“நீண்ட காலமாக ஒருவித விறைப்புத் தன்மையுடனேயே இருப்பவர்களைக் காணும்போது அச்சம் தோன்றி நிற்கிறது “
கண்டராதித்தன் கவிதைகள் ,சீதமண்டலம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளைக்கடந்து கண்டராதித்தனின் திருச்சாழல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது அதன்முன்னுரையில் அவர் எழுதியிருந்த ஒரு வாசகம் இது.அந்த தொகுப்பில் மிகுந்தஎளிமையுடன் வாசகனின் முன்பாக நின்று கொண்டிருந்தார்.எளிமையெனில் கவித்துவத்தின் மெருகு கூடிய எளிமை.முற்றிலும் அனுபவங்களின் முன்பாகநிர்வாண நிலையில் நிற்க தயாராக இருக்கிறேன் என அறைகூவல் விடுப்பது போன்றஎளிமை.தன்னையே உதறி அசையில் உலர வைத்திருப்பது போலும் எளிமை. அனுபவத்தின் ஞானம் அவர் கவிதைகளில் சாறு ஏறியிருந்தது. எளிமை அனுபவம் கவித்துவம்இம்முன்றும் சரியான விகிதத்தில் வெளிப்பட்டது, ஆச்சரியமூட்டியது. .
90 – களின் பிற்பகுதி என நினைவு விக்ரமாதித்தன் நம்பியுடன்கண்டராதித்தனைக் காண சென்றிருந்தோம் .அப்போது சுயவதையிலும் , வன்முறைமனோபாவத்திலும் சிக்குண்டவராக அவர் இருந்தார்.அதன் பேரில் மயக்கம் கொண்டவராகவும் கூட .அப்போது பெரும்பாலும் பின்னர் எழுத வந்த எங்களை போன்றபல கவிகளும் அவ்வாறுதான் இருந்தோம்.அந்த பண்பு காலத்தின் பரிசு போலஎங்களை ஒட்டிக் கொண்டு நின்றது.அவருடைய ஸ்டியோவில் ஏராளமான தொலைபேசிகளைஅவர் உடைத்து பாதுகாத்து வைத்திருந்தார்.அப்போது அலைபேசிகள் அதிகம்இல்லை.எல்லாம் லேண்ட் லைன் தொலைபேசிகள்.அவற்றை எங்களிடம் எடுத்துக்காட்டினார்.புண்களை எடுத்து பிறரும் காட்டுவது போல காட்டிக்
கொண்டிருந்தார். எனக்கு கோபம் வந்தால் இவற்றையெல்லாம் உடைத்து விடுவேன்என்று கூறினார்.கோபம் வருகிறது உடைக்கிறீர்கள் சரிதான்;அவற்றை எடுத்துஒருவர் எதற்காக பாதுகாக்க வேண்டும் ? அவர் உடைத்து வைத்திருந்தது பற்றி
கூட எனக்கொன்றும் இல்லை.இப்படி எல்லா புண்களையும் எடுத்து காட்டுகிறாரேஇவர் என்று சங்கடமாக இருந்தது.மேலும் இவரை வந்து பார்க்கக் கூடாது என்றுமனதிற்குள் முடிவு செய்திருந்தேன்.அப்படி முடிவு செய்தாலே மீண்டும்மீண்டும் சந்திக்க நேரும் போலிருக்கிறது. கண்டராதித்தன் கவிதைகள்வெளிவந்த காலத்தில் தொலைபேசி உடைத்தவன் அப்படியே அந்த கவிதைகளிலும்அமர்ந்திருந்தான்.சீதமண்டலத்தில் அவன் குழம்பிய நிலையில் இருந்தான்.அவன்தன்மாற்றம் அடைந்து நின்றது திருச்சாழல் கவிதைத் தொகுப்பில் .திருச்சாழலில் கண்டராதித்தனிடம் காணமுடிந்த தன்மாற்றம் மிகவும்விஷேசமானது. செவ்வியல்தன்மையையும், புதுமையையும் அவர் இத்தொகுப்பில் அடைந்திருந்தார்.ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது,சாவைத் தள்ளும் சிறுமி,சோமன் சாதாரணம் ,அம்சம்
,மகளின் கண்ணீர்,அரச கட்டளை போன்ற கவிதைகள் அதற்கு உதாரணங்கள்.
