‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8

tigபிறை விளக்குகளின் சிறுசுடர்கள் நடுங்கி விரித்த ஒளியில் எழுந்து சுழன்ற நிழல்கள் தொடர காவலனுக்குப் பின்னால் சாத்யகி நடந்தான். அவனுக்குப் பின்னால் இரு ஒற்றர்களும் நிழல்களென ஓசையின்றி வந்தனர். அறைகள் அனைத்திலும் பெண்களிருப்பதை மெல்லிய பேச்சொலிகளிலிருந்து உணரமுடிந்தது. இரு வாயில்களில் முதுபெண்டிரின் தலைகள் எட்டிப்பார்த்தன. விழிகள் உணர்வுகளை உள்ளிழுத்துக்கொண்டு அணைந்திருந்தன.

படிகளிலேறி இடப்பக்கம் திரும்பி சிற்றறை ஒன்றின் வாயிலை அடைந்த பின் ஏவலன் திரும்பி மெல்லிய குரலில் “பெருந்தோழி இதற்குள்தான் இருக்கிறார். அவர் எவரிடமும் பேசுவதில்லை, பிறரை முகம் அறிவதுமில்லை. ஒவ்வொருநாளும் இரவெழுந்த பின்னரே உணவுண்கிறார். சேடியர் எவரும் அவரை அணுகுவதில்லை. முதுசேடி கர்த்தமை மட்டுமே அவருக்கு பணி செய்யமுடியும். அவரும் நாளுக்கு ஒருமுறை உணவை கொண்டுவந்து இங்கு வைத்துவிட்டு செல்வதைத் தவிர்த்தால் சொல்தொடர்பேதும் இல்லை” என்றான்.

ஒரு ஏவலன் சென்று கர்த்தமையை அழைத்துவந்தான். வறுமுலைகள் தொங்கி ஊசலாட கைகள் கால்கள்போல அசைய முதுகு வளைந்து நடந்துவந்த கர்த்தமை பழுத்த விழிகளால் சாத்யகியை நோக்கி உதட்டசைவால் “யார்?” என்றாள். “பேரரசி பானுமதியின் ஒற்றர், ஆணையுடன் வந்திருக்கிறார். பெருந்தோழியை அஸ்தினபுரிக்கு அழைத்துச்செல்கிறார்” என்றான் காவலர்தலைவன். அவள் அவன் உதடுகளை படித்தறிந்து கையசைவால்  ‘அவர் வரமாட்டார். அவரிடம் எந்த மானுடரும் எதையும் தெரிவிக்க இயலாது’ என்று சொன்னாள். “இது எனக்கு அளிக்கப்பட்ட ஆணை” என்றான் சாத்யகி. “உள்ளே அழைத்துச்செல்லுங்கள், செவிலியே. அவர்கள் பேசிக்கொள்ளட்டும்” என்றான் காவலர்தலைவன்.

கர்த்தமை வருக என்று கைகாட்டிவிட்டு முன்னால் சென்றாள். சாத்யகி “இவ்வறைவிட்டு வெளியே செல்வதே இல்லையா?” என்றான். காவலன் “இரவில் அறையிலிருந்து கிளம்பி பின்பக்கம் இருக்கும் குளக்கரையிலும் குறுங்காட்டிலும் உலவி வருவார்கள். அதை பார்க்க அஞ்சி சேடியர் சாளரங்களை மூடிக்கொள்வார்கள். செவிலி மட்டும் மாளிகை முற்றத்திலேயே காத்து நின்றிருப்பதை கண்டிருக்கிறேன். பெருந்தோழி எவரையும் விழிநோக்குவதோ ஆளறிவதோ இல்லை” என்றான். “இரவில் விடியல்வரை உலவிக்கொண்டே இருப்பார்கள். பகலிலும் துயில்வதில்லை. சென்ற பதினைந்தாண்டுகளுக்கு மேலாக நான் அவர்களை ஒவ்வொருநாளும் பார்த்துவருகிறேன். அவர் துயின்று கண்டதேயில்லை.”

சாத்யகி மெல்லிய பதற்றம்கொண்டான். தன்னை மாயை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? அவள் தன்னை அடையாளம் காணும்பொருட்டு அவன் எந்தப் பொருளையும் கொண்டுவந்திருக்கவில்லை. எந்தக் குழூக்குறிச் சொல்லையும் இளைய யாதவர் கூறி அனுப்பியிருக்கவுமில்லை. ஏதேனும் வழி ஒற்றர்களிடமிருக்கக்கூடும் என்று எண்ணி அவர்களை திரும்பிப்பார்த்தான். அவர்கள் நிழல்கள்போல சற்று அப்பால் நின்றுவிட்டிருந்தனர். அந்த முகங்களில் எந்த உணர்வும் தெரியவில்லை.

