காடும் நகரமும்

பி.வி.ஆர் [பி.வி.ராமகிருஷ்ணன்]
பி.வி.ஆர் [பி.வி.ராமகிருஷ்ணன்]

கதாநாயகன் ராஜா இளம்பொறியாளன்.  வாழ்க்கையை எதிர்கொள்ளும் துடிப்புடன் இருப்பவன். அழகன். பரம்பிக்குளம் ஆழியாறு நீர்மின் திட்டம் அப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தன் ஜீப்பை ஓட்டியபடி அவன் அந்த காட்டுப்பகுதிக்கு வேலையில் சேரும்பொருட்டு வந்து சேர்கிறான்.

காட்டில் மூன்று வகையான மக்கள் வாழ்கிறார்கள். மலைப்பழங்குடிகள். கட்டுமானப் பணிக்கென்று பல ஊர்களிலிருந்து வந்து தங்கியிருக்கும் கூலித்தொழிலாளர்கள். அவர்களுக்கு பொருட்களைக்கொண்டுவந்து விற்று மலைப்பொருட்களை வாங்கிச் செல்லும் வணிகர்கள்.  அந்த உலகில் கதாநாயகன் ஒரு அந்நியத்தன்மையை முதலில் உணர்கிறான். மிக மெல்ல அவனுக்கு அந்த நிலப்பகுதி மேல் ஒரு காதல் உருவாகிறது. காடு அவனை உள்ளே இழுத்துக்கொள்கிறது

காட்டின் மேல் உருவான அந்தப்பிரியத்துடன் இணைந்து அங்கு பணியாற்றும் ஒர் ஊழியரின் மகளாகிய மீனாவுடன் காதல் உருவாகிறது. மீனா அடக்கமானவள். வெளியுலகு அறியாதவள் .தேர்ந்த சமையல்த்திறன் கொண்டவள். அங்கே உணவு விடுதிகள் எதுவுமில்லாததால் அவள் வீட்டில் தான் கதாநாயகன் சாப்பிடுகிறான். அந்த சுவை வழியாக அவளை நெருங்குகிறான். அவளை திருமணம் செய்வதாக வாக்களிக்கிறான். எல்லைமீறாமல் அந்த உறவு நீடிக்கிறது

கட்டுமானப் பணிகளுக்கு மிகத் தடையாக இருப்பது அப்பகுதியில் காட்டைக்கலக்கிக்கொண்டிருக்கும் ஒற்றைக்கண் பிடாரி என்ற யானை. ஒருமுறை யாரோ முதிராத வேட்டைக்காரர்களால் அதன் ஒற்றைக்கண் பழுதாகிவிட்டது. அதிலிருந்து மனிதர்கள் மேல் கொலைவெறியுடன் அது அலைகிறது. திரும்பத் திரும்ப அங்கு பணியாற்றும் ஊழியர்களையும் காட்டிலாகா அதிகாரிகளையும் தாக்குகிறது கொலை செய்கிறது.

அதை கண்டுபிடித்து வேட்டையாட பலரும் முயல்கிறார்கள். குறிப்பாக தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன். ஆனால் மனிதர்களைக்கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த ஒற்றைக்கண் பிடாரி மனிதர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் அறிந்துவிடும் ஆற்றலைப் பெற்றது. வேட்டையாடுவதற்காக எவர் கிளம்பினாலும் உள்க்காடுகளுக்கு சென்று மறைந்துவிடுவதும் அவர்கள் சலித்துப்போய் திரும்ப வரும்போது வெறி கொண்டு வந்து தாக்குவதும் அதன் வழக்கமாக இருக்கிறது.

அணைக்கட்டு பணிகள் முழுவீச்சுடன் நிகழ்கின்றன. ஆழியாறை பெரிய அணையொன்றால் கட்டித்தேக்கி மலையைத்துளைத்து உருவாக்கப்படும் சுரங்க வழிகளினூடாக தமிழ்பகுதிகளுக்குத் திருப்பி அது மலையிறங்கும் விசையில் மின்சக்தி எடுத்துவிட்டு நீரை கொங்கு மண்டலத்திற்கு வேளாண்மைக்கு அனுப்புவது திட்டம்.

