காலம்-காதல்-சிதைவு -வே.நி.சூர்யா

kan

[1]

தேடலும் செயலும் ஒன்றாக அலைந்துகொண்டிருந்த கொந்தளிப்பான காலங்கள் கடந்துவிட்டிருக்கின்றன. நகரம், அதிகாரம், கடவுள், உடல், வீடு என்பவைகளின் மீதிருந்த புனிதப் புகைமூட்டங்கள் மூர்கத்துடன் கலைக்கப்பட்ட காலங்கள் அவை. அக்காலங்கள் திரும்பப்போவதில்லை. எஞ்சியிருப்பதோ அக்காலத்தின் ஞாபகங்களும் ஏக்கங்களுமே. இப்போது 2010க்கு பின்பான ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். “எனக்கு எல்லாம் ஒன்றுதான்” எனும் குரலே இக்காலத்தின் குரல் (அப்படி சொல்லும்போதே ஒரு எள்ளல் வந்துவிடுகிறது). காலம் சுவீகரித்து வைத்திருந்த அத்தனை தத்துவார்த்தமான பின்புலங்களும் வரலாற்றின் நம்பகத்தன்மையும் ஆன்மீக தன்மைகளும இன்று ஈவுஈரக்கமில்லாமல் பொருள்வயமான இயல்புகளால் உறிஞ்சப்பட்டு அதனுடைய தன்மைக்கு உருமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இது பெரிய வீழ்ச்சியேதான். இக்கட்டுரையின் நோக்கம் அவ்வீழ்ச்சியை புரிந்துகொள்ள முயல்வது அல்ல. அதை ஒரு எளிமையான பின்னணி என்ற அளவில்  மட்டும் வைத்துக்கொண்டு  கண்டராதித்தனின் கவிதைகளை பொருத்திப் பார்த்துக்கொள்ள முயல்வதே. ஆக முதலில், இப்பின்னணியில் நெடிய தொடர்ச்சியுடைய தமிழ்க்கவிதையின் பொதுவான போக்கு இன்று என்னவாக இருக்கிறது என்று ஒரு குறுஞ்சித்திரத்தை வரைந்துகொள்வோம்.

  1. மையமற்ற தன்மை

பல்வேறு குரல்களால் நிறைந்த ஒரு மேடை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரேயொரு குரலை மட்டும் மற்ற எல்லா குரல்களும் பிரதானப்படுத்துகின்றன எனில் மேடை அந்த குரலினுடையதே. மேடையின் சாரம்சம் என்பது அக்குரலே. அதுபோலத்தான் கவிதையின் மையம்  என்பதும். மையம் என எதை சொல்லலாம்? கவிஞனை பிரத்யேகமாக திரும்பத்திரும்ப அணுகும் அனுபவத்தின் அல்லது ஒரு படிமத்தின் வேறுவேறு கோணங்கள், வேறுவேறு காட்சிகள். இதற்கு முன் எழுதப்பட்ட கவிதைகளில் இப்படி இருந்ததா என்றால் இருந்தது.  கவிதை வெளிப்பாடுகளின் அடிப்படையில், பிரமிள், தி.சோ.வேணுகோபாலன், அபி, தேவதேவன் போன்றோரை ஒருபக்கத்தில் உட்கார வைத்தால் அதன் மறுபக்கத்தில் ஞானக்கூத்தன், சி.மணி, ஆத்மாநாம், கலாப்பிரியா, சுகுமாரன், பசுவய்யா, விக்கிரமாதித்யன் , தேவதச்சன் போன்றோரை உட்கார வைக்கலாம். இவ்விரு பக்கங்களுக்கு வெளியே என்று நகுலனை சொல்லலாம். ஆனால் இன்றைக்கு இதுபோன்ற வகைப்படுத்துதலுக்கு வாய்ப்பு இல்லை. காலம் சிதறுண்டதாக இருக்க அதன் மனங்களும் அப்படியே இருக்கின்றன. வேறுவேறு பாடல்களை ஒலித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஒலிப்பெருக்கிகளுக்கு மத்தியில் ஒரு தனிமனிதன் உதவி உதவி என்று கத்திக்கொண்டிருப்பது போல ஒரு காட்சி மனதில் எழுகிறது. அது இக்காலகட்டத்தின் காட்சி.