சாவைத் தள்ளும் சிறுமி
தாளை வேகமாகத்
தள்ளிக் கொண்டிருந்த
சிறுமியிடம் கொஞ்சம்
மெதுவாகத் தள்ளக் கூடாதா என்றேன்
ஏன் நாளைத்
தள்ளுவது போல
இருக்கிறதா என்கிறாள்
நாளைத் தள்ளுவது
போலிருந்தால்
உங்களுக்காக ஒருமுறை
நிறுத்தட்டுமா என்கிறாள்
என்ன நிறுத்தத் சொல்லட்டுமா ?
நாளிற்கும்
தாளிற்குமிடையில்
சிந்தும் மலர்களை
நேரடியாக உங்கள்
சவக்குழியின் மீது
விழுவது போன்ற ஏற்பாடு .
அது என்னுடையது.
யூமா வாசுகி உட்பட முந்தைய தலைமுறை கவிஞர்களிடம் இருந்து காலம் எங்களிடம்வேறுவிதமாகத் திறந்திருந்தது.யவனிகா ஸ்ரீராம்,ஷங்கர் ராமசுப்ரமணியன்,ஸ்ரீநேசன் , கண்டராதித்தன் ,பாலை நிலவன் ,பிரான்சிஸ் கிருபா என புதியதலைமுறை எழுதத் தொடங்கியிருந்தது.முகுந்த் நாகராஜன்,பெருந்தேவி இருவரும்பின்னால் வருகிறார்கள்.ராணி திலக் தனதர்த்தங்களை கவிதையில்கண்டடைவதற்குப் பதிலாக வடிவங்களில் கவர்ச்சி செய்தார்.சபரிநாதனைஇத்தலைமுறையின் மாதிரியாக கொள்ளத் தகுந்த தொடர்ச்சி எனலாம். யூமா வாசுகி
சமகாலம்தான் ஆனால் அவர் முந்தைய தலைமுறை மனநிலையில் நின்றவர்.
எங்களிடம் பொது குணாம்சமாக அதிருப்தியும் ஆயாசமும் உண்டு.எங்களுக்குமுந்தைய தலைமுறை கவிஞர்கள் வரையில் அவர்களுக்கென்று சிறுஅர்த்தங்களையேனும் வைத்திருந்தார்கள்.அவர்களின் தனிமை,துயரம் , காமம்
,ஆனந்தம் அனைத்திற்கும் தங்கள் அளவில் சிறிய அர்த்தங்களேனும்இருந்தன.ஆனால் காலம் எங்களிடம் வந்து தோன்றுகிற போது நாங்கள் அனைத்துஅர்த்தங்களையும் சுத்தமாக இழந்திருந்தோம்.உடல் உள்ளீடற்றுப் போயிருந்தது.
எங்களுக்கும் எங்கள் எதிரிகளுக்குமிடையே உள்ள அனைத்து வேறுபாடுகளும்அழிக்கப்பட்டிருந்தன . கொலையுண்டவனுக்கும் ,கொலையாளிக்கும் இடையில் உள்ளவேறுபாடுகள் அழிந்திருந்தன.வாழ்க்கை குலைவுற்றுக் கிடந்தது. காலம்அபத்தத்தின் ருசியை எங்களிடம் முழுமையாக அள்ளிப் பருகச் சொன்னது.முந்தையதலைமுறை தங்களிடம் கொண்டிருந்தது கசப்பின் சுவை கொண்ட அபத்தத்தை எனில்;எங்களிடம் அது சுவையற்ற கோலத்தில் வந்து நின்றது.இதிலிருந்து எங்களுக்கானஅர்த்தங்களை மீட்க வேண்டும் என்றிருந்தது வேலை.இதில் பெண்ணிய கவிஞர்களும்
,தலித் கவிஞர்களும் கொள்கைகளை வரையறை செய்து கொண்டு சாய்ந்துநின்றார்கள்.ஏற்று எடுக்க வேண்டியிருந்த சவாலை அவர்கள் அவற்றிடம்மறைத்துக் கொண்டார்கள் எனலாம்.
