கேள்வி பதில் – 50

“முகலாய ஆட்சியில் இந்து மரபு மீது தொடுக்கப்பட்ட தொடர்த்தாக்குதல்களின் காரணமாக, இந்து மரபு தன்னை இறுக்கமான விதிகள் அடங்கிய மாறாத அமைப்பாக மாற்றிக் கொண்டிருந்தது. அந்த இறுக்கம் காரணமாக, அது பலநூறு வருடம் மாறாமல் அப்படியே இருந்து வந்தது” என்றும் சொல்லியிருக்கிறீர்கள். இதைச் சற்று விளக்க முடியுமா? முக்கியமாக- முகலாய ஆட்சியில் இந்து மரபு மீது தொடுக்கப்பட்ட தொடர்த் தாக்குதல்கள் யாவை? முகலாய ஆட்சிக்கு முன்பு இந்து மரபில் இருந்த இறுக்கமற்ற தன்மைக்கும், பின்னர் இந்து மதம் கொணர்ந்த இறுக்கமான விதிகளுக்கும் எவற்றை உதாரணமாகச் சொல்ல முடியும் போன்ற விவரங்களை அறிய ஆவல்.

— பி.கே.சிவகுமார்.
இன்றைய சூழலில் இத்தகைய வினாவுக்குப் பதில் சொல்ல மிக நுட்பமான சமநிலையைப் பேண வேண்டியுள்ளது. பேணினாலும் நம் முத்திரைத் தொழிலாளர் அவர்கள் கைக்குப் பழகிய காரியத்தையே செய்வார்கள் என்பது வேறு விஷயம். ஒரு பக்கம் இஸ்லாமிய சமூகத்தை இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வாரிசுகளாக முத்திரை குத்தி வரலாற்றின் சுமைகளை அவர்கள் சுமக்கவேண்டும் என்று சொல்லும் மதவாதப் போக்கு. மறுபக்கம் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எல்லாருமே அப்பழுக்கற்றவர்கள், அவர்களே இஸ்லாமின் பிரதிநிதிகள் என்று ஓங்கிக் கூவும் முதிரா இடதுசாரிகள். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் மதமாற்ற, மதவெறிக் கும்பல்கள். இடதுசாரிகளின் இந்த முட்டாள்தனத்தில் வளரும் மதவாதம். இன்று வரலாறு பற்றிப் பேசுவதே சிக்கல்.

முகலாயர் காலத்து இஸ்லாமிய ஆட்சி இந்து மதம் மற்றும் ஞானமரபு மீது பல தளங்களில் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தது என்பது வரலாற்று நூல்களில் தெளியும் எளிய உண்மை மட்டுமே. இதை மூன்று தளங்களில் தொகுத்துப் பார்க்கலாம்.

1] ராணுவம் சார்ந்த தாக்குதல்

2] மதம் சார்ந்த தாக்குதல்

3] நீதிசார்ந்த பாதிப்பு.

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்கள் ராணுவத்தினருக்கு போர் முடிந்தபின்பு கொள்ளையடிக்கும் அனுமதியை அளித்து அதையே அவர்களுக்குரிய முக்கிய ஊதியமாக ஆக்கியிருந்தனர். ஆகவே பல நூறு வருடம் தொடர்ச்சியாக நடந்த இஸ்லாமியப் படையெடுப்புகள் அனைத்துமே பெரும் சூறையாடல்களாக இருந்தன. இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் நூல்களில் இருந்தே இதற்கு ஏராளமான ஆதாரங்களை எடுக்க இயலும். இவ்வியல்பை மதத்துடன் பிணைக்க இயலாது. இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆஃப்கானிய, மங்கோலியப் பழங்குடிப் பின்னனியில் தேடவேண்டும். ஏனெனில் தைமூர், அகமது ஷா அப்தாலி போன்ற அன்னிய இஸ்லாமிய ஆட்சியாளார்கள் இந்திய இஸ்லாமிய ஆட்சியாளர் மீது படையெடுத்த போதும் இதே சூறையாடல்களும் கொள்ளைகளும் நிகழ்ந்தன. எரிபரந்தெடுத்தல் என்றெல்லாம் போருக்குப் பின்னான சூறையாடல்களை பழந்தமிழ் மரபிலும் காண்கிறோம். போரும் கொள்ளையும் தவிர்க்க இயலாதவை. ஆனால் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் காலத்தைய படையெடுப்புகள் மிகப்பெரியவை, எவ்வித குறைந்தபட்ச நியதியையும் அனுமதிக்காதவை. நமது நாட்டார் வாய்மொழி மரபில் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கொள்ளைகள் குறித்த ஏராளமான பதிவுகள் உள்ளன.

