பூரிசிரவஸ் அஸ்தினபுரியிலிருந்து அரசரின் ஆணையை பெற்றுக்கொண்டு எல்லைக் காவலரண்கள் அனைத்திற்கும் சென்று படைநிலைகளை பார்வையிட்டு தன் அறிக்கையை பறவைத்தூதினூடாக அனுப்பிவிட்டு பால்ஹிகபுரிக்கு வந்தான். அஸ்தினபுரியிலிருந்த அந்த மாதங்களில் அவன் பால்ஹிகபுரியை முழுமையாகவே மறந்துவிட்டிருந்தான். பின்னால் திரும்பி நோக்க பொழுதில்லாமல் படைப் பணிகள். ஒவ்வொரு நாளும் அவன் திகைப்பூட்டும்படி புதிய ஒன்றை கற்றுக்கொண்டான். படை என்பது தனியுளங்கள் முற்றழிந்து பொதுவுளம் ஒன்று உருவாவது. உலோகத்துளிகளை உருக்கி ஒன்றாக்கி ஒற்றைப் பொறியாக்குவது. மலைக்குடிகளின் படை என்பது ஆட்டுமந்தைபோல. சேர்ந்து வழியும்போதும் ஒவ்வொரு ஆடும் தனியானது. ஒவ்வொன்றும் தன் தனி வழியையே தேடுகிறது. அச்சத்தால், பசியால், உள்ளுணர்வால் மட்டுமே அது மந்தையென்றாகிறது.
பால்ஹிகநாட்டில் பெரும்படைகள் என்றும் இருந்ததில்லை. அதைக் குறித்த எந்தக் கல்வியும் அங்கே இயலவில்லை. அவன் பால்ஹிகபுரியிலிருந்து தன் மைந்தனையும் உடன்பிறந்தாரின் மைந்தர்களையும் அஸ்தினபுரிக்கு வரவழைத்து அப்படைநகர்வில் பங்குகொள்ளும்படி செய்தான். அவர்கள் ஒவ்வொருவரிடமும் “முடிந்தவரை விழி திறந்திருங்கள், உளம்கொள்ளும்வரை அள்ளுங்கள். பொன்னோ மணியோ அல்ல செல்வம், இந்த அறிதலே நம் தலைமுறைகளுக்கு நாம் அளித்துச்செல்லவேண்டிய செல்வம் என்று தெளிக!” என்றான். அவர்களும் அதை உணர்ந்திருந்தனர். “கற்றவற்றை நீங்கள் ஒருங்கிணைந்து பரிமாறிக்கொள்ளுங்கள். ஒருவர் கற்பது எவ்வளவாயினும் சிறிதே. அனைவருமாக கற்கையில் நீங்கள் நூறு உள்ளம் கொண்டவர்கள். ஆயிரம் கை கொண்டவர்கள்” என்றான்.
படைப்புறப்பாடு தொடங்குவது வரை அஸ்தினபுரியிலிருந்த வெவ்வேறு படைநிலைகளில் அம்மைந்தர் பணியாற்றினர். படைகளின் நிலைக்கோளுக்கான வரைவுகள், நகர்வுக்கான வரைவுகள், படைக்கல ஒருக்கங்கள், உணவு ஒருக்கங்கள், பாடிவீடமைத்தல், களத்திற்கு ஆணைகளை கொண்டுசெல்லுதல், ஆணைகளை கண்காணித்தல் என படையாட்சிக்கான அனைத்துத் தளங்களிலும் அவர்களை அவன் பிரித்து அமர்த்தினான். படைப்புறப்பாடு அணுகியபோது மைந்தரில் பாதியை ஒருவர் ஒருவராக வெவ்வேறு ஆணைகளை அளித்து பால்ஹிகபுரிக்கே திருப்பியனுப்பினான். “இப்போரில் வெல்வதும் தோற்பதும் நாமல்ல” என்று அவன் அவர்களின் கூடுகை ஒன்றில் சொன்ன வரி அவர்களின் நுண்சொல்லென்றே ஆகியது. அவர்களின் அனைத்து எண்ணங்களையும் அதுவே வழிநடத்தியது.
படையெழுச்சிக்கான அனைத்தும் முடிவடைந்தபோது அவன் துரியோதனனிடம் பால்ஹிகபுரிக்குச் செல்ல ஒப்புதல் கோரினான். “அங்கு சென்று தந்தையிடம் போர்விடை பெற்று மீள்கிறேன், அரசே” என்றான். துரியோதனன் புன்னகைத்து “அரசியரிடமும் விடைபெற்று வருக!” என்றான். பூரிசிரவஸ் “ஆம், அவர்கள் பால்ஹிகத் தொல்குடியினர். அவர்களுக்கு இங்கு நிகழ்வதென்ன என்று தெரியாது” என்றான். அருகிருந்த சகுனி “ஆனால் மைந்தருக்குத் தெரியும்” என்றார். பூரிசிரவஸ் திகைத்து அவரை நோக்கி பின்னர் திரும்பிக்கொண்டான். கணிகர் “தங்கள் மைந்தர்கள் அங்குதானே இருக்கிறார்கள்? அவர்களிடமும் விடைபெற்று வரவேண்டும் அல்லவா?” என்றார்.
