அறிவிப்பு கடிதங்கள்

ஜெயமோகன்,
ஆறு வருடங்களுக்கு முன், நான் தங்களை அறிந்தது, தங்களுடைய புத்தகங்களின் மூலமாகத்தான். அதற்கு பிறகுதான் தங்களுடைய இணையதள அறிமுகம். இணையத்தைவிட, தங்களுடைய புத்தகங்களின் வழியாகவே உங்களுடைய கதை மாந்தர்களையும், பல்வேறு அனுபவங்களையும் அறிந்திருக்கிறேன். தங்களுடைய “தாண்டவம்” கதையை, எனது நண்பர்கள் சாமிநாதனும், விஜயும் ஒவ்வொரு முறையும் கடற்கரையில் சந்திக்கும்போது சொல்ல சொல்லச் சொல்லி ரசிப்பார்கள். நானும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும் சொல்வேன். அந்த கதையை நான் புத்தகத்தின் வழியாகத்தான் உள் வாங்கி கொண்டேன். “கரிய பறவையின் குரல்” கதையில் வரும் தத்துவங்களை மணிக்கணக்கில் அலசிக்கொண்டிருந்திருக்கிறோம். புத்தகங்கள் நம்மோடு ஏற்படுத்தும் நெருக்கத்தினை, இணையத்தால் ஏற்படுத்த முடியவில்லையோ என்ற நெருடல் வெகு நாட்களாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனாலும் அது ஒரு மாற்று வழிதான். மறுப்பதற்கில்லை. மேலும் எனக்கு தங்களுடைய புனைவுகளின் மீதுள்ள ஆர்வம் மற்றவற்றில் குறைவாக இருக்கிறதோ என்ற குற்றவுணர்வும் உண்டு. அது இணையத்தால் படிப்பதாலோ என்ற ஐயமும் உண்டு. உங்களுடைய ”ஓர் அறிவிப்பு” பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. வேறொரு புள்ளியில் தொடர்வோம்.

அன்புடன்
கோகுல்

அன்பான ஜெயமோகன்,

நேரம் கருதி இணையத்தில் உங்கள் கட்டுரைகளின் வலையேற்றத்தை சுருக்கிக் கொண்ட அறிவிப்பை கண்டேன். நல்ல முடிவு. தொடருங்கள். சினிமா கட்டுரைகளின் போது மாத்திரம் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்த உங்கள் ஆதங்கம் நியாயமானது. ஆனால் உங்களின் மற்ற கட்டுரைகளையும் விரும்பி வாசிக்கும் /எதிர்பார்க்கும் வாசிப்பாளர்களும் இருக்கிறார்கள். நான் ரீடரிலேயே வாசித்து விடுகிறேன். எனவே அது தள எண்ணிக்கையில் பிரதிபலிக்காது என நினைக்கிறேன்.

புத்தாண்டு போன்ற கற்பிதங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருக்காது என நம்புகிறேன். எனக்கும் இல்லை.

கிறிஸ்துமஸ் குளிர்நடுஇரவில் உங்களுக்கு நன்றி.


சுரேஷ் கண்ணன்
http://pitchaipathiram.blogspot.com

வணக்கம் ஜெமோ
புத்தாண்டு முதல் இணையத்தில் எழுதுவதைக் குறைத்துக் கொள்வதாக உங்களுடைய அறிவிப்பை படித்து ஏமாற்றம் அடைந்தேன். இருந்தாலும் அதற்கு சொல்லப்பட்ட காரணங்களில் நியாயமுண்டு. உங்கள் தளத்தில் எந்த ஒரு கட்டுரையும் ‘சும்மா’ எழுதப்படுவதில்லை. அது சமகால அரசியலானாலும், நகைச்சுவையானாலும் அதில் அளிக்கப்படும் உழைப்பு மிக அதிகம் என்றே நினைக்கிறேன். பிரயாணங்களை வாழ்க்கையின் அவசியமான ஒரு பகுதியாக வைத்திருக்கும் உங்களை போல் ஒருவர் இவ்வளவு இணையத்தில் எழுதுவது மிக கஷ்டமான விஷயம் என்று தெரிகிறது.
தனிப்பட்ட முறையில் இம்முடிவு உங்களுக்கு உபயோகமானதாகவே இருக்கும் என நம்புகிறேன்.
அசோகவனம் சீக்கிரம் பூரணமடைய என் வாழ்த்துக்கள்.
கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

முத்துகிருஷ்ணன்.

முந்தைய கட்டுரைமாவோயிசம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜராஜசோழன் ஆவணப்படம்