கர்த்தமை கையசைவால் கதவை திறக்கலாமல்லவா என்றாள். சாத்யகி தலையசைத்தான். கர்த்தமை மெல்ல கதவைத் திறந்து உள்ளே சென்றாள். சாத்யகி ஒருகணம் தயங்கியபின் அறைக்குள் சென்றான். அது நீளமான பெரிய அறை. அதன் மறு எல்லையில் அமர்ந்திருந்த மாயையை அவன் சிலகணங்கள் கழித்தே மானுட உரு என்று அடையாளம் கண்டான். ஐந்து கரிய வேர்கள் என கூந்தல் சரிந்து அவள் அமர்ந்திருந்த பீடத்தில் விழுந்து பரவியிருந்தது. சடைத்தொகையின் பரப்பால் முகம் நிழலுக்கு அடியிலென மறைந்திருந்தது. செந்நிறப் பட்டாடை அணிந்த உடல் மெலிந்து குறுகி அந்த சடைத்தொகையின் எடையைத் தாங்கமுடியாதது என மஞ்சத்தில் தொற்றியதுபோல் அமர்ந்திருந்தது.

அவள் காற்றிலாடும் முட்புதர்போல மெல்ல அசைந்தபடி தாழ்ந்த குரலில் முட்களில் காற்று சீறும் ஒலியில் எதையோ சொல்லிக்கொண்டிருந்தாள். அவ்வசைவினாலேயே அவள் மனித உருவென விழிக்கு காட்டினாள். சாத்யகி மூச்சை அமைத்துக்கொண்டு மேலும் ஓரடி முன்னெடுத்து வைத்தான். அசைவுகளை அவள் அறியவில்லை. அந்த அறையில் அவர்கள் இருப்பதையே அவள் அறியவில்லை என்று தோன்றியது. இரு கைகளையும் மஞ்சத்தில் ஊன்றியிருந்தாள். அவையும் கருகி மெலிந்து அந்தச் சடைக்கற்றைகள் போலவே வேர்களெனத் தெரிந்தன.

அறைக்குள் சிறு பிறையிலெரிந்த விளக்கின் ஒளியில் அவளுடைய நிழல் எழுந்து எதிர்சுவரில் பேருருக்கொண்டு மடங்கியிருந்தது. கர்த்தமை அருகணைந்து கைவீசி முனகலென ஒலியெழுப்பி உங்களைப் பார்க்க வந்துள்ளார் என்றாள். அவ்வசைவும் ஒலியும் இருளில் என அவளை உடல்கடந்து அப்பால் சென்றன. கர்த்தமை மும்முறை சொல்லிவிட்டு சாத்யகியிடம் குறிப்பால் இனி நீங்கள் சொல்லுங்கள் என்றபின் வெளியே சென்றாள். கதவை அவள் மெல்ல மூடும் ஓசை கேட்டது. சாத்யகி மஞ்சத்தில் ஊன்றிய உள்ளங்கைகளை பார்த்தான். உகிர்கள் எழுந்து உள்நோக்கி வளைந்திருந்தன. தலை குனிந்திருந்தமையால் கண்களோ முகமோ தெரியவில்லை.

மூச்சொலிபோல அவள் கூறிக்கொண்டிருந்தது என்ன சொல்லென்று அவனால் அறியமுடியவில்லை. செவிகூர்ந்தபடி அறியாமல் மேலுமிரு எட்டுகள் முன்னகர்ந்தான். சீரான அசைவுடன் அவள் ஊழ்கத்திலென இருந்தாள். ஒரு சொல் உள்ளத்தை நெடுந்தொலைவுக்கு எடுத்துச் சென்றுவிட முடியும் என்று சாத்யகிக்கு வில் கற்பித்தபோது அர்ஜுனன் சொன்னான். மீள மீள சொல்லப்படுகையில் சொல் பொருளிழக்கிறது. முடிவிலாது சொல்லப்படுகையில் அதுவே ஒரு மொழியென மாறுகிறது. முடிவில் அனைத்தையும் தன்னில் சூடிக்கொள்கிறது. “மொழியை துறப்பதற்கு ஒரு சொல்லை பற்றிக்கொள்வதே உகந்த வழி. இங்கிருந்து சென்றவர்கள் அனைவரும் ஒரு சொல்லை சரடெனப் பற்றிக்கொண்டு தொற்றி மேலேறியவர்களே.”