அதனால்தான் இன்றைக்கு எழுதப்படுகிற கவிதைகளில் இம்மையம் சிதறுண்டதாக இருக்கிறது அல்லது நேர்மறையாகச் சொல்லப்போனால் மிகப்பெரிய அளவில் பன்மைபட்டிருக்கிறது. இதற்கான மிகச்சிறந்த சமீபத்திய உதாரணம், சபரிநாதனின் கவிதை வெளிப்பாடுகள்.

  1. பேச்சுக்கு நெருக்கமாக அமையும் மொழி

மரபிலக்கியங்கள் வேறொரு காலத்தில் இருந்துகொண்டு இன்றோடு உறவாடுபவை. நிகழ்காலத்திற்கு அவ்வுறவில் இருக்கும் உரிமைகள் மிகச்சொற்பமானவை. இப்புள்ளியில் இருந்துதான் மரபிலக்கியங்களின் மொழியில் இருந்து நவீன கவிதை விலகிச் செல்லத் தொடங்கியிருக்கும் என்று தோன்றுகிறது. (சில விதிவிலக்குகள் உண்டு)  இதன்வழியே இன்றைய கவிதை வந்தடைந்ததிருக்கும் இடம்  உரைநடைத்தன்மை  வழியாகவே ஒரு கவித்துவ மனோநிலையை எழுப்பி ஆகவேண்டும் என்ற ஒரு சவாலான இடம்.  உதாரணம் இசையினுடைய கவிதைகள்

  1. விவரணை தன்மை

தொடர்ச்சியின் கண்ணி அறுபடாமல் அன்றிருந்தது போலவே இன்றைய கவிதையும் விவரணை செய்கிறது. அதன்வழியே காட்சியை நாடகீய தருணத்தை உள்முகமான மொழித்தியானத்தை உருவாக்குகிறது. மேலும் புனைகதையின் அம்சத்தை தனக்கு ஏற்றவாறு சுவீகரித்தும் கொண்டிருக்கிறது. ஒரு கதாநாயகனோ அல்லது எதிர் கதாநாயகனோ கவிதைக்குள் இருக்கிறான். அவன் பாடுகிறான். வாசகரோடு உரையாடுகிறான். உன் தலையை தந்துவிட வேண்டும் சம்மதமா என்று கேட்கிறான். பலவேடங்களை அணிகிறான்.

[2]

கண்டராதித்தன் கவிதைகள் என்ற முதல் தொகுதி 2001ல் வெளிவருகிறது. அத்தொகுப்பின் கவிதைகளை இப்படிச் சொல்லலாம். காலப்பிரக்ஞை என்பதை ஒரு வட்டமாக வரைந்து அதனுள்ளே காதல் ஒரு முக்கோணமாகச் சிக்கியிருக்கிறது என்றும் அதற்கு உட்புறம் சிதைவு ஒரு வண்ணம் போல பூசப்பட்டிருக்கிறது என்றும் கருதிக்கொண்டோம் எனில் அது கண்டராதித்தனின் கவியுலகை குறிக்கிற ஸ்தூலமான வடிவமாக இருக்கும். மரபிலக்கிய பாடல்களின் மொழி பொதிந்து தாள லயம் கூடி நெகிழ்வுக்கும் இறுக்கத்திற்கும் இடையே நிகழும் மொழி ஊஞ்சல் அவருடைய கவிதைகள்.

