிலங்களில் இரவான பின்னரே பால்ஹிகபுரியில் இருள் கசியத்தொடங்கும். அப்போதும் சூழ்ந்திருக்கும் மலைஉச்சிகள் விண்ணிலிருந்து ஒளியைப்பெற்று மின்னிக்கொண்டிருக்கும். அவை அன்னைப்பசுவின் வெண்பாலருந்தும் கன்றுக்குட்டிகளென்பது பால்ஹிகர்களின் தொல்கூற்று. கதிரவன் முற்றிலும் மேற்கில் மறைந்த பின்னரும்கூட மலைகளின் ஒளி நெடுநேரம் எஞ்சியிருக்கும். கீழிருந்து இருள் ஊறிப்பெருகி ஊர்களை மூழ்கடித்த பின்னரும்கூட பனிமலை உச்சிகள் ஒளிகொண்டிருக்கும். சில தருணங்களில் அவை இரவெல்லாம் அணைவதே இல்லை.
அவன் புரவி மிகவும் களைத்துவிட்டிருந்தது. அது ஒவ்வொரு காலடியாக எண்ணி எண்ணி எடுத்துவைத்து தலைதாழ்த்தி மூச்சுசீறி பின் உடலை உந்தி முன்னெடுத்து நடந்தது. அவ்வப்போது நின்று மீண்டும் உடல் விதிர்த்து முன்னகர்ந்தது. தொலைவில் தங்கும்விடுதியின் விளக்கொளியை பார்த்ததும் அவன் புரவியிலிருந்து இறங்கி அதன் கடிவாளத்தைப்பற்றி இழுத்துக்கொண்டு நடந்து சென்றான். அது ஊக்கமடைந்து அவனை தொடர்ந்து வந்தது. அவன்மேல் அதன் வாய்க்கோழை சொட்டியது. அவ்விடுதியைக் கண்டபின்னர் அதை அணுகுவது கடினமாயிற்று. நடக்க நடக்க அகன்றது அதன் சாளர ஒளி.
மரப்பட்டைக் கூரையும் உருளைக்கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட சுவர்களும் உயரமான புகைபோக்கிகளும் கொண்ட தாழ்வான கட்டடம். கோடையாதலால் அங்கே வணிகர்கள் பலர் தங்கியிருந்தனர். புரவிகள் தங்குவதற்கான மூடப்பட்ட கொட்டில்கள் இருந்தன. வெளியே இருந்த மரத்தொட்டியில் புரவிக்கு நீர்காட்டி கொட்டிலுக்குள் சென்று கட்டினான். உப்புசேர்த்து உலரவைக்கப்பட்ட மலைப்புல் தனிக்கொட்டகையில் சுருள்களாக வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துவந்து புரவிக்கு போட்டபின் தொட்டிநீரில் கைகளையும் முகத்தையும் கழுவினான். மலைச்சரிவிலிருந்த பாறையிடுக்கிலிருந்து ஊற்றுநீர் பாதியாகப் பிளந்த மூங்கிலால் ஆன ஓடை வழியாக வந்து தொட்டியில் விழுந்தது. பனியுருகிய நீர் தண்மையால் எடைகொண்டிருந்தது.
உள்ளும் புறமும் என இரு கதவுகள் கொண்ட வாயிலினூடாக விடுதியின் நீள்சதுர அறைக்குள் நுழைந்தான். எடை கட்டப்பட்ட இரு கதவுகளும் முனகியபடி மூடிக்கொண்டன. உள்ளே கணப்பு எரிந்துகொண்டிருந்ததனால் முதல்கணம் அலையென வெம்மை வந்து அவனை சூழ்ந்தது. அதில் அவன் உடல் சிலிர்த்தது. தன் எடைமிக்க தோலாடையைக் கழற்றி அங்கிருந்த மூங்கில் கழியில் தொங்கவிட்டான். உள்ளே அணிந்திருந்த மென்மயிர் ஆடையைக் கழற்றி உதறி இன்னொரு கழியில் தொங்கவிட்டான். தடித்த மரவுரி ஆடையுடன் சென்று கணப்பருகே அமர்ந்து கைகளை அதில் காட்டி சூடுபடுத்திக்கொண்டான்.
