ஒவ்வொருவராக வெளியேறுவதை நோக்கி அமர்ந்திருந்த சாத்யகி அசங்கனிடம் “அவையில் நிகழ்ந்த எதைப்பற்றியும் உங்களுக்குள் பேசிக்கொள்ளவேண்டியதில்லை. இங்கு நிகழ்ந்தன அனைத்தும் உங்கள் நினைவில் நின்றால் போதும். சென்று அரண்மனையில் ஓய்வெடுங்கள். நான் அரசரையும் அமைச்சர்களையும் பார்த்துவிட்டு திரும்பிவருகிறேன்” என்றான். சாந்தன் “ஏன் நாங்கள் பேசிக்கொள்ளக்கூடாது?” என்றான்.
சினத்துடன் திரும்பிய சாத்யகி “ஏனென்றால் நீங்கள் பேசிக்கொள்ளத் தொடங்கினால் உடனே இளிவரல்தான் எழுந்துவரும். இந்த அகவையில் அரசுசூழ்தலும் அதன் பலநூறு சிடுக்குகளும் விசைநிகர்களும் புரிந்துகொள்ள முடியாதவையாகவே இருக்கும். தங்களால் புரிந்துகொள்ள முடியாதவற்றை ஏளனம் செய்வதென்பது இளையவர்களின் இயல்பு. நீங்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும், அரசர்கள் பல்லாயிரம் செவிகளும் கண்களும் கொண்டவர்கள். தனியறைக்குள் இருந்து நீங்கள் பேசும் சொற்களைக்கூட அவர்கள் அறியக்கூடும். எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதென்பது காட்டு விலங்குகளுக்கு தெய்வங்கள் அளித்த கட்டளை. அரசியல் சூழலும் ஓர் வேட்டைக்காடு என்றுணர்க!” என்றான்.
அசங்கன் இளையவனை முகம் திருப்பாமல் பார்த்து நுட்பமாக விழியசைத்துவிட்டு சாத்யகியிடம் “அவ்வாறே, தந்தையே” என்றான். “செல்க! இளையோரை நீதான் பார்த்துக்கொள்ளவேண்டும். அவர்களின் செயல்களிலும் சொற்களிலும் உன்னுடைய கட்டுப்பாடு எப்போதும் இருக்கவேண்டும்” என்று சாத்யகி சொன்னான். அவர்கள் தலைவணங்கி விலகிச் சென்றபின் விழிமறைவது வரை நோக்கி நின்றான். பின்பு பெருமூச்சுடன் திரும்பி இடைநாழியினூடாக நடந்து அரசுசூழ் அறை நோக்கி சென்றான்.
அவனுக்கு எதிரே வந்த சுரேசர் புன்னகைத்து “மைந்தர் எங்கே?” என்றார். “அவர்களை தங்கள் அறைக்கு செல்லும்படி சொல்லியிருக்கிறேன். இன்று அவையில் என்ன நிகழ்ந்ததென்று அவர்களுக்கு புரிந்திருக்காது. யாதவர் குடியவைகளில் ஆளுக்கொன்று சொல்லி கூச்சலிட்டுக்கொண்டிருப்பார்கள். அதைப்போல என்று எண்ணிவிட்டிருப்பார்கள்” என்றான் சாத்யகி. வெண்பற்கள் காட்டிச் சிரித்தபடி “மைந்தர்களை நாம்தான் பின் தொடர்கிறோம், அதை நாணி அவர்களிடம் நம்மை பின்தொடரும்படி ஆணையிடுகிறோம்” என்று சொன்ன சுரேசர் சாத்யகியின் தோளில் கைவைத்து “மைந்தரைப்பற்றிய பதற்றத்தை ஒரு பெருங்கொண்டாட்டமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள், யாதவரே. உம்மை இத்தனை மகிழ்வுடன் இதற்குமுன் பார்த்ததே இல்லை” என்றார்.