மொழியை வளரும் கண்ணாடிசங்கிலியாக உருவகித்துக்கொள்வோம். அச்சங்கிலியின் தலைப்பகுதி செவ்வியல் என்றால் அதன் கடைப்பகுதி சுதந்திரமானது.  கண்டராதித்தனின் கவிதைகள் தலைப்பகுதியையோ கடைப்பகுதியையோ தொடுவதில்லை. அவர் அச்சங்கிலியின் மத்திம பகுதியை பட்டும்படாதவாறு தொடுகிறார். மொழி வடிவத்தின் இறுக்கத்திற்கும் பாடுபொருளின் நெகிழ்வுக்கு இடையே பெண்டூலம் போல் அசையத் தொடங்கிவிடுகிறது.

/எதிர்வீட்டிலிருந்து தம் வீட்டிற்கு  வருவது போல

இன்றைய காலத்திலிருந்து

நேற்றைய காலத்திற்கு

செல்பவர்களை காணமுடிகிறது/

(காலத்தை அணுகி)

என்ற வரி பிந்தைய தொகுப்புகளில் இன்றை நேற்றுக்குள்ளும் நேற்றை இன்றுக்குள் கொண்டுவந்து அலையவிடும் கவிதைகளாக (சோமன் சாதாரணம், சஞ்சாரம் சீபத்த)  உருமாறுகிறது.

இத்தொகுதியில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம், சில கவிதைகளில் வெளிப்படக்கூடிய ஒர் எதிர்- அழகியல் கூறு. தொன்மை அழிந்துபோக என்ற கவிதையில் காதலிக்கு எழுதப்படுகிற கடிதத்துடன் உடலுறுப்பு ஒன்று இணைப்பாக செல்கிறது.  ஒரு நீதியை நமக்குச் சொல்வதுபோல் எனத்தொடங்கும் கவிதையில் சவம் பெண்ணின் அழகுடன் அடுத்தடுத்து வைக்கப்படுகிறது.

[3]

ஆறு ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு 2007ல் வெளிவருகிறது கண்டராதித்தனின் இரண்டாவது தொகுப்பான சீதமண்டலம். இத்தொகுப்பில் கவிதைசொல்லியின் குரல் பிறிதொன்றாக உருமாறியிருக்கிறது. முதல் தொகுதியில் இருக்கிற மென்மையான குரல், ஈகோ தொற்றிய ஒன்றாகிறது. அது, நீ/ உன் என்ற சுட்டல் மூலம் வாசிப்பவரை மிரட்டுகிறது. தனக்குள் வைத்துக்கொள்கிறது.  வாசகன் விழிப்படையும்போது சாதூர்யமாக தப்பித்தும் கொள்கிறது. (இந்த வாளை பரிசாகக் கொள், புகைப்படத்தில் புறாவின் முட்டையை திருடுபவன், வானரம் இழந்த அருவி)

காவியத் தன்மை கொண்ட மொழியில் இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் மரபு மீறிய காமத்தை காதலை எழுதிச்செல்கின்றன. ஒரு வகையான கீழ்நிலையாக்கத்தை நிகழ்த்திவிடுகிறார். ஒழுக்கம் விழுப்பம் தரலான் என்ற குறளோடு சதாமோதிக் கொண்டிருக்கிற இத்தகைய கவிதைகளில் கண்டராதித்தன் காதலை சமூகம் தன் அறத்தின் மூலம் பிரித்துவைத்திருக்கிற நல்லக்காதல்/ கள்ளக் காதல் என்பவற்றில் இருந்து மீட்டுக்கொடுக்கிறார். (காதல், உங்கள் மனைவியை மகிழ்ச்சியிலாழ்த்த முடிவெடுங்கள் எனத்தொடங்கும் கவிதை)

நகரம்/ கிராமம் என்பதற்கு இடையேயுள்ள கோடு அழிந்துவருகிற நிலையில் நகரம் கிராமத்தை சேர்ந்தவர்களிடம் ஏற்படுத்தும் காழ்ப்புணர்வு தமிழ்க்கவிதையில் மிக மூர்க்கமாகவே பதிவாகியிருக்கிறது. இதில் கண்டராதித்தனும் விதிவிலக்கல்ல. முதல் தொகுப்பில் இருந்த அழகிய கிராமிய சித்திரங்கள் இத்தொகுப்பில் நகரத்தின் மீதான காழ்ப்பாக உருமாறிவிடுகின்றன.  இதில் கண்டராதித்தனை மற்றவர்களிடமிருந்து தனித்துவப்படுத்தி காட்டுவது இத்தகைய கவிதைகளிலும் கூட லயமும் மரபின் செறிவும் கொண்ட மொழியில் புனைவுத்தன்மையுடன் சொல்லமுடிகிறது என்பதே.

