சாத்யகி படைவெளியை கடந்துசென்று பாஞ்சாலப் படைப்பிரிவுகளை அடைந்தான். அங்கு ஏற்கெனவே பாடிவீடுகள் அனைத்தும் கலைக்கப்பட்டு பாய்களாகவும் மூங்கில்களாகவும் தரையில் அடுக்கப்பட்டிருந்தன. சில நாட்களுக்கு முன்பு சீரான படைகளால் நிறைந்திருந்த வெளியில் வெறுமை அலைந்தது. அவ்வெறுமை புரவியில் சென்றவர்களை தேவையின்றி விரையச் செய்தது. வெறுமனே கூச்சலிட வைத்தது. இறுதியாகச் செல்லும் ஏவலர்களின் அணிகளும், தச்சர் குழுக்களும் மட்டுமே எங்கும் தென்பட்டனர். சுமைகள் கொண்டுசெல்லும் அத்திரிகளும் வண்டிமாடுகளும் அவற்றின் சாணியும் நீரும் கலந்த மணத்துடன், வால்சுழலல்களுடன் ஊடுகலந்திருந்தன. பணிக்கூச்சல்கள், வண்டிகளின் சகட ஓசைகள்.
திருஷ்டத்யும்னனின் கூடார வாயிலில் புரவியை நிறுத்தி காவலனிடம் தன்னை அறிவிக்கும்படி கோரினான். காவலன் உள்ளே சென்று ஒப்புதல் வாங்கிவந்து தலைவணங்க ஆடையை சீரமைத்து குழலை கையால் நீவிய பின் உள்ளே நுழைந்தான். திருஷ்டத்யும்னன் தன் முன் விரிக்கப்பட்ட பெரிய தோல்பரப்பில் சிவப்பு மையாலும் நீல மையாலும் வரையப்பட்ட நில வரைபடத்தை பார்த்துக்கொண்டிருந்தான். சாத்யகியை பார்த்ததும் தலைவணங்கினான். முகமன் எதுவும் உரைக்கவில்லை.
அவன் போர் குறித்த கவலையில் ஆழ்ந்துவிட்டான் என்று சாத்யகி எண்ணினான். சற்று அப்பால் சென்று அமர்ந்து உடைவாளைக் கழற்றி வைத்தபின் “படைகள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன, பாஞ்சாலரே” என்றான். அவனை பார்க்காமல் திருஷ்டத்யும்னன் தலையசைத்தான். “இன்னும் பதினைந்து நாட்களில் படைகள் குருக்ஷேத்திரத்தை அடையக்கூடும்” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம், மேலும் நான்கு நாட்கள் ஆகவும் கூடும்” என்றான். அவன் தன்னை விழிதூக்கிப் பார்க்கவில்லை என்றும், முகத்தில் புன்னகையில்லையென்றும் சாத்யகி கண்டான். பின்னர் அவன் அந்த வரைபடத்தை நோக்கவே இல்லை என்பதையும் புரிந்துகொண்டான்.
தன்னை தவிர்க்கும்பொருட்டே வரைபடத்தை பார்க்கிறான் என்று தெரிந்ததும் ஒருகணம் சினம் எழுந்தது. பின்னர் அது ஏன் என்று உளம் துழாவத் தொடங்கியது. நேற்று நிகழ்ந்த மணநிகழ்வு அவனுக்கு உவப்பாக இல்லாமலிருக்குமோ? ஆனால் பேருவகையையே முதலில் காட்டியிருந்தான். துருபதரும் மாற்றுச் சொல்லுரைக்கவில்லை. அல்லது பாஞ்சாலப் படைகளிலிருந்து ஒவ்வாமை எழுந்து அவனை வந்தடைந்திருக்குமோ? பாஞ்சாலப் படைகளில் அவ்வாறு ஒரு எண்ணமிருப்பதை எவருமே சொல்லவில்லையே…?
அவ்வாறு எண்ணிக் குழம்புவதைவிட திருஷ்டத்யும்னனிடமிருந்தே அந்த உணர்வை அறிந்துகொள்வது நன்றென்று தோன்றியது. அதற்கு பிறிதொரு முள்ளால் குத்தி அந்த முள்ளை எடுக்கவேண்டும். அவன் “மைந்தர் உங்கள் படைப்பிரிவில்தான் வந்து சேர்ந்துகொள்ளவிருக்கிறார்கள், பாஞ்சாலரே” என்றான். “ஆம்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “அசங்கனும் வருகிறான், அவன் உங்கள் படைப்பிரிவில் ஆயிரத்தவனாக பொறுப்பேற்கிறான்” என்றான். ஓசைகேட்ட நாகமென திரும்பி அவனைப் பார்த்து விழிதொட்டபின் திருஷ்டத்யும்னன் திரும்பிக்கொண்டான்.
