குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்

 

அன்பு ஜெயமோகன்,

வணக்கம். இந்த ஆண்டு குமரகுருபரன் கவிதை விருது கண்டராதித்தனுக்கு வழங்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி. கவனம் ஈர்க்கும் பரபரப்புகளின்றி இயங்குபவர் கண்டராதித்தன். எழுத்துக்கு வெளியில் எங்கும் தன்னை முன்வைக்காதவர். அவருடைய கவிதைகளின் தகைமை அறிந்து இவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. அவரோடும் அவரது கவிதைகளோடும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நட்பும் பரிச்சயமும் கொண்டவன் என்ற வகையில் நானும் மகிழ்கிறேன்.

விருது விழாவில் உங்களை நேரில் சந்தித்து இதைச் சொல்ல விரும்பியிருந்தேன். தவிர்க்கவியலாத ஓர் உள்ளூர் நிகழ்வினால் அன்று  சென்னை வர இயலவில்லை.

மிக்க நன்றியும் அன்பும்.

-அசதா

***

அன்புள்ள அசதா

நலம்தானே?

உங்களைப்பற்றிப் பேசிக்கொண்டோம். இப்போது உற்சாகமாக நலமாக இருப்பதாக கண்டராதித்தனும் சபரிநாதனும் சொன்னார்கள். மொழியாக்க நாவல் வந்தது. வாசித்துவிட்டு எழுதுகிறேன். முக்கியமான நாவல் என்று அருண்மொழி சொன்னாள்

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,

சென்னை குமரகுருபரன் விருதுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. நான் சற்றுப்பிந்திவந்ததனால் விஷால்ராஜாவின் பேச்சைக்கேட்கமுடியவில்லை. பிற இருவரும் நன்றாகப்பேசினர். முக்கியமான நன்றாகத் தயாரித்துவிட்டுவந்து பேசினர். விஷால்ராஜா எல்லா கேள்விகளுக்கும் திடமாக தெளிவாகப் பதில் சொன்னார். அது மிகப்பெரிய திறமை. தமிழின் எதிர்கால இலக்கிய நட்சத்திரங்கள் அந்த மூவரும். அதில் சந்தேகமே இல்லை. மூவருக்கும் என் அன்பு

விஷால்ராஜா பேசும்போது ஒன்று சொன்னார், முந்தைய காலங்களில் கோட்பாட்டுவிவாதம் மீது உருவான எதிர்ப்பை என் மீது காட்டாதீர்கள் என்று. அது முக்கியமானது. முன்பு கோட்பாட்டுவிமர்சனம் பேசியவர்கள் இலக்கியத்தை மறுக்கும் நோக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். நான் கல்லூரியில் படிக்கும் காலம். ‘இலக்கியம்ங்கிறதே இனி இல்லை. இனிமே எல்லாரும் எல்லாம் எழுதலாம். எல்லாமே எழுத்துதான். இலக்கியத்திலே இனிமே தரம்ங்கிற வார்த்தைக்கே அர்த்தமில்லை’ என்று நாகார்ஜுனன் பேசியதை நான் கேட்டிருக்கிறேன். இன்று எங்கே இருக்கிறாரோ, பாவம்.

உலக அளவில் கோட்பாட்டாளர்கள் எவரும் இலக்கியத்தை மறுப்பவர்கள் அல்ல என்று நான் வாசித்துத்தெரிந்துகொள்ள மேலும் சில ஆண்டுகளாயிற்று. அதற்கு நோயல் இருதயராஜ் அவர்களின் ஒரு பேருரை எனக்கு உதவியது. அதெல்லாம் பழைய காலம்

விஷால்ராஜா படைப்பாளி. இலக்கிய எழுத்தாளராக நின்றுகொண்டு இலக்கிய உருவாக்கத்தை கோட்பாடுகளாக புரிந்துகொள்ள முயல்கிறார்.கோட்பாடுகளை சார்ந்து எழுதுவதும் படைப்புக்கு சமானமாக அதைக்கருதுவதும் இலக்கியத்தை அழிக்கும். கோட்பாடுகள் இல்லாதிருந்தால் இலக்கியத்தை அப்ஜெக்டிவாக பார்க்கமுடியாமலாகும். இலக்கியத்தை முழுமையாக அப்ஜெக்டிவாக பார்க்கமுடியாது என்பதுதான் கோட்பாட்டுவிமர்சனத்தின் குறைபாடு. அதற்காக அதை நம்மால் மறுத்துவிடமுடியாது.

விருதுவிழாவும் சிறப்பாக நிகழ்ந்தது. நீங்கள் பேசியபேச்சு வலுவான கேள்விகளை முன்வைத்தது. அதைச்சார்ந்து எதுபேசப்பட்டாலும் கவிதைமீதான ஒரு தெளிவை அளிக்கும். ராஜீவன் கவிதையின் அரசியலை நிராகரித்துப்பேசினார். அஜயன்பாலா கவிஞனின் வாழ்க்கையின் வீரியத்தை சுட்டிக்காட்டிப்பேசினார். காளிப்பிரசாத் கவிதைக்கும் வாசகனுக்குமான உறவு எவ்வாறு ஒரு புள்ளியில் தொடங்குகிறதென்பதை விவரித்தார். எல்லா உரைகளுமே சிறப்பாக அமைந்திருந்தன

வாழ்த்துக்கள்

ராம்குமார்

***

அன்புள்ள ஜெ

கண்டராதித்தன் விருதுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு விஷயமும் முன்னரே திட்டமிடப்பட்டிருந்தன. இரண்டுவேளை டீகூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடு செய்திருந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

கண்டராதித்தன் பற்றி 13 கட்டுரைகள் இணையத்தில் நேரடியாகவும் சுட்டிகள் வழியாகவும் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு கவிஞனைப்பற்றி இத்தனை கட்டுரைகள் ஒரு நல்ல முயற்சி. இவற்றை ஒருநூலாக ஆக்கலாமென நினைக்கிறேன்.

முருகேஷ்

***

அன்புள்ள முருகேஷ்

ஆம், கண்டராதித்தன் மீதான விமர்சனங்களை நூலாக ஆக்கும் எண்ணம் உள்ளது. விருதுவிழாவின் ஆவணமாகவும் அது அமையுமென்று தோன்றுகிறது

முழு ஏற்பாடும் நண்பர் சௌந்தர்ராஜன் அவர்களின் ஏற்பாடு. அரங்கத்தில் இரண்டு நிகழ்ச்சிகள். அத்துடன் பல ஊர்களிலிருந்தாக முப்பதுபேர் வந்து சென்னையில் தங்கி இலக்கியம் பேசினோம். அதையும் அவரே ஏற்பாடு செய்திருந்தார்..

ஜெ

***

முந்தைய கட்டுரைஊமைச்செந்நாய் – மலையாளத்தில்
அடுத்த கட்டுரைகாய்கறியாதல்