ஜெயகாந்தன் வைரமுத்து உரை

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி

அன்புள்ள ஜெ..

ஜெயகாந்தன் குறித்து வைரமுத்துவின் கட்டுரை வாசிபபு நிகழ்வு இன்று நடந்தது    திரளான கூட்டம்..

ஆழமான கருத்துகளை முன் வைப்பதைவிட வசீகரமான வாக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாணியிலான உரை.   செவ்வாயை தவிர்த்துவிட்டு புதன் இல்லை..  ஜெயகாந்தனை தவிர்த்துவிட்டு சிறுகதை உலகம் இல்லை என்பது போன்ற பரபரப்பான பஞ்ச்கள்…
சு.ரா , ந பிச்சமூர்ததி , மௌனி போன்றோரைப் பற்றிய ஒன்லைனர்கள்  இலக்கிய ரீதியாக பொருளற்றவை என்றாலும் இவர்கள் பெயர்கள் எல்லாம் வெகுஜன பயன்பாட்டுக்கு வருவதை பார்க்க மகிழ்ச்சியாகவே இருந்தது..  ஜெயகாந்தன் எழுத்துகள் உரகக பேசுவதால் அது இலக்கியமாகாது என்ற விமர்சனத்துக்கு பதிலடியாக உங்கள் கட்டுரையின் வரிகளைத்தான் மேற்கோள் காட்டி பேசினார்..

பொது ஜன எழுத்து  வணிக எழுத்துகள் கேளிக்கை பேச்சுகள் போன்றவை ஏதோ ஒரு வழியில் இலக்கியத்தை சரசாரி ஜனத்திரளுக்கு எடுத்து செல்வது நல்லது என்றும் தோன்றுகிறது..

ஆனால் இது போன்ற பேச்சுகளையே உன்னதமாக நினைப்பவர்கள் சுந்தர ராமசாமியின் பள்ளம் கதையை மட்டுமே ஒரு மணி நேரம் அலசும் இலக்கிய அலசல்கள் பக்கம் வரவே மாட்டார்கள் என்றும் தோன்றுகிறது..

வெகுஜன பேச்சாளர்களுக்கு திரளும் பெரும்கூட்டத்தின் சிறுபகுதியாவது இலககியம் பக்கம் திரும்பினால் நல்லதுதான்…   ஆனால் அது நடக்கிறதா என்று தெரியவில்லை

இலக்கிய உலகுக்கு ஜனரஞ்சக எழுத்துகள் உரைகள் உதவுவதாக நினைக்கிறீர்களா அல்லது எதிர் விசையாக செயல்படுவதாக நினைக்கிறீர்களா ?

அன்புடன்
பிச்சைக்காரன்

அன்புள்ள பிச்சைக்காரன்

எந்த வடிவிலாயினும் இலக்கியம் பேசப்படுவது நன்று என்ற இடத்துக்கு இன்று வந்திருக்கிறோம் – இலக்கியத்தின் வம்புகளைப்பற்றி மட்டும் பேசப்படுவதை மட்டுமே நான் எதிர்மறையானதாகப் பார்க்கிறேன்.

ஏனென்றால் நேற்று எப்போதுமில்லாத ஒரு சூழல் இன்று அமைந்துள்ளது. முன்பெல்லாம் சூழலில் நிகழும் விவாதங்கள் பிரசுர அமைப்புகளால், அவற்றை நடத்திய அறிவுஜீவிகளால் மட்டுறுத்தப்பட்டன. அவர்களின் வணிகநோக்கை கணக்கில்கொண்டாலும்கூட அவர்கள் சாமானியர் அல்ல. ஒருவகை அறிவுஜீவிகளே. உதாரணமாக, கல்கி, தேவன், எஸ்.ஏ.பி, சுஜாதா பாலகுமாரன் ஆகியோரை எடுத்துக்கொள்லலாம். அவர்கள் வணிக எழுத்தாளர்கள், கேளிக்கையை முதன்மையாகக் கொண்டவர்கள். ஆனால் இலக்கியம் அறிந்தவர்கள், இலக்கியத்தளத்திலும் பெறுமானம் கொண்டவர்கள். ஆகவே எது பொதுவெளியில் பேசப்படவேண்டும் என்பதற்கு ஒரு அளவீடு இருந்தது  பொதுவெளிப்பேச்சு சராசரியின் தரத்தை விட ஒரு படி மேலானதாக இருந்தது. ஒரு பொதுவெளிப்பேச்சில் எவ்வகையிலேனும் ஈடுபடுதலே சராசரியை விட மேலெழுதலாக இருந்தது.

