பகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்

download (1)

 

“சொல் இருமுனை கொண்டது. அதன் ஒலியெனும் முனையே புறவுலகை தொட்டுக்கொண்டிருக்கிறது. மறுமுனையில் குறிப்புஎனும் கூர் முடிவிலியை தொடுகிறது.” என்கிறது வெண்முரசு. சொற்களின் இணைவான படைப்பிலக்கியத்தில் சிறுகதை துவங்கி நாவல், காவியம், கவிதை என பல வடிவங்கள் உள்ளன. அனைத்து வடிவங்களும் புறவுலகு என்னும் முனையை தொட்டு விரிவாக்கி நம்முன் பரப்புபவையே, கவிதை தவிர்த்து. கவிதை என்னும் வடிவம் புறத்தைக் காட்டக் கூடாது என்றில்லை, ஆனால் அதோடு மட்டுமே நின்று விடுவது நல்ல கவிதை அல்ல. நனவுள்ளம், கனவுள்ளம், ஆழுள்ளம் என விரியும் அக அடுக்குகளில் நாம் அறியும் புறவுலகு என்பது நனவுள்ளம் பொருளைச் சந்திப்பதால் உருவாவதே. நாமறிந்த சொற்களின் ஒரு முனை இந்த நனவுள்ளத்தையும், கனவுள்ளத்தையும் ஆள்பவை. அதன் மறுமுனை தொட்டுக் கொண்டிருக்கும் பிற இரு அடுக்குகளையும் சொல்லில் இருந்து சென்றடைவது அசாத்தியம், சாமானியருக்கு!! பிற அனைத்து படைப்பு வடிவங்களும் ஒரு மையத்தைச் சுற்றி பயணிக்கும் போது, வரையறுக்கப்பட்ட ஒன்றாகவோ, இறுக்கமாகவோ அல்லாது நெகிழ்வாக தனக்குரிய ஒரு கூறு பொருளைக் கொண்டு சொல்லில் செதுக்கப்படும் ஒரு கவிதை வாசகரின் அகத்தில் பல அடுக்குகளைத் தாண்டி, முற்றிலும் வேறு ஒரு தளத்தில் திறக்கும் சாத்தியம் கொண்டதாக இருக்கிறது. இந்த அக அடுக்குகளைத் தாண்டிச் செல்லும் எழுத்து பிற படைப்பு வடிவங்களில் வெளிப்படுகையில் அது கவித்துவம் என்றே அழைக்கப்படுகிறது.

 

கவிதை மொழியின் புதுப் புது சாத்தியங்களை வாசகனுக்கும், சக படைப்பாளிக்கும் காட்டுவது. இப்புது சாத்தியங்கள் என்பவை பெரும்பாலும் நனவுள்ளத்தின் விதிகள் தலைகீழாகச் செயல்படும் கனவுள்ளத்தைத் தீண்டும் வரித்தொகைகளாக, வாசகரின் கற்பனை விரிவுக்கு ஏற்ப அவரவர்க்குரிய தனித்த பொருள் தரும் கவிதையாக ஒரு மொழிபை மாற்ற வல்லவை. இவற்றைச் சாத்தியமாக்கும் கவிதைகளையே ஒரு வாசகன் கொண்டாடுகிறான். மூன்றாவதான ஆழுள்ளம் என்பது மாறாதது. புயல் கொந்தளிக்கையிலும் ஆழியின் மடி அசைவதில்லை. இந்த இடத்தில் சேர்ந்துள்ளவை மானுடம் இதுகாறும் கண்டடைந்த அறிதல்கள், குறிகளாக, குறியீடுகளாக, ஒலிகளாக. இவற்றைக் கடந்து செல்லும் ஒருவன் கண்டடைவது அனைத்தும் பிறந்த ஒரு முடிவிலியை. இதையே ஆன்மிகம் என்றும், அகப்பயணம் என்றும், மரபு என்றும் சொல்கிறோம். மிக அபூர்வமாக கவிதை என்பது ஆழுள்ளத்தையும், அதையும் தாண்டிய ஒரு அகத்தையும் தீண்டக் கூடும். ஆனால் இந்நிலை என்பது மீண்டும் வாசகனின் கற்பனாவிலாசத்தைச் சார்ந்த ஒன்று. கண்டராதித்தன் அவர்களின் கவியுலகு இந்த சாத்தியங்களை முன்வைக்கும் சில அபூர்வமான கவிதைகளைக் கொண்டதாக இருப்பதே அவரை தனித்தன்மை கொண்டவராக்குகிறது எனலாம்.