அது ஜவஹர்லால் நேருவின் யுகம். இந்தியா முழுவதும்மாபெரும் நீர்ப்பாசன திட்டங்கள் அர்ப்பணிப்புடன்  நடைபெற்றன அப்போது. ராஜா  அந்த லட்சிய வேகத்தால் அடித்துச் செல்லப்படுகிறான். தன்னெதிரில் ஒரு புது உலகம் தென்படுவது போல தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் பொருள் கொள்வது போல.

parambikulam-dam

காதலும் கனவுமாக நாட்கள் நகர்கையில் விஸ்வநாதனின் மகள் லலிதா அங்கு வருகிறாள். முற்றிலும் மாறுபட்ட பெண். அடுத்த யுகத்தை சார்ந்தவள். நகரத்தில் வளர்ந்தவள். அழகி தயக்கமின்றி பேசுபவள். காடு அவளைக் கவர்கிறது. அங்கே ஆங்கிலத்தில் பேசவும் படித்தவற்றை பகிர்ந்துகொள்ளவும் அவளுக்குக் கிடைப்பவன் கதாநாயகன் மட்டுமே

அவர்கள் நெருங்கிப்பழகத் தொடங்கியதுமே கதாநாயகனின் உள்ளம் மாற ஆரம்பிக்கிறது..அவன் தன்னை அறியாமலேயே மீனாவைத்துறக்கவும் புதுக்காதலியை ஏற்கவும் சித்தமாகிறான். ஆனால் மீனாவை எண்ணி தயக்கமும் குற்றவுணர்ச்சியும் கொள்கிறான். அதேசமயம் புதுக்காதலின் ஈர்ப்பை அவனால் வெல்லவும் முடியவில்லை. மெல்லமெல்ல மீனாவை விட்டுவிடுகிறான்.

மீனாவின் தந்தை இறந்துபோகிறார். ஏற்கனவே தாயில்லாத அவள் அனாதையாகிறாள். ராஜா தன்னை கைப்பிடிப்பான் என்று நம்புகிறாள். அவனால் கைவிடப்பட்டமையால் மனம் உடைந்து தன்னந்தனியாக காட்டுக்குள் செல்கிறாள். ஒற்றைக்கண் பிடாரி எதிரே வருகிறது. அவள் இறப்பதற்கு தயாராகிறாள். “நானும் நீயும் ஒன்றுதான்” என்று அவள் அதனிடம் சொல்கிறாள். அவள்அதை நோக்கி அவள் சென்றபோதும் கூட ஒற்றைக்கண் பிடாரி அவளைத்தாக்க வரவில்லை. செவிகளை ஆட்டியபடி அங்கேயே நிற்கிறது.

மீனா காட்டுக்குள் சென்றுவிட்டதை அறிந்த ராஜா அவளைத்தேடி பின்னால் வருகிறான். அவள் ஒற்றைக்கண்பிடாரிக்கு முன்னால் சென்றுவிட்டதைக் காண்கிறான். அப்போது நிலவளைவுக்கு அப்பால் விஸ்வநாதன் தோன்றுகிறார். ரைஃபிளை நெஞ்சில் பொருத்தி ஒற்றைக்கண் பிடாரியின் மத்தகத்தை நோக்கிச் சுடுகிறான். உயிர் வெறியுடன் அது பிளிறியபடி ஓடி கால் தளர்ந்து மீனாவின் மேல் விழுகிறது. ஒற்றைக்கண் பிடாரியும் மீனாவும் இறக்கிறார்கள்.

ராஜா துயருறுகிறான். தனிமையும் குற்றவுணர்வும் அவனை அழுத்துகின்றன. அவன் லலிதாவிடம் திரும்புகிறான். அவள் அவனை எளிதாக உதறிவிடுகிறாள். “நீ மீனாவுக்குச் செய்ததை நான் மறக்க முடியாது. என் மேல் நீ கொண்டிருப்பது வெறும் பரபரப்பான ஈர்ப்பு மட்டும் தான். காதலல்ல” என்று சொல்லி கிளம்பிச் செல்கிறாள்.

தன்னந்தனியாக ஜீப்பை ஓட்டிக்கொண்டு மலைச்சரிவில் வந்து நின்று பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டை பார்த்து நிற்கிறான் கதாநாயகன் . ‘இந்த அணை இப்பூமியின் கூந்தலாகிய காட்டின் மேல் மனிதன் வைக்கும் ஒரு மலர் எத்தனையோ மகத்தான கனவுகள் இவ்வாறு பூமியில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவையே முக்கியம் தன்னுடைய சிறிய வாழ்க்கை அல்ல’ என்று புரிந்துகொள்கிறான்.