/வேசைகள் குடியிருப்பில்

பொத்தான்கள் தாராளமாக

அவிழ்க்கப்படும் மனநிலையில்

நகரம் இருக்கும் /

(பொத்தான்களை அவிழ்க்கும் மனநிலையைக் கொண்ட நகரம்)

[4]

திருச்சாழல் அவரது மூன்றாவது தொகுப்பு.

இத்தொகுப்பை வாசிக்கையில் மனிதர் எந்த நூற்றாண்டில் இருக்கிறார் என்று தோன்றுகிறது. மின்வெட்டு என்ற பின்புலத்தில் வைத்து வாசிக்க இடம் தருகிற அரசக்கட்டளை என்ற கவிதையில்கூட நவீன மனிதனுக்கு இடமில்லை. அக்கவிதையில் கள்வர்களுக்கும் மந்திரவாதிகளுக்கும் கூர்வாள் கொண்ட காவலர்களுக்குமே இடம்.

மதுவிடுதியில் சங்கரலிங்கனார் என்ற புலவர் உட்கார்ந்திருக்கிறார். அவரை எந்த நூற்றாண்டிலிருந்து அழைத்து வந்திருப்பார்?

கலையின் தனிமையை பாதுகாப்பவராகவே அவர் இருந்துவந்திருக்கிறார். அங்கு காதலும் வீழ்ச்சியும் பிறதொன்றையும்விட முக்கியத்துவம் பெற்றதாக மாறுகிறது. எவ்வுபயோகமுமில்லாத புதன்கிழமைகளே வாரத்தின் எல்லாநாட்களாகவும் இருக்கப்பார்க்கின்றன.அவருடைய உலகில்  சமூகத்தின் லெளதீக அறங்களுக்கு இருக்கையில்லை. அரசியல் பிடிக்காது எனக்கூறும் தனிமனிதனை மரவட்டையைப் போல தள்ளிவிடும் பண்பட்டவரை ஒரு கவிதையில் காணமுடிகிறது. சமகால உடனடிகளில் திளைக்க பயிற்றுவிக்கும் காலத்தின் மத்தியிலும் கண்டராதித்தனால் அரசியல் பிடிக்காது என்றே சொல்லமுடிகிறது.

கண்டராதித்தன் கவியுலகில் இருக்கக்கூடிய பகடி,சுய எள்ளல்  சாமுவேல் பெக்கட்டின் உலகை நினைவூட்டுபவை. கால்மேல் கால்போட்டபடி நடக்கக்கூடியவனாகட்டும் கடவுள் முட்டாள்களிடம் அன்பாயிருக்கிறார் என்பது உண்மைதான் எனும் கவிதையில் வருகிற வித்வான் சண்முகசுந்தரம் ஆகட்டும் ஒரு தமிழ்மனம்  உருவாக்கிய பெக்கட்டின் நாடக மாந்தர்களை போல தோற்றம் தருகின்றன .

