கன்னிநிலம் -கடிதம்

 

download (1)

அன்புடன் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

 

‘கன்னி நிலம்’   கதைக்களம் மணிப்பூர் எல்லை என்றவுடன் முதல் அத்தியாயம் முடித்ததும் தொடர்வதை சற்றே நிறுத்தி, இணையம் மூலம் மணிப்பூர் பற்றி சில படங்களையும் காணொளிகளையும் பார்த்துவிட்டு அதன் பின்ணணியில் கதையைப் படிக்கத் தொடங்கினேன்.  காரணம் மணிப்பூர் என்றவுடன் லாட்டரியும் , கறுப்பு வெள்ளையில் “மணிப்பூரில் கலவரம். துப்பாக்கி சூடு” என்று வழக்கொழிந்த தகவல் படிமங்களைத்தவிர எதுவும் நினைவிலில்லை.  காடுகளின் வர்ணனைகளில் மனதில் காடு விரிந்தாலும் படங்கள் மேலும் காட்டினூடே பயணப்பட உதவின.

உணர்வுநிலையின் உச்ச எழுச்சியும் அதன் விளைவுகளுமான  ராணுவப் பின்ணணி கொண்ட ஒரு காதல் கதையென்றாலும், கன்னி நிலமும் அதன் குறியீடாக மதூக மலரும் சொல்லப்பட்டிருக்கிறதென்றே உணர்ந்தேன்.  சாதாரண வாழ்க்கையிலிருந்து ஒரு உச்ச நிகழ்வால் சட்டென்று விடுபட்டு அனைத்தும் அதை நோக்கி குவிய மனிதம் எப்போதும் விரும்பினாலும், விருப்பத்தோடு நின்றுவிடுவதும் அல்லது போய்த்திரும்புவதுமாகவே பலருக்கும் அமைகிறது.  செங்குத்தான அந்த விடுபடல் வெகு சிலருக்கே சாத்தியமாகிறதோ?  நெல்லையப்பன் மூலம் அதை சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறீர்கள்.   கூண்டுக்குள் வாழ்ந்து சட்டமிட்டுக்கொண்டு நாற்பது கிலோமீட்டர் பயணத்தில் தினசரி வாழ்க்கையை முடித்துக்கொள்ள விழைபவனுக்கு இந்நிலை கண்டிப்பாக ஒவ்வாமையின் மறு எல்லையைக் காட்டக்கூடியது.

 

மதூக மலர் என்ற பெயரில் ஒரு தொன்மம் இருப்பதாகத் தோன்றிக்கொண்டே இருந்தது. சித்ராங்கதை ஒரு காரணமாக இருக்கலாம்.  மதூக மலர் என்று தேடுதளத்தில் இடுகை இட்டபோது, ‘வண்ணக்கடலில்’ கலிங்கபுரியில் இளநாகன் பயணப்படும்போது அதைப்பற்றி ஒரு குறிப்பு வந்திருந்தது. ஷிராய் லில்லி பற்றி மேலும் தேட,  எப்பொழுதோ வாழ்ந்த ஒரு இளவரசியும் அவள் காதலனும் இறந்தபோது அவளைப் புதைத்த மண்ணிலிருந்து இம்மலர்கள் எழுவதாகவும் அவள் இன்னும் தன் காதலனுக்குக் காத்திருப்பதாகவும்  உக்ரூல் கிராமத்தில் ஒரு நம்பிக்கை இருப்பதாக விக்கிபீடியாவில் படித்தேன்.  சுவாரஸ்யம்.  இள ஊதா கலந்த ரோஜா நிறத்தில் இருக்கும் அந்த மலரின் வாசனையைக் கற்பனை பண்ணியபடியே இருந்தேன்.

 

நிஜத்தில் தொடர் போராட்டங்களும், கலவரங்களுமாக இருக்கும் மணிப்பூர் எல்லை தன் இயற்கையை வெகுவாகத் தொலைத்துக்கொண்டிருக்கக்கூடும்.  அப்படிப்பட்ட ஒரு பச்சை வெளியில் துப்பாக்கி சூடுகளும் குண்டுகளும் வீசப்படுவது மனிதகுலத்தின் மிக ஆபாசமான ஒரு வெளிப்பாடகத் தோன்றுகிறது.   அடர் காடுகளுக்குள்  கரியமில வாயுவும் அம்மோனியாவும் கலந்த வாசனையும் வெடிஅதிர்வுகளும் மனித குலத்தின் தீரா ஆசைகளின் தொடர் அழிவாகவே படுகிறது.  மிகப்பெரிய மரமொன்று வெடித்தாக்குதலில் வேரோடு சாயும் அவதார் படத்தின் கடைசிக் காட்சிகள் மனதில் வந்து போனது. இயற்கையை சற்றேனும் அழிக்காத மனித முயற்சியென்று ஒன்று இருக்கவே முடியாதோ?  இயற்கையை இந்த அளவுக்கு மானுட ஆணவம் அழித்துவிடுமா?  அழித்து எதைக் கண்டடையும்?

இது போக, சுற்றுலாப் பயணிகள் என்று வரும் சற்றும் நாகரீகமற்ற கும்பல் இச்செடிகளைப் பிடுங்குவதாலும் நெகிழிக் குப்பைகளப் போடுவதாலும் மதூக மலர் இருப்பின்மையை நோக்கி வெகு வேகமாகச் சென்றுகொண்டிருப்பதாகவும் செய்திகள் இருந்தன.

உங்கள் தளத்தில் இந்த சிறுகதை பதியப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன.  கடந்த பதின் வருடங்களில் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்னை வரை வேலைதேடி அமைந்த இளைய தலைமுறைகளை அடிக்கடி அழகு நிலையங்களிலும், கணிப்பொறி அலுவலகங்களிலும், நவீன நகர மால்களிலும் எண்ணிக்கையில் அதிகமாவதைப் பார்க்கிறேன். காலப்போக்கில் திரும்ப மனமின்றி நெல்லையப்பர்களை மணந்து நாட்டின் வேறொரு மூலையில் வாழ்க்கையைத் தொடங்குவார்களோவென்று தோன்றுகிறது.  மனதின் அடிஆழத்தில் மதூகமலரின் வாசத்தோடு….

மதூக மலர் வெளியில் அணையாத நிலவொளியில் தான் மானுடத்தின் நிதர்சனம் தன்னை நிகழ்த்திக்கொள்ளும் போலும்?  அதுவே அதன் அறமென நினைக்கிறேன்.

இன்றிரவு  என் கனவில் கான்ஹாய் மலைச்சரிவும் மதூக மலரும் வரக்கடவதாக….

நன்றியுடன்

நா. சந்திரசேகரன்

கன்னிநிலம் கடிதங்கள்

கன்னிநிலம் முடிவு – கடிதம்

கன்னிநிலம் கடிதங்கள்

முந்தைய கட்டுரைகாஞ்சி ,ஊட்டி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபிச்சை