அக்கணம் அவன் உள்ளத்திலிருப்பதென்ன என்று சாத்யகிக்கு புரிந்தது. தன் மகளை பிறிதொரு ஆணுக்களித்த தந்தையின் சீற்றத்தைப்பற்றி ஏராளமான திருமணப்பாடல்களில் அவன் கேட்டதுண்டு. அது வெறும் கேலி என்றே எண்ணியிருந்தான். மெய்போலும் என எண்ணியதும் அவன் நெஞ்சுக்குள் புன்னகை எழுந்தது. கருங்கலத்தால் அகல்சுடரை மூடிவைப்பதுபோல் அதை உள்ளத்தில் கரந்து “படை எழுச்சிக்கான முரசுகள் இன்னும் அரை நாழிகைக்குள் எழவிருக்கின்றன” என்று அவன் சொன்னான். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான். மீண்டும் விழிதூக்கி சாத்யகியை பார்த்தபின் தன் உணர்வை சாத்யகி புரிந்துகொண்டான் என்ற எண்ணத்தை அவன் அடைந்தான்.
ஆனால் அப்பகிர்வே அவனை எளிதாக்கியது. புன்னகைத்தபடி “நீங்கள் இங்கிருந்து கிளம்பிய அன்றே நானும் கிளம்பி காம்பில்யம் சென்றிருந்தேன், யாதவரே” என்றான். “துணைவியரை பார்ப்பதற்கு அல்லவா?” என்றான் சாத்யகி. ஆனால் அவன் உள்ளம் உணர்ந்துவிட்டிருந்தது. “ஆம். அத்துடன் அவளையும் பார்த்தேன். அவளிடமும் விடைபெற்று வந்தேன். இப்போரில் களம்படுவேன் எனில் இங்கு எனக்கு செயல் எச்சங்கள் ஏதுமில்லை” என்றான் திருஷ்டத்யும்னன்.
சாத்யகி கைநீட்டி திருஷ்டத்யும்னனின் கைகளை பற்றிக்கொண்டான். திருஷ்டத்யும்னன் “சற்று முன் எண்ணிக்கொண்டிருந்தது அதையே. இத்தகைய பெரும்போர் எவ்வளவு நன்று என்று. இது நம்மைப்போன்ற வீரர்களின் வாழ்வை இனிதாக நிறைவடையச் செய்கிறது. நாம் மேலும் மேலும் உச்சங்களை நோக்கி செல்பவர்கள். நுகர்விலிருந்து மேலும் நுகர்வு. வெற்றியிலிருந்து மேலும் வெற்றி. அவ்வாறுதான் நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். உடல் மெல்ல உச்சத்திலிருந்து கீழிறங்கும் முதுமையில் நாம் அடைந்தவை அனைத்தையும் இழந்து பிறிதொருவராக ஆகி நலிந்திறக்கும் கொடுமையிலிருந்து முழுமையாகவே நம்மை விடுவிக்கிறது போர். போரில் இறக்கும் ஷத்ரியனே முழுமையானவன்” என்றான்.
சாத்யகி “இறப்பை விரும்பி போருக்குச் செல்லலாகாது என்பார்கள்” என்றான். “ஆம். ஆனால் இப்போர் எனக்கு முற்றிலும் வேறு பொருள் அளிப்பது. இது இளைய யாதவரின் சொல் நிலைகொள்ளவேண்டும் என்று, இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் முடி நிலைகொள்ளவேண்டும் என்பதற்காக, என் உடன்பிறந்தாளின் சூளுரையின் பொருட்டு நிகழும் போர். ஆனால் எனக்கு அவையனைத்திற்கும் மேலாக எந்தை முன்பொரு நாள் களம் நின்றுரைத்த வஞ்சினத்தின் பொருட்டு நிகழ்வது. என் கைகளால் துரோணரின் கழுத்தை வெட்டி தலையைத் தூக்கி எடுத்து என் தந்தைக்கு காட்டவேண்டும். இத்தருணத்தில் அக்கடனே என்னை முன் செலுத்துகிறது.”