கண்டராதித்தனின் ஒருபகுதி செவ்வியல் தன்மை நிரம்பிய புதிய கவிதைகளால்ஆனது எனில் மறுபகுதி அனுபவங்களின் சாறும் எள்ளலும் நிரம்பிய சிறியகவிதைகள்.இந்த கவிதைகளில் அவருடைய அனுபவ ஞானம் நின்று சுடர் விடுவதைக்
காண முடியும்.இந்த குறுங்கவிதைகள் பிற சமகாலக் கவிகளிலிருந்து இவரைத்தனித்து அடையாளம் காட்டுகின்றன.குஞ்சுண்ணியின் தன்மையை போன்ற ,ஞானவாக்குகளை போன்று அதேசமயத்தில் அதனினும் மேலானதாக இக்கவிதைகள் அமைகின்றன
.
காட்டாற்று வெள்ளத்தின்
ஓரம் நின்று
கை கால் முகம்
கழுவிக் கொள்கிறான்
அயோக்கியன்
அவ்வளவு அயோக்கியத்தனமும்
அடித்துக் கொண்டு போனது
வெள்ளத்தில்
வெது வெதுப்பாக
நீரை விளாவி
கைகளை நனைக்கிறாய்
உன் யோக்கியதை
இரத்தத் சிவப்பாய் மாற்றுகிறது
தண்ணீரை
###
அம்மா ஓடிப்போனதை
அறியும் வயதுள்ள பிள்ளைகள்
திண்ணையிலமர்ந்தபடி
ஆள் நடமாட்டமில்லாத
தெருவை வெறித்து
வேடிக்கை பார்க்கிறார்கள்
###
நீலப் புரவியில் வந்தவன்
சொன்னான்
தோற்றுப் போனவனுக்கு
நண்பனாக இருந்தவன்
நாசூக்காய் அவனைக் கைவிட்டு
இப்பக்கம் வருகிறான்
முடிந்தால் ஓடிவிடு
###
துக்கம் நிகழ்ந்த நண்பகலது
வெய்யிலும் சோம்பலும்
மிகுந்து கிடக்க
மரவட்டையைப் போல
இந்த மத்தியானம்
தன் லட்சோப
லட்சக் கால்களுடன்
மறுநாள் மத்தியானத்திற்குள்
போனது
இந்த வகையான அனுபவ ஞானம் கொண்டு கவியுருக் கொள்ளும் குறுங்கவிதைகள்கண்டராதித்தனின் முக்கியமான இடம் எனலாம்.பிற கவிகளுக்கு சாத்தியப்படாதஇடம் இது.தமிழில் உருவான புதிய தலைமுறை கவிஞர்களில் யவனிகா ஸ்ரீராமைத்தவிர்த்து பிற எல்லோருமே எளிமையானவர்கள்தாம்.முந்தைய தலைமுறை கவிகளிடம்இருந்த செயற்கையான மேதமையும் , புதிரும் , புகையும் இவர்களிடம்இல்லை.அன்றாட வாழ்க்கையில் இருந்து அர்த்தங்களை மீட்க முயன்றவர்கள்இவர்கள்.இவர்களில் கண்டராதித்தன் மேலும் எளிமையானவர். அற்புதங்களைநிகழ்த்தும் எளிமை கொண்ட கவிதைகள் இவருடையவை.குமரகுருபரன் , விஷ்ணுபுரம்,விருது பெறும் அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்.
எளிமை கண்டராதித்தனில் அடையும் விந்தைக்கு நற்சான்றாக ஒரு கவிதையைக்குறிப்பிடலாம் எனில் “வாரச் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பெண்ணிற்கு”கவிதையைச் சொல்வேன்.அனைத்திலும் மேலானது இக்கவிதை.
வாரச்சந்தைக்கு காய்கறி
வாங்க வந்த பெண்ணிற்கு
நான்கைந்து பிள்ளைகள்
நாலும் நாலு திசையை
வாங்கித் தர கைகாட்டின .
அவள் கைக்குழந்தைக்கு
பொரியுருண்டை வாங்கித் தந்தாள்
பொடிகள் பின்னே வர
பொரியுருண்டை கீழே விழுந்து
பாதாளத்தில் உருண்டது
ஏமாந்த குடும்பம் எட்டிப் பார்க்க
பாதாள பைரவி மேலெழுந்து
குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி
நல்ல சுவை நல்ல சுவை என
நன்றி சொன்னது
– லக்ஷ்மி மணிவண்ணன்