காய்கறியாதல்

tp

காலில் ஒரு சிறுபுண். சென்ற ஏப்ரல் 14 அன்று ஊட்டி சென்றபோது ரயிலில் இருந்து இறங்கியபோது சிறு தடிப்பாகத் தோன்றி புண்ணாக ஆகியது. ஏதோ கடித்துவிட்டது, தானாகச் சரியாகப் போய்விடும் என நினைத்தேன், சரியாகவில்லை. கொஞ்சம் மட்டுப்படும். பயணங்களில் மீண்டும் சற்றுப்பெரிதாகும். பெரிய வலியெல்லாம் இல்லை. ஆனால் இருந்துகொண்டே இருந்தது.

ஆகவே பார்வதிபுரம் ஜோ டாக்டரிடம் காட்டினேன். மருந்தும் மாத்திரையும் அளித்தார். குணமாகவில்லை. மீண்டும் எட்டுநாட்கள் கழித்துச் சென்றேன். அடுத்த மருந்து வரிசை. அதுவும் பலனளிக்கவில்லை. சர்க்கரைநோய் இருக்கிறதா என்று பார்த்தார். சற்றே மிகுதி. ஆனால் அதனால் இப்படி நோய் ஆறாமலிருக்க வாய்ப்பில்லை. ஆகவே ரத்த ஓட்டம் குறைவாக இருக்குமா என்று பார்க்கவேண்டும் என்றார். ரத்தக்குழாய் அடைப்பு இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார்.

நாகர்கோயில் சுபம் ஆஸ்பத்திரிக்குச் சென்று ரத்த ஓட்டத்தைப் பரிசோதிக்கும் டாக்டரைப் பார்க்கவேண்டும் என்றார். அங்கே கூப்பிட்டால் அங்கு நேர முன்பதிவு இல்லை. சென்று காத்திருக்கவேண்டியதுதான். ஐந்து மணிக்கு வரச்சொன்னார்கள். சென்றால் “டாக்டர் ஏழு ஏழரைக்குமேல் எப்பவேண்டுமானாலும் வருவார். காத்திருங்கள்” என்றனர். அங்கே ஒரு இருபத்தைந்து ஓய்வூதியர்கள் அமர்ந்திருந்தனர்.

நாகர்கோயில் வழக்கம் இது. இங்கே எந்த மருத்துவமனையிலும் முழுநேரச் சிறப்பு மருத்துவர்கள் கிடையாது. எல்லா மருத்துவமனைகளிலும் எல்லா சிறப்புமருத்துவர்களும் பட்டியலிடப்பட்டிருப்பார்கள். அவர்கள் வருவதே வருவதற்கான நேரம் என்பதனால் முன்பதிவு இல்லை. வருவார் என நம்பி காத்திருக்கவேண்டியதுதான். முதுமை என்பதே ஒருவகைக் காத்திருப்பு என்பதனால் எவருக்கும் அது பொருட்டு அல்ல. மருத்துவர்களுக்கு நோயாளிகளே ஒருபொருட்டு அல்ல.

ஓர் உள்நடுக்கு ஏற்பட்டது. இங்கே என்ன செய்கிறேன்? என் உள்ளம் இருப்பது முழுக்க வெண்முரசில். இந்த வேலையற்ற முதியவர்களுடன் அமர்ந்து மனிதனின் உடலையும் பொழுதையும் பொருட்டாக எண்ணாத மருத்துவத்தொழிலர்களிடம் என்னை ஒப்படைத்து உடல்கொண்டு வாழ்வதே இலக்கு என்று இருக்கப்போகிறேனா? என்னால் இனி இதற்கு பொழுதளிக்க முடியாது. பொழுதைவிட உள்ளத்தை சற்றும் அளிக்கமுடியாது.

இது ஒன்றும் உயிர்பறிக்கும் நோய் அல்ல. உயிர்பறிக்கும் நோயே என்றாலும்கூட பொதுவாக ஓர் அளவுக்குமேல் மருத்துவர்களுக்கு வாழ்க்கையையும் செல்வத்தையும் அளிக்கக்கூடாது என்பதே என் எண்ணம். அறுபதை ஒட்டி வயது ஆயிற்றென்றால் மருத்துவர்களிடம் வதைபடாமல் கௌரவமாக உயிர்விடுவதே உகந்தது. அதுவரைச் செய்யாத எதையும் அதற்குமேல் செய்யப்போவது இல்லை. இவர்களுக்கு பணம் அளிப்பதன்பொருட்டு நம்மை காய்கறியாக உயிர்மட்டுமே எஞ்ச வாழச்செய்வார்கள். அதற்கு உடன்படக்கூடாது

திரும்பிவந்துவிட்டேன். இனி இதைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை. ஒரு நிமிடம்கூட எண்ணவும் போவதில்லை. நான் எதன்பொருட்டு பிறந்தேனோ அதுவன்றி எதற்கும் வாழ்வின் ஒருதுளியையேனும் அளிக்கவும்போவதில்லை.

***

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசென்னையில் பேசுகிறேன்