உளம் பிறழ்ந்தோர் அனைவரும் அதேபோல ஒற்றைச் சொல்லில் அமைந்திருப்பதை நினைவுகூர்ந்தான். ஊழ்கத்தில் அமைந்த படிவரை முடிவிலி வரை கொண்டு செல்லும் ஒற்றைச் சொல் இவர்களை முடிவிலாத காலத்தில் ஒற்றைப் புள்ளியில் கட்டிப்போடுகிறதா என்ன? சொல்லச் சொல்ல விரிந்து பரவாது அழுத்தம் கொண்டு, எடை மிகுந்து, அவர்கள் மேல் அமர்ந்திருக்கிறதா? அவன் வெளியே செல்ல விழைந்தான். அந்தப் பணிக்கு தன்னை ஏன் இளைய யாதவர் அனுப்பினார் என்று ஐயுற்றான்.

அவளைப் பற்றி, கைகளை ஆடையால் கட்டி, தூக்கிக்கொண்டு தேரி ஏற்றிச் சென்றுவிடமுடியுமா என்று ஓர் எண்ணம் எழுந்தது. மறுகணமே அச்சத்தில் அவன் உடல் மெய்ப்பு கொண்டது. போரிலும்கூட தனக்கு நிகரான உளநிலை கொண்டவர்களையே மனிதர்களால் எதிர்கொள்ளமுடியும். படைக்கலம் ஏந்தி எதிர்நிற்கும் உடலுக்குள் உறையும் உள்ளமென்ன என்பதை உணர்ந்தாலொழிய போரிட இயலாது. பித்தர்கள், படிவர்கள், உளமாயம் கற்றவர்கள் எதிர்கொள்ள இயலாதவர்கள். இங்கிருக்கும் இச்சிறு உடல் அமர்ந்திருக்கும் அந்த எடை மிகுந்த மரப்பீடத்தை இரு கைகளாலும் தூக்கி தன் மேல் அறையக்கூடும். சுவர்களில் கால்வைத்து எழுந்து வெளவால்போல் இவ்வறைக்குள் சுற்றிவரக்கூடும். கூருகிர்களை தன் கழுத்தில் பதித்து தசைபிளந்து குருதியுண்ணக்கூடும்.

உடலென்பது உள்ளே உறைவதன் ஒரு தோற்றம் மட்டுமே. இவ்வாறாக தன்னை வற்றவைத்து, கருகவைத்து, சடைத்தொகை சூடி, இவ்வுடல் தன்னை முற்றாக இங்கிருந்து விலக்கிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் உள்ளம் மிக அப்பால் எங்கோ இருக்கிறது. முற்றிலும் வேறொன்றாக. அங்கிருப்பது ஒரு முதுமகள் அல்ல. வஞ்சினம் கொண்ட அறியாத கொலைத்தெய்வம் என்று தோன்றியது. அந்த ஐம்புரிச்சடை பதினைந்து ஆண்டுகள் பசுங்குருதி பூசி கொழுப்பு படிந்து உருவானது. அவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் முதுகெலும்பு கூச கண்கள் நீர்மை கொள்ள ஒரு விதிர்ப்பு உள்ளங்காலிலிருந்து தலைவரை கடந்து சென்றது. பற்கள் ஒன்றுடன் ஒன்று உரசி கிட்டித்த ஓசை எழுப்புவதை உணர்ந்தான். விழுந்துவிடப்போவதுபோல் நிலைதடுமாறினான். பின்னர் திரும்பி அறைவாயிலை நோக்கி செல்லப்போனான்.

அவ்வெண்ணம் எழுந்ததே ஒழிய அவன் உடல் அசையவில்லை. ஆனால் அவ்வெண்ணத்தால் உள்ளம் திசைமாறியதனால் அதுவரை அவளிடமிருந்து கேட்டுக்கொண்டிருந்த அச்சொல் சற்றே கோணம் மாறி பொருள் கொண்டது. அவள் குருதி என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தாள். அச்சொல்லை மூன்று ஒலியலகுகளாகப் பிரித்து மூன்றையும் நீட்டி விட்டிருந்தமையால் அது பிறிதொன்றென ஒலித்தது. “ரா-க்தா-ஹா!” அச்சொல்லே சிவப்பாக, பச்சைவீச்சத்துடன் இருந்தது. “ரக்தஹ! ரக்தஹ! ரக்தஹ!” என்று அவள் உடலிலிருந்து ஓசையெழுந்தது. அவ்வொலியில் ஏறி அவள் ஊசலாடிக்கொண்டிருப்பதுபோல. அவ்வொலி அவளிடமிருந்து எழுந்து சிவந்த சிறகுகளுடன் அவளைச் சுற்றி ரீங்கரித்து பறப்பதுபோல.