பி.வி.ஆர் எழுதிய கூந்தலிலே ஒரு மலர் என்ற நூலை நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும்போது படித்தேன் மீண்டும் அதை தேடிக்கண்டடைய முடியவில்லை. இன்று என் நினைவில் இருந்தே இக்கதையை எழுதுகிறேன். அன்று இளவயதினனாகிய என்னை மிகவும் கவர்ந்த வைத்த நாவல் இது.

இன்றும் என்னை ஆட்டிப்படைக்கும் ஒரு பித்து இதில் உள்ளது- காடு. பி.வி.ஆரின் எழுத்துமுறை காட்டையோ அதன் அனுபவத்தையோ நுட்பமாக சொல்லும் தன்மை கொண்டதல்ல. மேலோட்டமான கதை சொல்லல் அது. அதை மீறி காடு ஒரு அனுபவமாக விரிந்து இன்றும் நீடிக்கிறது. நான் சிறுவனாக இருந்த போதும் கூட அந்த கதாநாயகனுடன் என்னை அடையாளப்படுத்திக்கொண்டேன். அந்த காதல்களை நானும் அடைந்தேன்.

பரம்பிக்குளம் ஆழியாற்றின் கரையிலமைந்த தொல்காடு ஒருபக்கம். மறுபக்கம் அந்த அணை .அதேபோலவே ஒருபக்கம் மீனா மறுபக்கம் லலிதா. இருமுனைகளுக்கும்நடுவே அவன் தத்தளிக்கிறான். அன்றைய இளைஞனின் மெய்யான தத்தளிப்பு அது. தொன்மையானதும் உயிர்த்துடிப்பானதுமான காடு. அதில் வெட்டி சீர்திருத்தி மனிதன் உருவாக்கும் நவீனக்கட்டுமானம் அதற்கு நேர் எதிரானது. அதேபோல மீனா ராஜா தன் இளமையிலிருந்தே அறிந்த மரபான இந்தியப்பெண். அவன் அன்னையைப்போல அத்தைகளைப்போல. லலிதா உருவாகி வந்துகொண்டிருந்த ஒரு புதுயுகத்தைச் சார்ந்தவள். நவீன பெண்.

தன் வளர்ப்பால் இயல்பால் ராஜா காட்டையும் மீனாவையும் நாடுகிறான். தன்னுள் எழும் கற்பனாவாதத்தால் கனவால் அணைக்கட்டையும் லலிதாவையும் விரும்புகிறான். இந்த இருபாற்பட்ட தன்மையை ‘எப்படியோ’ சொல்லிவிட்டதனால் பி.வி,ஆர் எழுதிய முக்கியமான நாவலாக நான் இதைக் கருதுகிறேன்.

தமிழில் ஒரு கறாரான பிரிவினை இலக்கியத்தில் உள்ளது இலக்கியம் X வணிக இலக்கியம் என்று. வணிகப்பேரிதழ்களில் வெளியாகும் அனைத்தையுமே வணிக இலக்கியம் என்று எளிதில் வரையறுக்கும் போக்கு நவீன இலக்கியத்திற்குள் உண்டு. பி.வி.ஆரின் கூந்தலிலே ஒருமலர் குமுதம் வார இதழில் 1960களில் வெளியானது. அன்று பலரால் விரும்பப்பட்டது. ஆனால் அடுத்த தலைமுறை அதை வாசிக்கவில்லை. பொதுவாக இலக்கிய அந்தஸ்துகொண்ட ஆக்கங்களையே அடுத்த தலைமுறையினர் வாசிக்கிறார்கள்.

