பிச்சை

pissai

அன்புள்ள ஜெ,

பிச்சை எடுப்பவர்களைப்பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா? கட்டுரையில்

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வண்ணாரப்பேட்டையில் ஒரு பிச்சைக்காரர் இறந்து கிடந்தார். அவருடைய கோணிப்பையில் இருபத்தெட்டாயிரம் ரூபாய் வெறும் நாணயங்களாகவே இருந்தது அன்றைய தினத்தந்தியின் செய்தி.

நானெல்லாம் கிராமத்திலிருந்து வந்தவன். நான் சிறு வயதில்(70 மற்றும் 80 களில்)  பார்த்திருக்கிறேன், ராப்பிச்சைக்காரர்கள்  வருவார்கள், வீட்டில் நிச்சயம் சாப்பாடு எடுத்துவைத்திருப்பார்கள். அநேகமாக சாதம்தான் இருக்கும்(ஒரு பிச்சைக்காரர் எல்லா வீடுகளிலும் “அம்மா வெஞ்சனம்” என்று கேட்பதைப் பார்த்திருக்கிறேன்) நிச்சயம் யாரும் சாப்பிடாமல் தூங்க மாட்டார்கள். யாரும் அவர்களுக்கு காசு போட்டு நான் பார்த்ததில்லை. சென்னையில் சாப்பாடு கொடுத்தால் வாங்கிக்கொள்ள ஆள்  இல்லை. காசு துட்டு மணி தான்.

நான் வேலை நிமித்தமாக அயர்லாந்து சென்றிருந்தபோது அங்கு ஒரு வெள்ளைக்காரர் அங்குள்ள பிச்சைக்காரனைத் திட்டிக் கொண்டிருந்தார் “உன்னால் இந்த நகருக்கு பெரிய இழுக்கு” என்று. (அந்த பிச்சைக்காரனுக்கு நான் பிச்சை இட்டேன். “வெள்ளைக்காரனுக்கே பிச்சை போட்டவண்டா  நானு “)  அதே போலவே சங்கரன்கோவிலில் ஒரு பிச்சைக்காரியைத்  திட்டினான் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்த என் மச்சினனின் ஸ்கூல் போகும் பையன். அவர்களுக்கு அப்படி கற்பிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். நமக்கு தருமம் தலைகாக்கும் தான்.   புரட்டாசி சனிக்கிழமைகளில் “வெங்கட்ராமா கோவிந்தா” என்று வரும் பிச்சைக்காரர்களுக்கு அரிசி போட நான் நீ என்று சிறு வயதில் போட்டி போட்டது ஞாபகத்துக்கு வருகிறது. நிற்க.

சென்னைக்கு ஒருவர் புதிதாக வந்தால், அதுவும் எலக்ட்ரிக் ட்ரைனில் பயணிக்கும் நடுத்தர வர்க்கமாக இருந்தால், பிச்சைக்கரார்கள் தொல்லை நிச்சயம் அவரை எரிச்சலூட்டவே செய்யும். பீச் தாம்பரம் ட்ரைன் ரூட்டில்விதம் விதமான பிச்சைகாரர்கள். 1990 களில் பயணம் செய்திருந்தால் இவர்களை நீங்கள் நிச்சயமாகப் பார்த்திருக்கலாம். அதிசயமாக சிலர் நன்றாகப் பாடுவார்கள். ஒருவர் பொது அறிவு வினா விடை வரிசையாகச் சொல்வார். எம் ஜி ஆருடைய வாழ்கை வரலாற்றை கூறுவார். எம். ஜி. ஆரோட மொத பொண்டாட்டி..என்று ஆரம்பித்து நாலாவது பொண்டாட்டி எங்கக்கா லதா..என்று முடிப்பார்.    ஹுசைன் பீட்டர்(?) என்று பொறிக்கப்பட்ட சாரங்கியை வாசித்துக்கொண்டு வருவார் ஒருவர். அதில் சில பாட்டுக்கள் தான் வாசிக்க வரும்(அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே…, அருகில் வந்தாள் உருகி நின்றாள்..மாதிரி). கேட்க இதமாக இருக்கும். கண் தெரியாத ஒருவர் புல்லாங்குழல் வாசிப்பார். இவர் வாசிக்கும் “முத்துக்களோ கண்கள்..” மற்றும் “என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்..” க்கு நான் உட்பட பலர் அடிமை. நான் அதிகபட்சமாக கொடுத்தது (பிச்சை இட்டது எனக்கூற மனம் வரவில்லை)அவருக்குத்தான். கண் தெரியாத தம்பதியர் பாடிக்கொண்டே வருவார்கள். கர்ண கடூரமான குரலில் டூயட் வேறு (இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை …). அவர்கள் ரயிலுக்குள் ஏறினால் உடனே இறங்கி அடுத்த பெட்டியி; ஏறி விடுவேன். ஒரு சமயம் ஓடுகிற ரயிலில் இருந்து கூட குதித்திருக்கிறேன். ஏனென்றால் அடுத்த ஸ்டேஷன் வரும் வரை அந்தக்குரல்களைத்  தாங்க முடியாது. சற்றே குரூரமாக தொனிக்கலாம். இவர்கள் அன்றைய மனநிலையை மோசமாக பாதிக்கக்கூடியவர்கள் என்பதை வருடக்கணக்காக சகித்துக்கொண்டு போன என் அனுபவத்திலிருந்து கூறுகிறேன். அதுதான் உண்மை.