பூரிசிரவஸ் தன்னை குவித்துக்கொண்டு, புன்னகை மாறா முகத்துடன் “ஆம் கணிகரே, அவர்களில் அகவைநிறைந்தவன் ஒருவனே. அவன் இங்குதான் இருக்கிறான். பிறர் மிக இளையோர். அவர்கள் இங்கே வரவில்லை” என்றான். கணிகர் “மைந்தர் என்கையில் உடன்பிறந்தார் மைந்தரையும் சேர்த்துச் சொல்வதே மரபு” என்றார். பூரிசிரவஸ் சொல்லுக்கு தவிக்க துரியோதனன் “மலைமைந்தர் போர்க்கலை கற்று மீண்டிருக்கிறார்கள். நன்று, அங்கு அவர்கள் நாடமைத்து கொடி எழுப்பட்டும். நமது கொடையென்றமைக அக்கல்வி! பால்ஹிகரே, உங்கள் மைந்தருக்கு என் வாழ்த்துக்களை சொல்க! சென்றுவருக!” என்றான். பூரிசிரவஸ் வணங்கி விடைகொண்டான்.
சிந்தாவதி ஆற்றங்கரை வந்து மலைமீது சுழன்றேறி உச்சிப்பாறையை அடைந்து பால்ஹிகநகரிக்குள் இறங்கும் கழுதைப்பாதை சென்ற பதினைந்தாண்டுகளுக்குள் பொதிவண்டிகள் ஏறிவரும் பெருஞ்சாலையாக மாறியிருந்தது. முதலில் பழைய வழித்தடத்தையே வண்டிகள் ஏறுவதற்குரிய சரிவான சாலையாக பூரிசிரவஸ் மாற்றினான். மூன்றாண்டுகாலம் பல்லாயிரம் ஊழியர் உதவி செய்ய மாளவ நாட்டின் சிற்பி காலாந்தகரின் வழிகாட்டலில் அப்பணி நிகழ்ந்தது. பால்ஹிகநிலத்தின் வண்ணத்தையும் அங்குள்ள குடிகளின் எண்ணங்களையும் அச்சாலை முழுமையாகவே மாற்றியமைத்தது. அச்சாலை ஓரங்களில் அமைக்கப்பட்ட விடுதிகளில் மலையிலிருந்து வந்த எல்லா சிறுவழிகளும் ஒருங்கிணைந்து மையச்சாலையில் இணைந்தன. அங்கே ஒரு சிற்றங்காடி உருவானது. நாளடைவில் அவற்றைச் சூழ்ந்து ஊர்கள் எழுந்தன. அவ்வூர்கள் தீர்க்கசத்ரம், காலசத்ரம், மிருகசத்ரம் என விடுதிகளின் பெயரையே கொண்டிருந்தன.
சூழ்ந்துள்ள அனைத்து மலைச்சிற்றூர்களையும் அவ்வூர்கள் ஆண்டன. அங்கிருந்து செய்திகள் அனைத்து ஊர்களையும் சென்றடைந்தன. அனைத்து மலைக்குடிகளும் வாரம் இருமுறையேனும் அங்கிருந்த சந்தைகளுக்கு வந்துசெல்லும் வழக்கம் கொண்டிருந்தனர். குடிகளின் கூடுகைக்கென சந்தையை ஒட்டியே அரசுமாளிகைகளை அமைத்தான் சலன். அவ்வூர்களை சாலையினூடாக தொடுத்துக்கொண்டு பால்ஹிகபுரி அந்நிலப்பரப்பை முழுமையாக ஆண்டது. மலைநிலத்தில் அவ்வாறு முழுநிலத்தையும் ஆளும் ஓர் அரசு அதற்கு முன் அமைந்ததில்லை. அம்மக்கள் அரசு ஒன்று உருவாவதை உணர்வதற்குள் மையத்தில் பிழையிலாது இணைக்கப்பட்ட ஆட்சிக்குள் அமைந்துவிட்டிருந்தன.
அவ்வண்ணமொரு மலைச்சாலை இமையமலைப்பகுதிகளில் எங்கும் அதற்குமுன் அமைக்கப்பட்டிருக்கவில்லை. விந்தியனில் மட்டுமே உச்சிமலை ஏறிக்கடக்கும் சாலைகள் இருந்தன. விந்தியனை கடக்காமல் பாரதவர்ஷத்தின் தென்னகமும் வடக்கும் இணையமுடியாதென்ற கட்டாயத்தாலேயே மெல்ல மெல்ல அத்தகைய சாலைகள் அங்கே உருவாகி வந்தன. சர்ப்ப பதங்கள் என அவை பெயர் பெற்றன. மலைகளை ஒட்டுமொத்தமாக நோக்கி சரிவான வழிகளை கண்டடைந்து அவற்றினூடாக சாலையை அமைக்கும் நுட்பம் தனியான கலையாக வளர்ந்தெழுந்தது.
மாளவத்தின் துறைமுகங்களில் அயலகக் கலங்கள் வரத்தொடங்கி அவ்வரசு வணிகவளர்ச்சி பெற்றபோது தன் நிலத்திலிருந்த மலைகளை கடந்து வரும் பாதைகளை அமைக்கவேண்டும் என்ற நிலை உருவானது. அந்நாட்டின் கிழக்கு, தெற்கு எல்லையிலிருந்த ஊர்களிலிருந்து விளைபொருட்களையும் செய்பொருட்களையும் மகாநதியினூடாகவும் நர்மதையினூடாகவும் கலிங்கத்திற்கும் வேசரத்திற்கும் அனுப்பி வணிகம் செய்யவேண்டியிருந்தது. அந்நாடுகளின் சுங்கத்தால் மாளவத்திற்கு பேரிழப்பு நிகழ்ந்தது.
