பாண்டவதூதப் பெருமாள்

காஞ்சி

காஞ்சி முதல் ஊட்டிவரை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

இன்று மகன்களுடன் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீபாண்டவத்தூது பெருமாளை தரிசனம் செய்தேன். உங்களின் காஞ்சி –ஊட்டி பதிவு வாசித்தபின்னர் இங்கு வரவேண்டும் என விரும்பினேன். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திங்கட்கிழமை மீண்டும் திறப்பதால், இப்போது வராவிட்டால் இனி அடுத்தது நவம்பரில் தான் முடியும் என்பதால் சரண் அப்பாவை ராணிப்பேட்டைக்கு டிக்கட் போடச்சொல்லி நேற்று புறப்பட்டு வந்தேன். இத்தனை வருடத்தில் அவர் ஃபவுண்டரி இருக்குமிடத்திற்கு நானாக வருவதாகச்சொன்னது இதுவே முதல் முறை என்பதால், ஏதோ காரணமிருக்குமென்று யூகித்திருந்தாலும் மனமகிழ்ந்து ரயிலடிக்கே எங்களை அழைத்துச்செல்ல வந்திருந்தார்.

வந்ததும் வராததுமாக பெருமாள் கோவிலுக்கு நாளை காஞ்சிபுரம் போகனும்னு சொன்னதும், எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் ஜெயமோகன் எழுதியிருந்தாரே அந்த கோவிலுக்கா? என்றார். ஆமென்றென் . உங்களின் தளத்தில் அந்தகோவிலைப்பற்றி அவர் வாசித்திருக்க வாய்ப்பில்லை என் முகத்திலிருந்து வாசித்திருப்பார்.

ரோகிணி நட்சத்திரத்துக்குரிய நாள் இன்று , (13/6) என்பதால் கோவிலில் நல்ல கூட்டம். ரோகினி நட்சத்திரத்துக்காரர்களும் அவர்களின் குடும்பமுமாக நெரிசலாக இருந்தது. அடிப்பிரதட்சணமும் அங்கப்பிரதட்சணமும் நிறையபேர் செய்துகொண்டிருந்தார்கள். நீண்ட வரிசையில் காத்திருந்து, பொறுமையாக தரிசித்தோம். அந்தக்கரியதிருமேனியின் அழகைச்சொல்ல வார்த்தையில்லை. திவ்யதேசங்களில் ஒன்றான, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மிகப்புராதானமான, மகாபாரதத்துடன் தொடர்புளள இக்கோவிலுக்கு, செந்நாவேங்கை வாசித்துக்கொண்டிருக்கும் போது வந்தது எனக்கு பெரும் மகிழ்வளித்தது. இதற்கு முன்னரும் காஞ்சி வந்திருந்தாலும் இக்கோவிலைபற்றி, நீங்கள் எழுதியதற்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை.

பலர் பெருமாளுக்கு பலவகைப்பாயசம் படைத்து வழிபட்டார்கள். வரிசையில் எனக்கு முன்பாக நின்றிருந்த ஒருவர் தீர்த்தம் வாங்கியபின்னும் நகராமல் கையை நீட்டியபடியே நின்றிருந்தார். நகருங்கோ, என பட்டர் சொன்னதும் விபூதி கொடுங்க என்றார். பட்டர் முறைத்துவிட்டு பெருமாள் கோவில்ல ’தீர்த்தம் மட்டும் தான் நீங்க இப்போ சொன்ன வார்த்தையை இந்த கோவில்ல எங்கயும் சொல்லப்படாது’ என்றார்., கோவில்களில் அறிந்துகொள்ளவும் கடைப்பிடிக்கவும் வேண்டிய எளிய அடிப்படை விதிகளைக்கூட தெரிந்துகொள்ளாமல் இருப்பது நான் மட்டுமல்ல எனக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுக்குமளவிற்கு இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஒரே சந்தோஷம். விபூதி கேட்டவரைப்பார்த்து மிகப்பிரியமாக புன்னகைத்துவிட்டு தீர்த்தம் வாங்கி, சடாரி வைத்துக்க்கொண்டு வெளியே வந்தேன்.

கோபுரத்தில், எங்கள் வீட்டு அகத்தி மரத்துக்கு வருபவை போலவே அளவில் பெரிய பச்சைக்கிளிகள் ஏராளமிருந்தன, கூடவே அணில்களும். பிராகாரமெங்கும் கிளிகளுடையதும், குளத்தின் சுற்றுச்சுவரில் பக்தர்கள் வைக்கும் தானியங்களுக்காக வரும் புறாக்களுடையதுமாக நிறைய இறகுகள் அங்குமிங்குமாக கிடந்தது. இங்கு வந்ததின் நினைவாக ஒரு குஞ்சுக்கிளியின் பூஞ்சிறகொன்றினை எடுத்துக்கொண்டேன். குருதிச்சாரல் புத்தகம் வாங்கியபின்னர் அதற்குள் இச்சிறகிருக்கும் எப்போதும்

காஞ்சியில் இன்னும் பல கோவில்களுக்கும் சென்றோம். பெருமழை பெய்துகொண்டிருக்கும் பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டு இங்கு முகத்திலறையும் வெயிலில் அலைந்து உடல் களைத்தாலும் உள்ளம் குளிர்ந்திருந்தது. இனி துவங்கப்போகும் கல்வியாண்டிற்கான ஒட்டுமொத்த உற்சாகத்தையும் சக்தியையும் இந்தக்கோவிலிலிருந்து திரட்டிக்கொண்டேன். நாளை ஊருக்கு திரும்பிச்செல்கிறேன்.

வெண்முரசினுடனேயே வாழ்ந்துவருதாகவே எப்போதும் உணர்பவள் நான், குருதிச்சாரலில் தூது வந்த கிருஷ்ணரின் கோவிலுக்கு நானும்வந்ததும், வெண்முரசிற்கு இன்னும் நெருக்கமானதுபோல உணர்கிறேன், அதற்காகவேதான் வந்தேன்

அன்புடனும் நன்றியுடனும்

லோகமாதேவி

***

காஞ்சி ,ஊட்டி -கடிதங்கள்

***

முந்தைய கட்டுரைநோயின் ஊற்று
அடுத்த கட்டுரைபக்தி,அறிவு,அப்பால்