தூத்துக்குடி மாசு -கடிதம்

 

அன்புள்ள ஜெ,

மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற ஆவணப்படம் மிக முக்கியமானது. இதற்கு முன்பு தங்களது ஸ்டெர்லைட் மற்றும் அதன் தொடர்ச்சியாக வந்த கட்டுரைகளுடன் சேர்த்துக் கொள்ளத்தக்கது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்ல அதனைச்சுற்றியும் அதைவிட அதிகமான மாசுக்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகள் சிறிதும் பெரிதுமாக உள்ளன.
தூத்துக்குடியிலிருக்கும் மற்ற ஆலைகளுக்கும் ஸ்டெர்லைட்க்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு, என்பது அதன் அமைவிடத்தில் இருக்கிறது.
கிட்டத்தட்ட ஆறு முதல் ஒன்பது மாதங்கள்  காற்றின் திசை கடலை நோக்கி இருப்பதால் கடற் கரையிலிருக்கும் TAC, SPIC, தெர்மல் பவர், போன்ற ஆலைக்கழிவுகள் ஊருக்குள் வருவதில்லை.
இதே காரணத்தினாலேயே ஸ்டெர்லைட் கழிவுகள் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஊருக்குள் வந்து இறங்குகிறது.
தெர்மல் பவர் கிட்டத்தட்ட தமிழகத்தின் மின் உற்பத்தியில் பெரும் பங்கு ஆற்றுகிறது. நிலக்கரியை எரித்து உண்டாக்கப்படும் மின்சாரத்தால் ஏராளமான புகையையம் மாசுவையும் கக்குவதோடு இல்லாமல் flyash என்ற நிலக்கரியின் மிச்சத்தை கொடுக்கிறது. இந்த கழிவை என்ன செய்வது என்றே தெரியவில்லை.
முயல்தீவிற்கு அருகில் பல ஏக்கர் நிலங்களில் இந்த கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. காற்றுக்காலங்களில் முயல்தீவிற்கு  ஒருமுறை சென்றுவந்தால் நுரையீரல் நோயோடு திரும்பிவரலாம்.
காற்றாலும், அதிகாரிகளின் அலட்சியத்தினாலும்,  flyash கழிவுகள் கடலுக்குள் சென்று சேருகின்றன. இதே போன்ற பிரச்சினை டாக் நிறுவனத்திலும் உள்ளது.
கண்காணிப்பு அதிகாரிகள் என்பவர்கள் தனியார் நிறுவனங்களில் அவர்களில் “கவனிப்பில்” உல்லாச மாளிகைகளில் சிலநாட்கள் தங்கி இருந்து கையெழுத்து போடுபவர்கள் மட்டுமே.
குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெறும் மிகமுக்கியமான பாய்லர் pressure  testing  போது கூட, ஒன்றரை மடங்கு அதிகமாக சோதனை செய்யவேண்டிய இடத்தில் Operating  pressure ஐ விட குறைவான செட்டிங் வைத்து “பார்த்துவிட்டு” செல்வார்கள்.
(அவ்வப்போது நடைபெறும் பாய்லர் வெடிப்பு சம்பவங்கள் நமது நினைவில் வந்தால்? அதுதான் அதிகாரிகளை  காப்பாற்ற சட்டமும், அரசு சங்கங்களும் மீசையை முறுக்கிவிட்டு நிற்கின்றனவே).
Flyash போலவே Spic  நிறுவனத்தின் அசிடிக் ஜிப்சத்தை கடலுக்கு அருகில் கொட்டிவைக்கிறார்கள். ஆசிட் பண்புள்ள இந்த கழிவுகளிலிருந்து மழைக்காலங்களில் அமிலம் பூமிக்குள் இறங்குகிறது. இதுபோக என்ன செய்வது என்று தெரியாமல் வைத்திருக்கும் (மிக ஆபத்தான) கழிவுகள் அந்தந்த ஆலைக்குள்ளேயே புதைத்து வைத்திருக்கும் கொடுமைகளும் இருக்கின்றது.
இதன் மற்றொரு பக்கத்தையும் நாம் மறக்கக் கூடாது. இன்று தூத்துக்குடியில் மக்களில் கிட்டத்தட்ட 30லிருந்து 40 சதம் வரை வெளியிலிருந்து பிழைப்பிற்காக இத்தகைய நிறுவனங்களை நம்பி குடியேறியவர்கள்தான்.
எங்களைப்  போன்ற “போன தலைமுறை அன்றாடம் காச்சிகள்” கொஞ்சம் காசு பார்த்து “சூட் போடப்பழகியது”  இதுபோன்ற நிறுவனங்களில் வேலை செய்வதால் தான்.
இன்று தமிழகத்திலிருந்து விரல்விட்டு எண்ணக் கூடிய பெரிய நிறுவனங்களிலில் spic  மற்றும் ஸ்டெர்லைட் முக்கியமானது. அதனையும் வெளியேற்றிவிட்டால் தமிழ்நாட்டின் படித்த இளையர்களின் நிலை IT  போன்ற பொட்டி  தட்டும் நிறுவனங்களை விட்டால் வேறு போக்கிடம் இல்லாமல் ஆகிவிடும்.
சமீப காலங்களில் தூத்துக்குடி துறைமுகத்தை வைத்து தூத்துக்குடியின்  வளர்ச்சி மிகப்பிரமாண்டமாக இருக்கிறது. அதன் மூலம் விளையாடும் காசும் பிரமிப்பானதாக இருக்கிறது.
ஆனால் இந்த தூத்துக்குடி துறைமுகம் வந்து வளர்ச்சியடைந்ததே Spic, Tac, TTPS போன்ற நிறுவங்களால் தான் என்பது தான் நிதர்சனம்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை,
அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கொடுக்கும், கொடுத்த பணத்தைக் கொண்டு வளர்ந்த தொழில்நுட்பத்தை நிறுவனங்களில் நிறுவியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றுதான் தெரிகின்றது.
அன்புடன்,
பழனிவேல் ராஜா
அன்புள்ள பழனிவேல் ராஜா
இந்த ஆவணப்படத்தில் காட்டப்படுவது காற்று மாசு குறித்து அல்ல. முதன்மையாக நீர்மாசு பற்றி. ரசாயனங்கள் நேரடியாக நிலத்தடிநீருக்குள் செலுத்தப்படுவது பற்றி
ஜெ

 

முந்தைய கட்டுரைஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி  
அடுத்த கட்டுரைஏழாம் உலகம்- கடிதங்கள்