அறையெங்கும் மலைவணிகர்கள் தடித்த தோல் போர்வைகளை போர்த்தியபடி உடலுடன் உடல் ஒட்டி படுத்திருந்தனர். சிலர் படுத்தபடியே ஒருவரோடொருவர் தாழ்ந்த குரலில் தங்கள் மொழியில் உரையாடிக்கொண்டிருந்தனர். புரவியிலிருந்த பையில் உணவும் நீருமிருந்ததை அவன் எண்ணினான். குளிரினால் விரைந்து உள்ளே நுழைந்துவிட்டிருந்தான். மீண்டும் எழுந்துசென்று பொதிகளை அவிழ்த்து அவற்றை எடுத்துக்கொண்டு வருவதற்கு தயக்கமாக இருந்தது. அங்கு துயில்வதற்கு தன்னிடம் போர்வை ஏதுமில்லை என்பதை நினைவுகூர்ந்தான்.
கணப்பருகே படுத்திருந்த மலைவணிகன் ஒருவன் ஒருக்களித்து “வெளியே சென்று தங்கள் பொதிகளை எடுத்துவர தயங்குகிறீர்களா, இளவரசே?” என்றான். பூரிசிரவஸ் “நான் இளவரசனென்று எப்படி அறிந்தாய்?” என்றான். “தங்களை நான் பால்ஹிகபுரியில் கண்டிருக்கிறேன்” என்றான். “ஆம்” என்று அவன் சொன்னான். “என் பெயர் ஜம்பா. அன்பானவன் என்று பொருள்” என்றான் மலைவணிகன். “பொறுங்கள், நான் சென்று எடுத்துவருகிறேன்” என்று சொல்லி எழுந்து வெளியே சென்றான். திரும்பி வந்து பூரிசிரவஸின் பொதியை அவனிடம் அளித்தான். அவன் அதை அவிழ்த்து உள்ளிருந்து உலர்ந்த அப்பத்தையும், வாட்டிய இலையில் பொதிந்து கட்டப்பட்ட ஊன்கொழுப்பையும் எடுத்தான். அப்பத்தை தீயில் காட்டி அதில் கொழுப்பை வைத்து அது உருகியதும் இன்னொரு அப்பத்தை அதன்மேல் வைத்து கடித்து உண்ணத்தொடங்கினான்.
“நீங்கள் மது எதுவும் கொண்டுவரவில்லையா?” என்று ஜம்பா கேட்டான். “இல்லை” என்று பூரிசிரவஸ் சொன்னான். “இம்மலைப்பகுதியில் இரவில் சற்றேனும் மது இல்லாமல் துயில்வது நன்றல்ல. குருதி உறைந்துவிடும். பொறுங்கள், என்னிடம் உள்ளது” என்றான். எழுந்து சென்று தன் பொதியைத் திறந்து அதிலிருந்து சிறு உலோகத்தாலான புட்டியை எடுத்தான். அதன் மரத்தாலான மூடியை பல்லால் கடித்துத் திறந்து “அருந்துக!” என்றான். அரக்கு உருகும் மணம் எழுந்தது. “நேரடியாகவா?” என்றான் பூரிசிரவஸ்.
“இதை நீர்போலவோ யவனமதுபோலவோ அருந்தலாகாது. ஓரிரு சொட்டு வாய்க்குள் விட்டு மூக்கின் வழியாக வெளியே ஆவி வரவிடவேண்டும். தொண்டையை எரித்து நெஞ்சை புகையவைத்தபடி அது உள்ளிறங்க விடவேண்டும். குருதியில் அது வெம்மையாகக் கலப்பதை உணர்ந்தபின் அடுத்த துளி. ஓர்இரவுக்கு பத்து பன்னிரண்டு துளிகள் போதுமானவை. இதன் பெயர் சாங். அரிசியிலிருந்து எடுக்கப்படும் மது. எங்கள் மலைப்பகுதிகளில் இதை நீரனல் என்கிறோம்” என்றான்.