“மகிழ்வா? என்னால் நிலைகொண்டு அமரவே இயலவில்லை” என்றான் சாத்யகி. “ஆம், தெரிகிறது” என்றபின் சுரேசர் “செல்க, அங்கு அரசர் அவையமர்ந்துவிட்டார்!” என்றார். சாத்யகி தாழ்ந்த குரலில் “என்ன நிகழ்கிறது, அமைச்சரே? அரசி இன்று அவையில் அவ்வாறு பேசுவார் என்று அனைவருக்கும் தெரிந்ததுதானே? எனினும் ஏன் பேசவிட்டார்கள்? ஏதேனும் சொல்லி அரசியை அவையிலிருந்து தவிர்த்திருக்கலாமே?” என்றான். சுரேசர் “நானும் அதேதான் எண்ணினேன். மிதமிஞ்சிய வஞ்சத்தால் உணர்வழிந்து அரசி போர்த்தெய்வப் பூசனைகளிலும் கடுநோன்புகளிலும் ஆழ்ந்திருக்கிறார் என்று அவையில் சொல்லியிருந்திருக்கலாம். ஆனால் அரசி அவைக்கு வரட்டும் என்று இளைய யாதவர் எண்ணினார் என்று தோன்றியது. அவர் எண்ணத்தை நாம் எப்போதுமே அறியவியலாது” என்றார்.
“அவர் என்ன இவையனைத்திலும் இருந்து முற்றாக விலகியவர் போலிருக்கிறார்? இது அவருடைய போர் என்பதை மறந்துவிட்டவர்போல” என்று சாத்யகி சொன்னான். சுரேசர் “ஆனால் இத்தனை ஆண்டுகளில் அனைத்திற்கும் அவரிடம் விடை இருக்குமென்று ஒவ்வொரு முறையும் நம்பியிருக்கிறேன். ஒருமுறைகூட அது பொய்யென்று ஆனதில்லை. அவர்மேல் ஐயமோ சினமோ கொள்வதும்,ஆற்றாமையுடன் பேசிக்கொள்வதும் எப்போதும் அவரை எண்ணியிருப்பதற்கான வழி என்றே எனக்குத் தோன்றுகிறது. இத்தருணமும் அவ்வாறே. நாம் வியந்து சொல்வதற்குரிய ஒன்றாக ஒரு விழியசைவில், ஒரு சொல் மிகையில் அவரால் ஆக்கிவிட இயலும்” என்றார்.
சாத்யகி முகமும் உடலும் இளகி புன்னகைத்தான். “ஆம், அவரால் இயலாதது என்று எதுவுமில்லை. நன்று நிகழுமென்றே எண்ணுவோம்” என்றபின் தலைவணங்கி விடைபெற்றான். சொல்லாடல் நிகழ்ந்துகொண்டிருந்த சிற்றறையின் வாயிலை சென்றடைந்தான். அங்கு நேமிதரன் வாயிற்காவலனாக நின்றிருந்தான். தலைவணங்கி “தங்களை அரசர் தேடினார்” என்றான். “என்னையா? கேட்டாரா?” என்று பதைப்புடன் கேட்டான் சாத்யகி. “சொல்லெடுத்துக் கேட்கவில்லை. என்னை அவர் நோக்கியபோது உங்களை பார்க்க விழைகிறார் என்று தெரிந்துகொண்டேன்” என்றான் நேமிதரன். “உள்ளே எவர் இருக்கிறார்கள்?” என்று சாத்யகி கேட்டான். “அனைவரும்தான். சௌனகர் பேசிக்கொண்டிருக்கிறார். செல்க!” என்றான் நேமிதரன்.