மாளவ அரசர் இந்திரசேனர் தன் முழுச் செல்வத்தையும் மலைகளைக் கடக்கும் சர்ப்ப பதங்களை அமைப்பதில் செலவிட்டார். அதை கலிங்கனும் வேசரநாட்டு அரசர்களும் ஏளனம் செய்தனர். அவன் கருவூலத்தை இவ்வாறு ஒழியச்செய்யட்டும், படைகொண்டுசென்று அவன் கழுத்தைப்பிடித்து கப்பம் கொள்வோம். பாதைகள் ஈட்டும் செல்வமும் இங்கு வந்துசேரும் என்றார் உத்தர வேசரநாட்டரசர் பிருகத்பாகு. ஆனால் அஸ்தினபுரியுடன் போட்டுக்கொண்ட புரிதல்சாத்து வழியாக மாளவர் ஆற்றல் கொண்டவரானார். சாலைகள் அமைந்ததுமே துறைமுகங்கள் பெருகத் தொடங்கின. துறைமுகங்கள் அளித்த செல்வத்தால் சாலைகள் மேலும் விரிந்தன. சாலைகள் மாளவத்தை சரடுகளால் கட்டி ஒன்றாக்கிய பொதி என நிலைநிறுத்தின.
அஸ்தினபுரியின் தூதனாக மாளவத்திற்குச் சென்றபோதுதான் பூரிசிரவஸ் அந்த மாபெரும் பாம்புப் பாதைகளை கண்டான். அவற்றை பால்ஹிகபுரியிலும் அமைக்க எண்ணினான். ஆனால் மாளவ மன்னர் இந்திரசேனர் அவனுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் மாளவத்தில் இந்திரசேனருடன் விருந்துக்குப் பின் தனியறையில் உரையாடிக்கொண்டிருக்கையில் பெருவிருப்புடன் அதை கேட்டான். “என் நாடு குருதிச்செலவு குறைந்த உடலுறுப்புபோல உயிரற்று பாரதவர்ஷத்தில் ஒட்டியிருக்கிறது, அரசே. சாலை ஒன்று அமையுமென்றால் நாங்கள் உயிர்கொண்டெழுவோம்” என்றான். அவர் புன்னகையுடன் தருணத்திற்கு உகந்த முகமன்மொழிகள் சொல்லி அதை கடந்துசென்றார்.
அத்துடன் நிறுத்துவதே முறை என்று அறிந்திருந்தாலும் அவனால் விழைவை வெல்ல முடியவில்லை. அதை மீண்டும் மாளவத்தின் பேரவையிலேயே கேட்டான். முறைமைச்சொற்களுடன் அரசவிண்ணப்பமாக அதை சொல்லி அவன் விடைபெற்றுக் கிளம்பும்போது அதையே கையுறையாக வேண்டுவதாக சொன்னான். ஆனால் இறுதியில் உரையாற்றும்போது அவனுக்கு நற்செலவுக் கையுறையாக ஏழு கலம் பொன்னும் சுபுண்டரம் என்னும் அருமணியும் அளிப்பதாக சொன்னார் இந்திரசேனர்.
சோர்வுடன் திரும்பி அஸ்தினபுரிக்கு வந்த பூரிசிரவஸ் வெண்ணிற ஒளிகொண்ட சுபுண்டரத்தையும் துரியோதனனுக்கே காணிக்கையாக்கினான். “அது உங்களுக்கு அளிக்கப்பட்ட நற்செலவுக் கையுறை, பால்ஹிகரே” என்று துரியோதனன் சொன்னான். “அரசே, நான் வேண்டியது பிறிதொன்று. அதை நான் பெறவில்லை. வாழ்நாளெல்லாம் இவ்வருமணி அந்த ஏமாற்றத்தின் அடையாளமாகவே நீடிக்கும்” என்றான் பூரிசிரவஸ். துரியோதனன் இருமுறை தூண்டி கேட்டபின் தன் கோரிக்கை மறுக்கப்பட்டதை சொன்னான். மீசையை நீவியபடி துரியோதனன் “உம்” என்றான்.
மீண்டும் ஒரு மாதம் கடந்தபோது மாளவத்தின் சாலைச்சிற்பியான காலாந்தகர் தன் நூறுமாணவர்களுடன் அஸ்தினபுரிக்கு வந்தார். பூரிசிரவஸை அவைக்கு அழைத்த துரியோதனன் தன் முன் அமர்ந்திருந்த காலாந்தகரை சுட்டிக்காட்டி “இவரை அழைத்துச் செல்க பால்ஹிகரே, இவர் பெயர் காலாந்தகர். மாளவத்தின் சாலைச்சிற்பி” என்றான். பூரிசிரவஸ் திகைத்து “அரசே…” என்றான். “இவர் உமக்கு விரும்பிய சாலையை அமைத்து அளிப்பார்” என்றான் துரியோதனன். பூரிசிரவஸின் விழிகள் நிறைந்தன. உள எழுச்சியால் உதடுகளை இறுக்கிக்கொண்டான். அவன் குரல்வளை அசைந்தது.
மூச்சை மீட்டு “இவர் எப்படி…?” என்று அவன் முனக “அது உமக்கெதற்கு? வந்துள்ளார், அழைத்துச் செல்க!” என்று துரியோதனன் நகைத்தான். அருகிருந்த கர்ணன் “அப்படியே கின்னரநாடுவரை ஒரு சாலை அமையும். நமது பெண்களில் கின்னர மைந்தர் பிறக்கட்டும்” என்று சொல்லி உரக்க நகைத்தான். “நான் இதன்பொருட்டு…” என்று பூரிசிரவஸ் கைகூப்ப “அணிச்சொற்கள் வேண்டியதில்லை. நீர் என் இளவல். உம் கனவு என்னுடையது” என்ற துரியோதனன் “சாலை அமைப்பதற்காக உமக்கு இரண்டு லட்சம் பொன் அளிக்கும்படி ஆணையிட்டிருக்கிறேன். சாலைப்பணி முடிந்தபின் பத்து ஆண்டுகளில் அதை திருப்பியளித்தால் போதும்” என்றான். பூரிசிரவஸ் மீண்டும் வணங்கியபோது ஓசையெழ விசும்பிக்கொண்டிருந்தான்.