அறைக்குள் புகுந்த காற்றில் சுடரசைய அவள் நிழல் பொங்கி மேலெழுந்து கூரையில் வளைந்து மீண்டும் இணைந்தது. சாத்யகி மீண்டும் திரும்பிவிடும் எண்ணத்தை அடைந்தான். ஒன்றும் செய்வதற்கில்லை என உணர்ந்த அக்கணமே இளைய யாதவரின் நினைவெழுந்தது. இது எனக்கிடப்பட்ட ஆணை. எந்நிலையிலும் இதன்பொருட்டே நின்றிருக்கவேண்டியவன் நான் என்று அவன் தனக்கே சொல்லிக்கொண்டான். எப்போதும் அவனுள் உறைந்த எண்ணமாயினும் அதை சொற்களென உள்ளத்தில் தொகுத்துக்கொண்டபோது அவனுக்கு உறுதியையும் தெளிவையும் அளித்தது.

சீராக கால்களை எடுத்து வைத்து முன்னால் சென்றான். அவள் முன் நின்று “அன்னையே!” என்று அழைத்தான். அவள் அவன் குரலை கேட்கவில்லை. அவன் மேலும் ஓரடி முன்னால் எடுத்து வைத்து “அன்னையே!” என்றான். அவள் தன்னை அறியவில்லை என்று உணர்ந்தபின் “அன்னையே, நான் இளைய யாதவரின் தூதன்!” என்றான். நீர்ப்பாவை விரல்தொட்டு கலைவதுபோல அவளில் அச்சொல் எழுப்பிய அசைவை அவன் கண்டான். அவள் விழிதூக்கி அவனை பார்த்தாள். “யார்?” என்றாள். விலங்குகளுக்குரிய நாதெளியா குரல். “யார்?” என்று அவள் மீண்டும் கேட்டாள்.

அவள் விழிகள் குருதி கசிய வெட்டிவைக்கப்பட்ட இரு தசைத் துண்டுகள்போலிருந்தன. வாய் கரிய பற்களுடன் வற்றிய உதடுகளுடன் சேற்றுக்குழி போலிருந்தது. வடிக்கப்பட்ட காதுகள் தசைவளையங்கள் வற்றி, தோல் வார்களென அவள் தோளில் கிடந்தன. “யார்?” என்று அவள் கேட்டாள். மேலுமுரக்க “யார்?” என்றாள். இரு கைகளையும் மஞ்சத்தில் ஓங்கி அறைந்து முழங்காலை ஊன்றி எழுந்து அவ்வறையை நிரப்பிய பெருங்குரலில் “யார்?” என்றாள். சாத்யகி “நான் இளைய யாதவரின்…” என்றான். அவன் அச்சொற்றொடரை முடிப்பதற்குள் அவள் உடல் நடுங்க இரு கைகளையும் நீட்டி “யாதவரே, நீங்களா?” என்றாள்.

“அன்னையே…” என்று அவன் மீண்டும் சொல்லெடுப்பதற்குள் “யாதவரே, வந்துவிட்டீர்களா? அந்தப் பொழுது அணைந்துவிட்டதா?” என்றாள். அதற்கென்ன மறுமொழி சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை “யாதவரே! யாதவரே! யாதவரே!” என்று அவள் கூவினாள். தன் நெஞ்சில் வலக்கையால் ஓங்கி அறைந்து “இத்தருணத்திற்காக காத்திருந்தேன். இதற்காகத்தான். என் கடன் முடிந்தது! யாதவரே, என் கடன் முடிந்தது! இதோ என் கடன் முடிந்தது!” என்று வீறிட்டாள். பின்னர் காற்றில் கண்காணாதெழுந்த ஒரு காலால் நெஞ்சில் உதைக்கப்பட்டவள்போல மல்லாந்து தெறிந்து விழுந்தாள். இரு கைகளும் மஞ்சத்தில் அறைந்தபடி துடித்தன. கால்கள் வலிப்பு கொண்டு இழுத்துக்கொண்டன. அவள் அணிந்திருந்த செம்பட்டு ஆடை விலக வற்றிச் சுருங்கிய வறுமுலைகளும் தசைவழிந்து எலும்புகளென ஆகிவிட்டிருந்த கால்களும் தெரிந்தன. “ரக்தஹ! ரக்தஹ!” என்று மீண்டும் சொல்லத்தொடங்கினாள். தலையை இருபுறமும் அசைத்தபடி கடும்வலியில் துடிப்பவள்போல அச்சொல்லை கூறிக்கொண்டிருந்தாள்.