பூரிசிரவஸ் அதை வாங்கி முகர்ந்து பார்த்தான். எரிமணம் மூக்கை எரித்தது. “அஞ்ச வேண்டாம். இது நரம்புகளை முறுக்கவிழச் செய்யும். தசைகளை மென்மையாக்கும். இரவில் இனிய பெண்களை கனவில் வரவழைக்கும்” என்றான் ஜம்பா. புன்னகையுடன் பூரிசிரவஸ் ஓரிரு மிடறுகள் அருந்தினான். ஜம்பா சொன்னதுபோல உடலெங்கும் வெம்மை பரவத்தொடங்கியது. மீண்டும் மீண்டும் அதை உறிஞ்சவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. சற்று கழிந்ததும் ஜம்பா கைநீட்டி “போதும், இதற்கு மேல் அருந்தினால் இரவெல்லாம் துயிலின்றி நீரருந்தத் தோன்றும். காலையில் தலை பத்து மடங்கு எடைகொண்டிருக்கும்” என்றபடி அதை திரும்ப வாங்கிக்கொண்டான்.
பூரிசிரவஸ் பொதியிலிருந்து எடுத்த தன் போர்வையை உடல்மேல் இழுத்துக்கொண்டு படுத்தான். வெளியே குளிர்காற்று வீசியடிக்கும் ஓசை கேட்டது. பெரிய மலைக்கற்களை அடுக்கி கட்டப்பட்ட சுவர்கள் கொண்டிருந்த விடுதியின் வெளியே காற்று நுழையாமலிருக்க சேறு கொண்டு பூச்சிடப்பட்டிருந்தது. அதன்மேல் அறைந்து எழுந்த காற்று கூரைப் பலகைகளை அதிரச்செய்தது. “தங்களை ஒரே ஒருமுறை சந்தையில் பார்த்திருக்கிறேன். தங்களை இங்கு தொல்கதைகளின் பெருவீரர்களுக்கு நிகராக எண்ணுகிறார்கள். மைந்தர்களுக்கு தங்கள் கதைகளை சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் சிலரே உங்களை பார்த்தவர்கள்” என்றான் ஜம்பா.
பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. “மலைக்குமேல் தாங்கள் இதற்கு முன்பு வந்திருக்கிறீர்களா, இளவரசே?” என்றான். “ஆம், நெடுங்காலத்துக்கு முன்பு” என்றான் பூரிசிரவஸ். “என்னுடைய மூதாதை ஒருவர் இங்கு மலையேறி வந்தார். அவர் இங்கு ஒரு பெண்ணை மணந்தார். இங்கேயே இருந்துவிட்டார். அவரைத் தேடிவந்தேன்.” ஜம்பா கையை ஊன்றி எழுந்து “முதிய பால்ஹிகரை சொல்கிறீர்களல்லவா?” என்றான். ஆர்வத்தை வெளிக்காட்டாமல் “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அவர் நலமுடன் இருக்கிறாரா?” என்றான்.
“மிகுந்த நலமுடன் இருக்கிறார். அவருக்கு இரண்டு மனைவிகளிலாக ஏழு மைந்தர்கள். ஒரு மனைவி இறந்துவிட்டார். அவர்கள் எழுவரில் ஒருவருக்கு நிகராக நம்மில் பத்து பேர் மற்போரிட இயலாது. வெண்பாறையில் செதுக்கப்பட்ட சிலைகள் போன்றவர்கள். மூதாதையர் அவ்வடிவில்தான் இருந்தார்கள் என்கிறார்கள். ஆனால் மைந்தர் எழுவரையுமே தோள்வல்லமையால் வென்றவர் முதியவர்” என்றான் ஜம்பா. “உண்மையில் இன்று மலையில் அவரை வெல்ல எவரும் இல்லை. வெல்லும் வாய்ப்புள்ள ஒருவன் இருக்கிறான். பால்ஹிகரின் மறைந்த துணைவியின் மூத்தவரது பெயரன். அவன் பால்ஹிகரைத் தூக்கி அறைந்தால் அவனே அந்த மலைக்குடிக்கு தலைவனாவான்.” பூரிசிரவஸ் போர்வைக்குள் குளிர் நுழைந்ததைப்போல் மயிர்ப்பை அடைந்தான். “அவன் பெயரென்ன?” என்றான்.