 

மீண்டும் மீண்டும் அவரது கவியுலகு பற்றிய கட்டுரைகளில் பேசப்படும் ஒன்று அவரது கவிதைகளைத் திறக்கத் தேவைப்படும் மரபு சார் அறிவு. இவையே அக்கவிதைகளின் அனுபவத்தை பொருள் தாண்டிய ஒன்றாக, சொல்லின் மறுமுனையத் தீண்டும் ஒன்றாக மாற்றுகின்றன. உதாரணத்திற்கு அவரது ‘காலமாற்றத்தின் காதல்’.

 

‘காலமாற்றத்தின் காதல்’. 

 

கொடுங்காநல்லூர் தேர்முட்டியிலிருந்து
அந்தகன் பள்ளியறைக்குச் சென்றதற்கு மறுநாள்
காலமாற்றத்தைக் கண்டுணரா மூடன்
குடிபோதையில் இருண்ட வீதியில் நின்று
ஊர்பற்றும் தழலொன்றை வைத்திருந்த அரூபியைத்
தனக்குத்தெரியும் என்றான்
கூடவே நாய்கள் கேவியழ நரிகள் கோடியைவிட்டு
ஊர் எல்லைவரை எட்டிப்பார்த்தன
அது நல்ல மழைக்கும்,நல்லகாற்றுக்குமான நன்னாள்
பிறகவன் கிழப்பிணியெய்திய பெண்ணின் கால்தடுக்கி மல்லாந்தான்
கிழவி காலை அணத்தியபடி மடக்கினாள்
நீ சன்னலைத் திறக்க மறுத்தாய்
இருள்கவ்வும் பூப்பந்தாய் உன்பிராட்டி
காதோடுரசும் பாவத்தில் கேட்டாள் யாரிவன்
யாரிவன் என்று சொல்ல
கள்ளப்பிழைபோல் ஊர்ந்து செல்லும்
அரவம் என்றோ அல்லது நெடுங்கணமாய்
நம்மை அண்ட நிற்கும் அபசகுனம் என்றாவது
மறுத்த அவள் நற்காலத்தின் புத்தம் புதிய யுவன்தான் என்றாள்
இந்நடுச்சாமத்தில் அவளுக்கு கொள்ளைக்காதல்
நீ தெருக்கதவைத் திறந்துவிட்டாய்
சில்லிட்ட காற்று சலசலக்கிறது.

 

அந்தகாசுரனின் கதையை அறிந்தவர்கள் இக்கவிதையை உடனடியாகத் திறந்து கொள்ளலாம். இருப்பினும் இங்கே சிவகாமியாக அவர் கொண்டு வந்து வைப்பது கண்ணகியை. சிவகாமியில் இருந்து கொற்றவைக்குச் செல்லும் பாதையாக இருப்பது காலமாற்றத்தின் அதிபதியான காலபைரவர் என்னும் போது இக்கவிதை விரிந்து விரிந்து செல்லும் தளங்கள் ஏராளம். என்றென்றைக்குமான காதல் ஒரு புறம் சில்லிட்ட காற்றையும், மறுபுறம் அது ஏந்திச் செல்லும் ஊர்பற்றும் தழலுமாக இருப்பதாகக் கூறுவதில் இருந்து செல்ல முடிவிலி இருக்கிறது வாசகனுக்கு. ‘கொடுங்கால் ரத்தக்காட்டேரி’யுடனான பழக்கம் பற்றிய கவிதை ஜெவின் மாடன் மோட்சத்தை நினைவூட்டும் ஒன்று. இதில் வரும் தெய்வங்களின் உறவும் புன்னகைக்க வைத்து, கடந்து போக வைக்கக் கூடியதே. மீண்டும் ஆழ்மன தொன்மங்களோடு ஆடிய கவிதை.