சாத்யகி மேலும் முன்னகர்ந்து பீடத்தில் கையூன்றி அவள் மேல் குனிந்து “அன்னையே, தாங்கள் என்னுடன் வரவேண்டும். இப்போதே கிளம்பவேண்டும்” என்றான். “ஆம், குருதியின் தருணம்… யாதவரே, நீர் வேள்விநிலையில் எரிகூட்டிவிட்டீர்” என்று மாயை சொன்னாள். எழுந்து சேக்கையை கைகளால் அறைந்தபடி “ஆஆஆ!” என வீறிட்டாள். அலையலையாக அவளுக்குள் இருந்து அந்த ஓலம் எழுவதை கண்களால் காணமுடிந்தது.

tigசாத்யகி மாயையுடன் உபப்பிலாவ்யத்திற்கு திரும்பி வந்தபோது அவனை கோட்டைக்கு வெளியிலேயே சுரேசர் படைத்தலைவர் சிம்மவக்த்ரருடன் எதிர்கொண்டார். அவன் புரவியிலிருந்து இறங்கி சுரேசரை வணங்கி “அமைச்சருக்கு வணக்கம். அழைத்து வந்துள்ளேன்” என்றான். “வழியில் இடர் ஏதுமில்லையே?” என்று அவர் கேட்டார். “இல்லை, முழுப்பொழுதும் துயிலிலென இருந்தார். ஆனால் அவர் துயில்கொள்வதில்லை. உடலில் அசைவு ஓய்வதோ உதடுகளில் ஊழ்கச் சொல் அமைவதோ இல்லை” என்றான் சாத்யகி.

சுரேசர் “உடன் எவர் இருக்கிறார்கள்?” என்று பின்னால் வந்துகொண்டிருந்த மூடுதேரைப் பார்த்தபடி கேட்டார். “கர்த்தமை என்ற அவருடைய சேடி மட்டும்தான். ஆனால் அதற்கும் தேவையில்லை என்றார்கள். நான் அழைத்தபோது அவரே என்னுடன் வந்து மூடுதேரில் ஏறிக்கொண்டார். அங்குள்ள ஒற்றர்கள் அனைத்தையும் ஒருக்கியிருந்தமையால் இந்திரப்பிரஸ்தத்தின் பின்வாயிலினூடாக காட்டிற்குள் எளிதில் புகுந்தோம்” என்று சாத்யகி சொன்னான். சுரேசர் “ஆம், அவர்கள் அனைவரும் ஏற்கும் கணையாழி அது. அதற்குமேல் அஸ்தினபுரியில் ஆணைகொண்ட கணையாழி ஒன்றே” என்றார்.

சாத்யகி புருவங்கள் சுருங்க “அது எந்தக் கணையாழி என்று நான் பார்க்கவில்லை. பேரரசி பானுமதியின் ஆணை என்றனர்” என்றான். “ஆம், அவருடையதே” என்றார் சுரேசர். “ஒற்றர்களிடம் அது எவ்வாறு வந்தது? பொய்யாக செய்தார்களா?” என்றான் சாத்யகி. “இல்லை, அதிலிருக்கும் அந்த அருமணி பிறிதொன்றிலாதது. அரசியே இளைய யாதவரின் ஒற்றரிடம் அளித்தார். இன்று மாலை அதை திரும்ப கொண்டுசென்று அளித்துவிடுவார்கள். இப்பணியின் பொருட்டே அது அளிக்கப்பட்டது” என்று சுரேசர் சொன்னார்.

சாத்யகி மூடுதேர் வந்து திரும்பி விரைவழிந்து நிற்பதை பார்த்தபின் “அதை ஏன் அஸ்தினபுரியின் அரசி செய்யவேண்டும்?” என்றான். “பெருந்தோழி இந்திரப்பிரஸ்தத்தில் இருப்பது ஒரு அழியாப் பழிச்சொல் உடல்கொண்டு உடனிருப்பதுபோல. அதை எவ்வகையிலேனும் விழிமுன் இருந்து விலக்க முயல்வது குலமகள்களின் இயல்புதானே?” என்றார் சுரேசர். சாத்யகி தலையசைத்தான். “நீங்களே பார்க்கலாம், மானுட உருக்கொண்ட ஒரு பழிச்சொல்போலத்தான் அவர் தோற்றமளிக்கிறார்” என்றார் சுரேசர். சாத்யகி “ஆம், அவரை விழிநிலைக்க நோக்க முடியாது நம்மால்” என்றான்.