அந்த மைய ஒழுங்கு சட்டென்று இன்று மறைந்துவிட்டிருக்கிறது. இணையமும் சமூக ஊடகமும் கட்டற்ற கருத்துப்பரிமாற்றத்தை உருவாக்குகின்றன. அதன் நன்மைகள் பல. எதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதன் ஜனநாயக வாய்ப்புக்களை நாம் அடைந்துள்ளோம். பெரும்பாலும் அது அதிகாரத்திற்கு எதிரான குரலாகவும் அமைந்துள்ளது. ஆனால் எதிர்மறை அம்சமும் பெரிது. ஒரு சமூகத்தின் பொது உரையாடலை அதன் சராசரி நிலையைவிட ஒருபடி மேலானவர்கள் வழிநடத்தினர் முன்பு. இன்று சமூக ஊடகம் அந்தச் சராசரியையே அப்படியே பிரதிநிதித்துவம் செய்கிறது. அப்படியே ஆடிப்பாவைபோல சமூகத்தை அது நடிக்கிறது. பொதுப்பேச்சுத்தளத்தில் அறிவார்ந்தவை சற்று அதிகமாக இருப்பதே சென்றகால சரிவிகிதம். இன்று சமூகத்தில் எந்த அளவுக்கு எவை இருக்கின்றனவோ அதே விகிதத்தில் சமூகஊடகங்களிலும் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன . இலக்கியம் மிக அரிது. சாப்பாடு, பாலியல், சினிமா, கட்சி அரசியல் மட்டுமே ஓங்கியிருக்கின்றன..

சராசரிச் சமூகத்தின் ஆர்வங்கள், கவலைகள், அற்பத்தனங்கள், அபத்தங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அவ்வாறே சமூக ஊடகங்களில் வெளியாகின்றன.ஆகவே தன் மூச்சையே தானே சுவாசித்துத் தேங்கிக்கிடக்கிறது பொதுச்சமூகத்தின் அறிவியக்கம்.அதற்குள் அறிவுஜீவிகள், அரசியலாளர்கள் செயல்படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்களைச்சூழ்ந்துள்ள அந்த பொதுப்போக்கின் விசையும் அளவும் மிக அதிகம். ஆகவே அவர்களும் அதற்குள் சிக்கிக்கொள்ளுகிறார்கள்.அவர்களும் அதையே பேசவேண்டியிருக்கிறது.  இல்லையேல் அவர்கள் ஒதுக்கப்படுவார்கள். பொதுச்சுவையின் மூர்க்கம் அப்படிப்பட்டது.  புதிய ஒரு பேச்சை பொதுவெளியில் உருவாக்கவே முடியாத நிலை வந்திருக்கிறது. காலா வெளிவந்தால் அனைவரும் காலா பற்றி ஏதேனும் சொல்ல , கேட்க விரும்புகிறார்கள். அதைப்பற்றி அன்றி எதைப்பேசுபவரும் ஒதுக்கப்படுவார்கள். இன்று தொலைக்காட்சிகள், பேரிதழ்கள் மட்டுமல்ல சிற்றிதழ்களேகூட சமூக ஊடகங்களின் பொதுபோக்கைத்தான் பின்தொடர்கின்றன.

ஒரு சினிமாவைப் பேசப்படச்செய்ய என்னென்ன செய்வார்கள் என உள்ளிருந்து அறிபவர்களுக்கு காலா பற்றி எவர் எந்தக்கோணத்தில் என்ன பேசினாலும் அவையனைத்தும் ஒரே அலையின் துளிகளே என்று தெரியும். விஸ்வரூபம் அடுத்துப் பேசப்படும். நடுவே அரசியல் கொந்தளிப்புகள் வந்துசெல்லும். எதிலும் மாற்று என்றும் ஆழம் என்றும் ஒன்றும் நிகழமுடியாது. நிகழும் பொதுவிவாத அலைக்குள் புகுந்து அறிவுஜீவிதனமாகவோ ஆவேசமாகவோ எதையாவது பேசி சூழலின் கவனத்தைக் கொஞ்சம் ஈர்ப்பதற்கு அப்பால் எவருக்கும் எதுவும் செய்வதற்கில்லை என்பதே இன்றைய அறிவுச்சூழல்.