சாத்யகி கதவைத் திறந்து உள்ளே சென்றபோது பேசிக்கொண்டிருந்த சௌனகர் ஒருகணம் நிறுத்தி திரும்பிப்பார்த்தபின் தொடர்ந்தார். “தொடக்கமுதலே தாங்கள் வேறு என்பதை காட்டிக்கொள்வதில் கிராதரும் நிஷாதரும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். ஷத்ரியர்கள் வீரமும் ஒற்றுமையும் நிறைந்தவர்களாயினும் அவர்களுக்கு பிழையான தெய்வங்களின் திசைகாட்டுதல் இருக்கிறது என்று எப்போதும் அவர்கள் கூறிவருகிறார்கள். இது தாங்கள் வேறு என்று அவர்கள் காட்டிக்கொள்வதற்கான தருணம். இவ்வுச்சநிலையில் அவர்கள் விலகிச்சென்றால் நம்முடைய படைவல்லமை பெரிதும் குறையும். தாங்கள் அறிவீர்கள், இப்போர் முற்றிலும் நிகர்நிலையில் இப்போது நின்றிருக்கிறது. இத்துலாவில் ஒரு தட்டிலிருந்து ஒரு மணற்பரு அகல்வதும் பெரிய வேறுபாடென்றாகும்.”
அவர்களை மாறி மாறி நோக்கியபடி சௌனகர் சொன்னார் “அவர்கள் நம்மிடமிருந்து விலகிச்செல்வதை சொல்லிச் சொல்லி பெருக்கி தங்கள் படைவீரரின் நம்பிக்கையை பெருக்க முயல்வார்கள் கௌரவர்கள். இப்புறம் அவர்கள் விலகிச் செல்வதை எவ்வளவு சொல்குவித்து விலக்கினாலும் ஆழுள்ளத்தில் அது பெருங்குறையென்றே நமது படைவீரர்களுக்கு தோன்றும். சொல்லப்போனால் அக்குறையை இல்லாமை செய்யும்பொருட்டு அதைப்பற்றி மிகையாகப் பேசுவார்கள். பேசுந்தோறும் அது பெருகும். உள்ளத்தில் ஆழ்நோய் என நின்று வளரும். படைதிரண்டு செல்கையில் நமது வீரர்கள் ஒவ்வொரு அடிக்கும் நம்பிக்கை இழப்பார்கள்.”
“இப்போது என்ன செய்வது?” என்று எரிச்சலுடன் யுதிஷ்டிரர் கேட்டார். சௌனகர் “இப்போதுகூட நிஷாதரும் அரக்கரும் அசுரரும் நம்மிடமிருந்து விலகிச்செல்லும் எண்ணத்துடன் இல்லையென்றே எண்ணுகின்றேன். அவர்கள் இங்கு வந்த பொழுதிலிருந்தே ஷத்ரியர்களின் மேட்டிமைநடத்தையால் சற்று உளம்புண்பட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான். அதைத்தான் காட்டுகிறார்கள். அதற்கு நாம் நிகர்செய்தால் போதும் என எண்ணுகிறேன்” என்றார். யுதிஷ்டிரர் “தெளிவான ஆணைகள் இடப்பட்டிருந்தனவே, என்ன ஆயிற்று அவர்களுக்கு?” என்றார்.
“ஆம், நமது தரப்பிலிருந்து ஒரு சொல்கூட, ஒரு நோக்குகூட அவர்களின் உளம் புண்படும்படி எழுந்ததில்லையென்றே உறுதி கூறுகிறேன். அத்தனை படைத்தலைவர்களுக்கும் துணைப்படைத்தலைவர்களுக்கும் நூற்றுவருக்கும்கூட மறுசொல்லிலாத ஆணைகள் அளிக்கப்பட்டிருந்தன” என்றார் சௌனகர் “ஆனால் ஒன்றை உள்ளே கொண்டிருந்து வெளியே மறைக்கையில் எழும் நடத்தை மாறுபாடே உள்ளிருப்பதை மிகத் தெளிவாக வெளிக்காட்டுவது. கிராத குலத்துத் தலைவர் ஒருவரைக் கண்டு எழுந்து கைகூப்பி முகமன் சொல்லும் ஷத்ரிய சிறுபடைத்தலைவர் ஒருவர் அக்கணமே அவர் உள்ளத்தை புண்படுத்தியவராகிறார். புண்படுத்தலாகாதென்று ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலும் புண்படுத்தலாகவே ஆகும். இரு சாராரும் சேர்ந்து வாழ்ந்து ஓரிரு தலைமுறை கடந்த பின்னரே ஒருவரை ஒருவர் கண்காணிக்காத இயல்பு நிலை அமையும். அப்போது மட்டுமே புண்படுத்தலும் புண்படுதலும் நிகழாது. நிகர்நிலையில் இரு சாராரும் திகழ்வர்”