அவன் எண்ணியதற்கு மாறாக அச்சாலை அமைப்பதை பால்ஹிகக் கூட்டமைப்பின் முதன்மை நாடுகளான மத்ரம், சௌவீரம், சகநாடு, யவனநாடு, துஷாரநாடு ஆகிய ஐந்தும் கடுமையாக எதிர்த்தன. சௌவீரர்களும் துஷாரர்களும் நேரடியாகவே அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டுபவர்களாதலால் தங்கள் எதிர்ப்புடன் அமைச்சர்களை அஸ்தினபுரிக்கு அனுப்பினர். “இவர்கள் எதைத்தான் புரிந்துகொள்வார்கள்? இச்சாலையால் நம் குடிகளனைத்துமே செல்வம் கொள்ளும். இவர்கள் இன்று அரசர்களே அல்ல, மலைக்குடிகள்… அரசர்களாகும் பெருவாய்ப்பு இது” என்று பூரிசிரவஸ் சலித்துக்கொண்டான்.
சலன் “நீ சாலைத்திட்டத்துடன் கிளம்பும்போதே நான் ஐயுற்றேன். அவர்கள் எதிர்ப்பது இயல்பே” என்றான். “ஏன்?” என்றான் பூரிசிரவஸ். “இச்சாலையை அமைத்தவர்கள் நாம். ஆகவே இது நமக்கே முதன்மைச்செல்வம். இதனூடாக நாம் வளர்வோம். ஆறில் ஒன்று மீறி வளர்வதென்பது ஐந்தும் அடிமைப்படுவதேதான்…” பூரிசிரவஸ் “அவ்வெண்ணமே நமக்கில்லையே. நாம் அதை அவர்களுக்கு விளக்குவோம்” என்றான். “விளக்க விளக்க எதிராகப் பெருகுவது அது, இளையோனே. ஏனென்றால் அவர்கள் எண்ணுவதே உண்மை” என்றான் சலன்.
“நான் பொய்சொல்கிறேனா?” என்று பூரிசிரவஸ் சீற்றத்துடன் கேட்டான். “இல்லை, நீ உளமுணர்ந்து சொல்கிறாய். ஆனால் செல்வமும் படையும் கொண்டு பால்ஹிகபுரி வளருமென்றால் அது ஐந்துக்கும் மேல் அமரவே விரும்பும்… உன் இளையவனிடம் கேள். என்ன சொல்கிறாய்?” என்று சலன் அருகே நின்ற பூரியிடம் கேட்டான். பூரி “ஆம், செல்வம் கொண்டால் இணையான ஆற்றலும் தேவை. ஆற்றல் வெற்றியினூடாகவே வரும்” என்றான். சலன் சிரித்து “பிறகென்ன?” என்றான். “நான் இவர்களிடம் பேசுகிறேன். இவர்களின் ஐயமென்ன? சாலை அமைந்தால் அதனூடாக எதிரிகள் வந்து மலைநிலங்களை வெல்லக்கூடும் என்றுதானே? நாம் வல்லமைகொண்டு நிகர்நிலங்களை வெல்லமுடியுமென்று அவர்களிடம் விளக்குகிறேன்” என்றான். “வேண்டாம். அதைவிட எளிய வழி உள்ளது” என்றான் சலன்.
சலன் அஸ்தினபுரி அளித்த செல்வத்தைக்கொண்டு கீழ்நிலங்களிலிருந்து வலிமையான புரவிப்படை ஒன்றை திரட்டினான். அதைப் பிரித்து அனுப்பி கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் ஆகிய பால்ஹிக குலக்குழு அரசுகளை வென்றான். அவற்றின் அரசர்களின் மகளிரை தனக்கும் இளையோருக்குமென கைக்கொண்டு அரசியராக்கினான். அவர்கள் பால்ஹிகநாட்டு அவையில் குலமூத்தோராக கோல்கொண்டு அமர்ந்தனர். பால்ஹிகம் ஒரே மாதத்தில் பெரிய நாடாகியது. எல்லைகளில் புரவிப்படைகளை நிறுத்தியபின் பால்ஹிகக் கூட்டமைப்பின் பிற நாடுகளுக்கு இளையோரை தூதனுப்பி சாலைப்பணிகளுக்கு அவர்களும் செல்வம் அளித்து பங்குகொள்ளவேண்டும் என்று கோரினான். அதன்பொருள் அவர்களுக்கு புரிந்தது. சாலை முழுக்க விடுதிகளில் பால்ஹிகக் கூட்டமைப்பின் அனைத்து நாடுகளின் கொடிகளும் பறக்கும் என்றும் ஆறு நாடுகளுக்குச் செல்லும் வணிகர்களுக்கும் ஒற்றைமுறையாக சுங்கம் கொள்ளப்படும் என்றும் அது தகுதியும் வரிமுறையும் ஒப்ப பிரித்தளிக்கப்படும் என்றும் உறுதிச்சாத்து உருவானது. கொள்பொருளில் பெரும்பகுதி பால்ஹிகநாட்டுக்கே அமைந்தது.
