காஞ்சி ,ஊட்டி -கடிதங்கள்

 

IMG_20180602_074641இனிய ஜெயம்,

 

 

தேங்காயை விட்டவரே மாங்காய்ப் பாலுண்டு மலை மேல் அமர இயலும் .  மலை மேல் மாங்காயுண்டு என கிஞ்சித்தும் அறியாதவரே தேங்காயுடன் தெருவில்  அமைய இயலும் . தேங்காயைக் கையில் காவியபடி ,மாங்காயையும் தேடி மலையேறும்  கிருஷ்ண பரமாத்மா விளாயாட்டை மற்றொரு முறை விளையாடி இருக்கிறீர்கள் .சிறப்பு .

 

டோரா ஆளை  அடையாளம் தெரியாமல்,பயந்து போய் அருண்மொழி அக்கா பின்னால் பதுங்கி இருந்தால்தான் நிலவரம் கலவரம் என்று பொருள் .  செல்பி சரியாக உங்கள் முகம் நோக்கி எடுக்கப்பட்டிருக்கிறது .டோரா அடையாளம் கண்டு வாலாட்டுகிறது . ஒன்றும் பிரச்னை இல்லை .நல்லது .

 

கடலூர் சீனு

IMG_20180528_104918

வணக்கம் திரு ஜெயமோகன்

 

 

நான் பிறந்தது முதல் என் பத்து வயது வரை காஞ்சியில் தான் வளர்ந்தேன். எப்பக்கம் திரும்பினும் கோயில் கோபுரங்களையே கண்டு வளர்ந்தேன். அப்போது இன்றிருக்கும் அளவிற்கு கூட்ட நெரிசல் கிடையாது. காஞ்சி மடத்தில் துவங்கி குமரக்கோட்டம் காமாக்ஷி அம்மன் கச்சபேஸ்வரர் ஏகாம்பரநாதர் என வரிசையாக கோயில்களுக்கு நடந்தே செல்வோம். விஷ்ணுபுரம் படிக்கையில் விஷ்ணுபுரம் கோயிலையும் அதை சுற்றி உள்ள தெருக்களையும் பற்றிய விவரணைகளை படிக்கும் போது என்னுடைய இந்த பால்ய நினைவுகளுடன் தொடர்புறுத்தியே கற்பனை செய்வேன்.

 

 

ஏகாம்பரநாதர் மற்றும் காமாக்ஷி அம்மன் கோயில்களுக்கே சுற்றுலா வரும் அனைவரும் வருவர். கைலாசநாதர் கோயில் இன்றும் நேர்த்தியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்லும் கூட்டத்தில் கால் வாசி கூட பாண்டவ பெருமாளையும் உலகளந்த பெருமாளையும் பார்க்க வருவதில்லை. சிறுவயதில் எனக்கு பிடித்த ஆலயம் கைலாசநாதர் மற்றும் உலகளந்த பெருமாள் ஆலயம் தான்.

 

 

என் அம்மாவுடன் உலகளந்த பெருமாள் கோயிலுக்கு சென்ற நினைவுகள் என்றும் என்னுள் பதிந்திருக்கும். சிறு வாயில் கொண்ட கருவறைக்குள் விளக்கு வெளிச்சத்தில் உலகளந்து நிற்கும் உயர்ந்த பெருமாளை பார்க்கையில் காலம் உறைந்து விட்டதாகவே தோன்றும். கடைசியாக அங்கு சென்ற போது என் நண்பனிடம் நாம் பல்லவர்கள் நடந்த இடத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன். சொன்னவுடன் நானேஅதை கற்பனை செய்து என் முன் நடந்து கொண்டிருந்த பல்லவனை கண் முன் கண்டு பின்தொடர்ந்தேன். மெய் சிலிர்க்க.

 

 

இப்போது காஞ்சி செல்ல வேண்டும் என்று நினைத்தாலே வேர்க்க துவங்கிவிடுகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் திரள் வாகனங்களின் இரைச்சல். அங்கும் இங்கும் எங்கு எதற்கு செல்கிறார்கள் என யூகிக்கவே முடியாது. சிறு வயதில் நான் தனியாக நடந்து சென்ற சாலைகளில் இரண்டு சக்கர வாகனங்களும் கார்களும் சீறி பாய்கின்றன, அத்தனை சாலை தடுப்புகள் வேறு. கோயில்களுடனும் இயற்கையுடனும் நான் கண்ட சிறு வயது காஞ்சி இன்று அறிவியல் வளர்ச்சிக்கு இரையாகி தவிக்கிறது. சாலைகள் இவ்வகை என்றால் கோயில்களை பார்க்க கூட தோன்றவில்லை.