பசிக்காகப் பிச்சைஎடுப்பதை, உடல் ஊனமுற்றோர்  பிச்சைஎடுப்பதைப்  புரிந்துகொள்கிறேன். இதிலும் கூட வேறுபாடு உண்டு. எலக்ட்ரிக் ட்ரெயின்ல்  கண் தெரியாத ஒருவர் கடலை மிட்டாய் விற்றுக்கொண்டு வருகிறார். இவர் தன் ஊனத்தைக்கூட  சொல்லிக்கொள்வதில்லை. அதே நேரத்தில் “கண் தெரியாதவன் சாமி தர்மம் பண்ணுங்க” என்று வருகிறார் ஒரு பிச்சைக்காரர். இங்கு பிச்சை அளிப்பது நியாயமா?    பிச்சை எடுப்பது என்ன மாதிரியான மன நிலை? பிச்சைக்காரர்களுக்கு அடிப்படைத்தேவை உணவு. எதற்காக இவர்களுக்கு காசு பிச்சையிடவேண்டும்? இதற்காக அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா?  (எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் போய் “ஒட்டுப்பிச்சை” எடுக்கவே இவர் களுக்கு நேரம் சரியாக இருப்பது வேறு விஷயம்) இந்திராகாந்தி காலத்தில் ஒருமுறை சஞ்சய் காந்தி டெல்லியிலிருந்து பிச்சைக்காரர்களை “ஒழிக்க” முயற்சி மேற்கொண்டதாக செய்தி உண்டு. நீங்கள் உலகம் சுற்றியவர். உங்களுடைய அனுபவம் என்ன?

அன்புள்ள

கிருஷ்ணன் சங்கரன்

***

அன்புள்ள கிருஷ்ணன்,

பிச்சையில் பலவகை. இல்லாமயால் பிச்சை எடுப்பது முதல்வகை. அதை முடிந்தவரை ஒரு சமூகம் இல்லாமலாக்கவேண்டும். இன்று உண்மையில் இல்லாமையால் பிச்சை எடுப்பது இந்தியாவில் மிகமிகக் குறைந்துவிட்டது. உணவு என்பது இன்று இந்தியாவில் ஒரு பிரச்சினையே அல்ல என்பதை பயணம் செய்யும் எவரும் அறியலாம். ஒரு ரூபாய்க்கு அரிசி, கோதுமை கிடைக்கும் நாடு. என்ன செய்தாலும் நாளுக்கு நூறுரூபாய் எவருக்கும் கிடைக்கும் நாடு. யோசித்துப்பாருங்கள். நம் இளமையில் கிராமங்களில் வீட்டுக்குப் பிச்சைக்காரர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். இன்று கிராமங்களில் பிச்சைக்காரர்கள் தட்டுப்படுவதே இல்லை. முழுக்கமுழுக்க நகர்சார்ந்தது அது. அதிலும் பெருநகர் சார்ந்தது

இன்னொன்று பிச்சை எடுக்கும் இனக்குழுக்கள். அவர்கள் தொன்றுதொட்டே இவ்வாறு வாழ்ந்துள்ளனர். அவர்களை எளிதில் இன்னொரு வாழ்க்கைக்குக் கொண்டுவர இயல்வதில்லை. அதற்கான முயற்சிகள் எடுக்கும் சில அமைப்புக்களை நான் அறிவேன். அவர்கள் பிச்சையை விட்டு வெளியே வர விரும்புவதில்லை. வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வது அவர்களுக்கு மிகக்கடினம். ஆனால் மெல்லமெல்ல அவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினரும் பிச்சை எடுக்கும் வாழ்விலிருந்து வெளியேறிவருகிறார்கள்

ஆகவே பிச்சை என்பது இன்றைக்கு ஒரு தொழில்தான். மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழில் அது. அதை நான் என் அலைச்சல் காலகட்டத்தில் கண்டிருக்கிறேன். அதையே ஏழாம் உலகம் ஆக எழுதினேன். மீண்டும் நான்கடவுள், ஆறுமெழுகுவத்திகள் படங்களுக்கான களஆய்வில் அதை விரிவாகக் கண்டேன். அது ஒரு குற்றவட்டம். அதை அரசு கண்காணித்து ஒடுக்கியாகவேண்டும். ஆனால் அது இங்கே இன்னும் நிகழவில்லை.