“நீங்கள் அவரிடம் படைக்கலம் பயின்றவர்” என்றான் சாத்யகி. “ஆம், கல்லுளியை கல்லில் தீட்டுவார்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் அவரை கொல்லும்பொருட்டு எந்தையால் தவம்செய்து பெறப்பட்ட படைக்கலம். யாஜரும் உபயாஜரும் துரோணரைக் கொன்று பழிதீர்க்கும் மைந்தனாகவே என்னை எரியில் இருந்து உருத் தீட்டி எடுத்தனர் என்று சூதர்கள் பாடி கேட்டிருப்பீர்கள். அது வெறும் கதை அல்ல, உண்மை. என் நாவில் சொல்திருந்தியதும் எந்தை எனக்கு அதை சொன்னார். மூன்றாண்டு அகவையில் நான் எந்தைக்கு அளித்த சொல்லை ஒவ்வொரு மாத்திரையும் என நினைவுகூர்கிறேன். என் உள்ளத்தில் அத்தழல் தழைந்ததே இல்லை.”
“அது மிகச் சிறிய வஞ்சம். மிக நெடுநாட்களுக்கு முன் நடந்தது. அதைக் கடந்து நெடுந்தூரம் வந்திருக்கிறோம். அன்று உங்கள் தந்தையை தேரில் கட்டியிழுத்துச் சென்ற இளைய பாண்டவர் இன்று உங்கள் குடிக்கு மறுமைந்தனாக வந்துளார்” என்றான் சாத்யகி. “ஷத்ரியர் போர்வஞ்சங்களை போர்க்களத்திலேயே உதறிவிடவேண்டும் என்பார்கள். சிந்தப்படும் குருதி அக்கணமே உடல் அல்லாதாகிறது. உயிரிலிருந்து புதுக் குருதி ஊறி எழவேண்டும்.” திருஷ்டத்யும்னன் “ஆம், ஆனால் சில வஞ்சங்கள் ஒருபோதும் தீர்வதில்லை. வாள்போழ்ந்த புண் ஆறும், நச்சுமுள் ஆழ்ந்தமைந்து வளர்கிறது. எந்த மருந்தும் அதை ஆற்றுவதில்லை” என்றான்.
“யாதவரே, எந்தை இந்நாள்வரை ஒருகணமும் அவ்வஞ்சம் இன்றி வாழ்ந்ததில்லை. தன் மைந்தரையும் அரசையும் குடிகளையும்கூட அவ்வஞ்சத்தின்பொருட்டு இழக்க இப்போதும் அவர் சித்தமாக இருக்கிறார்” என்று திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். “அத்துடன் ஒவ்வொரு நாளும் அவ்வஞ்சத்தை அவருக்கு நினைவுபடுத்துவதென பாதிநாடு அஸ்வத்தாமன் கையில் இருக்கிறது. மூதாதையர் அளித்த நிலத்தில் பாதியை இழந்த நான் பாதி உடல்கொண்டவன் என அவர் சொல்வதுண்டு. அரசவையில் என்றால் வஞ்சத்துடன் உறுமுவார். தனியறையில் மதுமயக்கில் என்றால் விழிநிறைந்து வழிய அழுவார். தன் மனையை பிறன் நுகரக் காண்பது இது. இல்லை தன் தாயை அயலான் வன்புணரக் காண்பது இது என்று நெஞ்சிலறைந்து கூவுவார்.”
சில மாதங்களுக்குமுன் இளைய யாதவர் பாண்டவர்களின் சார்பாக அரசத்தூதுடன் அஸ்தினபுரிக்குச் சென்று வந்துகொண்டிருந்தபோது நான் காம்பில்யம் சென்று என் தந்தையை கண்டேன். போருக்கென படைகளை ஒருக்கும்பொருட்டு எல்லையில் இருந்தேன் அப்போது. தந்தை நிலைகொள்ளாதவராக இருந்தார். இளைய யாதவரின் தூதின் ஒவ்வொரு செய்தியையும் ஒற்றர்கள் வழியாக தெரிந்துகொண்டார். மகளின் முடியுரிமை குறித்தே அவ்வளவு ஆர்வம் கொள்கிறார் என்று அப்போது எண்ணினேன். ஆனால் அன்றிரவு சற்றே மது அருந்தி தன் அறையில் தனித்திருந்தபோது அவரை சென்றுகண்ட என்னிடம் “யாதவர் தூதில் என்ன நிகழும், மைந்தா?” என்றார். என்ன எண்ணி அவர் கேட்கிறார் என உணராமல் “இளைய யாதவர் எங்கும் தோற்றதில்லை, தந்தையே” என்றேன்.
