அலையிடைப்படுதல்

IMG_20180602_074641

அன்புள்ள ஜெ.,

தங்களுடைய “காஞ்சி முதல் ஊட்டி வரை” படித்தேன். இலக்கிய சிம்மாசனத்தில் நீங்கள் அமர்ந்து நீண்டகாலம் ஆகி விட்டது. இருந்தும் இத்தனை அமர்தலும் அலைதலும்.   இந்த “பிரசவ” வேதனையை உங்கள் ஒவ்  வொரு  படைப்புக்கும் அனுபவித்திருக்கிறீர்களா? இந்த அலைக்கழிவு எத்தனை நாளைக்கு? “வெண்முரசு” ல் இன்னும் எத்தனை  நாவல்கள் மீதம் இருக்கின்றன? “வெண்முரசு” க்குப் பிறகு வேறு திட்டம் ஏதும் உண்டா? நீங்கள் வெண்முரசு எழுதாமலும் இருக்கவேண்டிவரும். அதற்கும் மனதைத் தயார் செய்து கொள்ளுங்கள். உடல் நலத்தையும் பார்த்துக்கொள்ளவும். இது போன்ற தட்டழிதல் மற்ற எழுத்தாளர்களின் பெரும் படைப்புக்களுக்கு முன்னும் நிகழ்வதுண்டா?

அன்புள்ள,

கிருஷ்ணன் சங்கரன்

***

அன்புள்ள கிருஷ்ணன்,

இலக்கிய ஆக்கத்தின் வதையும் உவகையும் எல்லாருக்கும் ஒன்றுதான். இது ஏதேனும் ஒருவகையில் இல்லாத எழுத்தாளர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். பெரும்பாலான எழுத்தாளர்கள் இதை ஒத்திப்போடுவார்கள். வருடக்கணக்கில்கூட இலக்கியத்திலிருந்து விலகிவிடுவார்கள். உலகியலில் ஆழ்ந்திருப்பார்கள். ஆகவே மீண்டும் ஒரு தொடக்கம் நிகழாமல் கடந்துசெல்லும். இவற்றில் சிலர் இந்த விலக்கத்தையே ஒருவகை தவம் என்று சொல்லிக்கொள்வதுண்டு. அரிதாக எழுதுபவர் என்ற சொல் பெரும்பாலும் இவர்களால் இவர்களைக் குறிக்கும்பொருட்டு உருவாக்கப்பட்டது. உலக இலக்கியத்தின் பெரும்படைப்பாளிகள் அனைவருமே பெரும்பாலும் எப்போதும் படைப்புக்கான தேடலில், அலைக்கழிதலில் இருந்தவர்கள்தான்.

இன்னொன்று, இதுதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. இந்த அலைக்கழிவிலிருந்து ஒருவழியாக நான் விடுபட்டுவிட்டேன் என்றால் அதன்பின் என்ன செய்வது? நாட்கள் வெறுமையாக நீண்டு கிடக்கும். தீவிரமாக, உச்சங்களை நோக்கிச் செல்வதாக, கனவுலகப் பயணமாக எழுதிக்கொண்டிருக்கையில்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சுவரில் மாட்டிவைக்கப்பட்டிருக்கும் வாள் ஒர் அர்த்தமற்ற பொருளாகிவிடுகிறது. எழுத்தாளன் எழுதவேண்டும். எழுதாதபோதும் எழுதும் மனநிலையில் இருக்கவேண்டும். அதுதான் பெரிய தவம்.

அந்த மனநிலை ஒரு பெருங்களிப்பு..  அன்றாடம் எழுத்தாளர்களுக்கு சலிப்பூட்டுவது. எரிச்சல் நிறைப்பது. அதிலிருந்து தப்பவேண்டும், நடப்பதை தவிர்த்துப் பறக்கவேண்டும். அது அமையாதபோதுதான் பதிலிகளைத் தேடுகிறார்கள் குடி முதன்மையாக. அரிதாக அரசியல்போன்ற தளங்களில் வெறிகொண்ட உழைப்பு. ஜி.நாகராஜன் இரண்டிலும் அலைந்து அழிந்தவர். படைப்பியக்கத்தின் போதையை மட்டுமே நான் பற்றிக்கொண்டேன். அரசியல்போதையை சில ஆண்டுகளிலேயே விலக்கினேன். பிறிதொன்றை நாடாமல் என் தந்தையின் ஆணை தடுத்தாண்டது. அதற்காக நன்றியுடனிருக்கிறேன்.

எழுத்திலிருந்து வெளியேறலாம். எழுதியதுபோதும் என்று. எழுதமுடியவில்லை என்று. ஆனால் கீழிறங்கிவிடக்கூடாது. எழுதுவதைவிட மேலான நிலைகள் உண்டு. அவற்றைநோக்கிச் செல்லவேண்டும். அதுவே என் விழைவு

ஜெ

***

IMG_20180531_082722

அன்புள்ள ஜெ,

உங்கள் நண்பர் போகன் முகநூலில் உங்கள் தனிமைப்பயணத்தைப் பற்றி ‘தனிமை கண்டதுண்டு, அங்கே செல்ஃபி இருக்குதம்மா’ என்று எழுதியிருந்தார். தனிமையில் நீங்கள் அவ்வளவு செல்ஃபி எடுத்தது எனக்கு வேடிக்கையாகவே இருந்தது. அந்த மனநிலையை புரிந்துகொள்ளமுடியவில்லை.