சிம்மவக்த்ரர் “ஐந்தாண்டுகளுக்கு முன் நான் ஒருமுறை பார்த்திருக்கிறேன். அன்று அவரின் விழிகளை நோக்கிய முதல்கணமே திகைத்து கால்நடுங்கி அருகிருந்த சுவரை பற்றிக்கொண்டேன். சென்ற சில மாதங்களில் மேலும் மேலும் வற்றி உருவழிந்துகொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள்” என்றார். தேர் நின்று அதன் காவலன் வந்து அருகே நின்றான். சிம்மவக்த்ரர் “மூடுதேரை திறக்க வேண்டியதில்லை. இங்கிருந்தே அவர்களுக்கு ஒருக்கப்பட்ட மாளிகைக்கு கொண்டு செல்வோம்” என்றார். சுரேசர் கையசைத்து அவருக்கு ஆணைகொடுக்க சிம்மவக்த்ரர் தேரை அணுகி அதன் பாகனிடம் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு முன்னால் செல்ல தேர் அவருக்குப் பின்னால் சென்றது.

சுரேசர் “வருக!” என்று சாத்யகியின் தோளைத் தட்டியபடி தன் புரவியில் ஏறிக்கொண்டார். இருவரும் மென்நடையில் நகருக்குள் நுழைந்தார்கள். சாத்யகி “இந்திரப்பிரஸ்தம் அஸ்தினபுரியின் படைகளால் நிறைக்கப்பட்டுள்ளது, அமைச்சரே. இறந்த விலங்கின் உடலில் ஈக்கள் மொய்ப்பதுபோல என்று எனக்கு அங்கிருக்கும்போது தோன்றியது. அனைத்து தெருக்களும் படைவீரர்களால் நிறைந்துள்ளன. அனைத்து இல்லங்களும் பாடிவீடுகளாக மாறியுள்ளன. மக்கள் அங்கிருப்பதாகவே தெரியவில்லை” என்றான்.

சுரேசர் “மக்களில் பெரும்பகுதியினர் இங்கு வந்துவிட்டனர். அங்கிருப்பவர்கள் எளிய குடியினர் மட்டுமே. ஆகவே பெரிய மாளிகைகள் அனைத்தையும் அஸ்தினபுரியின் படைகள் எடுத்துக்கொண்டுவிட்டன. சூதர்களும் வணிகர்களும் பணியாட்களுமே அங்கிருக்கிறார்கள். அவர்கள் பணிவை இயல்பிலேயே கற்றவர்கள். எனவே எவர் மாறினாலும் அவர்களால் அங்கிருக்க முடியும்” என்றார். அவர்கள் உபப்பிலாவ்யத்தின் தெருவினூடாக அலையில் மிதப்பவர்கள்போல சென்றனர். சாத்யகிக்கு அதுவரை இல்லாதிருந்த துயில் வந்து விழிகளை அழுத்தியது. அங்கிருந்து தன் மாளிகைக்கு எத்தனை காலடித்தொலைவு என்று உள்ளம் கணக்கிட்டது.

“நேற்று மாலை உங்கள் மைந்தர்களை பேரரசி திரௌபதி தன் அரண்மனைக்கு அழைத்திருந்தார். திருஷ்டத்யும்னன் தன் அரசியருடனும் மகளுடனும் மைந்தர்களுடனும் வந்திருந்தார். அவர்கள் இரவு நெடுநேரம் வரை விருந்து கொண்டாடினர். நான் உடன் இருந்தேன்” என்றார் சுரேசர். “திருஷ்டத்யும்னன் உங்கள் முதல் மைந்தரால் உளநிறைவடைந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. இளவரசிக்கும் அவரை விரும்ப இயன்றதென்று அவர்களின் முகம் காட்டியது.”