அவர் முகம் நிழல்கொண்டது. திரும்பிக்கொண்டு தன் கையிலிருந்த மதுக்கோப்பையின் சிற்பச்செதுக்குகளை வருடியபடி நெடுநேரம் பேசாமலிருந்தார். பின்னர் “இத்தூதில் இளைய யாதவர் வெல்வாரெனில் அதன் பின் நான் உயிர் வாழ்வதில் பொருளில்லை” என்றார். நான் திகைக்க என்னை நோக்கி விழிதூக்கி “கானேகி வடக்கிருந்து உயிர் துறக்கலாம் என்று எண்ணுகிறேன், மைந்தா” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை. கண்கள் சிவந்திருந்தன. இமைகளில் விழிநீர்ச் சிதறல்கள். “ஆம், நீ சொல்வது மெய். இளைய யாதவர் சொல் திகைந்தவர், அவர் வெல்லக்கூடும், அவர்களுக்கு இந்திரப்பிரஸ்தம் கிடைக்கும்” என்றார் தந்தை.
“ஆம், தந்தையே” என்றேன். அவர் சீற்றம்மிக்க குரலில் “போர் எப்போதைக்குமாக முடித்து வைக்கப்படும். போர் நிகழவில்லையென்றால் பாண்டவர்களின் அந்த ஆசிரியனை நான் வெல்ல முடியாது. அவனை வெல்லும்பொருட்டே உன்னை ஈன்றேன். உன் கையில் வாள் எடுத்து தரும்போது உன் செவியில் உன் வாழ்கடன் அதுவே என்றுரைத்தேன். ஒவ்வொரு முறையும் உன்னை பார்க்கையில் இவன் என் கடன்முடிக்கப் பிறந்தவன் என்றே எண்ணினேன். அத்தனை சடங்குகளிலும் உன்னிடம் அதை உரைத்திருக்கிறேன். உனது ஒவ்வொரு பிறந்தநாளிலும் அதை உனக்கு நினைவூட்டி வஞ்சினம் உரைக்கச் சொல்லியிருக்கிறேன். போர் தவிர்ந்தால் இவையனைத்திற்கும் என்ன பொருள்? அவன் வாழ்வான். என் வஞ்சினத்துடன் நான் இறக்கவேண்டியதுதான்” என்றார்.
நான் சொல்லவிந்து அவரை வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தேன். “நேற்று நிமித்திகர் பத்ரரை அழைத்து கேட்டேன்” என்று தந்தை சொன்னார். “வஞ்சம் தீராது இறப்பவர் என்ன ஆவார் என்று சொல்க நிமித்திகரே என்றேன். வஞ்சம் தீராது செல்பவர் தீயூழ்கொண்ட ஆத்மாவாக மாறி இருளுலகில் அலைவார். எந்த எள்ளும் நீரும் சென்று சேராத ஆழத்தில் ஆயிரமாண்டு உழல்வார். வலியும் துயரும் தவமே என்பதனால் அத்தவப்பயனால் மீண்டும் பிறப்பெடுத்து அவ்வஞ்சத்தை மேற்கொள்வார். பிறிதொரு ஊழ்வெளியில், முற்றிலும் அறியாத வாழ்வில் அவ்வஞ்சத்தை தீர்ப்பார். அரசே வஞ்சங்கள் தீர்க்கப்படாமல் புவிநெசவு முடிவடைவதில்லை என்றார்.”
