மரத்திலிருந்து கனியின் விடுதலை

aso

சரஸ்வதி தன் கணவனுடன் ஒரு மகானைப் பார்க்கச் செல்கிறாள். மகான் நகரில் ஒரு வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறார். தன் வாழ்க்கைக்கு ஏதாவது வழிசெய்வார் என அவள் எதிர்பார்க்கிறாள். அவள் பிறந்தவீடு எளிமையானது. புகுந்த வீடு அதைவிட எளிமையானது. நகரத்தில் ஒரு சிறிய ஒண்டுக்குடித்தனத்தில் கணவனுடனும் ஒரு குழந்தையுடனும் வாழ்கிறாள். அவள் கணவன் மூர்க்கமானவன். கெட்டவன் அல்ல, பொதுவான நடுத்தரவர்க்கத்து கணவர்களைப்போல தன்முனைப்பும் அறியாமையும் கடுகடுப்பும் கொண்டவன்.

 “‘வெற்றிலை பாக்கு புகையிலை, மாதம் நூற்றுமுப்பது ரூபாய் சம்பளம், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இருமல், ஜ÷ரம், ஒரு தமக்கை, இரண்டு தங்கைகள், முன்கோபம், சில சமயங்களில் கை ஓங்கியும் அறைந்து விடுவது, தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகும் தொடர் கதைகளை விடாமல் படிப்பது, இருபத்திரண்டு ரூபாய்க் குடக்கூலி, வீட்டுக்காரரிடம் ஒரு நாள் உறவு, ஒரு நாள் சண்டை, வாரத்திற்கொரு சினிமா என்பதுதான் அவன் வாழ்க்கையாக இருந்தது” என்று அவளுடைய பார்வையில் அவனை கதை விவரிக்கிறது

அன்றாடப் பிக்கல்பிடுங்கலுடன் இனிமை என எதுவுமே இல்லாத வாழ்க்கை வாழும் சரஸ்வதிக்கு அந்த மகான் மேல் ஏன் ஈடுபாடு வந்தது என்று அவளுக்கே தெரியாது. யாரோ சொல்லக்கேட்டு மனதில் பதிந்துவிட்டது. அங்கே சென்றால் எல்லாமே சரியாகிவிடும் என்று. கணவனை கட்டாயப்படுத்தி அழைத்துச்செல்கிறாள். குழந்தையை அவள்தான் தூக்கவேண்டும். அதற்கு கொடுக்கவேண்டிய பால்பவுடர், பிளாஸ்கில் வெந்நீர், அதை கலக்கவேண்டிய டம்ப்ளர் பால்புட்டி, அதற்குரிய டவல் எல்லாவற்றையும் ஒரு கூடையில் வைத்து எடுத்துக்கொள்கிறாள். அவனுடன் தட்டுத்தடுமாறி பேருந்தில் செல்கிறாள். அவன் அவள் வேகமாக வரவில்லை என வசைபாடிக்கொண்டே இருக்கிறான்

மகானைச்சுற்றி ஏராளமான மனிதர்கள். அவருடன் சரஸ்வதியால் தனிமையில் பேசமுடியவில்லை. அவ்ள் அங்கே சென்றதுமே தனிமைப்பட்டுச் சுருங்கிவிடுகிறாள். மௌனமாக அழமட்டுமே முடிகிறது. அவளுக்கு அந்த நாளே ஏமாற்றம்தான். அவன் எரிந்துவிழுந்துகொண்டே இருக்கிறான். அவர்கள் திரும்பி வருகிறார்கள். வழியில் அவள் கால் கல்லில் முட்டிக்கொள்கிறது. ரத்தம் வழிகிறது. ஆனால் கையில் கூடையுடனும் தோளில் குழந்தையுடனும் புடவை தடுக்க அவள் நடந்துதான் ஆகவேண்டும். அவன் பேருந்துநிலையத்திலேயே அவளை வசைபாடுகிறான்.

