ஊமைச்செந்நாய் – மலையாளத்தில்

mina

சென்ற ஜூன் 10 அன்று பாஷாபோஷிணி மாத இதழின் ஆண்டுமலரில் ஊமைச்செந்நாயின் மலையாள மொழியாக்கமான மிண்டாச்செந்நாய் வெளியாகியது. தமிழிலும் மலையாளத்திலும் கதைகள் வெளியாவதற்குச் சில வேறுபாடுகள் உள்ளன.அங்கே வாசகர் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறுமடங்கு – இங்கே ஐம்பதாயிரம் என்றால் அங்கே ஐம்பது லட்சம். ஆகவே வாசக எதிர்பார்ப்பு ஒரு பெரிய பூதம்போல அருகே நின்றுகொண்டிருக்கும். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அதே நிலை.ஆட்டோவில் ஏறினால் “அடுத்த நாவல் எப்ப சார்?” என்பார்கள். ஓட்டலில் டிபன் கொண்டு வைத்தபின் சர்வர் “ஆனைடாக்டர் சூப்பர். அடுத்த நாவல் எப்படிசார்?” என்பார். விமானநிலையத்தில் கவுண்டரில் இருக்கும் பெண் “அடுத்த நாவலுக்காகக் காத்திருக்கிறேன்” என்று புன்னகைப்பார்.

இதன் விளைவு என்னவென்றால் முந்தைய வெற்றியை நாம் திரும்பவும் செய்தே ஆகவேண்டும் என்பது. முந்தைய நாவலைப்போலவே இருந்தால் இவருக்கு வேறு எழுதத்தெரியாது என்பார்கள். முற்றிலும் வேறாக இருந்தால் எதிர்பார்ப்பு தவறுவதன் ஏமாற்றம் எழலாம். பிரசுரநிறுவனம் முந்தைய வெற்றிகளையே மீண்டும் கேட்கும். நூறுநாற்காலிகள், யானைடாக்டர் இரண்டும் மலையாளத்தின் சென்ற சில ஆண்டுகளின் மிகப்பெரிய இலக்கிய அலைகளாக இருந்தன. பாஷாபோஷிணி அறம்தொகுதியில் ஒருகதைதான் வேண்டும் என அடம்பிடித்தது.

ஆனால் இம்முறை வேறு ஒன்று என முடிவுசெய்தேன். அறம்தொகுதியின் இலட்சியவாத அம்சமோ, நெகிழ்வோ இல்லாத ஊமைச்செந்நாய். சென்ற மே 25 அன்று காஞ்சியில் தங்கி மொழியாக்கம் செய்து அனுப்பினேன். 10 ஆம்தேதி நெருங்க நெருங்க சினிமா வெளியாவதைப்போலவே பதற்றம். 10 ஆம் தேதி காலை பதினொரு மணிக்கே ‘ரிசல்ட்’ தெரிந்துவிட்டது. ஆம், ’மெகாஹிட்’. மதிப்புரைகள், பாராட்டுக்குறிப்புகள். இதழ் நான்கே நாட்களில் விற்றுமுடிந்தது.

ஊமைச்செந்நாயின் மூர்க்கமான சித்தரிப்பு, குறைந்த சொற்களில் எழும் இயற்கைவிவரணை, உளவியல்சிக்கல்கள் உள்ளோட்டமாக ஓடும் சாகசத்தன்மை, அனைத்துக்கும் மேலாக அதன் குறியீட்டுத்தன்மை ஓர் அலையென வாசகர்களிடம் சென்று சேர்ந்தது. ஒவ்வொருநாளும் கடிதங்கள், அழைப்புக்கள். அப்பாடா. இனி அடுத்தவருடம் வரை நிம்மதி என்றுதான் தோன்றியது.

***

மதிப்புரைகள்

ஓர் எழுத்தாளன் எழுதுவதற்காகக் காத்திருத்தல்

மலையாளத்திலும் அப்படி ஒரு காலம் முன்பிருந்தது. கசாக்கின் இதிகாசத்திற்கு பின்பு ஓ.வி.விஜயன் என்ன எழுதினாலும் பாய்ந்து வாசித்தனர் வாசகர்கள். மய்யழிப்புழையுட தீரங்களுக்குப்பின்னர் எம்.முகுந்தனுக்காக, நாலுகெட்டுக்குப் பின்னர் எம்.டிக்காக காத்திருந்தனர்.என்கதைக்குப்பின் மாதவிக்குட்டிக்காகவும் உஷ்ணமேகலைக்குப்பின் காக்கநாடனுக்காகவும் அந்தக்காத்திருப்பு இருந்தது. பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் கவிதைகளுக்காக அந்தக் காத்திருப்பு இருந்தது.காத்திருப்புகளுக்கு எப்போதும் எங்கும் கற்பனாவாதத்தின் அழகுண்டு. ரசனையின் மாயத்தை அளித்த நூறாண்டுகாலத் தனிமைக்குப்பின் காத்திருந்த வாசகர்களுக்கு கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸ் காலராக் காலத்துக் காதல் வழியாக காதலின் ஆயிரம் பிறப்புகளின் பரவசத்தை அளித்தார். அறியப்படாதவராக எங்கோ இருந்து மாஸ்டர்பீஸ்கள் எழுதும் எலேனா ஃபெரோன் நீண்டகாலக் காத்திருப்புக்கு ஒவ்வொரு முறையும் நிறைவளிக்கிறார்

பல பத்தாண்டுகளுக்குப்பின் இன்று மலையாளத்தின் காத்திருப்புகளுக்கு கற்பனாவாதத்தின் அழகை அளிக்கிறார் தமிழ் -மலையாள எழுத்தாளராகிய ஜெயமோகன்.சமீபகாலத்தில் எப்போதும் மலையாளத்தில் நிகழாத வாசிப்புக் கொந்தளிப்பை நிகழ்த்தியது நூறுசிம்மாசனங்கள். அதன்பின் வந்த யானைடாக்டர் அந்த நாவல் உருவாக்கிய எதிர்பார்ப்பை ஈடுசெய்தது. ஆவலுடன் காத்திருந்த வாசகர்களை முழுமையாக நிறைவுசெய்துள்ளது ஊமைச்செந்நாய்

https://www.manoramaonline.com/literature/literature-news/2018/06/14/mindachennai-jeyamohan.html

அனுபவத்தின் உண்மை

நூறு சிம்மாசனங்கள், யானைடாக்டர் என நாவல் வாசிப்பில் புதிய அனுபவங்களை மலையாளிக்கு அளித்த ஜெயமோகனின் புதிய நாவல் மிண்டாச்செந்நாயும் மிகமுக்கியமானது. கருவின் புதுமையாலும் மொழியின் கட்டற்றதன்மையாலும் புதிய அனுபவமாக விரிகிறது இந்நாவல்

https://www.manoramaonline.com/literature/literature-news/2018/06/11/mindachennai-jeyamohan.html

***

முந்தைய கட்டுரைநவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்