“யாமா என்று அவனை அழைக்கிறார்கள். பால்ஹிகர்களின் பேருடலும் வெண்ணிறமும் கொண்டவன். ஆனால் நீலக்கண்கள் மட்டுமில்லை. அவன் கண்கள் அங்கே மலைக்குக் கீழே உங்கள் நிலத்தில் வாழும் மக்களுக்குரியவை. முன்னர் எப்போதோ வந்து தங்கிச்சென்ற அவன் தந்தையின் கண்கள் அவை என்கிறார்கள்.” பூரிசிரவஸ் உளம் விம்மி உதடுகளை அழுத்தியபடி கண்களை மூடிக்கொண்டான். “பால்ஹிகரின் மைந்தர்கள் எழுவரையும் மற்போரில் அவன் வென்றிருக்கிறான். ஒருமுறை மலையேறிச்சென்று ஒரு காட்டு எருதைக் கொன்று அதை தூளில் தூக்கி மூன்று மலையேறி இறங்கி தன் இல்லத்திற்கு வந்திருக்கிறான்.”
ஜம்பா மெல்ல சிரித்து “இன்று மலைப்பெண்கள் அனைவரும் விரும்பும் ஆண்மகன் அவன். இன்னும் சில ஆண்டுகளில் இந்த மலைமுழுக்க அவனுடைய மைந்தர்கள் வளரத் தொடங்கிவிடுவார்கள்” என்றான். பூரிசிரவஸ் மெல்லிய விம்மலோசை எழுப்பினான். “என்ன சொன்னீர்கள்?” என்று ஜம்பா கேட்டான். இல்லை என்று அவன் தலையசைத்தான். “களைத்திருக்கிறீர்கள். உங்களை அறியாமலேயே குறட்டையொலி வருகிறது. துயில்க!” என்று சொல்லி ஜம்பா போர்வையை தன்மேல் இழுத்துக்கொண்டான்.
போர்வைக்குள் நிறைந்த வெம்மையை குருதி ஏற்றுக்கொண்டது. தசைகள் குளிருக்காக இறுகியிருந்த செறிவு உடலிலிருந்து விலக உருகி மெல்ல பரவுவதுபோல் தன் உடலை உணர்ந்தான். மயங்கி மயங்கி உருவழிந்து பரவிய நனவில் மிக அருகிலென அவன் தன் மைந்தனை கண்டான். அவன் முன்பே அவனை அறிந்திருந்தான். பேருடல் கொண்ட பூரிசிரவஸ். தொல்பால்ஹிகன். அவன் கண்களை மூடி மிக அருகே தன் மைந்தனின் முகத்தை பார்த்தபடி படுத்திருந்தான்.
மறுநாள் புலரியில் பூரிசிரவஸ் ஒரு கனவு கண்டான். ஒரு மலைச்சரிவில் இளவெயில் விழும் முற்றத்தில் அவன் மைந்தனுடன் அமர்ந்திருந்தான். ஓர் அகவை அடைந்த குழவி என்றாலும் மைந்தன் மிகுந்த எடைகொண்டிருந்தான். அவன் கால்களின்மேல் அமர்ந்து கைகளை வீசியபடி எம்பி எம்பி குதித்தான். திறந்த சிவந்த இதழ்களிலிருந்து வாய்நீர் வழிந்தது. மேல் ஈறில் இரண்டு பாற்பற்கள். குழிகள் விழுந்த கன்னம். அவன் சிரிப்பின் ஒலி குருவிகளின் குரலென கேட்டது. பிரேமை உள்ளிருந்து வந்து அவனைக் கடந்து மரத்தாலான குடத்துடன் சென்றாள். குடத்திலிருந்த நீர் அவன் தோளில் விழுந்தது. குளிர்ந்த நீர். அவன் உடல் சிலிர்த்தது.
விழித்துக்கொண்டபோது அவன் தன் முதுகிலும் தோளிலும் போர்வை விலகியிருப்பதை உணர்ந்தான். இழுத்து மூடிக்கொண்டு புரண்டபோது காலின்மேல் ஒரு வணிகன் தலைவைத்து துயில்வதை அறிந்தான். மெல்ல கால்களை உருவிக்கொண்டான். கதவு திறந்து உள்ளே வந்த ஜம்பா “விழித்துவிட்டீர்களா? கிளம்பலாம்… இன்று நல்ல வெயில் இருக்கும். வழித்தடை இருக்காது” என்றான். “விடிந்துவிட்டதா?” என்றான் பூரிசிரவஸ். “இருளவே இல்லை என்று சொல்லவேண்டும். நான் இரவில் எழுந்து பார்த்தேன். பனிமலை ஒளியில் கூழாங்கற்களை பார்க்கமுடிந்தது” என்றான் ஜம்பா.