எரிச்சல் மீதூற “இதைப்பற்றி நாம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம்? இப்போது என்ன செய்வதென்று சொல்லுங்கள்” என்று உரத்த குரலில் யுதிஷ்டிரர் கேட்டார். “இது ஒரு சிறு பழிவாங்கல் என்று தோன்றுகிறது. அரசரே தன் தம்பியருடன் சென்று நிஷாத குலத்தலைவர்களைப் பணிந்து போருக்கு உதவும்படி மீண்டும் ஒருமுறை கோரினால் இப்படையில் தாங்கள் விழைந்த முதன்மையை பெற்றுவிட்டதாக நிஷாதரும் கிராதரும் அசுரரும் அரக்கரும் எண்ணக்கூடும். அவர்கள் விழைவது தங்களை பிறர் பணியவேண்டுமென்று மட்டுமே என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்களாலேயே நமது படை வெற்றி அமைந்ததென்று பின்னர் கூறிக்கொள்வதற்காக இப்போதே இதை நிகழ்த்துகிறார்கள்” என்றார் சௌனகர்.
“அவ்வண்ணமெனில் அதையே செய்வோம். நான் என்ன செய்ய வேண்டும்? நிஷாதரும் அரக்கரும் அசுரரும் தங்கியிருக்கும் பாடிவீடுகளுக்குச் சென்று அவர்களின் தலைவர்களுக்கு முன் தலைவணங்கி விண்ணப்பிக்க வேண்டுமா? அல்லது அவர்கள் கிளம்பிச் செல்லும் பாதைக்கு குறுக்கே நின்று தொழுது மன்றாட வேண்டுமா? இத்தருணத்தில் மேடையில் பொருந்தா வேடமொன்றை நடிப்பவன்போல் உணர்கிறேன்” என்று யுதிஷ்டிரர் சலிப்புடன் சொன்னார்.
சகதேவன் “இல்லை, மூத்தவரே. சௌனகர் அவர்களை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எண்ணுகின்றேன். அவர்கள் உண்மையாகவே இப்போரில் கலந்துகொள்வதில் பொருளில்லை என்று எண்ணுகிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் அவனை நோக்கி திரும்பி புருவம் சுளித்தார். “எண்ணிப்பாருங்கள். அசுரர்கள், நிஷாதர்கள், கிராதர்கள் என்றேனும் நிலம் வெல்லவோ தங்கள் நெறிகளை பிறர்மேல் நிறுத்தவோ படைகொண்டு எழுந்திருக்கிறார்களா? அரக்கர்கள் சிலர் அதை செய்ததுண்டு. அவர்களும் ஷத்ரிய அரசர்கள்போல் தங்களை ஆக்கும்பொருட்டே அதை செய்தார்கள். அது அவர்களது இயல்பே அல்ல. அவர்கள் மண்போல் நிலைகொண்டவர்கள். ஆகவேதான் அவர்களை தமோகுணத்தார் என்றனர் நம் நூலோர்” என்றான்.
“படைகொண்டு சென்று பிறிதொரு நிலத்தை வென்றபின் அதை என்ன செய்வதென்று அவர்களுக்கு இன்னமும் தெரியாது. அயல்நிலத்தில் அவர்கள் வாழ்வதில்லை. கப்பம் கொள்வதை திருட்டென்றே கருதுகிறார்கள். தங்கள் நெறியை பிறர் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான நெறிகள் உண்டென்றும் முகங்களைப்போல, உடலின் வண்ணங்களைப்போல அவற்றை மாற்றிக்கொள்ள முடியாதென்றும் அவர்களின் மரபுகள் சொல்கின்றன. அவர்கள் போர்புரிவது பெண்கவர்தலுக்காகவும் பெண்மீட்புக்காகவும் சிறுகொள்ளைகளுக்காகவும் மட்டுமே. பெண் சிறுமை செய்யப்பட்டால், மைந்தர்கள் கொல்லப்பட்டால், தெய்வங்கள் அழிக்கப்பட்டால் மட்டும் பழிநிகர் செய்ய படைகொண்டெழுகிறார்கள்.”
