அன்பு ஜெ ,
தங்களின் படைப்பாற்றலை பெரிதும் வெளிப்படுத்தும் “வெண்முரசின்”நாவலின் ஊடே ,என் போன்றோரின், ‘முத்தென்ன தமிழின் ‘தாகம் தீர்த்து வரும் செயல் சாமனியமன்று. இதனுடைய வெளிப்பாடாக தங்களுக்கு எழுதிய சில மெயில் கள் , தங்களின் விவாத தளத்தில் வெளி வந்ததைப் பார்த்த பெருமிதத்தில் எங்களின் உறவினர்களுக்கென ஏற்படுத்தியுள்ள தளத்தில் பகிர முயன்றுள்ளேன்.
எதிர்பார்த்த தாயினும் கொஞ்சம் ஏமாற்றத்தையே அது கொடுத்ததென்றே சொல்ல வேண்டும். சில பொதுவான பாராட்டுக்கள் கிடைத்தது என்றாலும் ,சிலர் மௌனமாகவே இருந்தனர். ஒருவர் , வெளியிட்ட அப்பதிவு சுத்தமாக புரியவில்லை என்றும் , சினிமா போஸ்டரையே நாங்கள் எழுத்துக் கூட்டியே படிக்கிறோம் என்றும் விளக்கத்திற்கு கோனார் உரை வேண்டுமென்றும் கேலியாக பதில் வெளியிட்டிருந்தனர். உடனே பலரும் மௌனம் கலைந்து அதை ஆமோதித்தனர்.
நானும் அதற்கு சாமன்ய பதிலையே எழுதி சமாளித்தேன்.இதிலும் ,அதில் மருத்துவ குழுமத்தைச் சேர்ந்தவர்கள் பலரிருந்தனர்.அவர்கள் வெளிநாட்டு மருத்துவ மாநாட்டில் தாங்கள் கலந்துக்கொண்டதையும் , சில மருத்துவம் சார்ந்த கருத்துக்களை வெளியிட்டுமுள்ளனர்.
புரிந்தவர்கள் வாழ்த்தியுள்ளனர்.அதுவல்ல விஷயம். புரியாதவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.(என்னைச்சேர்த்தே)இது ஒரு மரியாதை நிமித்தமான செயலாக இருப்பதால் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
என்னை பெரிதாக பாதித்த விஷயம் எதுவென்றால் , பொதுவாக ஆங்கில மோ அல்லது விஞ்ஞான சம்பந்தப்பட்ட கருத்துக்களுக்கோ தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவிக்காதவர்கள் அல்லது அது தங்களின் பலவீனத்தை வெளிப்படுத்திவிடும் என்ற தற்காப்பு நிலைக்காகக்கூட மௌனம் சாதிப்பவர்கள் , தங்களுக்கு தமிழ் புரியவில்லை அல்லது தெரியாது என்பதை பெருமையாக வெளியிட்டுக் கொள்ளும் பாங்கையே பல இடங்களில் பார்த்துள்ளேன்.
இது ஒருவகையில் மடமையாகவே இருந்து விட்டு போனாலும் பரவாயில்லை , தமிழறிவைப் புலப்படுத்துவதே மற்றவரால் ஏளனமாக பார்க்கப்படும் தமிழ் சமூகத்தில் தான் நாமுள்ளோம் என்பதே பெரிதும் முரண்படும் விஷயமாக நான் கருதுகிறேன். அண்டைய மாநிலங்கள் தங்கள் தாய்மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் நம் மாநிலத்தில் உள்ளதாக தெரியவில்லை.
பள்ளிக்காலத்திலே தமிழ் மீடியம் என்பது மதிப்பு குறைவானதாகவே கருதப்பட்டது. தமிழுக்காக பெரிமிதம் கொள்ளும் விதமாக வே தங்களின் படைப்புகளையும் ,தங்கள் தளத்தில் வரும் வாசகர்களின் மற்றைய நாவல்களின் பரிந்துரைகளையும் வாசித்தும் வருகிறேன்.
எங்கோ ஒரு இதழில் படித்ததாக ஞாபகம்.ஆங்கிலம் ஒரு மொழி அவ்வளவே ,அறிவுச்சார்ந்ததன்று.
அன்புடன்,
செல்வி.அ.
கடலூர்.