செந்தில்குமார்.

***

அன்புள்ள செந்தில்,

ஏற்கனவே ஒருநண்பர் சொன்னார். ரசிக்கத்தக்கக் கிண்டல். பொதுவாக எழுத்தாளர்களின் தனிமைக்கும் பிறர் தனிமைக்கும் என்ன வேறுபாடு? எழுத்தாளன் தனிமையில் இருக்கமுடியாது என்பதே. அவன் இரட்டை மனிதன். வாழ்பவன், வாழ்க்கையை நோக்கிக்கொண்டிருப்பவன். இந்த இரண்டாம் ஆள் அந்தத்தனிமையை நோக்கிக்கொண்டிருப்பான். ஒரு அகன்ற வெளியில் தன்னந்தனியாக எழுத்தாளன் நடந்து செல்கிறான் என்று கற்பனைசெய்யுங்கள். என்ன நிகழ்ந்துகொண்டிருக்கும்? அவன் நடந்துகொண்டிருப்பான், நடந்துகொண்டிருக்கும் அவனை அவனே காட்சியாகக் கண்டுகொண்டும் இருப்பான். அதை மொழியாக அவனை அறியாமல் மாற்றிக்கொண்டும் இருப்பான். இதிலிருந்து அவனால் தப்பவே முடியாது. என் அம்மா தற்கொலைசெய்துகொண்ட செய்தியை அறிந்து நான் ஊருக்கு வந்ததை எழுதியிருப்பேன். உச்சகட்டத் துயர், கொந்தளிப்பு. ஆனால் அங்கே நிகழ்வன அனைத்தையும் எனக்குள் இருந்து எந்த துயரும் இல்லாமல் ஒரு கண் நோக்கியது, ஓர் உள்ளம் பதிவும் செய்தது

இது எழுத்தாளனின் வரமும் சாபமும். எழுத்து என்பதற்கு இது பேருதவி.ஆனால் ஆன்மிகமாக, ஊழ்கநெறியில் செல்லமுயன்றால் மாபெரும் தடை. நான் ஊழ்கம் பயிலமுடியாது என நித்யா சொன்னது இதனால்தான். அங்கிருக்கும் துறவியரில் நான் ஒருவன் அல்ல என அவர்களும் அறிவார்கள். அவனுள் இருப்பது நான் எனும் போதம்,. அதை வளர்க்கும் கற்பனை. ஆகவேதான் எழுத்தாளன் பிரம்மசரியம் பயிலமுடியாது. முடியாது என்றில்லை, மிகமிகக் கடினம்.என்றைக்காவது ‘கிளம்பிச்செல்வது’ என்றால் இந்த இரண்டாவது ஆள் இல்லாமலாகவேண்டும். அது ஒரு இறப்பு. அதிலிருந்து முதலாமர் உயிர்த்தெழவேண்டும்.

அந்த  தற்படங்கள் எல்லாமே ஒரே நாளில் எடுக்கப்பட்டவை. திடீரென்று கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது விந்தையாக உணர்ந்தேன். இன்னொருவராக. இன்னொருவராக ஆவதுதானே எழுத்தாளனின் பெரிய குதூகலம். என்னை இன்னொருவராக கற்பனைசெய்துகொண்டு இரண்டுநாட்கள் உலவினேன். அப்போது படங்கள் எடுத்துக்கொண்டேன். நான் மீண்டும்  என் தோற்றத்திற்குச் சென்றாகவேண்டும் என்ற எண்ணத்தால். உண்மையில் அங்கிருந்த தனிமையே கூட நுட்பமான ஒரு நடிப்பு. தனக்குத்தானே செய்துகொள்வது

முப்பதாண்டுகளுக்கு முன் இதேபோல் ஓர் தனியான இந்தியப்பயணம் சென்றேன். செல்லுமிடங்களிலிருந்து சுந்தர ராமசாமிக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன். சுரா சொன்னார் “ஏதோ மலையுச்சியிலே உக்காந்து சூட்கேஸை மடியிலே வச்சுண்டு நீங்க லெட்டர் எழுதறது மனக்கண்ணிலே வர்ரது. உங்களால எழுதாம இருக்கமுடியாது. எழுத்தாளன் தவளை. ஒளிஞ்சிருந்தாலும் இருக்கேன் இருக்கேன்னு பாம்புக்கு தகவல் சொல்லிண்டேதான் இருப்பான்”

ஜெ

***

முந்தைய கட்டுரைஎழுத்தும் எதிர்வினையும்
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் விருதுவிழா