அவர்கள் வீடுதிரும்புகிறார்கள். அவன் வந்ததுமே படுத்துக்கொள்கிறான். அவள் குழந்தைக்குப் பால்கொடுத்தாகவேண்டும். பால்புட்டியை சாமியாரின் இல்லத்திலேயே மறந்துவைத்துவிட்டு வந்திருப்பது தெரிகிறது. பால்புட்டிக்குப் பதில் டம்ளரில் பால்கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிவிடலாமா என எண்ணுகிறாள். ஆனால் குழந்தை பால்குடிக்க மறுக்கிறது. பழைய பால்புட்டி ஒன்று பரணில் இருப்பது நினைவுக்கு வர ஒரு முக்காலியை போட்டு பரணில் ஏற முயல்கிறாள். புண்ணான கால் வலிக்கிறது. புடவை மீண்டும் தடுக்குகிறது. பரணிலிருந்து பொருட்கள் சரிகின்றன

அவள் கணவன் தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறான். தூக்கம் கலைந்தாலே அவன் மூர்க்கமாகிவிடுவான்.“மூதேவிக்குக் குழந்தைப் பால் கொடுக்கறதற்குத் துப்புக் கிடையாது. ஒரு நிமிஷம் அழாமல் வைத்துக்கொள்ளத் தெரியாது.. ஏய், அதை நிறுத்து,”என்கிறான். ஆனால் குழந்தை கைகால்களை உதைத்து வீரிட்டு அழுகிறது. அவன் படுக்கையிலிருந்து எழுந்து வந்து சரஸ்வதியை கண்மூடித்தனமாக அடிக்க ஆரம்பிக்கிறான். அவளை உதைத்து கழுத்தைப் பிடித்து தள்ளி “போடி ,வீட்டை விட்டுப்போடி” என்று துரத்துகிறான்.

அத்தருணத்தில் சரஸ்வதியில் ஏதோ ஒன்று நிகழ்கிறது. அவள் எதிர்நின்று அவன் கண்களை நோக்கி ,”உம்” என்கிறாள். அவன் திடுக்கிட்டுப் பயந்து பின் வாங்குகிறான். சரஸ்வதி கண்களை அகல விர்த்து, “உம், ஜாக்கிரதை,” என்கிறாள். குழந்தை அழுகையை நிறுத்துகிறது. அவன் பின்னால் சென்றுவிடுகிறான்

அவனுக்குள் ஏதோ ஒன்று முறிந்துவிடுகிறது. அதன்பின் அவன் அவளிடம் பேசுவதில்லை. பலநாட்கள் பேசாமலிருக்கிறான். அவள் அவன் பேசுவான் என்று காத்திருக்கிறாள். வீட்டில் எந்தப்பொருளும் இல்லை. குழந்தைக்குப் பால்கூட. அவள் “ வீட்டில் சமையல் செய்ய எந்தப் பொருளும் இல்லை” என்கிறாள். அவன் எதற்குமே மறுமொழி சொல்லாமல் இருக்கிறான்.

ஒருகட்டத்தில் சரஸ்வதி அவன் கால்களைப் பிடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பிக்கிறாள். “நான் என்ன பாபம் செய்தேன்? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? ஏன் என்னோடு ஒன்றும் பேசாமலிருக்கிறீர்கள்? எனக்கு உங்களை விட்டால் வேறு யார் கதி?” என்று மன்றாடுகிறாள். ஆனால் அவள் என்ன சொன்னாலும் அவன் உறைந்த முகத்துடன் அமைதியாக இருக்கிறான்

”என்னை அடியுங்கள். நன்றாக எலும்பு ஒடிய அடியுங்கள். நான் நீங்கள் அடிப்பதை எதிர்த்துத் திமிறினதற்குத்தானே இப்படி இருக்கிறீர்கள்? இதோ அடியுங்கள். நன்றாக அடியுங்கள்.” என்றெல்லாம் கதறுகிறாள். அவனிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.சரஸ்வதி மீண்டும் அங்கே அந்த மகானைப் பார்க்க செல்கிறாள். அவரிடம் சொன்னால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறாள். ஆனால் அவரைப்பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு அழுகைதான் வருகிறது. மகான் அவளை அனுதாபத்துடன் பார்த்து ஓரிரு சொற்கள் சொன்னபின் வழக்கமான வழிபாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்..