“அவ்வஞ்சம் அடுத்த பிறப்பில் பேருருக்கொண்டு என்னை தொடரவேண்டுமென்றால் நான் என்ன செய்யவேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அவ்வஞ்சத்தையே ஊழ்கமெனக்கொண்டு வடக்கிருந்து உயிர் துறக்கவேண்டும் என்றார் நிமித்திகர். உங்கள் ஒன்பது வாயில்களில் ஒன்றைத் திறந்து ஆத்மா காற்றிலெழுகையில் சித்தத்திலும் நாவிலும் எஞ்சும் சொல் அவ்வஞ்சமே ஆகுமெனில் அது ககனவெளியில் பேருருக் கொள்ளும். முகில்கள் வானில் திரள்வதுபோல கருமைகொண்டு பெருகும். பெருமழையென இறங்கும். பிறிதொரு பிறவியில் நீங்கள் அவ்வஞ்சத்தை ஆற்றும் பெருந்திறல் கொண்டவராக பிறப்பீர்கள். இறந்து பிறந்து வாழும் உங்கள் வஞ்சத்திற்குரியவரை வெல்வீர்கள் என்றார். ஆம், என் வஞ்சம் நிறைவேற வாய்ப்பில்லை என்றால் அவ்வண்ணமே மாய்வேன் என்று நான் சொன்னேன்” என்று தந்தை சொன்னார்.
“தந்தையே, இறப்பென்பது மீட்புக்கான வாயில். முடிவிலாச் சுழலில் மீண்டும் சிக்கவேண்டும் என்று எண்ணி இறப்பது அசுரரும் அரக்கரும் மட்டுமே தெரிவுசெய்யும் வழி. அதை கிராதம் என்றே நூல்கள் சொல்கின்றன” என்றேன். தந்தை உரத்த குரலில் “நான் எதிர்பார்த்திருப்பது ஒரே செய்தியைத்தான். போர் நிகழவேண்டும். போர் ஒழிந்தது என்ற செய்தி வருமென்றால் நான் கானேகி உயிர்துறப்பேன், அதுவே என் முடிவு. என்னை எவரும் தடுக்கமுடியாது” என்றார். அவர் முகத்திலிருந்த துயரை கண்டேன். எரியில் வெந்து உடல் உருகி இறப்பவனின் விழிகள் அவை.
நான் அவரை நோக்கி கைகூப்பி விழிநீருடன் “இல்லை தந்தையே, உங்கள் வஞ்சத்தை நான் நிறைவேற்றுவேன். அதன் பொருட்டே நான் பிறந்திருக்கிறேன். அதுவன்றி வேறெதையும் நான் உளங்கொண்டதே இல்லை” என்றேன். “ஆனால் அந்த நச்சுப்பாம்பு அஸ்தினபுரியெனும் காவல் கோட்டைக்குள் புற்றமைத்திருக்கிறது. ஒரு பெரும்போரால் அக்கோட்டையை உடைக்காமல் உன்னால் அவனை வெல்ல முடியாது. போர் நிகழ்ந்தாகவேண்டும். எதன்பொருட்டேனும் அஸ்தினபுரி அழியவேண்டும். அஸ்தினபுரியை வெல்லும் திறல்கொண்ட படை ஒன்று திரண்டு நின்றால், அக்களத்தில் அவன் வில்கொண்டு எதிர்வந்தால் மட்டுமே நீ அவனை கொல்ல முடியும்” என்றார் தந்தை.
என் தோளைத் தொட்டு “மைந்தா, உன்னை இத்தனை நாள் கூர்ந்துநோக்கியிருக்கிறேன். உன்னால் துரோணரிடம் எதிர்நின்று போர்புரிய இயலாது. ஏனென்றால் துரோணர் கூர்மதி கொண்டவர். என் புன்னகைக்கும் பணிவுக்கும் அப்பால், உன் கூர்மைக்கும் உளக்கொடைக்கும் அப்பால் என் இருளில் அமைந்த வஞ்சம் வரை வந்தணைய அவரால் இயன்றது. உனக்கு அவர் முழுக்கல்வியை அளிக்கவில்லை. அவர் அவ்வாறு அளிக்கமாட்டார் என்பதை நானும் அறிவேன். உனக்கு அவர் ஒன்று குறைய கற்பிப்பார். உன் நுண்திறனால் அவ்வாறு விட்ட ஒன்றை நீயே கற்று அவரை எதிர்கொள்வாய் என எண்ணினேன். அது நிகழவில்லை” என்றார்.