சாலைப்பணி தொடங்கியபோது பால்ஹிக மலைப்பகுதிகள் முழுக்க பதற்றம் நிலவியது. பல குலக்குழுக்களில் வெறியாட்டெழுந்த பூசகரில் தோன்றிய மலைத்தெய்வங்கள் பெருங்கேடுகளை அறிவித்தன. மலைநிலம் இடிந்து சரியும், பெரும்பாறைகள் அமைதியிழந்து உருளும், நதிகள் சீறிப் படமெடுக்கும், வானிலிருந்து அனல் பொழியும் என்று அறைகூவினர். “மண்மைந்தர் எழுந்துவந்து விண்தொட்டு வாழும் எங்கள் அமைதியை குலைக்க ஒப்போம். பெருங்குருதியாடுவோம். உயிர்கொண்டு வெறிதணிப்போம். மகளிர் கருபுகுந்து காலத்தை அழிப்போம்” என்றனர்.
சலன் அஸ்தினபுரியிலிருந்தே ரிக்வைதிகர் குழுவை வரவழைத்து பால்ஹிகபுரியில் மகாசத்ரவேள்வி ஒன்றை நடத்தினான். அதன் பின்னர் தூமபதத்தின் தொடக்கத்தில் வேள்விச்சாலை அமைத்து அதர்வ வைதிகர்களைக்கொண்டு மகாபூதவேள்வி ஒன்றை இயற்றினான். அதன் நிறைவுநாளில் சக்ரசண்டியை அங்கே நிறுவி அவளுக்கு கல்லில் ஆலயம் ஒன்றை எழுப்பினான். அதற்கு நூற்றொன்று குறும்பாடுகளை பலிகொடுத்து ஆற்றல்கொள்ளச் செய்தான். சண்டியின் காலடியில் மலைவழிகளைக் காக்கும் ஒன்பது அன்னைதெய்வங்களான சரணி, மார்க்கி, பாந்தை, சாகேதை, தீர்த்தை, ஆகமை, ஸ்ரிதி, வாகை, வாமை ஆகியோரை சிறு தெய்வநிலைகளாக நிறுவி அவர்களுக்கும் அன்னமும் குருதியும் அளித்து பூசை செய்தான். சலன் சண்டிக்கு பூசை செய்ய மலைநாட்டுப் பூசகர்கள் பன்னிருவர் கொண்ட குழுவை அமைத்தான். அவர்களில் எழுந்த வழிகாக்கும் அன்னையர் “நிறைவுற்றோம். இவ்வழியை என்றும் காப்போம். இது அழியா நாகம் என பொலிக! ஆயிரம் குழவிகள் பெற்று பெருகுக!” என வாழ்த்தினர்.
ஓராண்டுக்குள் எதிர்ப்புகளும் ஐயங்களும் அகன்றன. அதன்பின் அப்பணி இயல்வதா என்ற ஐயம் உருவாகியது. அதற்கான அளவீடுகளும் கணிப்புகளும் ஓராண்டுக்கும் மேலாக நிகழ்ந்தபோது சாலையமைக்கமுடியாமல் சிற்பி திரும்பிச்சென்றுவிட்டதாகவே சொல் பரவியது. ஆனால் மெல்ல மெல்ல பணிகள் தொடங்கியபோது வியப்பு மலைக்குடிகளை ஆட்கொண்டது. குழுக்களாகக் கிளம்பி சிறுபாதைகள் வழியாக நெடுந்தொலைவு நடந்து வந்து அவர்கள் அப்பணியை நோக்கி நின்றனர். முதலில் அனைத்து ஊழியர்களும் கீழிருந்தே அழைத்துவரப்பட்டனர். மலைப்பாறைகள் புரட்டி அமைக்கப்பட்டன. மண் வெட்டிச் சரிக்கப்பட்டது. நாகம் உடல்கொண்டு வளைந்து வளைந்து மேலேறியது. மேலிருந்து நோக்கும்போது ஒவ்வொருநாளுமென அது முகம் நீட்டி சுருளவிழ்வதை காணமுடிந்தது. அதன் சீறலை சிலர் கேட்டனர். “அதன் நஞ்சு மலைகள்மேல் உமிழப்படும். ஐயமே வேண்டியதில்லை” என்றனர் முதுபூசகர் சிலர்.
ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை என அனைவரும் புரிந்துகொண்டிருந்தனர். அத்திரிகளும் கழுதைகளும் எருதுகளும் புரவிகளும் மக்களும் என பல்லாயிரம் உயிர்களால் மொய்க்கப்பட்ட பாதை எறும்புகள் அடர்ந்த வெல்லவழிவு என்று சில தருணங்களில் தோன்றியது. நெம்புகோலை அதற்குமுன் மலைக்குடிகள் அறிந்திருக்கவில்லை. அதை இயக்க கொண்டுவரப்பட்ட யானைகள் அந்நிலத்தில் இருந்ததில்லை. முதலில் யானையை கண்டவர்கள் அதை உள்ளே மக்கள் இருந்து கொண்டுசெல்லப்படும் கூடாரம் என நம்பி அருகே துணிந்து அணுகி தட்டிப்பார்த்தனர். அதன் துதிக்கையை பிடித்து இழுத்தனர். அவற்றால் தூக்கிவீசப்பட்டு சிலர் உயிரிழந்த பின்னரே அது ஒரு விலங்கு என உணர்ந்தனர். அதன் கண்களை அருகே கண்டவர்கள் அஞ்சி உடல்விதிர்க்க பாய்ந்து விலகினர். அவர்களின் கனவுகளில் உறுத்துநோக்கும் கருவிழிகள் கொண்ட இருட்தெய்வம் தோன்றி இடியோசை எழுப்பியது. சிலர் காய்ச்சல்கொண்டு நெடுநாட்கள் அஞ்சி புலம்பி அழுதுகொண்டே படுக்கையிலிருந்தனர்.
