தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்

kandaar-960x480

நவீன எழுத்துகளில் மரபிலக்கியச் சித்திரங்களைக் கண்டடைவது களிப்ப்பூட்டுவது. பெரும்பாலான நவீனக் கவிதைகள் அன்றாடங்களுக்குள் சுருங்குபவை. ஆகவே இறந்தகாலத்திலிருந்து தங்களை அறுத்துக்கொண்டவை. அவற்றின் பொருள்விரிவு நிகழ்காலச்சூழலில் மட்டுமே உருவாவது. ஆகவே அவை நம்மை நம் நீண்ட மரபை நோக்கிச் செலுத்தி அதன் புறச்சுவையையோ அகச்சுவையையோ அளிக்க இயலாதவையாக இருக்கும். மரபை ஏதோ ஒருவகையில் சுட்டும் கவிதைகள் அவை எண்ணியிராத ஆழத்தை வாசகன் உள்ளத்தில் உருவாக்கிவிடுகின்றன. ஏனென்றால் ஒவ்வொரு சொல்லும், படிமமும் மரபில் பலநூறு வகைகளில் முன்னரே கையாளப்பட்டிருக்கும். அத்தனை வாய்ப்புகளும் வாசகனுக்கு அக்கவிதையால் அளிக்கப்பட்டுவிடுகிறது

கண்டராதித்தனின் கவிநடையில் உள்ள மரபிலக்கியச் சாயல் நம்மை  மரபின் ஆழத்திற்கு எளிதாக அழைத்துச் செல்கின்றது. பொதுவாக பிற கவிஞர்களிடமிருந்து இவரை வேறுபடுத்தும் கூறு இது. இக்கவிதைகளுக்கு இன்றில்மட்டுமல்ல நேற்றிலும் வேர்கள் உள்ளன என்று அது காட்டுகிறது. அத்துடன் இன்றைய வாழ்க்கை நேற்றைய வாழ்க்கையின் இயல்பான தொடர்ச்சிதான் என்ற உணர்வையும் அளிக்கிறது. எத்தனை நவீன வண்ணப்பூச்சு அளிக்கப்பட்டாலும் கோபுரங்கள் அந்த தொன்மையிலேயே நிலைகொள்வதைப்போல

‘திருச்சாழல்’ தொகுப்பில் திருச்சாழல் மீச்சுவை கொண்ட சிறு கவித்தொகை. சாழல் என்பது மகளிருக்கிடையேயான அகம் சார்ந்த கேளிக்கை விளையாட்டு. ஒருத்தியின் காதலன் குறித்து இன்னொருத்தி சீண்டலாக வினா எழுப்பி மலர்க்கோளத்தை வீச, அவளோ அவன் மீதுள்ள காதலால் மறுமொழி சொல்லி உயர்த்திப் பாடி மீண்டும் மலர்க்கோளத்தை அவளிடமே வீசுவாள். அதேபோல காதலனின் பிரிவையோ ஊடலையோ தலைவி பாடி வினவ தோழி மறுமொழி சொல்லி ஆற்றுப்படுத்துவாள். தன்தோழியின் காதற்திறம் அறிந்திட கேலிக்காக  செய்கிற இவ்வாடல் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.

thi

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இப்பாடல்வகையினைக் கையாண்டிருக்கிறார். பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரும் சாழல் பாடியுள்ளார். பதினோராம் பத்தில் ஐந்தாம் திருமொழியில் முதற்பாடலே ஓர் அழகான சாழலாடல்.

தோழி:

மானமரு மென்னோக்கி வைதேவியின் துணையா,
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ

தலைவி:

கானமரும் கல்லதர்ப்போய்க் காடுறைந்த பொன்னடிகள்,
வானவர்தம் சென்னி மலர்க்கண்டாய் சாழலே.

தோழி கண்ணனின் மீது காதல் கொண்ட தலைவியிடம் பின்வருமாறு சாழலாடுகின்றாள்:

ஏடி, நீ காதலித்துக் கொண்டிருப்பவன் எத்தகையவன் தெரியுமா? முன்பு இராமனாக இருக்கையில் மானின் பார்வையொத்த மங்கையான சீதையை மணஞ்செய்து கற்களும் முட்களும் நிறைந்திற்ற காட்டிற்கு அழைத்துச் சென்று வாழ்ந்தவன். அவன்மீதா மையல் கொள்கிறாய்?