இஸ்லாம் மதம் திட்டவட்டமாகவே பிறமதங்கள் மீதான தாக்குதலைத் தன் விசுவாசிகளுக்குக் கட்டாயமாக்குகிறது. குர் ஆனின் ஆரம்பப் பகுதியில் [அதாவது நபி மெக்காவை கைப்பற்றுவதற்கு முந்தைய வசனங்களில்] மாற்று மத நம்பிக்கையாளார்களை [திம்மிகளை] கட்டாயப்படுத்தலாகாது என்றும் பாதுகாக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் உருவ வழிபாட்டினருடனான போருக்கும், அவர்களது வழிபாட்டிடங்களை அழிப்பதற்கும் அறைகூவப்பட்டுள்ளன. ஆனால் குர் ஆன் முழுக்க நிரம்பியுள்ள சமத்துவத்துக்கான குரலையும், மகத்தான நீதியுணர்வையும் வைத்துப் பார்க்கையில் அதை ஒரு தருணம் சார்ந்த, அரசியல் கட்டாயம் சார்ந்த, வெளிப்பாடாகக் கொள்ளவேண்டுமென்பதே என் எண்ணம். [குரைஷிகளுடனான போர் உக்கிரமாக நிகழ்ந்த காலம் அது]. ஆனால் பிற்கால இஸ்லாமிய அறிஞர்களும் ஆட்சியாளர்களும் அப்படிக் கருதவில்லை. சொல்லப் போனால் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அவ்வறைகூவலை ஒரு சாக்காகவே கொண்டனர். இஸ்லாம் பரவிய நாடுகளில்- ஈரான், ஆப்கானிஸ்தான் முதல் ஆப்ரிக்கா, இந்தோனேஷியா வரை- அந்நாடுகளில் இருந்த பழைய மதங்களும் வழிபாட்டிடங்களும் முழுமையாகவே அழிக்கப்பட்டன.

இந்தியாவிலும் அத்தகைய தாக்குதல் இடைவிடாது நிகழ்ந்தது. இங்கே இந்துமதம் அழியவில்லை என்பதனாலேயே அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவேயில்லை என்று இடதுசாரிகள் சிலர் வாதாடும் அபத்தம் இன்று உள்ளது. வட இந்தியப் பகுதிகளில் எங்குமே பேராலயங்கள் ஏதுமில்லை என்பதை ஒருமுறை இந்தியச் சுற்றுப் பயணம் செய்த எவரும் அறியலாம். சராசரித் தமிழ் மனதை அதிரவைக்கும் விஷயம் அது. காடுகளில் மறைந்து பிற்பாடு கண்டெடுக்கப்பட்ட அஜந்தா- எல்லோரா, கஜூராகோ போன்ற எச்சங்கள் எத்தகைய மகத்தான ஆலயமரபு இருந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள். விஜயநகரால் பாதுகாக்கப்பட்ட ஆலயங்கள் தென்னிந்தியாவிலேயே இன்று ஆயிரக்கணக்கில் உள்ளன. அவ்வாலயங்களின் பெரும்பாலான கட்டுமானங்கள் விஜயநகர அரசாலும் அதன் கிளைகளான நாயக்கர் அரசுகளாலும் மீண்டும் கட்டப்பட்டவை.

விஜயநகரம் உருவாவதற்கு முன்பு மாலிக் காபூர் போன்றவர்களின் படையெடுப்பால் இங்குள்ள பெரும் ஆலயங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டதற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஸ்ரீரங்கம் ஆலயப் பதிவுகள் போன்ற எழுத்தாதாரங்கள், கல்யானை கரும்பு வாங்கியது போன்ற ஐதீகங்கள் இந்து தரப்பில். ஆனால் திட்டவட்டமான ஆதாரங்கள் படையெடுப்பாளருடனேயே வந்து சுல்தானின் அறிதலுக்காக அவற்றைப் பதிவுசெய்த அமிர் குஸ்ரு போன்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களால் அளிக்கப்படுகின்றன. [இங்கே ஓரு தகவல். ‘விஷ்ணுபுரம்’ வெளிவந்தபோது பொ.வேல்சாமி என்பவர் அதில் இஸ்லாமியப் படையெடுப்பு விஷ்ணுபுர ஆலயத்தின் அழிவுக்குக் காரணங்களில் ஒன்று என எழுதியிருப்பது தவறெனவும் இஸ்லாமியர் தமிழகத்தில் எந்த ஆலயத்தையும் அழிக்கவில்லை என்றும் எழுதியிருந்தார். சிதம்பரம், ஸ்ரீரங்கம், மதுரை ஆலயங்களை அழித்தமை குறித்த மிகவிரிவான தகவல்கள் வரலாற்று நூல்களில் உள்ளன. கடற்கரையோரம் உள்ள ஓர் ஆலயம் அழிக்கப்பட்டது குறித்து அமிர் குஸ்ரு சொல்கிறார், அது ராமேஸ்வரமா இல்லை நாகப்பட்டினம் கடற்கரையின் ஏதேனும் ஆலயமா என்ற விவாதம் இன்றளவும் உள்ளது. ஆனால் வேல்சாமி போன்ற முற்போக்காளர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அமிர் கஸ்ரு சொன்னதை பதிவு செய்பவர்களை அவர் கல்வியை காவிமயமாக்குபவர் என சொல்லக்கூடும். ]