இரும்பாலான பெரிய தூண்களின் தொகையை வடம்கட்டி யானைகள் இழுத்தபோது அவற்றால் நெம்பப்பட்ட பெரும்பாறை திடுக்கிடுவதை, முனகியபடி மெல்ல சரிவதை, சினம்கொண்டு சிறுபாறைகளை உடைத்தபடி, பூழியும் சேறும் தொடர உருண்டிறங்குவதைக் கண்டு பலர் அஞ்சி கூச்சலிட்டனர். விழிபொத்தி நடுங்கி அழுதனர். சிறுநீர் கழித்தபடி சிறுவர் தந்தையரை கட்டிக்கொண்டனர். அப்பாறைகள் மெல்ல சென்று உரிய இடத்தில் பாறைகள்மேல் அமர்ந்து நீள்மூச்செறிந்து மீண்டும் துயில்கொள்வதைக் கண்டு கைகூப்பினர். மறுநாளே குலக்குழுக்கள் பூசகர்களுடன் வந்து அப்பாறைகளிலிருந்து விழித்தெழுந்த தெய்வத்தை பலிகொடுத்து ஆறுதல்கொள்ளச் செய்து மீண்டும் அதில் அமைத்தனர். அத்தெய்வத்தின் விழிகள் அப்பாறையில் பொறிக்கப்பட்டு சாலையை திகைப்புடன் நோக்கின.
அதைவிட, பெரும் எடைகளை நுட்பமாக பின்னப்பட்ட வடங்களினூடாக ஏற்றியது அவர்களை கனவிலாழ்த்தியது. விலங்குகளும் மானுடரும் ஆளுக்கொரு திசையில் இழுக்க பொதிகள் மெல்ல எழுந்து மலைச்சரிவில் ஏறி வந்தன. அவற்றின் சகடங்கள் மரச்சட்டங்களில் ஓசையின்றி உருள்வதை மேலிருந்து நோக்கிய மலைக்குடிகள் அவை ஒருவகை நத்தைகள் என்றனர். “அவற்றுக்குள் வாழும் தெய்வங்களை அக்கரிய சிற்பி ஆள்கிறான்” என்றனர். அங்கு நிகழ்ந்த ஒவ்வொன்றும் கதைகளென்றாகி மலைகளில் நுரையென பெருகிக்கொண்டிருந்தன.
சாலை அமைந்தபோது பால்ஹிகக் கூட்டமைப்பின் அரசுகளில் மத்ரம் தவிர நால்வரும் பால்ஹிகபுரிக்கு அணுக்கர்களாயினர். சாலைத்திறப்புக்கென அமைக்கப்பட்ட பெருங்கொடைவேள்வியை காசியிலிருந்து வந்த பெருவைதிகரான சுலஃபர் முன்னின்று நடத்தினார். பன்னிரு நாட்கள் நடந்த அந்த மகாசத்ரவேள்வியில் மலைக்குடியினரின் அனைத்து குலக்குழுக்களும் முறையாக அழைப்புவிடப்பட்டு கலந்துகொண்டன. வேள்விக்குரிய நறுமணப்பொருட்களும் தேனும் நெய்யும் அன்னமும் ஒவ்வொரு மலைக்குடிகளிடமிருந்தும் கொள்ளப்பட்டமையால் அவர்கள் அவ்வேள்வியை தங்களுடையதென்றே நினைத்தனர். குடித்தலைவர்கள் அனைவருக்கும் வேள்விக்காவலர்களாக அவையமர அழைப்பிருந்தது. புதிய தோலாடைகளும் வண்ண இறகுகள் செறிந்த தலையணியும் குலக்குறி செதுக்கப்பட்ட கோல்களுமாக அவர்கள் வந்து அவை நிறைக்க வேள்வி முடிவுற்றது. நாளும் பத்தாயிரம்பேர் உண்ட பெருவிருந்திற்குப் பின் அவ்வேள்வி மலைகளில் கதைகளென மாறி நினைவில் நிலைகொண்டது.
அவ்வேள்வி குறித்த செய்தி அந்தணர்வழியாக பரவியதனால் மிகச் சில மாதங்களிலேயே வணிக வண்டிகள் மலையேறலாயின. இரண்டு ஆண்டுகளில் வண்டிப்பெருக்கு மும்மடங்காகியது. தூமவதி, ஷீரவதி, பிரக்யாவதி, பாஷ்பபிந்து, சக்ராவதி, சீலாவதி, உக்ரபிந்து, ஸ்தம்பபாலிகை, சிரவணிகை, சூக்ஷ்மபிந்து, திசாசக்ரம் என்னும் நதிகளனைத்துமே மலைப்பொருட்களை கொண்டுவரும் பாதைகளாக மாற பால்ஹிகநகரி மலைப்பகுதியின் முதன்மை வணிக மையமாக மாறியது. அஸ்தினபுரிக்கு அளிக்கவேண்டிய கடனை நான்காண்டுகளில் முழுமையாகவே அளித்து முடித்த பூரிசிரவஸ் மேலும் ஒருமடங்கு பொன்னை அவைக்காணிக்கையாக அஸ்தினபுரிக்கு அளித்தான். தன் தமையன் சலனுடன் துரியோதனனின் அவைக்குச் சென்று வாள்தாழ்த்தி முடியுறுதி அளித்து அக்காணிக்கையை அளித்தான்.