“இப்போரில் நம் படைக்காக நிஷாதரையும் கிராதரையும் அரக்கரையும் அசுரரையும் திரட்டியவன் நான். ஒவ்வொரு குழுவுக்கும் ஓலை அனுப்பினேன். அனைத்திலும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அவைச்சிறுமைக்காக போர்கொண்டெழுவதாகவே சொன்னேன். ஒவ்வொரு தூதுவனுடனும் அவையில் நிகழ்ந்ததை உளஎழுச்சியுடன் பாடி விளக்கும் சூதன் ஒருவனையும் அனுப்பினேன். அவர்கள் அவைகளில் முதலில் சூதன் அஸ்தினபுரியின் அவையில் நிகழ்ந்ததை சொல்கொந்தளிக்க பாடினான். அவர்களின் அவைகளில் பெரும்பகுதி மூதன்னையர் அமர்ந்திருப்பார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கதை கேட்டு கிராதரும் நிஷாதரும் அவைகளில் கண்ணீர்விட்டு விம்மி அழுதனர். பெரும்பாலான அவைகளில் அப்பாடல் முடிவதற்குள் மூதன்னையொருத்தி சன்னதம் கொண்டெழுந்து கைவிரித்துக் கூச்சலிட்டு தன் ஆணையை அவர்களுக்கு விடுத்தாள். அக்கணமே அவர்கள் தங்கள் குடிக்கோல்களையும் படைக்கலங்களையும் தூக்கி ஆட்டி நமக்கு படைத்துணை செய்வதாக ஆணையிட்டனர்” என்று சகதேவன் தொடர்ந்தான்.
“அவர்கள் குடிசேர்ந்து சொல்சூழவில்லை. அவையமர்ந்து அரசாடல் நிகழ்த்தவில்லை. தங்கள் நிகழ்நலன், வருநலன் எதைப்பற்றியும் எண்ணவில்லை. நிஷாத மன்னர் சுஹோத்திரர் வீறிட்டலறியபடி நெஞ்சில் ஓங்கியறைந்து முன்னகர்ந்து இரு கைகளையும் விரித்து அன்னை குருதிகொண்டு குழல் முடியும் காட்சியைக் கண்டபின் அன்றி இனி நாட்டு எல்லைக்குள் நுழையமாட்டேன் என்று வஞ்சினம் உரைத்தார். உபமல்லநாட்டு அரசர் துர்கேசன் தன் அவையிலேயே வாளுருவி மூதன்னை முன் தாழ்த்தி துச்சாதனனின் ஒரு சொட்டுக்குருதியேனும் தன் வாளில் படியாமல் திரும்பி வந்து அன்னையை பார்ப்பதில்லை என்றார்.”
“பெரும்பாலான நிஷாதரும் கிராதரும் தங்கள் அன்னைதெய்வங்களுக்கு குருதிபலி கொடுத்து பழிதீர்க்க வஞ்சினம் உரைத்த பின்னரே இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் படைக்கலம் ஏந்தி வந்திருக்கும் வீரர்களுக்கோ அன்னைத் தெய்வமொன்றின் பழிதீர்க்கும் பணி ஒன்றென மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. நான் இங்கிருந்து நாம் அவைக்குக் கிளம்பும்போதே அதைத்தான் சொன்னேன். குருதிகொண்டு குழல்முடிய பாஞ்சாலத்தரசி எழுந்து வஞ்சினம் உரைத்தாலொழிய நமது படைகள் இங்கிருந்து வெற்றி பெறுமென நம்பிக்கையுடன் கிளம்ப இயலாது” என்றான் சகதேவன்.
