பாரத ஸ்டேட் வங்கி -ஒரு நிகழ்வு

ஜெ

முகநூலில் Shankar Ji என்பவர் எழுதிய உண்மைச்சம்பவம் இது

அருண்

download (2)

மனைவியின் பிரசவகால நேரத்தில் அவரது எஸ் பி ஐ அக்கவுண்டிலிருந்து ₹25000 பணம் எடுக்கவேண்டி மனைவியின் டெபிட் கார்டை வாங்கிக்கொண்டு பணம் எடுக்கச் செல்கிறார் கணவர்.

எஸ் பி ஐ ஏடி எம்மில் கார்டை நுழைத்து எல்லா பொத்தான்களையும் அழுத்தி முடித்தபின் பணம் கணக்கில் கழிக்கப்பட்டதாக மெசின் ஸ்லிப்பை தருகிறது. ஆனால் ஏ டி எம்மில் பணம் வரவில்லை.

உடனே மனைவின் கணக்கிலிருந்து அவரது ஏ டி எம் கார்டில் பணம் எடுக்கச் சென்ற கணவர் வங்கிக்குப் போன் செய்து புகார் அளிக்கிறார்.

வங்கி வழக்கம் போல அந்த ஏ டி எம் வேலை செய்யவில்லை, 24 மணி நேரத்தில் திரும்ப வரவு வைக்கப்பட்டுவிடும் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகும் பணம் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. கணவர் வங்கிக்கு நேரடியாகச் சென்று புகார் அளிக்கிறார்.

டிவிஸ்ட் – 1.

புகாரைப் பெற்ற இரண்டொரு நாளில் வங்கி ஏ டி எம் மிலிருந்து பணம் கஸ்டமரால் எடுக்கப்பட்டுவிட்டது என்று புகாரை ஊத்திமூடிவிட்டார்கள்.

டிவிஸ்ட் – 2
கணவரும், மனைவியும் அந்த ஏ டி எம்மின் சி சி டி வி காட்சிகளைப் பெற்று, அதில் அவருக்கு மெசின் பணத்தைத் தரவில்லை என்ற காட்சியைக் காரணம் காட்டி மறுபடியும் வங்கியில் புகார் அளிக்கிறார்கள்.

டிவிஸ்ட் – 3.

வங்கி ஒரு இன்வெஸ்டிகேஷன் கமிட்டியை அமைக்கிறது. சி சி டி வி காட்சியில் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர் காணப்படவில்லையாதலால் Non transferable rule படி வங்கிக்கு இதை மறுக்க உரிமை இருக்கிறது என்று முடிவு செய்து, தம்பதினரின் புகாரை நிராகரிக்கிறார்கள்.

டிவிஸ்ட் – 4

கணக்கு வைத்திருப்பவரான மனைவி சம்பவம் நடந்த அன்று அந்த ஏ டி எம் மில் வரவு வைக்கப்பட்ட, பரிவர்த்தனைகள் நடந்த cash verification report ஐ பெற்று அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். அதில் ரூ.25000 அதிகப்படியான பணம் இருப்பது தெரியவருகிறது.

டிவிஸ்ட் 4

எஸ் பி ஐ வேறு ஒரு கணக்கை சமர்ப்பித்து அதில் 25000 பணம் அதிகமாக இல்லை என்று வாதிடுகிறார்கள்.

டிவிஸ்ட் 5

நுகர்வோர் தீர்பாணையத்தை அணுகும் முன்பாக கடைசியாக வங்கியில் மீண்டும் கெஞ்சிப்பார்க்கிறார்கள் தம்பதியினர்.

உங்கள் பின் நம்பரை நீங்கள் மற்றொருவருக்குக் கொடுத்ததது வங்கி விதிமுறைப்படி தவறு எனவே இந்தகப் புகார் ஊத்தி மூடப்படுகிறது என்று பதில் வந்திருக்கிறது.

