விருதுவிழாவும் நாவல்விவாதமும்

kala

அன்புள்ள ஜெ…

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா மிகச் சிறப்பான அனுபவத்தை தந்தது.. விருதுக்கு முன் இன்னொரு நிகழ்ச்சி என்ற கான்செப்ட் புதுமையான ஒன்று… நாவல் குறித்தான விவாதம் பல திறப்புகளை அளித்தது…

என்னதான் யூட்யூப் நேரலை என வந்து விட்டாலும் நேரடி அனுபவம் என்பது தனித்துவமானது.  நண்பர்களை கண்ட மன நிறைவுடன் சான்றோர் சூழ் அவையில் அமர்ந்து நிகழ்ச்சியை காண்பதற்கு நிகர் வேறில்லை…

தொடர் வண்டியில் பயணித்தபடி மழையை ரசித்த அனுபவத்தை எழுதியிருந்தீர்கள்… அதையே அதே உணர்வுடன் நண்பர்களுடான தனி உரையாடலில் நீங்கள் பேசியதை கேட்பதெல்லாம் நிகழ்ச்சிக்கு நேரில் வருபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு

பின் நவீனத்துவம் என்பது கலைக்களஞ்சிய தன்மை கொண்டது என்ற கருத்தும் குறிப்பிட்ட துறையில் மேதைமை தேவை என்ற கருத்தும் விவாதிககப்பட்டது… இது குறித்து விரிவான விளக்கம் தேவை…  ஒரு சாதாரண மனிதன் தன் அன்றாட சராசரி அனுபவங்களை வைத்து எழுத முடியாதா என்ற கேள்வி இயல்பாகவே எழுமல்லவா ?

அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள பிச்சைக்காரன்

வருகைக்கு நன்றி

உண்மையில் எங்களுக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஒரு விழாவுக்கு முன் இப்படி ஒரு அழுத்தமான விவாதநிகழ்ச்சி இதுவரை நிகழ்ந்ததில்லை. அது சரியாக வராது என்று கிருஷ்ணன் போன்ற நண்பர்கள் கருதினர். பார்ப்போமே என்றுதான் முயன்றோம். ஏனென்றால் ஒரு தனிநிகழ்ச்சியாக ஒருங்கமைக்க முப்பதாயிரம் ரூபாயாவது ஆகும். கூடத்தை மூன்றுமணிநேரம் முன்னராகவே எடுப்பது என்றால் இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் செலவு, அவ்வளவுதான். ஆகவே நஷ்டம் ஏதுமில்லை

நாங்கள் அஞ்சியது கூட்டம் வராதுபோகுமோ என. ஏனென்றால் தீவிரமான விவாதங்களுக்கு இங்கே கூட்டம் வருவதில்லை. மேலும் ஒரு விழாவுக்கு முன்னர் என்றால் விழாவுக்கே செல்லலாமே என்றுதான் நினைப்பார்கள். அதோடு சென்னைகூட்டம் விந்தையானது. ஓர் இலக்கிய அமைப்பினர் இன்னொரு இலக்கிய அமைப்பின் கூட்டத்திற்குச் செல்லக்கூடாது என்ற கொள்கை கொண்டவர்கள்.

 

vishal

விஷால் போன்ற இளைய தலைமுறைப் படைப்பாளிக்கு வாசகர்களை எதிர்கொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு இது. அவர் அதை மிகநன்றாக பயன்படுத்திக்கொண்டார். சுனீல்கிருஷ்ணன் ஏற்கனவே மேடைக்குத்தேர்ந்தவர். சிவமணியனுக்கு ஆரம்பநிலை என்றாலும் நன்றாகத் தயாரித்துவந்து பேசினார். விவாதமும் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.

மேலும் விழாக்கள் ஒருவகையான ‘மங்கல’ நிகழ்ச்சிகள். அவற்றில் இலக்கியப்பேச்சுக்கள் பெரிதாக எழவாய்ப்பில்லை – அப்படியல்லாது ஆகவேண்டும் என நான் முயல்வதுண்டு என்றாலும். ஆகவே கூடவே இப்படி ஓர் அரங்கு நிகழ்வது இலக்கியம் சார்ந்து இயங்குபவர்களுக்கு நிறைவை அளிப்பது. இதை மேலும் தொடரலாமென நினைக்கிறேன்

நாவல் பற்றிய அரங்கில் ‘எல்லாநாவல்களும்’ கலைக்களஞ்சியத்தன்மை கொண்டிருக்கவேண்டும் என பேசப்படவில்லை. அப்படி அல்லாத தேவிபாரதியின் எளிய நாவலான நிழலின்தனிமையின் வீச்சு ஏன் பிறநாவல்களுக்கு அமையவில்லை என்றே பேசப்பட்டது. பின்நவீனத்துவ நாவல்களின் அடிப்படையியல்புகளில் ஒன்று கலைக்களஞ்சியத்தன்மை, அது இங்கே அவ்வாறுசொல்லிக்கொண்ட எந்த ஆக்கத்தில் இருந்தது என்ற வினாவே எழுப்பப் பட்டது

ஜெ

விழா புகைப்படங்கள்

 

முந்தைய கட்டுரைகண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா