குமரகுருபரன் விருதுவிழா -காணொளிகள்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. விருது எப்படி அளிக்கப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணம். கடந்த பத்துநாட்களாக கண்டராதித்தன் பற்றியே பேசியாகவேண்டும் என்று சொல்லுமளவுக்குக் கட்டுரைகள், குறிப்புகள், விவாதங்கள். ஆனால் வெற்றுப்புகழுரைகள் அல்ல அவை என்பதையும் உங்கள் பேச்சு காட்டியது. மிகத்தேர்ந்து வாசித்து மிகக்கறாராக மதிப்பிட்டுத்தான் கவிஞர்களை தெரிவுசெய்கிறீர்கள், அதன்பின் விருதை அவர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக அளிக்கிறீர்கள். உங்கள் நண்பர்களும் நீங்களும் எடுத்துக்கொள்ளும் முயற்சியும் அதிலிருக்கும் ஒழுங்கும் பிரமிக்கத்தக்கவை. கண்டராதித்தனைப்பற்றி எல்லா கோணங்களிலும் எழுதப்பட்ட கட்டுரைகள்தான் உண்மையான விருது என நினைக்கிறேன்
கவிதையை இப்படி அடையாளப்படுத்தி அதை முன்னிறுத்தினால்தான் அதற்கு வாசகர்கள் அமைகிறார்கள். கவிதையை கவிஞர்களே வாசிக்கும்போது ஒரு சிறிய தீவிரமான சூழல் உருவாகிறது. ஆனால் அது கவிஞர்களைக் காலப்போக்கில் தேங்கிநிற்கவும் செய்யும். ஒரு தனித்தன்மையை அடைந்தபின்னர் அதிலேயே கவிஞர்கள் நின்றுவிடுகிறார்கள். ‘கவிதை புரிந்துகொள்ளப்பட்டும் தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டும் விரிவடைகிறது’ என்று சொல்வார்கள். கவிதையை விரித்தெடுப்பவர்கள் வாசகர்களாகவே இருக்கவேண்டும். அத்தகைய வாசகர்களிடம் படைப்பாளிகளைக் கொண்டுசென்று சேர்க்கும் ஒரு முயற்சி இந்தவிருது
ஜெயராமன்
அன்புள்ள ஜெ,
நேற்றைய மாலையை ஒரு கவியணியாக எனக்குள் சூட்டிக்கொள்ள முடிந்தது, மெல்ல ஒருவித அமைதியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நான் சில விஷயங்களில் துள்ளி எழுந்தேன் ..
அழகானதொரு விழா, நூல் பிடித்தாற்போல அத்தனையும் எப்போதும்போல சரியாகவே நடந்தது,
சிறிது நேரதாமதமாக வந்ததால் விஷால், சுனில் அவர்களின் கேள்வி பதிலில் பங்குகொள்ள தயக்கமிருந்தது…
விழாவின் தொகுப்பாளர் ராஜகோபாலின் உரை அவரைப்போலவே அழகான நளினம் எப்போதும்போல..
சிறில் அவர்கள் உச்சரிப்பை தமிழில் இன்றே முதலில் கேட்டேன், ஒரு மயக்கும் ரிதம் ஓடியது அதில் …
தொடர்ந்த பெருந்தகை ராஜீவன் அவர்களின் உரையில் எழுத்தைப் பற்றிய தெளிவானதொரு சித்திரத்தை அளித்தார், எப்போதும் எனக்குள் ஒரு கேள்வி உண்டு அது எப்படி மலையாளிகளுக்கு மட்டும் அப்படி ஒரு குளிர் குரல் அமைந்துவிடுகிறதென்று,
விருது வழங்கியபோது கலாப்ரியா அவர்களும் கண்டராதித்தன் அவர்களும் உணர்ச்சி மேலீட்டில் கட்டி அணைத்து, முத்தமிட்டுக்கொண்டது என்நோற்றான் கொல் எனும் சொல்லை நினைவூட்டிய அழகிய தருணமது..
காலாப்ரியா அவர்களும் நானும் முகநூல் நட்பு வட்டத்துக்குள் இருந்தாலும் இதுவே எங்களின் முதல் சந்திப்பு, எழுபது என்பதுகளின் கவிஞர்களை பட்டியலிட்டு அவர் அளித்த உரை நேர்த்தி..
அஜயன் பாலா அவர்கள் இளம் ரத்தமாகவே தன்னியல்பில் பேசினார் என்பதைவிட தன்னை பகிர்ந்துகொண்டார் என்றே புரிந்துகொண்டேன்…
காளிபிரசாத் பேச்சு ஒரு அழகியலென ரசிக்க வைத்தது, திவ்ய பிரபந்தங்களையும் நவீனத்துவ கவிதைகளையும் பஞ்சாமிரதத்தின் தேன் என கலந்தளித்தார் நல்ல இனிமை…
உங்கள் புதுமை உரைக்கென காத்திருந்தேன், நீங்கள் மைக் முன்னால் வந்ததும் சட்டென ஒரு திறப்பு, நீங்கள் இப்படிதான் பேசுவீர்கள் என்று நினைத்தேன் அப்படியே அசத்தினீர்கள், நான் என்றும் இப்பேச்சுக்கு அடிமையாகவே நிலைக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன் ..