சாத்யகி துயிலில் ஆழ்ந்துகொண்டிருந்தான். சுரேசர் அதை உணரவில்லை. “அரசகுடிகள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டுவதில்லை என்றாலும் என்னைப்போன்ற அணுக்கர்களால் சிறுசெயல்கள் வழியாக அதை உணரமுடியும். விருந்தின் தொடக்க நாழிகைக்குப் பின் இளவரசி விழிதூக்கி ஒருமுறைகூட நேருக்கு நேராக உங்கள் முதல் மைந்தரை பார்க்கவில்லை. ஆனால் உதடுகளில் ஒரு புன்னகை இருந்தது” என்றார் சுரேசர். சாத்யகி விழித்துக்கொண்டு மெல்லிய பதற்றத்துடன் “என்னால் இதை இன்னமும்கூட சரியாக புரிந்துகொள்ள இயலவில்லை. துருபதர் இதற்கு முழுதுளத்துடன் ஒப்புவாரா? பின்னர் பேச்சு எழக்கூடுமா?” என்றான்.

“இன்று காலை திருஷ்டத்யும்னன் துருபதரை சென்று பார்த்து இரண்டு நாழிகைப்பொழுது உரையாடியிருக்கிறார்” என்றார் சுரேசர். “அவர் என்ன சொன்னார்?” என்றான் சாத்யகி. “உரையாடலுக்குப் பின் திருஷ்டத்யும்னன் படைமுகப்புக்கு சென்றுவிட்டார். துருபதர் படைநகர்வு ஓலைகளை படித்துக்காட்டச் சொல்லி ஆணைகளை பிறப்பித்தார். அதன்பின் உணவுண்டு ஓய்வெடுத்தார்” என்றார் சுரேசர். சாத்யகி அமைச்சரின் தோளைத்தொட்டு “அவரது எண்ணமென்ன?” என்றான்.

சுரேசர் சிரித்து “அதைத்தானே சொன்னேன்? மாற்று எண்ணமிருந்தால் உடனடியாக அலுவல்களுக்கு செல்வாரா? இந்தத் திருமணத்தை நிறுத்துவதற்கு என்ன செய்வது என்றல்லவா பார்ப்பார்? அவர் சினம் கொள்ளவில்லை என்பதே அவரும் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதைத்தான் காட்டுகிறது” என்றார். சாத்யகி “அவர்கள் தொல்குடி ஷத்ரியர். நாங்கள் இப்போதுதான் அரசு என ஒன்றை அமைத்து முடிசூடி அமரத்தொடங்கியிருக்கிறோம். இணையானவர்களிடம் மட்டுமே பெண்கொள்ள வேண்டுமென்று எங்கள் மூதாதையர் சொல்வார்கள்” என்றான்.

சுரேசர் “அது யாதவ குடியினருக்குரிய சிறுநெறி, அரசர்களுக்குரியதல்ல. அரசர்களின் திருமணமென்பது ஒவ்வொருமுறையும் அவர்களைவிட மேலானவர்களிடமே அமையவேண்டும். எவ்வளவு மேலானவர்களுடன் அமைகிறதோ அந்த அளவுக்கு நல்லது. யாதவரே, குருதியால் இணைவதுபோல அரசுகளும் படைகளும் வேறு எதனாலும் பிணைத்துக் கட்டப்படுவதில்லை. ஒன்று சூழ்ந்து நோக்குக! பாரதவர்ஷத்தின் மிகத் தொன்மையான குடிகளில் ஒன்று பாஞ்சாலம். இன்று அவர்களில்லையேல் பாண்டவர்களின் படைவல்லமை பாதிக்கும் குறைவு. அசுரரும் அரக்கரும் நிஷாதரும் கிராதரும் நிறைந்த இப்படைகளுக்கு நடுவே பாஞ்சாலத்தின் பல்லாயிரம் ஷத்ரியர்கள் தங்கள் பெருமிதத்தையும் ஆணவத்தையும் அகற்றி படைகொண்டு நிற்கிறார்கள் என்றால் அது ஏன்? அரசி பாண்டவர்களால் மணக்கப்பட்டவர் என்பதனால் மட்டுமே. அவர் வயிற்றில் பிறந்த மைந்தர் இந்திரப்பிரஸ்தத்தையும் அஸ்தினபுரியையும் ஒருங்கு ஆளக்கூடும் என்பதனால்” என்றார்.