“தோழியே! அவ்வாறு கற்களும் முட்களும் நிறைந்த காட்டில் அலைந்து திரிந்தவனின் பொன்னடிகளை வானுலாவும் தேவர்கள் தமது சிரங்களில் மலர்களாய் அணிந்துள்ளனர் பார்த்தாயோ “என்று தலைவி மறுமொழிகின்றாள்.

கண்டராதித்தனின் திருச்சாழல் ஆற்றுப்படுத்தும் சாழல் வகை. தலைவி தன்னையும் தன் பணியிடக் காதலனையும் பிரித்திடும் நாட்கள் கண்டு வருந்த, தோழி மற்றொரு நிலையினை வேடிக்கையாகச் சுட்டித் தலைவியை ஆறுதல் படுத்துகின்றாள்.

திங்களொரு நாள் செவ்வாயொரு நாளும் போயிற்று
புதன் வந்தும் பொறுமையில்லை எனக்கு
அவன் நலமோ அவன் மனை நலமோவென
நெஞ்சம் பதைத்துப் போவதுதான் என்னேடி?

 பொல்லாத புதுநோய் வந்ததைப் போல் வருந்தாதே
அலுவலிலும் அவனேதான் வீட்டினிலும்
அவனேதானெனப் பெண்ணொருத்தி படும்
பெருந்துயர் போலல்ல உன் துயரம்
என்றெண்ணிச் சந்தோஷம் காண் சாழலோ.

இந்த சாழல் பாடலின் உணர்வுநிலையும் செய்யுள்முறையும் தமிழில் அதற்கும் நெடுங்காலம் முன்னரே வேறொருவகையில் இருந்துள்ளது. தோழியும் தலைவியும் சொல்லாடிக்கொள்ளும் பல கவிதைகளை நாம் கலித்தொகையில் காணமுடியும்.இது தமிழ் வாழ்க்கையின் ஒரு தருணம். அங்கிருந்து கவிதைக்குள் நுழைந்திருக்கிறது. சிற்சில வேறுபாடுகளுடன் தொடர்ந்து நீடிக்கிறது.

பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர் பனிக் கடல்! – 
தூ அறத் துறந்தனன் துறைவன் என்று, அவன் திறம் 
நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக் 
காதல் செய்து அகன்றாரை உடையையோ? – நீ.

கலித்தொகையில் வருகின்ற நெய்தற்கலி அடிகள் இவை. தலைவனைப் பிரிந்த தலைவி கடலைநோக்கி “ஓய்வின்றி அலைகள் அலைந்திட எப்போதும் ஓலமிடும் பரந்த தண்கடலே! இவ்வாறு எப்போதும் சலம்புதல் ஏனோ? என் காதலன் என்னை விட்டுச் சென்ற நிலைகண்டு வருந்துகின்றாயோ? அல்லது என்னை விட்டுச் சென்ற தலைவன் போல உனக்கும் இருந்தானோ?” என்று புலம்புவதாக உள்ளது.

கண்டராதித்தனின் கவிதையில்

‘ஒரு பகலில் நானும் ஒரு இரவில் நீயும்
சமாதானத்துடன் பிரிந்துகொண்டோம்.
உடையாத தாழியொன்று இரவுக்கும் பகலுக்குமாய்
ஆடிக்கொண்டிருக்கிறது தீராத துக்கத்தோடு.’

என்ற வரிகள் அந்தத் தலைவியின்கண் பிரிந்த தலைவன் நவீனத்திற்குத் தப்பிவந்து தம்கூற்றெனப் பாடுந்தொனியினைத் தருகின்றது. இதன் தருணம் புதியது. சொல்லாட்சி புதியது. ஆனால் உணர்வுநிலை மிகமிகத் தொன்மையானது. உடையாத தாழியாக சங்ககாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு தீராத துயரத்துடன் ஆடிக்கொண்டிருக்கிறது கவிதை.