விருது நாயகன் அவர்கள் தன் ஏற்புரையை வாசித்தபோது தோன்றியது, இவர் எழுதும்போது வேறு உலகில் நிறைந்திருப்பார் போல என்று…மகிழ்ச்சி ததும்பி உணர்வு அவர் குரலில் கலந்து வீசியது..
சௌந்தர் நன்றியுரையில் யாரையுமே விட்டுவிடாமல் சொல்லிவிட்டார் என்பது அவரின் வாசிப்பில் உணர்ந்தேன்
அனைத்துக்கும் மேல் குமரகுருபரனின் கண்கள் நினைவில் இல்லையென்று சொல்லி ஒரு நொடி உங்கள் உள்ளுக்குள் ஓடிய நெகிழ்வின் மெல்லிய ஒலியை என் காதுகள் கேட்டது, அது உங்கள் கண்களிலும் தெரிந்தது, உண்மைதான் ஜெ சிறு வயது முதல் நான் கண்களைப் பார்த்தே பேசுவேன், என்னுள் இன்று ஆயிரக்கணக்கான கண்கள் உள்ளன, அவற்றில் சிலர் இல்லையென்றாலும் அந்த கண்கள் உயிரின் நீட்சிதான்.
அனைவரும் உரைகளை கேட்டுவிடுவார்கள் என்பதால் அதை பற்றி விரிவாகச் சொல்லவில்லை .
நன்றி
ஜெயந்தி ஜெ
***
அன்புள்ள ஜெ
கண்டராதித்தன் பரிசுவழங்கும் விழாவும் அதற்கு முன்பு நிகழ்ந்த நாவல்குறித்த விவாதமும் ஒருநாள்முழுக்க இலக்கியவிழாவில் திளைத்த அனுபவத்தை அளித்தன. வழக்கமான இலக்கியவிழாக்களில் விழாமுடிந்தபின்னர் ஒரு பெரிய சோர்வு உருவாகும். பெரும்பாலானவர்கள் படிக்காமல் வருவார்கள். இலக்கியம் சார்ந்த விவாதம் ஒருவர் பேசியதுமே திசைதிரும்பி சமகால அரசியல்விவாதமாக ஆகிவிடும். வழக்கமான ஃபேஸ்புக் சண்டைகளாக முடியும். அது நிகழவில்லை என்பதே பெரிய ஆறுதல்.
[அதை நம்மவர் கருத்துச்சுதந்திரம், ஜனநாயகம் என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்கள்] அதோடு தனிப்பட்ட தாக்குதல்கள் இருக்கும். எல்லாவற்றையும் விட மொக்கையானது ஜோவியலாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு எதையாவது சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருப்பது.
சென்னையில் வீட்டிலிருந்து கிளம்பி ஓர் இலக்கியக்கூட்டத்திற்கு வருவதென்பது பெரியவேலை. எனக்கு இரண்டுமணிநேரப் பயணம். அதை வீணடிக்கக்கூடாது என்பதனால் கூட்டங்களைத் தவிர்த்துவிடுவேன். உங்கள்மேல் உள்ள நம்பிக்கையால் கூட்டத்திற்கு வந்தேன். நம்பிக்கை வீணாகவில்லை. சிறந்த ஓர் இலக்கிய நிகழ்வு.
முதல் நாவல் அரங்கில் விஷால்ராஜா மிகவும் தன்னம்பிக்கையுடனும் நல்ல குரலுடனும் பேசினார். உலகசிந்தனை நாவல்களை எப்படியெல்லாம் வடிவமைக்கிறது, அதன்விளைவான நாவல்கள் என்ன என்பதைப்பற்றிய ஆழமான பேச்சு. கட்டுரையாக வாசிக்காமல் பேசியது ஒரு பெரிய விஷயம்.
அதன்மீது இரு எதிர்வினைகளுமே வேறுவேறு கோணங்களைத் திறப்பனவாக இருந்தன. அந்த முதல்கட்டுரையை மறுக்காமல் அதில் மேலும் கொஞ்சம் சேர்க்கவே இருவரும் முயன்றனர். சுனீல் கிருஷ்ணன் தேர்ந்த மேடைப்பேச்சாளராகப் பேசினார். சிவமணியன் கொஞ்சம் பதறினாலும் அவருடைய பேச்சு நன்கு தயாரிக்கப்பட்டதாகவும், உவமைகள் வழியாகச் சொல்ல முயல்வதாகவும் இருந்தது.