மேலும் சற்றுநேரம் பூரிசிரவஸ் படுத்தே கிடந்தான். தன் உடல் உருவாக்கிய அனலில் தானே இதமாக நனைந்தபடி. இனிமை இனிமை என உள்ளம் அரற்றியது. ஏன் இந்த இனிமை? அரிதாக மதியத்துயில் விழிக்கையில், எங்கும் எந்த ஓசையும் இல்லாதிருந்தால், வெளியே வெயில் முறுகி தேன் நிறம் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு படுத்திருக்கையில் அந்த இனிமையை உணர்ந்திருக்கிறான். வெறும் இனிமை. இருத்தல் மட்டுமே அளிக்கும் இனிமை. மெய்யான இனிமை என்பது எதன்பொருட்டும் எழாததாகவே இருக்கமுடியும்.
அவன் எழுந்து போர்வையை சுருட்டிக் கட்டினான். ஜம்பா “நேற்று நீங்கள் நன்றாக துயின்றீர்கள். நான் பார்த்தேன். மது சிறப்பான துணைவன்” என்றான். பூரிசிரவஸ் “ஆம், இனிய கனவுகள்” என்று புன்னகை செய்தான். வெளியே சென்று மரத்தொட்டிக்குள் குடுவையை விட்டபோது அது கல்லில் முட்டியது. குனிந்து பார்த்தபோது நீர் உறைந்து மிதப்பது தெரிந்தது. அதை ஒதுக்கி சற்று நீரள்ளி கண்களையும் வாயையும் கழுவிக்கொண்டான். “உணவுக்கு இங்கிருக்க வேண்டியதில்லை. சென்றபடியே உண்ணலாம். புரவி உண்டு துயின்று புத்துணர்வுடன் இருக்கிறது. அது சலிப்பதற்குள் நாம் நெடுந்தொலைவு சென்றுவிடலாம்” என்றான் ஜம்பா.
பூரிசிரவஸ் தொழுவுக்குள் சென்றான். அங்கே நான்கு புரவிகள்தான் எஞ்சியிருந்தன. அவன் புரவி அவனை நோக்கி தலைதாழ்த்தி கனைத்து முன்காலால் நிலத்தை தட்டியது. அவன் அதை அணுகி மெல்ல தட்டியபின் அவிழ்த்து வெளியே கொண்டுவந்தான். அது சீறிய மூச்சுடன் தரையை முகர்ந்தது. மூடிய அறைக்குள் அது தரைக்காக ஏங்கியிருக்கிறது. ஜம்பா பொதிகளை கொண்டுவந்து புரவியின்மேல் வைத்து கட்டினான்.
“இவ்வளவு இறுக்கமாக பொதிகளை கட்டக்கூடாது. தளர்வாகவும் கட்டக்கூடாது. சிறுசிறு பொதிகளாகக் கட்டி அவற்றை ஒன்றாகத் தொகுத்துக் கட்டவேண்டும். மலையேறும்போது பொதி அசையக்கூடாது, பொதிக்குள் உள்ளவையும் அசையக்கூடாது. அதுவே புரவிக்கு பிடிக்கும். அதன் விசை குறையாதிருக்கும்” என்றான். அவனே பொதிகளைக் கட்டியபின் தன் அத்திரியை அழைத்துவந்தான். அதைக் கண்டதும் பூரிசிரவஸின் புரவி மெல்ல கனைத்தது. “செல்வோம்” என்றான் ஜம்பா. அவர்கள் மலைச்சரிவில் வளைந்து மேலேறத் தொடங்கினர்.