அன்று மாலை தன் தனியறையில் நிகழ்ந்த உண்டாட்டில் துரியோதனன் “முருங்கைமரம் கிளைகளிலிருந்து எழுவதுபோல் அரசுகள் முதலரசன் ஒருவனின் உடலில் இருந்து முளைக்கின்றன என்பார்கள். இளையோனே, இன்று கண்டேன். உன் கொடிவழிகளில் அழியாப் பெயரென நீ வாழ்வாய்” என்று சொல்லி பூரிசிரவஸை தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டான். பெருங்கைகளால் விரிந்த நெஞ்சின்மேல் இறுக்கப்பட்ட பூரிசிரவஸ் உளம்விம்மி கண்ணீர் உகுத்தான்.
பூரிசிரவஸ் தூமபதத்தின் சாலையின் வளைவுச்சியில் நின்று கீழே ஓர் உணவுக்கலம்போல் கிடந்த தன் நகரை பார்த்தான். அதைச் சுற்றி அவன் எழுப்பிய நாகமரியாதம் என்னும் பெருங்கோட்டை ஒவ்வொரு முறையும அவனை விம்மிதம் கொள்ளச்செய்வதுண்டு. மலைநகரிகளில் நிகரற்றது அக்கோட்டை என்று அதற்குள்ளேயே குலப்பாடகர்கள் பாடி ஒவ்வொரு நாவிலும் திகழச் செய்துவிட்டிருந்தனர்.
பெரும்பாறைகளை மலைகளிலிருந்து ஆப்புகள் வைத்து பெயர்த்து மலைவெள்ளமெழுகையில் அவற்றை நதியிலிட்டு உருட்டி கீழே கொண்டு வந்து இறங்குவிசையாலேயே ஒன்றின்மேல் ஒன்றென ஏற்றி நிறுத்தி அக்கோட்டையை கட்டியிருந்தனர் சிற்பிகள். பாணாசுரரின் கோட்டை அவ்வண்ணம் கட்டப்பட்டது என்று நூல்களில் பயின்றிருந்தான். மேலமைந்த பாறைகள் தன் எடையால் கீழிருந்த கற்களைக் கவ்வி பற்றிக்கொள்ள அதன்மேல் வந்தமர்ந்த அடுத்த பெரும்பாறை அதை காலமின்மையில் நிறுத்தியது. கட்டி முடித்து மலையுடனான தொடர்புகளை வெட்டியபோது நோக்கும் எவருக்கும் பேருடல் கொண்ட அரக்கரோ கந்தர்வரோ மட்டும் அக்கோட்டையை கட்டியிருக்க முடியும் என்ற வியப்பை எழுப்புவதாக அது இருந்தது. இரண்டு பெருவாயில்கள் கிழக்கிலும் மேற்கிலும் திறக்க வடக்கிலும் தெற்கிலும் இரு சிறுவாயில்களுடன் நீள்வட்ட வடிவில் அமைந்திருந்தது.
சிந்தாவதியின் கரையோரமாகவே வண்டிச்சாலை சென்று கோட்டையை அடைந்தது. கோட்டையின் படிக்கட்டுக்கள் நேராக ஆற்றுக்குள் இறங்கின. அவன் சாலையில் தன் காவல்வீரர் தொடர கடிவாளத்தை தளரவிட்டபடி நகரை நோக்கிக்கொண்டு சென்றான். கோட்டையை ஒட்டி பால்ஹிகர்களின் குலதெய்வமான ஏழு அன்னையரின் சிறிய கற்சிலைகள் அமைந்த ஆலயம் இருந்தது. முன்பு சிறு திறந்தவெளி ஆலயமாக இருந்ததை கல்லடுக்கிக் கட்டி ஏழு கோபுரங்கள் கொண்ட ஆலயநிரையென்று ஆக்கியிருந்தனர். செந்நிறமான ஏழு கொடிகள் தேவதாரு மரத்தாலான ஓங்கிய கொடிகளில் பறந்தன. அங்கே இருந்து எழுந்த தூபத்தின் நீலவண்ணப் புகையில் தேவதாருப்பிசின் மணமிருந்தது. பின்னாலிருந்த தொன்மையான முள்மரத்தில் வேண்டுதலுக்காக கட்டப்பட்ட பல வண்ணத் துணிநாடாக்களால் அந்த மரம் பூத்திருப்பதுபோல் தோன்றியது.
தேவதாருப்பிசின் விற்கும் வணிகர்கள் வரிசையாக மரப்பட்டைக்கூரையிடப்பட்ட கடைகளை அமைத்திருந்தனர். வணிகர்கள் கோயில்நிரை முன் குதிரைகளையும் வண்டிகளையும் நிறுத்திவிட்டு அவர்களிடம் பிசினை வாங்கி அன்னையர் ஆலயத்தின் முன் அனல் புகைந்த தூபங்களில் போட்டு கைகூப்பி உடல்வளைத்து வணங்கினர். அங்கே தேவதாரு மரத்தாலான வளைவில் கட்டப்பட்டிருந்த ஏழு பெரிய மணிகளை கயிற்றை இழுத்து அடித்தனர். மணியோசை ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தது. பூரிசிரவஸ் அருகே சென்றதும் இறங்கி பிசின் வாங்கி தூபத்திலிட்டு வணங்கினான். முன்னரே சென்றவர்கள் போட்ட பிசினால் அப்பகுதியே முகில்திரைக்குள் இருந்தது. ஏழன்னையரும் குங்குமம், மஞ்சள்பொடி, கரிப்பொடி, வெண்சுண்ணப்பொடி, பச்சைத்தழைப்பொடி, நீலநிறப் பாறைப்பொடி, பிங்கல நிறமான மண் ஆகியவற்றால் அணிசெய்யப்பட்டிருந்தனர். அவற்றை தொட்டுத்தொட்டு வணங்கி வண்ணப்பொடியை தலையிலணிந்துகொண்டான்.