தமிழகத்துத் தெலுங்கு, கன்னட, சௌராஷ்ட்ர மக்களின் குலவரலாறுகளில் அவர்கள் இடம் பெயர்ந்த காரணம் இஸ்லாமிய மத அடக்குமுறையே என்பதும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து இஸ்லாமிய ஆட்சிக்கு வெளியே இருந்த தமிழகப் பகுதிகளில்தான் இந்தியாவிலேயே குடியேற்றம் அதிகம். அதேசமயம் வள்ளல் சீதக்காதி போன்ற இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அனைவருக்கும் புகலிடமாக இருந்தமையும், ராமேஸ்வரம் ஆலயத்தை சீதக்காதியே முன்னின்று கட்டியமையும், சிருங்கேரி மடத்தை திப்பு சுல்தான் பேணியதும் வரலாறே.

இஸ்லாமிய ஆட்சி நிலவிய பகுதிகளில் ஷெர்ஷாவின் காலத்துக்குப் பிறகு நீதிமுறை முழுக்க முழுக்க காஜிகள் என்ற மத குருக்களாலேயே நிகழ்த்தப்பட்டது. அது இஸ்லாமியச் சட்டப்படி இருந்தது. இஸ்லாமியச் சட்டம் உருவ வழிபாடு, பல்லிறைவாதம் முதலிவற்றை பாவமாகவும் ஒடுக்கப்பட வேண்டியதாகவுமே என்ணுகிறது.

இந்த தாக்குதல்களினால் இந்து மதம் இறுக்கமான அமைப்பாக ஆயிற்று. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது அனைவருமே ஏதேனும் மடங்கள், குரு பீடங்களுக்குக் கீழே கொண்டுவரப்பட்டு இந்து மரபு பற்பல இறுக்கமான குழுக்களாகத் தொகுக்கப்பட்டது இக்காலகட்டத்தில்தான் என்பதே. இந்த மடங்கள் இந்து சமூகத்தில் எப்போது உருவாயின, அவற்றின் தேவை என்னவாக இருந்தது என ஆராய்வது மிகவும் பயனுள்ளது. ஆலயங்கள் இல்லாத நிலையில் மனிதர்களை மத மையங்களாக, தத்துவங்களின் உருவகங்களாக ஆக்க வேண்டியிருந்தது என்றும் குருசீட பரம்பரை மூலம் அதை நிரந்தரப்படுத்த வேண்டியிருந்தது என்றும் காணலாம். இக்காலகட்டத்தில்தான் இந்து ஞான மரபுக்கு ஒரு பயிற்றுமுறை [Curriculum] உருவாகியது. இந்த அமைப்பே இந்து மதத்தையும் மெய்ஞானத்தையும் நிலைநிறுத்தியது. பல மடங்கள் ஓயாது இடம்பெயர்ந்தபடியே இருந்தன.

கறாரான சமூகச் சட்டங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றை உருவாக்கி, தொடர்ந்து அவற்றை செயல்படுத்தி அதன்மூலமே இவை குழுக்களை நிலைநிறுத்தியிருக்க இயலும். ஆகவே தனிமனித மதவழிபாட்டுச் சுதந்திரமும், சிந்தனைகளும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டன. குருபீடம் சொல்ல, அதைக் கடைப்பிடிப்பதே ஆன்மிகம் எனலாயிற்று. இந்து மத மரபு, பக்தி மற்றும் சடங்குகளாக ஆனதும், அதன் பௌதீகவாதத் தரப்புகள் மறைந்ததும் இக்காலகட்டத்திலேயே. ஒவ்வொரு சாதியும் தனக்குரிய மத குரு பீடங்களை உருவாக்கிக் கொண்டு அதனடிப்படையில் ஒருங்கிணைந்தது. இன்றும்கூட வட இந்தியாவில் மதத்திலிருந்து பிரிக்க இயலாதனவாகவும், ஆலயங்களை விடமுக்கியமாவையாகவும் குருபீட அமைப்புகளே உள்ளன.

இவ்வமைப்புகள் உருவாக்கிய ஒற்றுமையும் கட்டமைப்பும் தான் இஸ்லாமிய தாக்குதலில் இருந்து இந்து மதத்தையும் ஞான மரபையும் காத்தன. இவற்றில் மகான்களும் பேரறிஞர்களும் உருவாகி நல்வழி காட்டியுள்ளனர். விஜய நகரப் பேரரசை உருவாக்க விதையூன்றிய வித்யாரண்யர் அல்லது மாதவரே கூட இவர்களில் ஒருவரே. ஆனால் காலப்போக்கில் இவ்வமைப்புகள் தேங்கி ஊழலும் கண்மூடிச் சடங்குகளும் நிரம்பிய மையங்களாயின. மாற்றங்களுக்கு எதிரான பெரும் கற்கோட்டைகளாக ஆயின. அவற்றின் பிடியிலிருந்து இந்து மரபைக் காப்பதே இந்து மறுமலர்ச்சிக் காலத்துப் பெரும்பணியாக இருந்தது. இன்றும் கூட அப்போராட்டம் தொடர்கிறது.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 49
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 51, 52