வெண்பனிமலைகள் உறைந்து சூழ்ந்திருந்தன. கதிர் எழ நெடுநேரமாகும் என்று தெரிந்தது. வானம் சாம்பல்நிற ஒளியுடன் முகில்களே இல்லா வெளியாக வளைந்திருந்தது. பறவைகளே இல்லை. குளிர்காலத்திற்கு முன்னர்தான் வடக்கிலிருந்து பறவைகள் கூட்டம் கூட்டமாக மலைகளைக் கடந்து தெற்கே செல்லும் என பிரேமை சொன்னதை நினைவுகூர்ந்தான். பனித்துகள்கள் பறந்துசெல்வதுபோலத் தோன்றும். மலைகளுக்கு மேலிருந்து ஒளியும் அமைதியும் வழிந்து சரிவுகளில் பரவியிருந்தன. குளிரில் வெடித்த, வெளிறி பொருக்குபடிந்த மலைப்பாறைகள் துயிலில் என பதிந்திருந்தன. அவற்றை நோக்க நோக்க உள்ளத்துள் சொற்கள் விசையழிந்து சிறகுதிர்ந்து விழுந்தமைந்தன.
வழியெல்லாம் ஜம்பா பேசிக்கொண்டே வந்தான். அவனால் பேச்சை நிறுத்த முடியாது என்று தோன்றியது. பேச்சினூடாக அவன் எதை அடைகிறான் என்று பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டிருந்தான். அவன் எதையும் புனைந்துருவாக்கவில்லை. கூரிய நிகழ்வுகள் எதுவும் அவன் மொழியிலெழவில்லை. விந்தையானதோ எண்ணத்தை தூண்டுவதோகூட அவனால் சொல்லப்படவில்லை. எளிய அன்றாட வாழ்க்கைத் தருணங்கள் மட்டுமே. பின்னர் அவனுக்கு தோன்றியது, மொழியினூடாக வாழ்ந்ததை திரும்ப வாழ்கிறான் என்று. இவ்வாறு இவன் செல்லும் வழிகள் அனைத்திலும் உடன் செல்பவருடன் பேசினான் என்றால் ஒரு வாழ்க்கையை எத்தனை முறை வாழமுடியும்?
இந்த மலைப்பகுதிகளில் ஒன்றுமே நிகழ்வதில்லை. ஒருதுளி வாழ்க்கையை நிகழ்வுப்பெருக்கென ஆக்கிக்கொள்ளும் பொருட்டே இவன் பேசிக்கொண்டிருக்கிறான். அப்பேச்சை வழிநடத்த பூரிசிரவஸ் முற்படவில்லை. அவனுக்கு தன் மைந்தனைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு ஆர்வமிருந்தது. ஆனால் அதைப்பற்றி கேட்கப்போனால் மிக ஆழமானதும் அவனுக்கே உரித்தானதுமான ஒன்றை எடுத்து வெளியே வைப்பதுபோலத் தோன்றி உளம்கூசினான். ஆனால் எங்கேனும் தன் மைந்தனைப் பற்றிய பேச்சு எழுமோ என்று அனைத்து சொற்களிலும் செவி நாட்டினான். சுழன்று வரும் பேச்சில் மீண்டும் மைந்தனைப் பற்றிய ஒரு குறிப்பு வரும்போது ஓசை கேட்டு சிலிர்க்கும் வேட்டைவிலங்கென அவன் அனைத்துப் புலன்களும் விழிப்பு கொண்டன. நெஞ்சு படபடத்தது. முகம் கனிந்து விழிநீர்மை கொண்டது. அம்மெய்ப்பாடுகளை அவன் காணாமல் இருக்கும்பொருட்டு வேறு பக்கம் திரும்பி ஆர்வமற்றவன்போல் உம் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தான்.
ஜம்பா மீண்டும் மீண்டும் மைந்தனின் பெருந்தோள் வல்லமை பற்றியே சொன்னான். எங்கும் எதிலும் தயக்கமற்றவன். எண்ணி முடிவெடுப்பதில்லை. ஒருமுறை மதங்கொண்ட மலை எருது ஒன்று சரிவில் விரைந்து ஓடி சாலையில் சென்று கொண்டிருந்த வணிகக்குழுவை நோக்கி வந்தபோது அனைவரும் அலறி பின்னால் சென்றனர். அவன் ஒரு கணமும் எண்ணாமல் முன்னே சென்று கீழே கிடந்த கல்லை எடுத்து அதன் தலையில் ஓங்கி அறைந்தான். அது நிலைதடுமாறி விழுந்ததும் கால்களைப்பற்றி சரிவில் உருட்டிவிட்டான். ஆழத்தில் அது விழுந்து அதன் உடல் உடைந்ததும் மேலிருந்து சற்றும் தயங்காமல் குதித்து அதனருகே சென்றான். அதை இரு கால்களைப் பற்றி தோளிலேற்றிகொண்டு மேலே வந்தான். “ஒருவாரம் எங்கள் குடி உண்ணுவதற்குரிய உணவு” என்று பெரிய பழுப்பு நிற பற்களைக்காட்டி சிரித்தபடி சொன்னான்.