இனிமேல் மகானைப் பார்ப்பதில் பயனில்லை என்று சரஸ்வதி திரும்பி வருகிறாள். அவள் கணவன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. பிறகு அவன் வரவே இல்லை

அசோகமித்திரன் 1962ல் எழுதிய விமோசனம் என்னும் கதை இது. தமிழிலக்கியத்தில் மிக அடங்கியதொனியில் மிகமிக யதார்த்தமான முறையில் கதைகளை எழுதியவர் அசோகமித்திரன். அக்கதைகளில் உள்ள அன்றாட யதார்த்ததுடன் நாம் நம்மைப் பொருத்திக்கொண்டால் மட்டுமே அவற்றை ரசிக்கமுடியும். பெரும்பாலான கதைகளில் மிக எளிமையான நிகழ்வுகள்தான் இருக்கும். கதை என ஏதும் இருக்காது, சில சம்பவங்கள் மட்டும்தான்.

இக்கதையில் சரஸ்வதியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைத் தருணம் நிகழ்கிறது. மிகச்சாதாரணமாக. பின்னர் அது ஏன் அப்படி நிகழ்ந்தது என எண்ணி எண்ணி அவள் ஏங்கியிருக்கக்கூடும். புரிந்துகொள்ளமுடியாமல் தவித்திருக்கக்கூடும். உண்மையில் அன்று நிகழ்ந்தது என்ன? சொல்லப்படாமலேயே அந்தக்கதை பிராமணக் குடும்பப் பின்னணிகொண்டது என்றும் அவர் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி என்றும் தெரியும். சரஸ்வதி மிக சம்பிரதாயமான மனைவி. அடங்கிப்போகிறவள், கணவனை பொருளாதாரரீதியாகச் சார்ந்திருப்பவள், ஆகவே அடிமை. வெளியுலகம் அறியாதவள். தன் துயருக்கெல்லாம் அவள் மரபிலேயே மீளும்வழி தேடுகிறாள்.

அப்படிப்பட்டவள் ஓர் எல்லையில் திரும்பி நின்று எதிர்க்கிறாள். அந்த மகான் அவள் செய்த அந்தச் செயலை ஏற்றுக்கொள்வாரா? ஒருபோதும் மாட்டார். அது பதிவிரதையின் இயல்பல்ல என்றுதான் சொல்வார். ஆனால் அவள் அந்த கடைசி எல்லைக்கு தள்ளப்பட்டுவிட்டாள். அந்த எதிர்ப்பு இயல்பாக உருவாகி வந்த ஒன்று

அந்தக் கணவன் ஏன் அப்படி திகைத்து செயலிழந்துபோனான்? அவன் மனைவி என நினைத்துவந்த அந்த உருவகம் அவள் எதிர்த்து உறுமிய அக்கணத்தில் முற்றாக உடைந்துவிட்டது என்பதனால்தான். அதன்பின் அவளை அவனால் வழக்கம்போல கையாள முடியாது. அடித்தாலும் பிடித்தாலும் காலடியில் கிடக்கும் பெண்ணை கையாளவே அவனுக்கு மரபு கற்றுத்தந்துள்ளது. இந்தப் புதிய பெண்ணை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது பழகாத யானை. இதன்மேல் பாகன் என அவனால் அமர முடியாது.

சரஸ்வதி புதுமைப்பெண் அல்ல. மரபானவள்தான். ஆகவே அவள் காட்டிய அந்த எதிர்ப்பை மாறிவந்த காலகட்டத்தின் அடையாளம் என கொள்ளவேண்டியதில்லை. அது பெண் என அவள் கொண்ட எதிர்ப்புதான். அவளைப்போலவே அவளுடைய பாட்டிகளும் ,முப்பாட்டிகளும் கூட அதேவகையான எதிர்ப்பை காட்டியிருக்கமுடியும்.