“ஏனென்றால் மேலே செல்லும்தோறும் ஏறுவது கடினமாகிறது. இறுதிஉச்சங்களில் ஒவ்வொரு அணுவும் மலையென்றாகிறது. உனக்கு அவர் சொல்லித்தராததை சொல்லித்தர துரோணரைக் கடந்த மெய்ஞானி ஒருவர் தேவை. அது வாய்த்தது இருவருக்கே. அர்ஜுனனுக்கு கிருஷ்ண யாதவன். அங்கநாட்டான் கர்ணனுக்கு பரசுராமர். நீ அவர்களில் ஒருவருடன் இணைந்து நின்றால் மட்டுமே அவரை வெல்லக்கூடும்” என்றார் தந்தை.
நான் அவரிடம் “தந்தையே, நிமித்திகர் என் பிறவிநூலைக் கணித்து சொன்னது பிறிதொன்று. நான் அவரை கழுத்து துணித்து தலை எடுத்துச் சுழற்றுவேன் என்று முதுநிமித்திகர் கிருபாகரர் சொன்னபோது தாங்களும் உடனிருந்தீர்களல்லவா?” என்றேன். “மீள மீள நிமித்திகர்கள் அதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சூழ்ந்துவரும் ஊழ் வேறு திசை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஒருகணமும் என்னால் இங்கு நிலையமர இயலவில்லை. மைந்தா, இளைய யாதவர் இத்தூதில் வெல்லக்கூடாது. இப்போர் நிகழவேண்டும்” என்றார்.
“நானும் அதன் பொருட்டு நம் குலதெய்வங்களை வேண்டிக்கொள்கிறேன், தந்தையே. என்னால் இயன்றவரை அதன்பொருட்டே முயல்கிறேன். முடிந்தால் அப்பேச்சை சிதறடிக்கிறேன்” என்றேன். “அது உன்னால் இயலாது. அது யானைப்போர், நீ ஊடே புகுந்தால் நசுங்குவாய். கணிகரும் இளைய யாதவரும் மோதி விளைவு தெளிந்த பின்னர் உடன்செல்வதொன்றே நாம் செய்யக்கூடுவது” என்றார் தந்தை. “ஆம் தந்தையே, அவ்வாறே” என்று மட்டும் அன்று சொன்னேன்.
திருஷ்டத்யும்னன் “போர் குறிக்கப்பட்டதும் பெருமகிழ்வடைந்தவர் என் தந்தையே. பாஞ்சாலத்தின் ஐங்குலங்களையும் அழைத்து இறுதித்துளி குருதிவரை இப்போரில் பாண்டவர்களுக்காக சிந்தவேண்டுமென்று ஆணையிட்டார். தன் மைந்தர்கள் அனைவரையுமே படைமுகத்திற்கு அனுப்பினார். இன்று அனைத்து திசைகளிலிருந்தும் அவர் கொண்ட விசைகள் பெருகிவந்து என்னில் கூர்கொண்டு நின்றிருக்கின்றன. எனக்கு இப்போர் துரோணரைக் கொல்வதற்கான போர் மட்டுமே” என்றான்.
சாத்யகி சிரித்து “ஒவ்வொருவருக்கும் அவ்வாறு ஒவ்வொரு இலக்கு. பீஷ்மரை கொல்லும் பொருட்டு எழுபதாண்டுகளாக தவம் பூண்டிருக்கிறார் சிகண்டி” என்றான். “அவ்வாறு பல்லாயிரம் கணக்குகள் ஒரு களத்தில் நிறைவடையவிருக்கின்றன” என்ற திருஷ்டத்யும்னன் கோணலாக இதழ் வளைய சிரித்து “அவ்வாறு அந்தணரை தலைவெட்டிக் கொன்ற பின்னர் அப்பழி சூடி நான் பாஞ்சாலத்து இளவரசனாக வாழமுடியுமா? எங்கேனும் முடிசூட முடியுமா? அதன் பின் எஞ்சிய வாழ்நாளெல்லாம் நான் அடையும் துயருக்கு அளவிருக்குமா? வாழ்ந்தால் என் குடி என்ன செய்யும்? என் பழியை தன்மேல் ஏற்றாது அதை என்னுடையதென்று சொல்லி விலக்கும். தொற்றுநோய் கண்ட விலங்கை எரித்து அழிப்பதுபோல் என்னை அழித்து தான் அகன்றுசெல்லும். அதுவே அரசியலின் வழி. பாஞ்சாலத்துக்கு அதுவே நன்றும்கூட” என்றான்.