அன்புள்ள செல்வி அவர்களுக்கு,
உங்கள் கடிதத்திலுள்ள துயரத்தை என்னிடம் பகிர்ந்துகொள்ளாதவர்களே கிடையாது. குறிப்பாகப் பெண்கள். சிலநாட்களுக்கு முன் வெண்பா கீதாயன் என் தளத்தில் கண்டராதித்தன் கவிதைகளின் மரபுத்தொடர்ச்சி குறித்து ஒரு நல்ல கட்டுரையை எழுதியிருந்தார்.தொடக்கநிலையாளர் என்ற வகையில் மிகமுக்கியமானது அக்கட்டுரை.
தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்
வெண்பா முகநூலில் மிகத்தீவிரமாக இயங்குபவர். ஒரு நண்பர் சொன்னார், அவர் முகநூலில் ஒரு படம்போட்டால் நூறுபேர் கருத்துச் சொல்வார்கள் என்று. ஆனால் அக்கட்டுரைக்கு இருமுறை இணைப்பு கொடுத்தார். நான்குபேர் கூட கருத்து சொல்லவில்லை. எவரும் அதைக் கண்டுகொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை
இது எல்லா எழுத்தாளர்களுக்கும்தான். நம் பொதுச்சூழலில் சினிமா, அரசியல்,சாப்பாடு, சோதிடம் ஆகிய நான்கே தளங்களில் மட்டுமே எதிர்வினை எழும். சினிமா என்பது இங்கே பாலியல் சார்ந்த பேச்சுக்கான ஒரு பெரிய குழூக்குறி என்பதனால் அதுதான் தொண்ணூறு சதம். வேறெந்த விஷயத்திலும் நம் மக்களுக்கு உண்மையான ஆர்வம் இல்லை. அதைச்சார்ந்து எதையேனும் சொல்லுமளவுக்கு ஆரம்ப கட்ட அறிமுகமும் இல்லை. வேறு எதைக்கண்டாலும் திகைப்புடன் நகர்ந்துவிடுவார்கள்
ஆனால் பெண்களின் நிலை ஒருபடி கீழே. பெண் பெண்ணுக்குரிய சிறு உலகிலேயே புழங்கவேண்டும் என்பதே இங்கே பொதுவான எதிர்பார்ப்பு. அறிவார்ந்த பெண் ஒவ்வாமையை உருவாக்குகிறாள். அவளை கொஞ்சம் கீழிறங்கச்சொல்லி சூழல் மன்றாடிக்கொண்டே இருக்கும்.
நீங்கள் எண்ணுவது போல இது தமிழார்வத்தின் பிரச்சினை அல்ல. ஆங்கிலம் வெறுமே சமூகத்தோரணைக்கான மொழிதான் இங்கே. அதிலும் ஆழ்ந்த வாசிப்போ புலமையோ கொண்டவர்கள் மிகமிக்க்குறைவு. இந்தியாவிலேயே தமிழிலிருந்துதான் ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்ய நல்ல மொழியாக்கக்காரர்கள் இல்லை என பல பதிப்பாளர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஆங்கிலம் வழி வாசிக்கக்கிடைக்கும் உலக அறிவுத்துறைகள் எதிலும் ஆரம்பகட்டப் பயிற்சியே இருக்காது என்பதைக் காணலாம். ஆங்கிலத்தில் கொஞ்சம் ஆழமான எதையாவது சுட்டிகொடுத்துப் பாருங்கள் எத்தனைபேர் படிக்கிறார்கள் என்று. தமிழில் வாசிப்பவர்களைவிடக்குறைவாகவே இருக்கும்.
பிரச்சினை அறிவுத்திறன் இன்மை, அறிவுத்துறைகளில் அறிமுகம் இன்மை, அறிவார்ந்தவை தேவை என்ற உணர்வே இல்லாத உலகியல் நோக்கு ஆகியவைதான். அது தமிழிலும் ஆங்கிலத்திலும் பொது. ஏனென்றால் அது நம் பண்பாட்டுப்பிரச்சினை.
இவர்களைப் பொருட்படுத்தவேகூடாது. ஜெயகாந்தன் சொன்னதுபோல் ‘அற்பத்தனங்களை ஆணவத்தால் எதிர்கொள்ளவேண்டும்’
ஜெ