ஆனால் இக்கதையில் உள்ள இன்னொரு அம்சமே நாம் கவனிக்கவேண்டியது. சரஸ்வதி தீர்வுக்காக மகானைத் தேடிச்செல்கிறாள். இரண்டாம்முறை அவளுக்குத் தெரிந்துவிடுகிறது, அவரிடம் அவளுக்கான பதில்கள் ஏதுமில்லை என்று. மரபிலிருந்து அவளுக்கு இனி வழிகாட்டலேதும் கிடைக்காது. அது அவளுக்கு இனிமேல் ஆறுதல்கூடச் சொல்லப் போவதில்லை. அவள் வாழ்க்கையை அவளே சொந்த அறிவால், சொந்தத் துணிவால் கண்டடைந்துகொள்ள வேண்டியதுதான்
இந்த அம்சத்தால்தான் இக்கதை நம் காலகட்டத்தின் பெண் வாழ்க்கையின் ஒரு பெருந்தோற்றத்தை அளிப்பதாக மாறுகிறது.

விமோசனம் எதிலிருந்து? சரஸ்வதி உண்மையில் கைவிடப்படுகிறாள், அதை ஏன் அசோகமித்திரன் விமோசனம் என குறிப்பிடுகிறார்? தன் கணவனிடமிருந்து விமோசனம் பெற்றாள் என்று ஒரு வாசிப்புக்குச் சொல்லலாம். ஆனால் அவள் விடுதலை பெறுவது மரபில் இருந்து என தோன்றுகிறது. கண்ணீருடன் அன்னையிடம் செல்லும் மகள் போல அவள் திரும்பத் திரும்பச் சென்று கொண்டிருந்த மதத்தில் இருந்தும் சம்பிரதாயங்களில் இருந்தும் பழமையில் இருந்தும்.சரஸ்வதி புதிய காலகட்டத்தின் கருத்துக்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. அவளுக்கு வெளியுலகமே தெரியாது. அவள் அறிந்ததெல்லாம் சமையற்கட்டும் குழந்தையும்தான். அவள் மரபை விடவில்லை, மரபு அவளை விட்டுவிட்டது என்பதுதான் மேலும் நம்மை வந்தடையும் பொருள். ஏனென்றால் சரஸ்வதி இன்று தேடுவது குறைந்த பட்சத் தன்மதிப்பான ஒரு வாழ்க்கையை. அதை அவளுக்கு பழைமையான மரபு அளிப்பதில்லை.

இந்தக்கதையை நான் முன்னர் வாசித்தபோது இந்த அர்த்தத்தை நான் அடைந்திருக்கவில்லை. ஆனால் என் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவரின் அன்னை, நடுத்தர பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர், விதவையாகி குடும்பச்சூழலால் கைவிடப்பட்டபோது மரபு அவருக்கு எந்த மாற்றுவழியையும் அளிக்கவில்லை என்பதை அந்நண்பர் சொன்னார். அவர் தானாகவே படித்து வேலைக்குச் சென்று புதியவாழ்க்கையை அமைத்துக்கொண்டார். மரபு அவருக்கு எதிராகச் செயல்பட்டது. கட்டுப்படுத்த முயன்றது. மரபை எதிர்த்தமையால், அதில் தனக்கு பதில் இல்லை என்று தெரிந்துகொண்டமையால் அவர் தப்பினார். அதைக் கேட்டதுமே இக்கதை எனக்குள் திறந்துகொண்டது

தமிழிலக்கியத்தில் பாரதி, அ.மாதவையா காலம் முதலே மரபை மீறி எழுந்த பெண்களை சித்தரித்திருக்கிறார்கள். மரபால் உதறப்பட்டு அதை கடந்துசெல்லும் ஒரு பெண்ணின் சித்திரத்தை காட்டுகிறது என்பதனாலேயே அசோகமித்திரனின் இக்கதை மிக முக்கியமானதாக ஆகிறது.

முந்தைய கட்டுரைபகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9