இங்கு வேறெதுவும் பேசப்படுவதில்லை. இலக்கியம், பண்பாட்டுச்சிக்கல்கள், வரலாறு, அறிவியல்- எதுவும். இச்சூழலில் வைரமுத்துபோன்ற பெரிய ஒலிப்பெருக்கிவாகனம் இலக்கியம் குறித்துப் பேசுவது, தீவிர இலக்கியம் பற்றி எதிர்வினையாற்றுவது மிகமிக முக்கியமான ஒரு நிகழ்வு. அவர் சிற்றிதழ்சார்ந்த விவாதக்களத்தை முழுமையாகவே நிராகரித்திருந்தாலும்கூட அது வரவேற்கத்தக்க பேச்சுத்தான்- எப்போதுமே அவர் சிற்றிதழ் மரபை மறுப்பதில்லை என்றாலும்.

வைரமுத்து தமிழ்ப்பெரும்பான்மை விரும்பும் சிறந்த பேச்சாளர். குரல், தோரணை, சொல்வளம் கொண்டவர். கம்பனையும் இளங்கோவையும் நிலைநிறுத்தியவர்கள் மேடைப்பேச்சாளர்களே. வைரமுத்துவைப் போன்ற பெரும்பேச்சாளர்களால் நவீன இலக்கியம் நிலைகொள்ள வாய்ப்புண்டு என்றால் அது நல்லதுதான். பவா செல்லத்துரை நிகழ்த்தும் கதைசொல்லல் நிகழ்ச்சிகளையும் இப்படித்தான் நான் பார்க்கிறேன். அவை வாசகர்களுக்கு இலக்கியத்தைக் கொண்டுசெல்கின்றன. இன்று அத்தகைய குரல்கள் மிக இன்றியமையாதவை.

வைரமுத்துவின் பேச்சைக் கேட்பவர்களில் எத்தனைபேர் தீவிர இலக்கியம்பக்கம் வருவார்க:ள்? எத்தனைபேர் என்றாலும் அவ்வாறு வருவதே இயல்பானது, அதுவே பெரும்பாதை. ஏற்கனவே இங்கிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சுஜாதா, பாலகுமாரன் வழிகாட்ட இங்கு வந்தவர்கள். முன்பு ஜெயகாந்தன் வழிகாட்ட உள்ளே வந்த தலைமுறை ஒன்று இருந்தது. வைரமுத்து வழியாகவும் ஒரு தலைமுறை வரட்டுமே. அனைவரும் வரமாட்டார்கள்தான், ஏனென்றால் இலக்கியம் அனைவருக்கும் உரியது அல்ல. அதற்கு ஒரு தீவிரம் தேவையாகிறது. அனுபவங்களை உண்மையுடன் நோக்கும் நேர்மை இன்னொரு தேவை. அவை உடையவர்களுக்கு இலக்கியம் என்ற பேரமைப்பு வைரமுத்து போன்றவர்கள் வழியாகவே அறிமுகமாகிறது

எங்கெங்கு நோக்கினும் அரைகுறை அரசியல் ஜல்லியடிப்புகள், போலிப்புரட்சிக் கொந்தளிப்புகள், சினிமாப்பேச்சுக்கள் மட்டுமே காதில் விழுந்துகொண்டிருந்த சூழலில் வைரமுத்து ஜெயகாந்தனைப் பற்றி பேசப்போகும் சுவரொட்டிகளைச் சென்னை முழுக்க பார்த்தேன். உண்மையில் மலர்ந்துவிட்டேன். “வாங்க கவிஞர், வந்து பேசி இலக்கியமும் இங்கே இருக்குன்னு  நாலுபேருக்குச் சொல்லுங்க” என்று உள்ளூர கூவிக்கொண்டேன்.

ஜெ

முந்தைய கட்டுரைநவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 17