யுதிஷ்டிரர் சினத்துடன் “அதற்கான விடையை அர்ஜுனன் சொன்னான். அதை அவளிடம் சொல்லிப்பார்ப்பதில் எந்தப் பயனுமில்லை. அவள் இந்தப் போருக்கும் வஞ்சினத்துக்கும் மிக அப்பால் இருக்கிறாள். நமது சொற்களை வெறும் மைந்தர்ப் பூசலென்றே பார்ப்பாள்” என்றார். கசப்புடன் கைவீசி “சரி, அப்படியென்றால் போர் தொடங்குமுன்னரே தோற்றுவிட்டதென்று பொருள். அவளிடம் சென்று சொல்லுங்கள், அவள் வஞ்சினம் உரைத்தால் நமது படைகள் உயிர் கொடுத்து வெற்றியை ஈட்டும், அவள் வஞ்சினம் உரைக்காததால் வெறுமனே உயிர்கொடுத்து களம் நிறைக்கப்போகிறார்கள் என்று” என்றார்.
சௌனகர் “முழுமையாக அனைத்துத் திசைகளும் மூடப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. மாற்றுவழி ஏதேனும் உண்டென்றால் அதை இளைய யாதவரே சொல்லவேண்டும்” என்றார். அதுவரை எதையும் கேளாதவர் போலிருந்த இளைய யாதவர் திரும்பி “போரெழுச்சிக்கான கொற்றவை பூசனை வரும் கருநிலவு நாளில் நிகழ்கிறது. அதன்பிறகே நாம் படையெழவிருக்கிறோம் அல்லவா?” என்றார். “ஆம், கொற்றவைக்கு உயிர்பலி கொடுத்து அக்குருதியை நெற்றியிலிட்டு கிளம்புவது வழக்கம்” என்று சௌனகர் சொன்னார். “அப்பூசனையை எவர் நிகழ்த்தவேண்டும்?” என்றார் இளைய யாதவர். “வழமையின்படி குலத்து மூதன்னை முன்னின்று நிகழ்த்தவேண்டும்” என்றார் சௌனகர்.
“இம்முறை அதை திரௌபதியே செய்யட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “வஞ்சினம் உரைப்பதற்கே மறுப்பவள் போர் திறப்பு பூசனைக்கு மட்டும் எழுந்தருள்வாளா என்ன?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “அவளிடம் அதைப்பற்றி சொல்வோம். இது பூசனையென்று சொன்னால் அவள் மறுக்கமாட்டாள்” என்று பீமன் சொன்னான். அர்ஜுனன் “இல்லை. சென்ற ஈராண்டுகளாக திரௌபதி கொற்றவை பூசனையில் ஈடுபாடு காட்டவில்லை. முறைமைகளுக்கு மட்டுமே செல்கிறாள். நோன்புகொள்வதில்லை” என்றான். யுதிஷ்டிரர் நிமிர்ந்து பார்த்து “ஆம், இதை நானும் அறிவேன். ஆனால் இவ்வண்ணம் எண்ணியதில்லை” என்றார்.
இளைய யாதவர் “எந்த தெய்வத்தை அவர் வழிபடுகிறார்?” என்றார். “ஆலயப் பூசனைகளை பெரும்பாலும் அரசி இயற்றுவதில்லை. பெரும்பாலான பொழுதுகளில் தன் தனியறைக்குள் சுவடிகளுக்குள் மூழ்கியிருக்கிறார். அரிதாக வெளிவந்து விறலியர் நடனமோ இசையோ கேட்டு மகிழ்கிறார். தோழியுடன் அணுக்கக்காட்டில் உலா செல்வதுண்டு” என்றார் யுதிஷ்டிரர். சகதேவன் “அரசி வாக்தேவியை வணங்குகிறாள்” என்றான். சௌனகர் “இங்கு வாக்தேவிக்கு ஆலயமில்லையே” என்றார். சகதேவன் “தன் அறையில் சிறுபீடத்தில் வெண்பட்டு விரித்து அதில் சுவடிகளை தெய்வமென ஏற்றி சிற்றகலிட்டு வணங்குகிறாள்” என்றான். “அவளது அணுக்கச்சேடி ஒருநாள் வெண்மலர்கள் கொண்டுசெல்வதை பார்த்தேன். ஏனென்று கேட்டபோது இதை சொன்னாள்.”