“ஆகவே பழிமுடித்த பின் நான் களம்படவேண்டும். இலக்கடைந்த பின் உதிரும் அம்பின் ஊழ் அது” என்றான். “நாம் இதைப்பற்றி இப்போது பேசவேண்டாம். பேசப்பேச பொருளின்மை பெருகும்” என்று சாத்யகி சொன்னான். “நான் அவளை சென்றுகண்டதைப் பற்றி சொல்லவந்தேன்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அதை அவன் பேசவேண்டாமே என விழைந்தான். ஆனால் பேசவேண்டுமென திருஷ்டத்யும்னன் உளம்கொண்டிருந்தான். அவனை நிறுத்தமுடியாதென்று சாத்யகி உணர்ந்தான்.
அவளிடம் சொன்னேன், மீண்டும் அவளை நான் சந்திக்க வாய்ப்பில்லை என்று. அவள் ஒன்றும் சொல்லவில்லை. விழிநீர் வடித்துக்கொண்டிருந்தாள். அதை நான் துடைக்க முற்படவில்லை. “நினைவிருக்கிறதா நம் முதற்சந்திப்பு?” என்று கேட்டேன். “ஆம், அதில்தான் நாளும் கண்விழிக்கிறேன்” என்றாள். “அன்று நான் ஆணிலியா என ஐயுற்றேன். அதன் சினத்தை உன்மேல் சுமத்தினேன்” என்றேன். அவள் புன்னகைத்தாள். “எல்லா ஆண்களும் செய்வதுதானே?” என்றாள். “அன்று நான் உன்னை வெட்டினேன். நான் நிலைகுலையாமலிருந்தால் நீ அன்றே இறந்திருப்பாய்” என்றேன். “ஆம்” என்றாள். “அன்று ஏன் நீ அஞ்சவில்லை?” என்றேன். “ஏனென்றால் உயிர்துறப்பை அன்று விரும்பினேன். வெட்டு என் மேல் விழாதது எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது” என்றாள்.
“ஏன்?” என்று கேட்டேன். “பொருளற்றது என் வாழ்க்கை. அதை அந்த முழுதளிப்பால்தான் பொருள்செறித்துக்கொண்டேன். என் முந்தைய வாழ்க்கை நானே வெறுக்கும் சிறுமைகொண்டது. நான் அதன் பொறுப்பை ஏற்கவேண்டியதில்லை என்றாலும் அதன் கறை என்னுடையதே. முழுதளிப்பினூடாக அதை நான் கடப்பதை நானே உணர்ந்தேன்” என்றாள். “அதற்கு நான் தகுதியானவனா?” என்றேன். “அது என் வினாவே அல்ல. முழுதளிப்பு என் மீட்பு” என்றபின் “அனைத்துப் பெண்டிரும் தன்னை முழுதளிக்கும் திருநடை தேடி தவிப்பவர்கள்தான், இளவரசே” என்றாள். நான் அவளை நெடுநேரம் நோக்கிக்கொண்டிருந்தேன். நாங்கள் அன்று காமமாடவில்லை. வெறுமனே இரவெல்லாம் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டும் விழிமூடி அருகமைவை உணர்ந்துகொண்டுமிருந்தோம். யாதவரே, ஆணும் பெண்ணும் அடுத்தறிவது அத்தகைய காமம் அற்ற பொழுதுகள் வழியாகவே. மறுநாள் கிளம்புகையில் நான் நிறைவுற்றிருந்தேன்.
“இன்று முழு உளநிறைவுடன் போருக்கு செல்கிறேன். மீண்டுவராதொழிவேன் என்பதே இனிதாக உள்ளது” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி என்ன சொல்வதென்று அறியாமல் வெறுமனே அமர்ந்திருந்தான். நெடுநேரம் அவ்வாறு இருவரும் தங்களுள் ஆழ்ந்தவாறு அமர்ந்திருந்தனர். சாத்யகி மெல்ல அசைய திருஷ்டத்யும்னனும் அசைந்தான். அணுக்கமான தோழரின் அருகேதான் அவ்வாறு முற்றிலும் தனிமையில் ஆழமுடிகிறதென்பது அவனுக்கு விந்தையாக இருந்தது. ஆனால் தன்னுள் ஓடியவற்றை அவன் திருஷ்டத்யும்னனிடம் சொல்லவில்லை என்பதையும் எண்ணிக்கொண்டான்.
