“ஞானமும் சன்னதமும்’  – லக்ஷ்மி மணிவண்ணன்

kandar (1)

“நீண்டகாலம் நண்பனாக இருந்து
விரோதியானவனை வெளியூர்
வீதியில் சந்திக்க நேர்ந்தது
பதற்றத்தில் வணக்கம் என்றேன்
அவன் நடந்து கொண்டே
கால்மேல் காலைப்
போட்டுக் கொண்டே போனான்.”

– கண்டராதித்தன்

நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க்கவிதை அடைந்திருக்கும் நெகிழ்வான பாய்ச்சலுக்கு ஒரு நற்சான்று திருச்சாழல்.இப்படி ஒரு கவிஞன்தோன்றுவதற்காகத்தான் தொடர்ந்து மொழியில் விமர்சனங்களும் கவிதை தொடர்பானகுறைகளும் அல்லற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. வேறு எதற்காகவும் இல்லை. கவியின்  பன்மைத்தன்மையின் சுய வியாபகம் சூழ்ந்த மொழி, மனப்பரப்பின்மீது தனது பாய்ச்சலை நிகழ்த்தும்போது  குறைகளுக்கு அவசியம் இல்லாமற் போகிறது. திருச்சாழல் தமிழ் கவிதைப்பரப்பில் கவிதை மீது நிகழ்ந்திருக்கும் மாயம். பன்முகத்தன்மையும் , அனுபவமும் , பகடியும் ஒரு கவியின் மொழியில்சஞ்சரிக்கும் போது என்ன நிகழ்கிறது ? அது எவ்வண்ணம் உருமாற விளைகிறது ?என்பனவற்றை  அனுபவரீதியாக நம்மை கொண்டு நெருங்கித் தேற்றும் பிரவாகம்திருச்சாழல்.ஒரு மொழியில் கவியின் பாத்திரம் என்ன என்பதை உணர்த்தும் அசல்கவியின் குரல் .

அசலான ஒரு கவிஞனுக்கும் ; கவிதை எழுத முற்படுபவர்களுக்கும் அல்லதுகவிதையில் பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கும்  இடையே பெருத்த இடைவெளியும்வேறுபாடும் உண்டு.அவை என்ன என்ன ?என்பதை  அறிவதற்கு இப்படி ஒருகவிப்பிரவேசம் தேவைப்படுகிறது.இதுவே வடிவமாக அந்த வேறுபாட்டை  நாம்அறிந்து கொள்ள உதவுகிறது.கவிதை எழுத முற்படுதலிலிருந்தும் பிரயாணப்படுதலிலிருந்தும்  தான் கவியின் தரிசனங்களுக்கும் வந்து சேரவும்முடியும்.கண்டராதித்தன் தனது தரிசனங்களை நம்மிடம் கொண்டு வந்துசேர்த்திருக்கும் தொகுப்பு இது.