இரண்டாயிரத்திற்கு முன்பு வரை தமிழ்நவீனக் கவிதையின் பிரதான அம்சமாக இருந்தவைகளாக  விசாரணைகளையும் தர்க்க ஒழுங்கையும் சித்தாந்தங்களின் சுமையையும் சிடுக்கும் இறுக்கமும் கூடிய அரூப மொழியையும் சொல்ல முடியும். அதற்கு பிறகு அதாவது புத்தாயிரத்திற்கு பிறகு நவீன கவிதை மீட்டுக்கொண்ட முக்கியமான அம்சங்களில் ஒன்று புனைவு. தர்க்கத்திற்கு பதில் கனவின் தர்க்கம். விசாரணைகளுக்கு பதில் குழந்தைமை. புற உலகம் அக உலகத்தின் மீது செலுத்தும் தாக்குதலில் இருந்த தப்ப இதைவிட வேறு என்ன வழி இருக்கமுடியும். ஸ்ரீநேசனின் ஒரு கவிதையில் ரயில் செங்குத்தாக வானேகுகிறது. இன்னொன்றில் முலைகள் மிதந்து வருகின்றன. கண்டராதித்தனின் கவிதைகளிலோ எரியும் பிணத்திலிருந்து வெளிச்சத்தை திருடியவனையும் வளர்மதியாகக்கூடிய பெண்ணையும் பாதாள பைரவி குழந்தைகளின் கன்னத்தை கிள்ளும் காட்சியையும் காணமுடிகிறது.

[5]

ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நீண்ட மரபின் தொடர்ச்சியில் வருகிற கண்டராதித்தனின் கவிதைகள் மரபை மீள எழுதப்பார்க்கின்றன. நாட்டார்மரபின் பேய்களும் காட்டேரிகளும் முனிகளும் சரமாரியாக உலாவும் அவருடைய கவிவெளி இருட்டும் சரிவும் நதிபோல வெட்டிச்செல்லும் அகம் மாறாத ஒரு தமிழ்ப் பண்பாட்டுக்கூறு நிறைந்த கிராமமே. அவரால் தலபுராணங்களிலிருந்து கூட கவிதைக்கான கச்சா பொருட்களை எடுத்துக்கொள்ளமுடிகிறது.

கண்டராதித்தனின் நீள்கவிதைகள் தமிழுக்கு இன்னொரு சாத்தியத்தை தொட்டுக்காண்பிக்கின்றன.  அது நவீன கதைப்பாடல். (சீதமண்டலம், திருச்சாழல்)

கண்டராதித்தன் திருச்சாழல் தொகுப்பில் அதற்கான ஒரு மொழியை கண்டதைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

இனியான காலங்களில் விவரணை வழியாகவே எழுகிற  கவிதைகளைவிட உணர்த்த முயல்கிற கவிதைகளில் கண்டராதித்தன் கவனம் செலுத்தவேண்டும்  என்று சொல்லத்தோன்றுகிறது.

திருச்சாழலில் இடம்பெறுகிற

/அம்மா ஓடிப்போனதை

அறியும் வயதுள்ள பிள்ளைகள்

திண்ணையிலமர்ந்தபடி

ஆள்நடமாட்டமில்லாத

தெருவை வெறித்து

வேடிக்கை பார்க்கிறார்கள்/

என்ற குறுங்கவிதையாகட்டும்

/குச்சிமிட்டாய் சுவைக்காக

அழுதுகொண்டிருக்கிறது குழந்தை

கழுநீர்ப்பானைக்குள் தலைவிட்டுக்

குடிக்கிறது தெருநாய்

மணியோசைக்கு முன்னும் பின்னும்

இருந்துகொண்டிருக்கிறது மரணம்

சாரையும் கருவிழையானும்

இழைய எழுகிறது மகுடியோசை

கல்லறைக்குள்ளிருந்தபடியே வேடிக்கை

பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

திரிபுவனச் சக்கரவர்த்திகள்/

என்ற கவிதையில் ஆகட்டும் அதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கவே செய்கின்றன . கண்டராதித்தன் நாம் அதிகமாகவே விவரணை செய்துவிட்டோம் இல்லையா?

 வே.நி.சூர்யா

“ஞானமும் சன்னதமும்’  – லக்ஷ்மி மணிவண்ணன்

பகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்

தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்

வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்

ஏகமென்றிருப்பது

அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை

சாழற்மலர்ச்செண்டு

பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு

 கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள்

முந்தைய கட்டுரைஎளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்
அடுத்த கட்டுரைரயில்மழை