 

உங்கள் தளத்திலேயே பல இடங்களில் முறையான கோயில் பராமரிப்பு பற்றி எழுதியிருக்கிறீர்கள். அதை மட்டுமாவது படித்து சம்பந்தப்பட்டவர்கள் விளங்கினால் இருக்கின்ற கோயில்கள் மேலும் மோசம் ஆகாமல் தவிர்க்கப்படலாம். இப்போதெல்லாம் அக்கோயில்களுக்கு நேரில் செல்வதை விட நான் சிறு வயதில் சென்ற நினைவுகளின் மூலம் செல்வதே அதிகம். இன்று உங்கள் தளத்தில் வந்த காஞ்சி முதல் ஊட்டி வரை பதிவு அவ்வாறு இன்னொரு நினைவுப்பயணத்திற்கு என்னை இட்டு சென்றது. நன்றி.

 

ஸ்ரீராம்

a

அன்புள்ள ஜெ,

 

’’காஞ்சி  முதல் ஊட்டி வரை’’  பயண அனுபவத்தில்  ‘’ ஒன்றுமில்லை சாதாரண மனிதன்’’ என்று  காட்டு எருதுகள் சொல்வது போல எழுதியிருந்தீர்கள் அது மிக  ரசிக்குமபடியும் மிக மிக யோசிக்கும்படியும் இருந்தது. இயற்கையோடு இணைந்த வாழ்வினில் தான்  மனித வாழ்வென்பது எத்தனை சாதாரணம் என்பதை  ஒவ்வொருகணமும் உணருவோம். உங்களின் இப்பதிவு எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த இன்னும் கொஞ்சமும் மறக்காத சத்யஜித்ரேவின் ஒரு குறும்படமான கஞ்சன்ஜுங்காவை நினைவுபடுத்தியது. நீங்கள் பார்த்திருப்பீர்கள். பனிமூடிய சிகரங்களும், காலடியில் நழுவும் மேகங்களும், நெடிய பைன் மரங்களுமாய்    இருக்கும் டார்ஜிலிங்கில் விடுமுறையை செலவழிக்கும் செல்வாக்குமிக்க ஒரு வங்காளக்குடும்பதைக்குறித்த  படம அது.

 

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வெறுமையின் தித்திப்பை , ஒரு குக்கிராமத்தில் அவ்வளவாக வீடுகள் இல்லாத தெருவின் கடைசியில் இருக்கும் வீட்டையே மறைத்தபடி உயர வளர்ந்திருக்கும் மரங்கள் சூழ்ந்த,  பட்டுப்பூச்சிகளும், பற்பல பறவைகளும், சமயங்களில் வள்ளிக்கிழங்குகளுக்காக வரும் முயல்களுமாய் சின்னஞ்சிறியதாக 4 அறைகள் மட்டும் உள்ள இவ்வீட்டில் நான் பலமுறை சுவைத்திருக்கிறேன்.  அன்றாடங்களின் பிடுங்கல்களை, காயங்களை, வலிகளை என அனைத்தையும் மறக்கச்செய்யும் வல்லமை இயற்கைக்கு மட்டுமே இருக்கின்றது என்பதை பலமுறை உணர்ந்துமிருக்கிறேன்.

// நம்மைச்சூழ இயற்கையின் பசுமையும் உயிர்ப்பெருக்கும் நிறைந்திருப்பது நாம் சித்தம்கூர்ந்து நோக்காதபோதும்கூட நம் ஆழத்தை வடிவமைத்துக்கொண்டே இருக்கிறது. சூழ இருக்கும் அழகற்ற,ஒழுங்கற்ற, செயற்கையான பொருட்கள் நம் அகத்தைக் கலைக்கின்றன. கூர்கொள்ளமுடியாமலாக்குகின்றன//.

மீள மீள வாசிக்கின்றேன் இவ்வரிகளை

 

//கிளம்ப ஒரே காரணம்தான், அருண்மொழி. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பின் அவள் நினைவை தவிர்ப்பதே முழுநேர வேலை ஆகிவிடும். அதற்கு பேசாமல் வீடுதிரும்பிவிடலாம்// இதைவிட அழகாக அவர்கள் மீதிருக்கும் உங்களின் தீரா அன்பினை இனிசொல்லிவிடவே முடியாது.

 

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12
அடுத்த கட்டுரைகன்னிநிலம் -கடிதம்