படைவீரன் வந்து வணங்கினான். “நம் பாடிவீட்டை அவிழ்க்கவிருக்கிறார்கள், யாதவரே” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி சிரித்தபடி வெளியே வந்தான். தச்சர்களும் ஏவலர்களும் கயிறுகள் ஏணிகளுடன் ஒருங்கி நின்றிருந்தனர். விரைந்த கைகளுடன் அவர்கள் பாடிவீட்டை அவிழ்த்து கீழே சரித்து பலகைகளாகவும் தட்டிகளாகவும் மாற்றி அடுக்கினர். “நான் இளைய யாதவரை சந்தித்துவிட்டு என் படைப்பிரிவுக்கு செல்லவேண்டியிருக்கிறது… நானும் தங்களுக்குப் பின்னால்தான் வருவேன். குருக்ஷேத்திரத்திற்கு முன்னரேகூட நாம் சந்திக்கக்கூடும்” என்று சாத்யகி விடைபெற்றுக்கொண்டான். திருஷ்டத்யும்னன் அவனை நெஞ்சோடு தழுவி வழியனுப்பினான்.
புரவியில் திரும்பிவரும்போது அவன் பிற அனைத்தையும் மறந்து சுஃப்ரையைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். அவளை அவன் மறந்ததே இல்லை. ஓரிரு நாட்களுக்கு ஒருமுறை அவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்திருக்கிறான். ஆனால் அவளை சென்று காண்பதைப் பற்றி எண்ணியதுமே உளம் அதிர்ந்தது. அவள் முகம் அவனுக்குள் கற்பனையால் தீட்டப்பட்டிருந்தது. அவன் அறிந்த எப்பெண்ணும் அல்ல. ஆனால் அவனறிந்த பெண்கள் அனைவரின் சாயலும் அவளிடமிருந்தது. அவன் விரும்பிய பெண்கூறுகளினாலான பெண். திருஷ்டத்யும்னனுடனான அவன் உறவை அவனே விந்தையுடன் எண்ணிப்பார்ப்பதுண்டு. அவன் திருஷ்டத்யும்னனாக மாறி அவன் வாழ்க்கையின் அனைத்துத் தருணங்களையும் நடித்துக்கொண்டிருந்தான். சென்றகாலங்கள் வரை சென்று வாழ்ந்து மீண்டான். அவளையும் அவனாகச் சென்று அறிந்திருந்தான். அல்லது திருஷ்டத்யும்னனின் உள்ளத்திற்கு அணுக்கமானவளென்பதனால் அவளை அவன் வெறுத்தானா? அவ்வெறுப்பைத்தான் பல கோணங்களில் உள்ளம் அலசிக்கொண்டிருக்கிறதா?
சாத்யகி உபப்பிலாவ்யத்தின் கோட்டையை அடைந்தபோது முன்உச்சிப் பொழுதாகிவிட்டிருந்தது. கோட்டைக்காவலன் “இளைய யாதவரிடமிருந்து செய்தி வந்திருந்தது, யாதவரே” என்று பறவைச்சுருள் ஓலையை அளித்தான். “முதல் மாலையில் கிளம்புகிறோம்” என்று இளைய யாதவரின் செய்தி இருந்தது. அவன் அதை நொறுக்கிக் கிழித்து தன் கச்சையில் வைத்தபின் கோட்டைமேல் ஏறினான். அதன்மேல் புதியதாக மரத்தாலான பன்னிரு அடுக்குக் காவல்மாடம் உருவாக்கப்பட்டிருந்தது. முழுப் படைகளையும் மேலிருந்து நோக்கும்பொருட்டு. அவன் அதன்மேல் ஏறி நின்று பார்த்தான்.
காற்று மேலாடையை பறக்கச் செய்தது. வியர்வை வழிந்துகொண்டிருந்த உடல் கணங்களிலேயே உலர்ந்து குளிர்கொண்டது. அவன் பாண்டவர் தரப்பின் படைப்பிரிவுகள் இணைந்து மூன்று பெருக்குகளாக ஆகி சென்றுகொண்டிருப்பதை கண்டான். விழிதொடும் தொலைவுவரை வண்ணங்களின் ஒழுக்காக தெரிந்த சாலைகள் விண்ணை நோக்கி ஏறுவனபோல மயக்கு காட்டின. அவன் இடையில் கைவைத்து அதை நோக்கியபடி நின்றிருந்தான்.