சோம்பல், போதைப்பழக்கம் ஆகியவற்றால் உருவாகும் பிச்சையும் உண்டு. இன்று நோயுற்றவர்கள், கைவிடப்பட்டவர்களுக்குக் கூட பிச்சை எடுக்கவேண்டியதேவை இந்தியாவில் எங்குமில்லை. மிக அரிதாகவே அப்படி பிச்சை எடுத்தாகவேண்டிய நிலையில் உள்ளவர்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அவர்களைக்கூட அறக்கொடைகள், இல்லம் நடத்துபவர்கள் பிடித்துக் கொண்டுசெல்கிறார்கள். அங்கிருந்து தப்பி மீண்டும் தெருவுக்கு வந்துவிடுகிறார்கள். அந்நிறுவனங்களின் ஒழுங்கும் கட்டுப்பாடும் ஒத்துவருவதில்லை. பிறருடன் ஒத்துப்போக முடிவதில்லை. தெருவிலிருக்கும் சுதந்திரம் தேவையாகிறது. அதைவிட அந்தவாழ்க்கையிலுள்ள சிறிய சவால் பிடித்திருக்கிறது.

பிச்சையை முற்றாக ஒழிக்கமுடியுமா என்பது ஒருவினா. நான் வாஷிங்டனில் வெள்ளைமாளிகை முன்னாலேயே பிச்சை எடுத்து வாழ்பவர்களைக் கண்டேன்.அமெரிக்கா முழுக்க பிச்சைஎடுப்பவர்களை பார்த்துக்கொண்டே சென்றேன். சமீபத்தில் ஐரோப்பா சென்றபோது பாரீஸ், ரோம் எங்கும் பிச்சைக்காரர்கள். ரயிலில் குழந்தையுடன் பிச்சை எடுக்கிறார்கள். மின்ரயிலில் பாடுகிறார்கள். பனியில் குறுகி அமர்ந்திருக்கிறார்கள். கணிசமானவர்கள் அகதிகள். கொஞ்சம் வீடிலிகள். போதை அடிமைகள். அவர்களை முழுமையாக ‘குடியமரச்’ செய்வது கடினம்.

ஆனால் அமெரிக்காவை வைத்துப்பார்க்கையில் பிச்சைக்கு போதைப்பழக்கம் மட்டும் காரணம் அல்ல என்று தெரிகிறது. அதில் ஒரு திமிர், ஒரு மீறல் இருக்கிறது. ஒருவர் அடுத்தவேளை டோப்புக்கு எனக்கு உதவுங்கள் என எழுதி கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார். அந்த திமிர் எனக்குப்பிடித்திருந்தது. அது ஒருவகை படைப்பூக்கநிலை. ஒருவர் எனக்குச் சோறு மட்டும் போதும் , வேலைசெய்யமாட்டேன் என்று சொன்னால் நாகரீகச் சமூகம் அதை அனுமதிக்கவேண்டும் என நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னார். அதை நான் ஆதரிக்கிறேன். என் மதிப்பிற்குரிய எல்லாருமே பிச்சை எடுத்திருக்கிறார்கள். நானும் பிச்சை எடுத்திருக்கிறேன். துறவிகள், அலையும்கலைஞர்கள் ஒருவகை பிச்சைக்காரர்கள்தான். அவர்களின் உளநிலையைப் லௌகீகப் பொதுச்சமூகம் புரிந்துகொள்ள முடியாது. உழைப்பை வைத்து அவர்களின் பங்களிப்பை மதிப்பிடவும் முடியாது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும்சோம்பேறிகளாகவும், போதையடிமைகளாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களிலில் ஒரு சிறுதரப்பினர் படைப்பூக்கம் கொண்டவர்கள். பூச்சிமருந்து தெளித்து நல்லபூச்சிகளையும் கொல்வதுபோல அவர்களை இல்லாமலாக்குவது பெரிய பண்பாட்டு அழிவை கொண்டுவரும்.

ஜெ

முந்தைய கட்டுரைகன்னிநிலம் -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13