தமிழகத்தில் புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கி வளர்ந்த இலக்கிய அலை தமிழில் அன்று உருவாகி வந்த வெகுஜன எழுத்தால் மறைக்கப்பட்டது, வணிக பிரசுரங்களால் புறக்கணிக்கப்பட்டது. தீவிர இலக்கியம் படைப்பவர்கள் சிறுபத்திரிக்கைகளை உருவாக்கி அதில் மட்டுமே எழுதி கிட்டத்தட்ட தலைமறைவு இயக்கமாகவே நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆகவே இலக்கிய விவாதங்களையும் இலக்கிய மதிப்பீடுகளையும் அவர்கள் அந்த சிற்றிதழ்ச் சூழலுக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வணிக இலக்கியங்களை படித்ததோ அவ்விதழ்களில் எழுதப்பட்டதை எவ்வகையிலும் கவனித்ததோ இல்லை. அரிதாக தீவிர இலக்கியச் சூழலில் பணியாற்றியவர்களே வணிக இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். லா.ச.ரா தி.ஜானகிராமன். கு.அழகிரிசாமி போன்றவர்களைச் சொல்லலாம். அவர்களின் படைப்புகளில் கூட கணிசமானவை தீவிர இலக்கிய வட்டாரங்களில் வாசிக்கப்பட்டதில்லை.

அப்படியிருக்க வணிக இதழ்களில் ஓரளவு இலக்கியத்தரத்துடன் எழுதப்பட்ட படைப்புகள் எவ்வகையிலும் பேசப்பட்டதோ கவனிக்கப்பட்டதோ இல்லை. அவற்றை ஏதேனும் நூல்கள் அல்லது ஆசிரியர்கள் குறிப்பிடுவதுமில்லை. தமிழ் முழுக்க முழுக்க கேளிக்கை மட்டுமே கொண்ட வணிக எழுத்துக்கள் மட்டுமே உள்ளன என்பதை மறுக்க இயலாது. ஆனால் வணிகக்கேளிக்கை எழுத்தின் தளத்தில் நல்ல இலக்கிய வாசகன் தவற விடக்கூடாத படைப்புகளும் சில உள்ளன. அவற்றில் ஒன்று கூந்தலிலே ஒரு மலர்.

பி.விஆரின் படைப்புகள் வெறும் கேளிக்கை எழுத்துக்கள் அல்ல. அவற்றுக்குத் தீவிர இலக்கியத்தின் புனைவெழுச்சியும் வாழ்க்கை நோக்கும் இல்லை என்பது உண்மை. அதேசமயம் அக்காலகட்டத்தின் உணர்வுகளையும் வாழ்க்கையையும் பண்பாட்டுக்கூறுகளையும் அவை வெளிப்படுத்துகின்றன. அவருடைய ’மிலாட்’’ ‘ கிண்டி ஹோல்டான்’ ’ஜி.ஹெச்’ போன்ற நாவல்கள் சென்னை உயர்நீதிமன்றம், தலைமை மருத்துவமனை, கிண்டி குதிரைப்பந்தயம் போன்ற புலங்களில் எழுதப்பட்டவை. அவை இலக்கிய வாசகன் பொருட்படுத்த தக்கவை.

குறியீட்டு ரீதியாக ஒரு காலகட்டத்தை பிரிதிநிதித்துவப்படுத்துவதானால் கூந்தலிலே ஒரு மலர் மேலும் முக்கியமானதென்று நினைக்கிறேன். அணை கட்டச்செல்லும் இஞ்சினியர் என்பது நேரு யுக எழுத்துக்களில் அடிக்கடி வரும் கதாபாத்திரம். சாந்தாராம் படங்களின் கதாநாயகன். பின்னர் தமிழில் முள்ளும் மலரும் வரை அந்த மரபு தொடர்ந்தது. அக்காலகட்டம் உருவாக்கிய ஒரு மாதிரி கதாபாத்திரம் அது. இதற்கிணையான இன்னொரு கதாபாத்திரம் கிராமத்திற்கு செல்லும் பள்ளி ஆசிரியர்.

அந்தக்காலகட்டத்தில் இருவகை இந்தியாக்கள் இருந்தன. ஒன்று நகர்மய இந்தியா இன்னொன்று கிராமிய இந்தியா. நகரம் வளர்ந்துகொண்டிருந்தது, எஞ்சிய பகுதி சரித்திரத்தில் தேங்கிக்கிடந்தது. ரயில் எஞ்சின் பிற பெட்டிகளை இழுத்துச் செல்வது போல இந்தியாவின் முக்கியமான நகரங்கள் பல்லாயிரக்கணக்கான கிராமங்களை இழுத்துச் சென்றன.. நகரங்களிலிருந்தே செய்திகளும் அரசியலும் தொழில் நுட்பமும் புதிய ஒழுக்க முறைகளும் வாழ்க்கை முறைகளும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தன.