இதுவும் ஒரு சிறந்த விஷயம். எல்லா பேச்சாளர்களும் சிற்றிதழ்க்காரர்களின் ஜார்கன்கள் இல்லாமல் சுயமான உவமைகள், அனுபவக்குறிப்புக்களுடன் அசலான கருத்துக்களையே சொன்னார்கள். மேற்கோள்கருத்துக்களே இல்லை. விவாதமும் பல புதியகேள்விகளையும் திறப்புகளையும் உருவாக்குவதாக அமைந்தது. இரண்டுமணிநேரம் செறிவான ஓர் இலக்கியவிவாதம் இன்றைக்கு மிக அரிதானது.
பரிசளிப்புவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. டி.பி.ராஜீவனின் பேச்சு தலைமையுரைக்குத்தக்க ஓட்டமும் விரிவும் கொண்டிருந்தது. மலையாளக்கவிதை நேரடி அரசியல் ஈடுபாட்டின்காரணமாக தேங்கி ஜார்கன்களாக ஆகிவிட்டது என்றும் தமிழ்க்கவிதை வழியாகவே மூச்சுவாங்கி புத்துணர்ச்சி அடைய முடிகிறது என்றும் சொன்னார். தமிழ்க்கவிஞர்களிலேயே நல்ல கவிதைகள் எழுதிவந்தவர்கள் பரபரப்பு புகழுக்காக அரசியல் ஜார்கன்களை எழுத ஆரம்பித்திருக்கும் காலம் இது. நமக்கு சரியான எச்சரிக்கை அது
கலாப்ரியாவின் வாழ்த்துரை தன் இளவலை வாழ்த்தி உச்சிமுகர்வதாக இருந்தது. காளிப்பிரசாத் தன் கவிஞனை எப்படிக் கண்டுகொண்டேன் என்றுபேசினார். அஜயன்பாலா கவிஞனின் மூர்க்கமும் அன்பும் நிறைந்த ஒருமுகத்தை சித்திரமாகக் காட்டினார். கூடவே அவருடைய கவிதைகள் செயல்படும் இருதளங்களையும் சுட்டிக்காட்டினார்.
உங்கள் உரை கொஞ்சம் சீண்டும்தன்மை கொண்டது. ஒரு விவாதத்தை உருவாக்கவும் அதன்வழியாகக் கவிதை பற்றிப் பேசவைக்கவும் முயல்கிறீர்கள் என உங்களைக் கவனித்துவரும் என்போன்றவர்களுக்குப் புரிந்தது. அது தேவைதான். முகநூலில் சர்ச்சைகளிலேயே பொழுது ஓடிக்கொண்டிருக்கையில் நவீனக்கவிதைபற்றி எவராவது விவாதித்துச் சூடுபறக்கட்டுமே.
ஆனால் நவீனக் கவிதைகளில் ‘நல்ல கவிஞர்கள்’ அனைவருமே நீங்கள்சொன்ன பொதுக் கருத்தியல்கொண்டவர்களாகத் தெரிகிறார்கள் என்றீர்கள். அது அப்படி அல்லாதவர்கள் நல்ல கவிஞர்கள் அல்ல என்று சொல்வதுபோல ஆகிவிட்டதே, கவனித்தீர்களா? பொதுவான நல்ல கவிஞர்களின் தரத்திலிருந்து தன் மொழியால் எப்படி கண்டராதித்தன் மேலும் ஒருபடி மேலே செல்கிறார் என்று சொல்லி அதனால்தான் அவர் உங்களுக்கு உகந்த கவிஞர் என்றீர்கள்.
ஒரு சிந்தனையாளராக தொடர்ந்துசெயல்படும் உங்களுக்குக் கவிஞர்கள் தர கருத்து ஏதுமில்லைதான். பொதுவாகவே நாவலாசிரியர்களுக்கு கவிஞர்கள் அளிப்பது மொழிநுட்பத்தை, படிமங்களை மட்டும்தான். அதைத்தான் நீங்களும் சொன்னீர்கள். கவிஞர்கள் சொல்லும் கருத்துக்களை நாவலாசிரியர்கள் உலகமெங்கும் பொருட்படுத்தியதே இல்லை
நிகழ்ச்சிக்குப்பின் உங்களிடம் ஒருசில சொற்கள் பேசமுடிந்தது. சிறந்த நிகழ்ச்சி. ஒரு நிகழ்ச்சிக்குப்பின் பலவாரங்களுக்கு ஏதாவது யோசிக்கக் கிடைத்தால் அது பெரிய வெற்றி. எவருமே நிலைவிட்டோ பொருளற்றதாகவோ பேசவில்லை. சிறப்பாகத் திட்டமிடப்பட்டு சரியாக நிகழ்த்தப்பட்ட ஓர் இலக்கிய நிகழ்வு. நன்றி
அருண்குமார்
***