 

இதன் மறு எல்லை என அம்முடிவிலியில் இருந்து பிறந்த இவ்வுலகின் மானுடர்களை, அவர்களை ஆளும் நீதிகளை, அவர்களின் ஒழுக்கங்களை கேள்வி கேட்பவையாக அமையும் கவிதைகளையும் அவர் எழுதத் தவறவில்லை. குறிப்பாக ‘யோக்கியதை – சில குறிப்புகள்’. பொதுவாகக் கவிதைகள் கையாளும் யோக்கியத்தனம் என்பது நடிப்பே, அயோக்கியத்தனம் இயல்பே வகை கூறு பொருள் தான் இதற்கு. இந்தக் கவிதையில் கூட

 

“காட்டாற்று வெள்ளத்தின்
ஓரம் நின்று
கை கால் முகம்
கழுவிக்கொள்கிறான்
அயோக்கியன்
அவ்வளவு அயோக்கியத்தனமும்
அடித்துக்கொண்டு போனது
வெள்ளத்தில்.

வெதுவெதுப்பாக
நீரை விளவி
கைகளை நனைக்கிறாய்
உன் யோக்கியதை
இரத்தச் சிவப்பாய் மாற்றுகிறது
தண்ணீரை.”

 

 

– என்ற வரிகளில் முற்றிலும் வேறு தளத்திற்கு, ஒரு சுய பரிசோதனையின் வெளிப்பாடாய், யாரோ இருவர் என்பதில் இருந்து என்னுள்ளே இருமை என மாற்றி, என்றென்றும் இருக்கும் இருமை என நகர்த்த இயல்கிறது அவரால். இப்பூமியில் யோக்கியமாய் வாழ்ந்தவர்களை ஒரு பகடையின் நிகழ்தகவாகப் பார்க்கும் ‘பகடையாட்டம்’ என்னும் கவிதை. மூன்று பார்வைகள், மூன்றும் மீப்பெரும் மானுடர்கள் மீது அசூயை கொள்ளும் சாதாரணர்கள் சுமத்துபவை. ஆடு மேய்த்த தச்சன் மகனில் இருந்து, பாழ்பட்டு நின்ற தேசத்தை வாழ்விக்க வந்த மகாத்மா வரை சுமத்தப்பட்டவையே இவை…. இத்தனைக்கும் நீதி மறுக்கப்பட்ட இவர்களுக்காக இருந்தவர்கள் தான்….

 

“அன்றாடத்தின் மாறிலியே ஒழுக்கம். ஒழுக்கத்தின் மாறிலி அறம். அறத்தின் மாறிலி புடவிப்பெருநெறி. அதன் மாறிலி ஒன்றுண்டு. அதுவே அனைத்தும். ஒவ்வொன்றிலும் உட்பொருளென்று நின்றிருப்பது அது.” என மாறிலிகளை வகைப்படுத்துகிறது வெண்முரசு. கண்டராதித்தன் கவிதைகள் இம்மாறிலிகளை மரபின் பின்புலத்தில் கண்டடைகின்றன. யோக்கியதையை கேள்வி கேட்பதில் துவங்கி அகக்குரல் சென்று முட்டும் ஏகாந்தம் வரை மாறிலிகளோடு உறவாடிச் செல்கின்றன. ஆழ்மனத்தின் மரபு சார் தொன்மங்களை நனவுள்ளம் சந்திக்கும் புறவுலகின் தருணங்களில் வைத்து விளையாடுகின்றன. அதே சமயம் அசைவிலா ஆழ்மனத்தின் மாறிலிகளை திறவுகோல்களாக கொண்டிருக்கின்றன. இம்மாறிலிகளை திறவு கோலாகக் கொண்டு திறந்து செல்லும் வாசகனுக்கு அது சொல்லின் மறுமுனையைக் காட்டி நிற்கின்ற வகையில் தனித்துவமாகின்றன. குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் கண்டராதித்தன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

அருணாச்சலம் மகராஜன்

 

 

 

தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்

வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்

ஏகமென்றிருப்பது

அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை

சாழற்மலர்ச்செண்டு

பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு

 கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள்

முந்தைய கட்டுரைகன்யாகுமரி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமரத்திலிருந்து கனியின் விடுதலை