விஷ்ணுபுரம் -வாழ்வும் பண்பாடும்

vish

விஷ்ணுபுரம் இணையதளம்

அன்புள்ள ஜெ,

உங்கள் தளத்தை தினந்தோறும் வாசிப்பதே என்முன் நிற்கும் மிகப்பெரிய குறிக்கோள். நான் உங்களை பின்தொடர்பவன், பலவற்றில் உங்கள் கருத்துதான் எனது கருத்தும். என்னைப்பொறுத்தவரை உங்களைத் தொடர்ந்து, உங்களுடைய உணர்வுகளில் நின்று, உங்களது பார்வையில் உங்களது கருத்தைக் கொண்டிருப்பதே, என்வரையில், மிகப்பெரிய வளர்ச்சிதான்.அறிவுப்பூர்வமான உரையாடலிலிருந்த பொறுப்பான ஆசிரியர், கடவுள் நம்பிக்கை அற்றவர், தனது கடமையைக் கண்ணாகச் செய்பவர், என்னுடைய இளமையில் சொன்னார். “பெண்களைப் பற்றிய எண்ணங்களும் காமமும் ஒருநாற்பது வயது வரைதான்”. அதற்கு பின்பு ஆண் பெண் உறவு என்பது “குழந்தை வளர்ப்பின் அங்கமாக மாறிவிடும்”. அந்த இளைய வயதில் மிக ஆழமாகப் பதிந்த சொற்கள் இவை.

சமீபத்தில் பணி ஓய்வுக்குக்கு பின் உடல்நலம் குன்றி ஓய்வெடுத்து வரும் அவர் ஒரு சிறு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த செய்தியை நம்ப முடியாமல் ஆடிவிட்டேன். பின்பு அந்த அதிர்ச்சியிலிருந்து அந்த பெண்ணை மீட்டு ஆரவாரம் செய்யாமல் வேறிடம் சேர்த்தோம்.

இரண்டு வருடங்களுக்கு முன் விஷ்ணுபுரம் வாங்கி இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு மேல் வாசிக்காமல் அல்லது வாசிக்க முடியாமல், தற்போது தினம் ஒரு அத்தியாயமாவது வாசிக்கவேண்டும் என்று ஆரம்பித்ததும் சிலநாட்களில் என்னை உள்ளே இழுத்துக்கொண்டது.

பிங்கலனிடம் சிரவண மகாபிரபு சொல்கிறார்,”இருளுக்குள் நானும் என் ஆத்மாவும் தனியேயிருக்கும்போது அறிந்தேன் – என் மனம் ஏங்குவதை. சென்றுபோன என் இளமையை, இழந்த இன்பங்களை, இனி மீளமுடியாத அந்த உலகை எண்ணி அழுதேன்.பின்பு அப்படி அழுததற்காகக் குற்ற உணர்வு கொண்டு இந்த மாதம் முழுக்க அழுதேன். முப்பது நாட்களில் நீ திரும்பிவிட்டாய். ஐம்பது வருடங்களைத் தாண்டி நான் எங்கு போவது?. நான் எதை அடைந்தேன்? இதுதானா?, இந்தக் கசப்புதானா? காமநாசினி…. “குருநாதர் சிரவண மகாபிரபுக்கே இந்த நிலையா? வாசித்தவுடன், சில நிமிடங்களுக்கு ஒன்றுமே தோன்றவில்லை புத்தகத்தை மூடி வைத்து விட்டேன். ”இவள் காமவினாசினி என்றார் மகாபிரபு…” “காமவினாசினி”….” கூகுள் செய்தால் வழக்கம் போல உங்கள் தளத்தில்தான் விட்டது. https://www.jeyamohan.in/5318#.Wxo9iFQzbcs

சில மாதங்களுக்கு முன்பு இந்துக்களின் வாழ்வுமுறையை,இந்து மதத்தை இளிவரல் செய்த நண்பர்களிடம் சொன்னேன். “சுடுகாட்டில் சென்று மனிதக் கறியை, மலத்தை உண்டு வாழும் அகோரிகளும் இந்துமதத்தின் ஒரு அங்கமாகவே இருக்கின்றனர். சுடுகாட்டில் இரத்தம் குடிக்கும் கடவுளான சுடலை மாடனே சிவ அம்சமாக வணங்கப்படுகிறான். பேயாக ஆட்டுவிக்கும் “முனி” காடுகளில் மக்களைப் பாதுகாக்கும் கடவுளாக வணங்கப்படுகிறார். மண்டையோட்டு மாலையுடன் சிவனை சுடுகாட்டில் புணரும் காளி கடவுளாக கோவிலில் அருள்பாலிக்கிறாள். இன்னும் ஏராளமான நமக்கு (எனக்கு) புரியாத விடயங்கள் இந்துமதத்தில் உள்ளனஅதுபோல இந்துமதத்தில் உள்ள புதினங்களை முழுவதுமாக புரியாமல் “மூடநம்பிக்கை” என்று சொல்வதும் ஒருவகையான மூடநம்பிக்கை என்றே நினைக்கிறேன்” என்று..