கிராமத்திற்குச் செல்லும் ஆசிரியன் என்ற பொது அடையாளத்திற்குள் இந்திய மொழிகளில் ஏராளமான நல்ல நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. வெங்கடேஷ் மால்கோங்கர் எழுதிய பன்கர்வாடி முன்னுதாரணமாக ஆக்கம். கூந்தலிலே ஒரு மலரையே விபூதிபூஷன் பந்தோபாத்யாய எழுதிய ‘வனவாசி’ [மூலம் ஆரண்யக்] என்ற நாவலுடன் ஒப்பிடலாம். ஒரு கணக்கிட்டு பணிக்குச் செல்லும் கதாநாயகன் காட்டையும் காட்டிலுள்ள மனிதர்களையும் எதிர்கொள்ளும் விதத்தை சித்தரிக்கும் ஆரண்யேக் இன்று இலக்கியத்தில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்நாவலை மர்மமும் அழகும் கொண்டதாக்குவது ஒற்றைக்கண் பிடாரி அது காட்டின் வஞ்சம் மனிதர்களால் புண்படுத்தபட்ட காடு சுரண்டப்பட்ட இயற்கையின் சீற்றம் அது. அதை அழித்துத்தான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் அதன் வஞ்சம் ஒரு மர்மப் பிளிறலாக காட்டுக்குள் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். மீனா தன்னை ஒற்றைக்கண் பிடாரியுடன் அடையாளம் கண்டு கொள்வதே நாவலின் உச்சம்

தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக பெண்களை வரையறை செய்யும் வழக்கமான ஒரு எதிரீடை கூந்தலிலே ஒரு மலர் நுட்பமாக மாற்றியமைப்பது முக்கியமானது. கண்ணகி – மாதவி என்னும் இரட்டைமை நாம் அறிந்தது. நவநாகரிகப்பெண்ணை மாதவியாகக் காட்டும் பழக்கத்திற்கு மாறாக அவளை உருவாகி வரும் புதிய இந்தியாவின் அடையாளமாக, புதிய அறவியல் கொண்டவளாக,

ஒர் ஆணிடம் ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை எனது அறவியலுக்கு நீ பொருத்தமானவன் அல்ல’ என்று சொல்லித் விலக்கும் மாண்பு பழைய பெண்ணுக்கு இல்லை, அவள் இடத்தில் மீனா இருந்திருந்தால் ஒருபோதும் ராஜாவிடம் அப்படி சொல்லியிருக்க மாட்டாள்.அப்படிச் சொல்லும் ஒரு விடுதலை பெற்ற பெண்ணை உருவாக்கி அவள்தான் அடுத்த காலகட்டத்தின் பெண்ணின் அடையாளம் என்று பி.வி.ஆர் குறிப்பிடுகிறார்.

பின்னர் இந்த இருமையை வணிகப்புனைவுகள் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தின. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நவீனப்பெண் எப்போதும் ஒரு படி கீழிறக்கப்படுவாள், மட்டம் தட்டப்படுவாள். பல சமயம் நவீனப்பெண்ணே பழமையான பெண்ணாக சேலையுடுத்து உருமாறுவாள் , ‘இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்புளே” என்று எம்.ஜி.ஆர் அவளைப்பற்றி பாடுவார்.

அன்றைய தமிழ் உளவியல் மாறிவந்த காலத்தால் கவரப்பட்டிருக்கிறது. அதுவே எதிர்காலம் என உணர்ந்துமிருக்கிறது. ஆனால் பழைமையை விடமுடியாமல், அதன் ஆழத்தை உணர்ந்ததன் விளைவான ஈர்ப்பிலிருந்து தப்பமுடியாமல் அலைக்கழிந்திருக்கிறது. அதை கூந்தலிலே ஒருமலர் காட்டுகிறது. மீனா-லலிதா போன்ற ஒப்பீடு இந்திய இலக்கியத்தில் வணிக இலக்கியத்தில் எங்கெல்லாம் இருக்கிறது என்று தேடிப்போவது மிக ஆர்வமூட்டும் ஆய்வாக அமையும்.

***

பிவிஆர் பற்றி இந்து செய்தி

முந்தைய கட்டுரைஎன் உரைகள்-ஸ்ருதிடிவி இணைப்புக்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 22