மரத்திலிருந்து கனியின் விடுதலை -கடிதங்கள்

aso

மரத்திலிருந்து கனியின் விடுதலை

அன்புள்ள ஜெயமோகன்,

“மரத்திலிருந்து கனியின் விடுதலை” என்ற அசொகமித்திரனின் “விமோசனம்” சிறுகதை குறித்தான கட்டுரை படித்தேன். பல முறை படித்திருந்தாலும், புதிய ஊற்றுக்கண் திறந்தது போல இருந்தது. பல தளங்களில் பொருள் தரக்கூடிய கதை. படிப்பவர் ,அசோமித்திரனின் வழக்கமான எளிமையில் ஆழ்ந்து, சுலபமாக முதல் தளத்திலேயே  நின்று விடும் வாய்ப்பு நிறைய உண்டு. கணவனிடம் இருந்து விமோசனம் என்ற தளத்தைத் தாண்டி, மரபிலிருந்து விடுதலை என்ற அடுத்த தளம் திறந்திருக்கிறது. “அவள் மரபை விடவில்லை, மரபு அவளை விட்டுவிட்டது என்பதுதான் மேலும் நம்மை வந்தடையும் பொருள்” முடித்திருக்கிறீர்கள். எனக்குத் தோன்றுவது அவள்தான் மரபை விட்டு விட்டாள் என்று. சரஸ்வதி கிளம்பியவுடன், அந்த வீட்டு அம்மாள் யாரையோ கூப்பிட்டு மஞ்சள் குங்குமம் பழம் தாம்பூலம் தரச் சொல்கிறார். சரஸ்வதி அவற்றை வாங்கிக் கொண்டதாகச் சொல்லவில்லை. அடுத்த வரி “சரஸ்வதி சிறிது தயங்கினபடி நகர்ந்தாள் “.  அசோகமித்திரன் கதையின் துவக்கத்திலிருந்து எத்தனையோ விவரங்களையும் , செயல்களையும் விவரமாக,நுணுக்கமாக கொடுத்திருக்கிறார்.

வத்தல் குழம்பில் அடியில் கடலைப் பருப்பும் கற்களும் இருக்கின்றன, பூஜைக்குச் சென்ற வீட்டில் ஒரு மூலையில் இருந்த டெலிபோனின் பேசும் பாகத்தை யாரோ எடுத்து கீழே வைத்திருக்கிறார்கள்,இரண்டு நாட்களுக்கு முன் மறந்துபோய் விட்டுச் சென்ற பால் புட்டியை சுத்தம் செய்து கொண்டுவந்து கொடுக்கிறார்கள், தாம்பாளம் விழுந்தவுடன் பாடகர் பாட்டை ஒரு கணம் நிறுத்துகிறார், ஆனால் சரஸ்வதி தாம்பூலம் வாங்கிக் கொண்டதாக ஒரு வரி இல்லை ! அவள் மரபிலிருந்து விலகி நகர்கிறாளா ?

இன்னும் ஒரு தளத்தில் பார்த்தால்,

இறுதியாக சரஸ்வதி கிளம்பிப் போகிறாள், ஒரு கணம் அழுகை பொத்துக் கொண்டு வருகிறது,அடுத்த கணம் உணர்ச்சியற்று மனம் வெற்றாக ஆகிறது ! சரஸ்வதிக்கு விமோசனம் கணவனிடமிருந்தா ? மரபிலிருந்தா ? இல்லை தன்னிடமிருந்தே,  தானாக ஏற்படுத்திக் கொண்ட தளைகளிலிருந்தா ?

தருணாதித்தன்

***

அன்புள்ள ஜெ

அசோகமித்திரனின் விமோசனம் கதையை நான் இரண்டுமுறை முன்னரே வாசித்திருந்தாலும் சரஸ்வதி அந்த புனிதரைச் சென்று சந்திப்பது தனக்கு மரபு என்ன பதிலை அல்லது விடுதலையை அளிக்கப்போகிறதென்று அறிவதற்காகவே என்ற கோணத்தில் நான் யோசிக்கவில்லை. உண்மையில் அந்த புனிதர் அக்கதையில் எதற்கு என்றே எனக்குப்புரியவில்லை. அவளுக்கு வேறு அடைக்கலமே இல்லை என்று காட்டவே அவர் வருகிறார் என்றுதான் நினைத்தேன்.

இவ்வாறு தொடர்ந்து பழைய இலக்கியம் மீது ஒரு வாசிப்பையும் விவாதத்தையும் உண்டுபண்ணிக்கொண்டே இருப்பது முக்கியமான ஒரு இலக்கியப்பணி. வாழ்த்துக்கள்

சந்தானகிருஷ்ணன்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 17
அடுத்த கட்டுரைதமிழ் ஹிந்து –சிறுமையைக் கடத்தல்