ஏழன்னையர் ஆலயத்திற்கு சற்று அப்பால் பால்ஹிகப் பிதாமகரின் ஆலயத்தின் முன்னால் பெரிய முகமண்டபம் மரத்தாலும் மலைக்கற்களாலும் எழுப்பப்பட்டிருந்தது. கருவறைக்குள் தோளில் வரையாட்டுடன் நின்றிருந்த பால்ஹிகரின் சிலைக்கு செம்பட்டு ஆடை சார்த்தி செந்நிற மலர்மாலையிட்டிருந்தார்கள். காலையில் பலியிடப்பட்ட மலையாடுகளின் கொம்புகள் ஒன்றன்மேல் ஒன்றென குவிக்கப்பட்டு தொலைவில் விறகுக்குவை என தெரிந்தன. அங்கே பால்ஹிகக்குடிகள் மட்டுமே சென்று வழிபட்டுக்கொண்டிருந்தனர். அவன் பால்ஹிகரின் முகத்தை நோக்கி தலைவணங்கி கடந்து சென்றான். நகரத்தின் முகப்பில் அவர்களின் மூதாதைமுகங்களும் தெய்வமுகங்களும் செதுக்கப்பட்ட ஒற்றைத்தேவதாருத் தடி நாட்டப்பட்டிருக்க அதன் கீழே குலப்பூசகர்கள் பன்னிருவர் நின்றிருந்தார்கள். வணிகர்கள் அளித்த ஒரு கோழியை அந்தத் தூணுக்குக் கீழே சிறிய உருளைக்கல் வடிவில் கோயில்கொண்டிருந்த காகை என்னும் தெய்வத்திற்கு முன்னால் பிடித்து வாளால் அதன் கழுத்தை வெட்டினார் ஒருவர். தெய்வத்தின்மீது குருதியை சொட்டினர். தங்கள் கைகளிலிருந்த கொப்பரையில் இருந்து சாம்பலை எடுத்து மறைச்சொற்களைக் கூவியபடி அவர்கள் மேல் வீசி அவர்கள் மேல் ஏறிவந்திருக்கக்கூடிய பேய்களை விரட்டினார்கள். அவர்கள் வணங்கி கடந்து சென்றதும் அவர்களின் குதிரைகளின் குளம்படிகளில் அந்தச் சாம்பலை வீசி அவர்களைத் தொடர்ந்து வந்திருக்கக்கூடிய பேய்களை துரத்தினார்கள்.
மலைச்சரிவிலிருந்து இறங்கி சிந்தாவதிக்கு இணையாகச் சென்ற பாதை கோட்டையை வளைத்து கிழக்கு வாயிலினூடாக உள்ளே சென்றது. அக்கோட்டையே அந்நகரை கீழ்த்திசைகளிலெங்கும் அறியச் செய்தது. அது செல்வவளம் மிக்கது என்பதற்கான சான்றுமாகி நின்றது. ஆகவே திசையெங்கிலுமிருந்து வணிகர்கள் அங்கு வரத்தொடங்கினர். அங்கு வணிகர்கள் வருவதனாலேயே மலைப்பொருட்களுக்கு விலை கிடைக்கிறதென்ற செய்தி பரவியது. அனைத்து பால்ஹிக குடிகளிலிருந்தும் பொருட்கள் அங்கு வந்திறங்கத்தொடங்கின ஓரிரு ஆண்டுகளிலேயே பால்ஹிகபுரி வடமேற்கு மலைப்பகுதிகளின் வணிகமையமென ஆயிற்று. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பொதி வண்டிகளும் அத்திரிகளும் புரவிகளும் அந்நகருக்குள் நுழைந்து மீண்டன. தலைச்சுமையாகவும் அத்திரிகளில், கழுதைகளில் ஏற்றிய பொதிகளுடனும் மலைப்பொருட்கள் கொண்டு நான்கு பக்க மலைச்சரிவுகளிலிருந்து பால்ஹிக குடிகள் அந்நகரை நோக்கி இறங்கினர். மலைச்சரிவிலிருந்து நோக்குகையில் மழை வெள்ளம் மலையிறங்கி ஓடைகளாகி ஏரி நோக்கிச்செல்வது போன்று தோன்றியது அது.
ஒவ்வொரு முறையும் எழும் பெருமிதத்தை அன்று அவன் உணரவில்லை. “இந்நகர் இங்கிருக்கும்” என்று சொல்லிக்கொண்டான். அச்சொற்றொடர் தன்னுள் ஏன் எழுந்தது என எண்ணி எதையோ சென்று தொட்டு அதை அவ்வாறே விலக்கி “இது என் பெயர் சொல்லும். இது ஒன்றே நானென எஞ்சியிருக்கும்” என்று சொல்லிக்கொண்டான். “ஆம், இது இங்கிருக்கும். இது எப்போதும் இங்கிருக்கும்” என்றே அவன் மனம் அரற்றிக்கொண்டிருந்தது. பாதையை நிரப்பி சென்றுகொண்டிருந்த பொதிவண்டிகளையும் அத்திரிகளையும் ஒழிந்து வழிவிட்டுக் கடந்து கிழக்குக்கோட்டையினூடாக உள்ளே நுழைந்தான்.