“தயங்காமையே அவன் ஆற்றல். ஏன் அவன் தயங்குவதில்லை என்றால் அவன் தோள்கள் வலிமை மிக்கவை” என்றான் ஜம்பா. ஆம் என்று பூரிசிரவஸ் தனக்குள் சொல்லிக்கொண்டான். என் உருவம், என் தோள்கள். இவையே என்னை எங்கும் தயங்க வைக்கின்றன. பெருந்தோள் கொண்டு தயங்காது முன்செல்லும் ஒரு களிற்றெருது என்னுள் இருந்துள்ளது. அவ்விதை முளைத்தவன் அவன். ஒவ்வொரு அடிக்குமென மைந்தன் அவனுள் உருத்தெளிந்துகொண்டிருந்தான். அவனை இளங்குழவியாக கையிலெடுத்து உடலோடணைத்து முத்தமிட்டதாக, கருவறைமணம் முகர்ந்ததாக அவன் உள்ளம் கனவுகொண்டது. அவன் தோள்கள் வளர்வதை ஒவ்வொருநாளுமென தொட்டறிந்ததாகவே அது நம்பலாயிற்று.
அவனால் பிரேமையின் ஊர் நெருங்குவதை உணரமுடியவில்லை. அச்சாலையின் இரு மருங்குகளும் முற்றாக மாறிவிட்டிருந்தன. முன்பு ஒரு பொதிசுமக்கும் அத்திரி வந்தால் பிறிதொரு அத்திரி மலைவிளிம்பில் ஒண்டி நின்று வழிவிடவேண்டுமளவுக்கு சிறிதாக இருந்தது அப்பாதை. இப்போது பொதிவண்டிகளே ஒதுங்காமல் வழிவிட்டுச் செல்லுமளவுக்குப் பெரிதாக வெட்டி அகலப்படுத்தப்பட்டிருந்தது. ஷீரவதிக்குப் பின் பிரேமையின் ஊர்வரைக்கும் முன்பு ஓரிரு சாவடிகளன்றி வீடே இல்லை. இப்போது மலைச்சரிவுகளில் பல இடங்களில் மலையூர்களின் வழக்கப்படி தாழ்வான மரக்கூரை கட்டி, மேலே மண்பெய்து உருவாக்கப்பட்ட இல்லங்கள் கண்ணுக்குப்பட்டன. ஆடுகளையும் மலை மாடுகளையும் மேய்த்தபடி இடையர் குடிகள் நிற்பது தெரிந்தது.
ஜம்பா தலைவணங்கி “நாம் வந்துவிட்டோம்” என்று சொன்னபோது “எங்கு?” என்று அவன் கேட்டான். “தாங்கள் விரும்பிய இடத்திற்கு. இங்குதான் தங்கள் மூதாதை பால்ஹிகர் நான் கிளம்பும்போது தங்கியிருந்தார். தன் மைந்தரோடு அவ்வப்போது பூசலிட்டு மலையேறிச் சென்றுவிடுவது அவருடைய வழக்கம். மைந்தர்கள் எழுவரும் தங்கள் மனைவியருடன் இங்கு ஏழு இல்லங்களிலாக வசிக்கிறார்கள். அவருடைய துணைவி ஓர் இல்லத்தில் தனியாக வாழ்கிறார். அவர் ஏதேனும் ஓர் இல்லத்தில் இருப்பார். அவர்களுடன் அவர் இப்போது இருந்தாரென்றால் நீங்கள் சந்திக்கலாம்” என்றான் ஜம்பா. “நன்று” என்று தலைவணங்கி கைவிரித்து அவனை மும்முறை தழுவி விடையளித்தான் பூரிசிரவஸ்.