உண்மையில் அப்போது எனக்கு இதுவெல்லாம் வெறும் கேள்விகளாகவே இருந்தன. இது பற்றிய சிறிய புரிந்துணர்வுகூட கிடையாது. ஆனால் இந்த சரணாகதி, காளி:கடிதங்கள் பதிவில் நான் தேடிய தேடலுக்கு பதில் எனக்கு புரிவதுபோல இருக்கிறது.”பன்றி நிறைய குட்டிபோட்டு நடக்க முடியாதபடி இருந்தால், பிற குட்டிகளுக்கு பால்கொடுத்து வளர்ப்பதறாக இருப்பதில் நோஞ்சான் குட்டிப்பன்றியை தின்றுவிடும். நாய்களும் புலியும் எல்லாமே செய்யக்கூடியது அது தாய்மையின் இன்னொரு முகம்! அணைக்கும் அன்னைபோலவே அழிக்கும் அன்னை. இயற்கையில் நாம் காணும் இரு பாவனைகள் இவை.

ஏ.எல்.பாஷாம் அவரது வொண்டர் தட் வாஸ் இன்டியா என்ற நூலில் இதைப்பற்றி சொல்கிறார். கொடூரமான அன்னை என்ற உருவகம் பிரபலமாக இருப்பது மேற்குக் கடலோர மாநிலங்களில். இவை வருடம் தோறும் கொடுமையான புயல்களால் தாக்கபப்டுகின்ரன. எந்த மேகம் மழை அளித்து புரக்கிறதோ அதுவே அழிக்கவும்செய்கிறது. அதை வெறுக்க முடியாது. வழிபடவே முடியும். அந்த மனநிலையே காளியை உருவாக்கியது என்கிறார் பாஷாம்

எளிமையான விளக்கமாக இருக்கலாம். ஆனால் இயல்பான ஒரு விஷயம் இது. இயற்கையின் மகத்தான தோற்றங்களில் இருந்தே இறையிருவகங்களை மனிதர்கள் அடைந்தார்கள். அதில் ஒன்று பெருங்கருணையும் பெருங்கொடுமையும் கொண்ட அதன் இரட்டைமுகம்”

விஷ்ணுபுரம் வாசித்துவருகிறேன். ஸ்ரீபாதம் மற்றும் கௌஸ்துபம் இரண்டுக்கும் இடையில் நின்றுகொண்டிருக்கிறேன்!.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

***

அன்புள்ள பழனிவேல்

நலமாக இருக்கிறீர்களா?

விஷ்ணுபுரத்தை நீங்கள் வாசிக்கும் முறையே சிறந்தது. அதை ஒர் உரைநடை வடிவமாகவோ, ஒர் புதுவகை எழுத்தாகவோ வாசிக்காமல் சொந்த வாழ்க்கையுடன் இணைத்து வாசிக்கிறீர்கள். நீங்கள் பிறந்து வாழும் பண்பாட்டுச்சூழலைப் புரிந்துகொள்ள அதனூடாக முயல்கிறீர்கள். இதுவே இலக்கியத்தை அணுகவேண்டிய முறை. இலக்கியப்படைப்பின் இலக்கும் செயல்முறையும் இதுவே

இலக்கியம் அடிப்படையில் வாழ்க்கை மற்றும் பண்பாடு மீதான விமர்சனமும், மறு ஆக்கமும்தான். அதைக்கொண்டே இலக்கியத்தை மதிப்பிடவேண்டும். விஷ்ணுபுரம் உங்கள் அக, புறவாழ்க்கையை எப்படி வேறொரு கோணத்தில் பார்க்கச்செய்தது என்று பாருங்கள். பண்பாடு குறித்த உங்கள் நோக்கை எப்படி மாற்றியமைத்தது என்று கவனியுங்கள். அதுவே மெய்யான வாசிப்பு

ஜெ

***

விஷ்ணுபுரம் வாசிப்பது பற்றி…

விஷ்ணுபுரம் விமர்சனங்கள்

விஷ்ணுபுரம் கிண்டிலில்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 20
அடுத்த கட்டுரைமன்மதன் ஒரு வாசிப்பு