தொடர்ந்து “பாஞ்சாலரின் கோணத்தில் எண்ணிப்பாருங்கள். இப்போர் வென்றபின் பாரதவர்ஷத்தின் முற்று ஆட்சி யாதவக் குருதி கொண்ட யுதிஷ்டிரரிடம் வந்தமையும். ஏனெனில் இப்போரில் பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரியர்களும் தோற்கடிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் யுதிஷ்டிரருக்கு கப்பம் கட்டியாகவேண்டும். யாதவரே, அதன்பின் பல தலைமுறைக்காலம் ஆரியவர்த்தத்தில் யாதவர்களின் எதிர்ப்பில்லாத கொடியே பறக்கும். அப்போது ரிஷபவனத்தின் அரசரின் நிலஎல்லையும் முடிமாட்சியும் இப்போது இருப்பதுபோல இருக்காது. நூறு மடங்கு பெருகிப்பொலியும். அதை அரியணைமர்ந்து ஆளும் மைந்தர் தன் மகளின் வயிற்றில் பிறப்பதை பாஞ்சாலர் விரும்பமாட்டாரா என்ன?” என்றார் சுரேசர்.

சாத்யகி “ஆம், அவ்வாறு பார்த்தால் அது சரியென்றே தோன்றுகிறது” என்றான். “நான் இன்று மாலை நிகழவிருக்கும் கொற்றவை பூசனைக்கான ஒருக்கங்களை செய்யவேண்டியுள்ளது. செல்க! சென்று சற்று ஓய்வெடுத்து உடைமாற்றி இளைய யாதவரைப் பார்த்து உங்கள் பணி முடிந்ததென்று கூறிவிட்டு மாலை பூசனைக்கு ஒருங்குக!” என்றார் சுரேசர். “கொற்றவை பூசனைக்குப் பின் படைநகர்வுதானே?” என்றான் சாத்யகி. “ஆம், படைத்தலைவர்களுக்கான ஆணைகள் அனைத்தும் பிறப்பிக்கப்பட்டுவிட்டன. ஒருமுறை பேரரசர் வாளை தலைக்குமேல் ஓங்கி அசைத்தால் இந்நகரையும் இதைச் சூழ்ந்து உள்ள அனைத்துக் காடுகளையும் முற்றாக நிரப்பியிருக்கும் பெரும்படை கிளம்பி குருக்ஷேத்திரம் நோக்கி கிளம்பும். விராடரின் படைகள் நேரடியாக அங்கு வந்து சேரும். மேலும் பன்னிரு படைப்பிரிவுகள் வெவ்வேறு இடங்களிலிருந்து குருக்ஷேத்திரத்திற்கு செல்கின்றன.”

சாத்யகி “அவையில் முரண்கொண்ட நிஷாதர்களும் கிராதரும் நம்மைவிட்டு கிளம்புகிறார்கள் என்றார்கள்” என்றான். “ஆம், அவர்கள் நேற்றே கிளம்பவிருந்தனர். கொற்றவைப் பூசனை நிகழ்ந்தபின் அவர்கள் முடிவெடுக்கலாம் என அரசரின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. கொற்றவையின் பூசையை அவர்களால் தவிர்க்க இயலாதென்று நிமித்திகர்களும் சொன்னார்கள். ஆகவே அவர்கள் காத்திருக்கிறார்கள்” என்றார் சுரேசர்.

சாத்யகி “கொற்றவைப் பூசனையில் வெளிப்படும், நாம் போரை வெல்லவிருக்கிறோமா இல்லையா என்று” என்றான். “ஏன்?” என்று சுரேசர் கேட்டார். “அவர்கள் மாயையின் ஆணையை ஏற்க வேண்டும்” என்று சாத்யகி சொன்னான். “யாதவரே, அஸ்தினபுரியின் அவையில் எழுந்து வஞ்சினம் உரைத்தவர் மாயை என்று அவர்கள் அனைவருமே அறிவார்கள்” என்று சுரேசர் சொன்னார். “ஆம், ஆனால் அது அரசியின் வஞ்சினம்” என்றான் சாத்யகி. சுரேசர் “அவர்கள் வெவ்வேறல்ல. அரசியின் மாற்றுருவே மாயை” என்றார்.

“அது ஒன்றையே நம்பிக்கொண்டிருக்கிறேன். அவர்களின் உள்ளங்கள் விலங்குகளைப்போல கட்டற்றவை, தெய்வங்களால் ஆளப்படுபவை. அவர்களாலேயே முன்கூட்டி உரைத்துவிட முடியாது. கொற்றவைப் பூசனைக்குப் பின் மாயையின் வஞ்சின உரை எழுமென்றால் நன்று” என்றபின் சாத்யகி புரவியை திருப்பினான்.

முந்தைய கட்டுரைபிரமிள் படைப்புக்கள் முழுத்தொகுப்பு -முன்விலைத்திட்டம்
அடுத்த கட்டுரைகன்யாகுமரி- கடிதங்கள்