டிவிஸ்ட் 6

ஒரு வருட அலைக்கழிப்பிற்குப் பிறகு கணக்கு வைத்திருக்கும் மனைவின் நுகர்வோர் நீதிமன்றத்தினை அணுகி டெலிவரி ஆகி கையில் குழந்தை இருக்கும் நேரத்தில் என்னால் நடமாட முடியாததாலேயே தன் கணவரிடம் ஏ டி எம் கார்டைக் கொடுத்து பணம் எடுக்கச் சொன்னதாகவும், ஏ டி எம் குளறுபடியால் நடந்த பிழையை கணக்கில் கொள்ளாமல் ₹25000 எஸ் பி ஐ இன்னும் தங்களுக்குத் தரவில்லை என்று வழக்குத் தொடுக்கிறார்.

டிவிஸ்ட் 7

இந்த வழக்கு மூன்றரை ஆண்டுகள் நடந்தது. அந்த ₹25000 எஸ் பி ஐயால் திரும்ப அளிக்கப்படவே இல்லை. தங்கள் பணத்தை எஸ் பி ஐ தங்களுக்குத் திருப்பி அளிக்கவேண்டும் இது அவர்கள் ஏ டி எம் மில் ஏற்பட்ட பிழை என்று தங்கள் வாதத்தில் அவர்கள் உறுதியாக இருந்தனர். ஏ டி எம் பின் நம்பர் அடுத்தவருக்குக் கொடுத்தது தவறு எங்கள் மேல் எந்தப் பிழையும் இல்லை. எனவே பணத்தை திரும்ப அளிக்க முடியாது என்று வங்கியும் அவர்கள் வாதத்தில் உறுதியாக இருந்தனர்.

வங்கித் தரப்பில் பணம் அளிக்கப்பட்டதாக இஷ்டேச்மெண்ட்டும் காட்டப்பட்டிருக்கிறது.

டிவிஸ்ட் 7.5

தம்பதியினர் தொடுத்த வழக்கை நிராகரித்த நீதிமன்றம். வங்கி விதிமுறைப்படி பின் நம்பரை அடுத்தவருக்குக் கொடுத்தது தவறு. மனைவியால் நடமாட முடியாதென்றால் கணவரின் பெயருக்கு செக் கொடுத்து பணத்தை எடுத்திருக்கவேண்டும். ஆகவே இந்தக் கேஸ் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்து வங்கி செய்தது சரியே என்று வழக்கை முடித்திருக்கிறார்கள்.

இதனால் அறியப்படும் நீதி என்ன? நீங்கள் கற்றுக்கொண்டது என்ன? 500 வரிகளுக்குள் மிகாமல் விளக்கவும்.

செய்தியின் லிங்க்.

https://www.financialexpress.com/…/loss-of-rs…/1197670/lite/

***

அன்புள்ள அருண்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மட்டுமல்ல இன்று எல்லா வங்கிகளுமே இதே அணுகுமுறையையே கொண்டுள்ளன. வாடிக்கையாளர்களை ‘தோற்கடிப்பதே’ அதிகாரிகளின் கடமை என கற்பிக்கப்பட்டுள்ளது. தோற்கடிப்பவர் நல்ல அதிகாரி. அதன்பொருட்டு எல்லா சட்டத்திட்டங்களையும் மீறலாம் என்பது அவர்களின் தரப்பு

இங்கு முதன்மைக்குற்றவாளி நீதிமன்றம்தான். பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்களின் நிலைபாடு இது, வங்கியும் அதன் அதிகாரியும் நீதிபதிக்கு வேண்டியவர்கள். வாடிக்கையாளர் எப்போதோ வருபவர், மீண்டும் வராதவர். ஆகவே பயன்ற்றவர். தன் பணத்தைத் திரும்பப்பெற வாடிக்கையாளருக்கு உரிமை உண்டு. அது அவருக்கு அளிக்கப்படவில்லை என நிரூபணமானதென்றால் அந்தப்பணம் எதன்பொருட்டும் அவருக்கு மறுக்கப்படலாகாது, அது அவருடைய சொத்து, அதை மறுப்பது திருட்டு. வழிப்பறிக்கொள்ளை. அதை இங்கே இரு அரசு அமைப்புகளும் சேர்ந்து செய்திருக்கின்றன

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11
அடுத்த கட்டுரைஎழுத்தும் எதிர்வினையும்