சோமன் சாதாரணம், சஞ்சாரம் சீபத்த போன்ற கவிதைகளில் இருக்கும் புறப்பொருள் தன்மை மெல்லிய எள்ளலுடன் மரபைத் தொட்டுக்கொள்கிறது. ஒருவகையில் அவை ஞானக்கூத்தனின் கவிதைகளை நினைவூட்டுகின்றன. அவ்வாறு எள்ளலுக்கு மரபை எடுத்தாளும் காலகட்டம் முடிந்துவிட்டது என்று தோன்றுகிறது. அதைவிட ‘அந்த அன்பு என்னுடையதல்ல’ என்ற கவிதையில் அமைந்துள்ள நுண்ணிய புறமரபுச்சாயல் பாய்ந்தோடும் ஓடைதனில் அடித்துச்செல்லப்படுபவற்றிலிருந்து எடுக்கப்படும் ஒற்றைக் கூழாங்கல் மாதிரி அரிதானது.

‘தும்பையை 
மாலையாகத் தொடுப்பது 
நன்றல்ல எனவே
அதன் வெண்மையை 
பரிசளிப்பதாகச் சொன்னான்
அந்த அன்பைத்தான்
பழகிய தோள்கள் அனைத்திற்கும் 
சூட்டிக்கொண்டிருக்கிறேன்.’

அன்பின் தூய்மைக்கு இக்கவிதையில் தும்பையின் வெண்மை ஒப்பிடப்படுகின்றது. எனினும் தும்பையை மாலையாகச் சூட்ட இயலாது. ஏனெனில் வேந்தரும் வீரரும் தலையில் தும்பைப் பூக்களையும் தும்பைப்பூ மாலையையும் அணிந்துகொண்டு போர்புரிவது மரபாகும். அதிரப் பொருவது தும்பை என்பது இலக்கணம். வெண்ணிற மலர், தொடுக்கமுடியாத அளவுக்குச் சிறியது, ஏன் போருக்கு அடையாளமாகியது என்பது ஒரு விந்தையான கேள்வி. தொடுக்கமுடியாத தன்மையால்தான் என்று தோன்றுகிறது

அன்பை அளிப்பவனால் ஒருபோதும் தும்பை மாலையினை அணிவிக்கவே இயலாது. பூக்களை விட்டுவிட்டு அதன் வெண்மையினை மட்டுமே பரிசளிக்க இயலும்.

‘வருவோர் போவோரெல்லாம்
வைத்துவிட்டுச் சென்றதுதான்
தாராளமாக 
எடுத்துக்கொள்ளுங்கள்
நிறைய இருக்கிறது’

புதுக்கவிதைகளை மிக எளிதாகச் சங்கப்பாடல்களுக்குள் வைக்கமுடியும். சங்கப்பாடல்களும் புதுக்கவிதைபோல நெகிழ்வான யாப்புகொண்டவை, அல்லது ஒருவகை உரைநடை வடிவங்கள்தான். குறிப்புணர்த்தல், சொற்சிக்கனம் போன்றவை பொதுவாக உள்ள இயல்புகள். இக்கவிதை அனைத்துவகையிலும் ஒரு குறுந்தொகைப்பாடலாகத் தெரிகிறது

செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே

செங்காந்தள் பூவை தன் காதலுக்கு அளிக்கும் தலைவனிடம் செந்நிறப் போர்க்களத்தில் அரக்கரைக் கொன்று தேய்த்த செந்நிற வேலுடன் செந்நிற கொம்புகள் கொண்ட யானைமேல் ஏறிய செவ்வேளாகிய முருகன் ஆளும் எம் குன்றம் குருதிப்பூ [காந்தள்] பூத்து மலர்ந்தது என்கிறாள் தலைவி. செங்குருதிப்பூ அளித்த சங்ககாலக் காதலில் இருந்து வெண்தும்பைப்பூ அளிக்கும் இக்காலக் காதலுக்கு நீண்ட தொலைவு ஏதுமில்லை.

– வெண்பா கீதாயன்

முந்தைய கட்டுரைஏழாம் உலகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாஞ்சி முதல் ஊட்டிவரை