கண்டராதித்தன் -ஒரு கடிதம்

kand

ஜெ,

கண்டராதித்தனின் கவிதைகளை இப்போதுதான் கவனிக்கத்தொடங்கினேன். அவருடைய திருச்சாழல் விகடன் விருதுபெற்றதை அறிந்திருந்தேன். ஆனால் இங்கே கவிதைகளை எவரேனும் எங்கேனும் சுட்டிக்காட்டாமல் வாசிக்கத் தோன்றுவதில்லை. ஏனென்றால் கவிதைகள் பெரும்பாலும் குப்பையாகவே எழுதப்படுகின்றன. உழைப்பு இல்லாமல் எழுதமுடியும் என்பதனாலும், உடனடியான எதிர்வினையாக இருப்பதனாலும் எழுதுகிறார்கள். அதோடு ஏற்கனவே எழுதப்பட்டவற்றை கொஞ்சம் மாற்றி மீண்டும் எழுதமுடியும் என்பதனாலும் எழுதுகிறார்கள்.

ஆகவே கவிதை விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது என் வழக்கம். கவிதைகளை எவராவது சொன்னாலொழிய, சாம்பிள் வாசித்தாலொழிய வாங்குவதில்லை.ஏனென்றால் நூல்களை இங்கே வரவழைப்பது மிகவும் கடினம். இடம்பிரச்சினை உண்டு. வீடுமாற்றும்போது எவ்வளவுதான் துணிந்தாலும் பாதி நூல்களைத் தூக்கிப்போட்டுவிட்டுத்தான்போகவேண்டும் மேலும் இங்கே பெரும்பாலான கவிதைவிமர்சனங்கள் ஸ்டாக் சொற்களால் எழுதப்படுபவை.  ‘வாழ்க்கையின் அபத்தத்தைச் சொல்லும் கவிதைகள் இவை’ -என்பதுபோல கவிதை எதைப்பற்றிப் பேசுகிறது என்பதையே கவிதைவிமர்சனமாக எழுதிவிடுவார்கள்.  கண்டராதித்தன் கவிதைகளைப்பற்றி தமிழ்ஹிந்துவில் ஒரு குறிப்பு வெளிவந்தது. சிறுபத்திரிகை வாசிப்பவர்கள் யாரும் யாரைப்பற்றியும் எழுதக்கூடிய வரிகள் அவை.வழக்கமான புகைமூட்டமும் உள்ளீடற்றதோரணையும். அதை வாசித்தபின்பு கண்டராதித்தனை வாசிப்பதை ஒத்திப்போட்டேன்.

இந்த விருதை ஒட்டி வெளிவந்த கட்டுரைகள் வழியாகவே அவரை வாசிக்கவேண்டும் என்ற எண்ணத்தை அடைந்தேன். சிற்றிதழ்ப்பாசாங்குகள், போலிவரிகள் ஏதுமில்லாமல் வாசகனாக நின்று கவிதையை ரசிக்கமுயலும் கட்டுரைகள். அப்ரிசியேஷன் என்று சொல்லப்படும் இதேபோன்ற நேரடியான ரசனைக்கட்டுரைகள்தான் இன்று நமக்குத்தேவையாகின்றன. விதிவிலக்கு ஏ.வி.மணிகண்டனின் கட்டுரை. மிகச்சிறந்த ஆய்வுக் கட்டுரை. கண்டராதித்தனின் வளர்ச்சியை முழுமையாக சமகாலக் கவிதைச்செயல்பாடுகளின் பின்னணியில் வைத்து ஆராய்கிறார்.கவிதையை ஒருவகையான மொழிவடிவ விளையாட்டாகவோ, பூடகமான பேச்சாகவோ கருதாமல் அதை ஒரு பண்பாட்டுநடவடிக்கையாகவே அவர் பார்க்கிறார். மிகநுட்பமான பல வரிகள் மூளையைச் சீண்டின. நல்ல படிமங்கள். ஒரு சிறுவனின் கண்களில் மட்டும் மின்னும் சிரிப்பு. மூக்கை, உதடுகளைப் பார்த்தால் சிரிப்புதானா என சந்தேகம் வந்துவிடும் சிரிப்பு.  என்ற வரி ஒரு கட்டுரையில் வருவது அரிதான விஷயம்தான்.

அதோடு அந்தக்கட்டுரை மிகமுக்கியமான சில விஷயங்களைச் சொல்கிறது. எதிர்காலத்தில் இக்கட்டுரை மேலும் கவனிக்கப்படும் என்று நினைக்கிறேன். இதில் இருத்தலியல் உருவாக்கிய மிகையான தனிமையும் செயற்கையான துக்கமும் அதற்குப்பின் பின்நவீனத்துவச் சிந்தனைகள் உருவாக்கிய அர்த்தமில்லாத எதிர்ப்புநிலையும் பகடியும் காலாவதியாக்விட்டன என்று மணிகண்டன் சொல்கிறார். பின்நவீனத்துவர்கள் சொன்னதுபோல பெருங்கூற்றுக்களை எதிர்ப்பது, சின்னவற்றையே பேசிக்கொண்டிருப்பது எல்லாம் இன்றைய சூழலில் அர்த்தமில்லாதனவாக ஆகிவிட்டன. கேலியும்கிண்டலும் எந்த அதிகாரத்தையும் எதுவும் செய்வதில்லை. அதிகாரத்தை அதிகாரமே எதிர்கொள்ளமுடியும். நீங்கள் பெருங்கூற்றுக்களை நிராகரித்தால் அதை அரசியலாளர்களும் சித்தாந்திகளும் கையிலெடுப்பார்கள். மதம், தேசியம் ஆகியவற்றின் கைகளிலிருந்து பெருங்கூற்றுக்களை மீட்டு மறுகட்டமைப்பு செய்வதே இன்றைய காலகட்டத்தின் தேவை என்று அக்கட்டுரை சொல்கிறது. அதற்கான கூறுகளை கண்டராதித்தனிடம் கண்டடைகிறது. அந்தக்கூறுகள் உள்ளனவா என்று அவர்கவிதைகளை இனிமேல் வாசித்துப்பார்த்துத்தான் சொல்லவேண்டும். மேற்கோள்காட்டப்பட்ட கவிதைகளை வைத்துப்பார்க்கையில் பகடி, குறுஞ்சித்தரிப்பு ஆகியவற்றில் இருந்து முன்னேறி மரபின் மொழியையும் படிமங்களையும் நவீனச்சூழலில் மறுவடிவம் கொள்ளச்செய்ய முயல்பவராகத் தெரிகிறார். இவ்விருதுக்கும் இதையொட்டி நிகழும் கவிதை பற்றிய இந்த விவாதத்திற்கும் வாழ்த்துக்கள்

மதன்

***

“ஞானமும் சன்னதமும்’  – லக்ஷ்மி மணிவண்ணன்

பகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்

தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்

வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்

ஏகமென்றிருப்பது

அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை

சாழற்மலர்ச்செண்டு

பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு

 கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ –10
அடுத்த கட்டுரைஎளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்