ஞானப்பூங்கோதைக்கு நாற்பது வயது,அரசகட்டளை,நீண்ட கால எதிரிகள்,வம்சகீர்த்தி , அம்சம், திருக்கோலம்,  சோமன் சாதாரணம் போன்ற இத்தொகுப்பிலுள்ளகவிதைகள் நித்தியத்துவம் பெறுபவை. அமரர் பெரும்பேறு.சிறு கவிதைகளில் கண்டராதித்தனுக்கு  அமையப் பெற்றிருக்கும் வல்லமையை வரம் என்கிற வார்த்தையால் அன்றி வேறு வார்த்தைகளில் சொல்லுதல் இயலாது.பின்நவீனகோலங்களால் நிறைந்த  கவிதைகள் இவை.
காட்டாற்று வெள்ளத்தின்
ஓரம் நின்று
கைகால் முகம்
கழுவிக் கொள்கிறான்
அயோக்கியன்
அவ்வளவு அயோக்கியத்தனமும்
அடித்துக் கொண்டு போனது வெள்ளத்தில்.
*
சந்தரப்பவாதமும்
அயோக்கியத்தனமும்
நல்லநண்பர்கள்
வேண்டுமானால்
இரண்டு நல்ல
நண்பர்களை உற்றுக்
கவனியுங்கள்
*
வாரச்சந்தைக்கு காய்கறி
வாங்க வந்த பெண்ணிற்கு
நான்கைந்து பிள்ளைகள்.
நாலும் நாலுதிசையை
வாங்கித்தர கைகாட்டின.
அவள் குழந்தைக்கு
பொரியுருண்டை வாங்கித்தந்தாள்.
பொடிசுகள் பின்னேவர
பொரியுருண்டை கீழே விழுந்து
பாதாளத்தில் உருண்டது.
ஏமாந்த குடும்பம் எட்டிப்பார்க்க
பாதாளபைரவி மேலெழுந்து
குழந்தையின் கன்னத்தைக்கிள்ளி
நல்லசுவை நல்லசுவை என
நன்றி சொன்னது.
*
நீலப்புரவியில் வந்தவன்
சொன்னான்
தோற்றுப் போனவனுக்கு
நண்பனாக இருந்தவன்
நாசூக்காய் அவனைக் கைவிட்டு
இந்தப்பக்கம் வருகிறான்
முடிந்தால் ஓடிவிடு .
*
இது போன்ற இவரது சிறுகவிதைகள் அனுபவங்களின் சாறு படிந்தவை.நவீனத்தின் கச்சிதமும்,அழகும்,வலியும் கொண்ட “மகளின் கண்ணீர் “அபூர்வமானதோர் நவீன கவிதை.சுய எள்ளலும் , பகடியும்,தரிசனங்களும் இவரதுகவிதைகளை எழுச்சியடையச் செய்கின்றன.இத்தொகுப்பின் மூலம் கண்டராதித்தனும், திருச்சாழலும் தமிழ்க்கவிதையின் பரப்பில் நிலையானதொரு பேறுபெறுகின்றனர் .ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட கவிஞனின் தொகுப்பு இது.

மகளின் கண்ணீர்

நான் பொருட்படுத்தத் தேவையில்லாத
கணத்திலொன்றுதான் அது
வாகனத்தில் வந்தவன் தவறி
என் மீது மோதியிருந்தான்
பெரும் பிழையில்லை
மன்னிக்கக் கூடியதுதான் ஆனால்
இது பிழையென அறியாத
குறுஞ்சினத்துடன்
பார்த்து வரக்கூடாதா என்றேன்.
ஓங்கி ஒரேயொரு குத்து
முகத்தில் ரத்தம் வழிகிறது
கீழே கைவிரலைப் பிடித்தப்படியிருந்த
மகள் அண்ணாந்து பார்க்கிறாள்
பிறகு சுற்றும் முற்றும் திரும்பிப் பார்க்கிறாள்
அந்த கணத்தைப் பார்த்தவர்கள்
கடந்து கொண்டேயிருக்க
என் மூன்றே வயதான மகள் அழக் கூடுமென
நினைத்தேன் அளவில்லை
நானிந்த நகரத்தை விட்டு அகல எத்தனித்தேன்
காற்று சலசலக்க பேருந்து சென்றது
எனக்கோ மகளின் சாந்தம் மாளாதிருந்தது
திடீரென விழித்து முகத்தைப் பார்க்காமல்
காயத்தை வருடினாள்
இப்போது இடதுபக்கத் தோளில் படர்கிறது
வெதுவெதுப்பான மகளின் கண்ணீர்
என் தாளாத குமிழொன்று தளும்பிக் கொண்டே
வீடு போகிறது.

பகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்
தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்
வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்
ஏகமென்றிருப்பது
அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை
சாழற்மலர்ச்செண்டு
பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு
 கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள்
முந்தைய கட்டுரைராஜராஜ கோலான்
அடுத்த கட்டுரைஅயல் இலக்கியங்களும் தமிழும்