யுதிஷ்டிரர் மீண்டும் கசப்புடன் நகைத்து “இது இன்னமும் தெளிவாக இருக்கிறது. கொல்வேல் கொற்றவையை முற்றிலும் தவிர்த்து சொல்லமர் தேவியை வழிபடுகிறாள்” என்றார். சாத்யகி இளைய யாதவரை பார்த்துக்கொண்டிருந்தான். அவர் அவ்வுரையாடலை கேட்காதவர்போல சாத்யகியை நோக்கி “இங்கிருந்து இப்போதே கிளம்பினால் இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்று வர எத்தனை பொழுதாகும்?” என்றார். “புரவியில் கிளம்பினால் மூன்றாம்நாள் இரவுக்குள் சென்றுவிடுவேன்” என்று சாத்யகி சொன்னான். அவர் ஏதோ தீர்வுக்கு வந்துவிட்டாரென்பதை அங்கிருந்தோர் உணர்ந்து முகம் இளகினர். யுதிஷ்டிரர் அவர்கள் இருவரையும் மாறி மாறி நோக்கியபின் “ஆம், புரவியிலென்றால் விரைந்து சென்றுவிடலாம்” என்றார். “அங்கிருந்து அரசியின் தோழி மாயையை விரைவுத்தேரிலேற்றி இங்கு கொண்டுவரவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆணை, அரசே!” என்று சாத்யகி சொன்னான்.
“அவள் அங்கு பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அணங்கு கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அன்னையிடம் ஒருமுறை கேட்டேன். மானுடர் முகம்நோக்கி பேசுவதில்லை என்றார்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “ஆம், அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் எழுந்து வஞ்சினமுரைத்த அதே உச்ச உணர்வுநிலையில் அவ்வண்ணமே நீடிக்கிறாள்” என்றார் இளைய யாதவர். சகதேவன் “குருதி அன்றி பிறிதெதையும் நோக்கா விழி கொண்டவள் என்று சூதர்கள் அவளை பாடுகிறார்கள். ஒவ்வொரு கருநிலவு நாளிலும் கொற்றவை ஆலயத்திற்குச் சென்று குருதி அளித்து வணங்கி வழிபடுகிறாள். ஐந்து புரியென குழல் நீட்டியிட்டிருக்கிறாள். பலிவிலங்கின் குருதிநெய் பூசப்பட்டு ஊன் வாடை அடிக்கும் அக்குழல் சடைபிடித்து விழுதுகளெனத் தொங்குகிறது என்று சூதன் பாடியபோது தொல் கதைகளில் வரும் போர்த்தெய்வமொன்றை என் உளவிழியால் கண்டேன்” என்றான்.
“அவள் இங்கு வரட்டும். கொற்றவைப் பூசனையை அவள் நிகழ்த்தட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவளா? அவள் அரசியின் நிழல் மட்டுமே. அவள் இங்கு வந்து கொற்றவைப் பூசனையை எப்படி நிகழ்த்தினாலும் கிராதரும் நிஷாதரும் அரக்கரும் அவளை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பதில்லை. நாம் ஏதோ சூழ்ச்சி செய்கிறோம் என்று எண்ணினால் அது நம்மீது மேலும் ஏளனத்தையே உருவாக்கும்” என்றார் யுதிஷ்டிரர். இளைய யாதவர் “நமக்கிருக்கும் ஒரே வழி அவள்தான்” என்றார்.
யுதிஷ்டிரர் மேலும் ஏதோ சொல்வதற்குள் சகதேவன் ஊடுபுகுந்து “மூத்தவரே, யாதவர் கூறுவது சரியென்று எனக்கும் தோன்றுகிறது. மாயை இன்றிருக்கும் தோற்றம் இத்தொல்குடிகளின் மூதன்னைக்குரியது. கொற்றவை ஆலயத்தில் குருதிபலி கொடுத்து வெறியாட்டெழுந்து அவள் வந்துநின்று வஞ்சம்கொளச் சொல்லி ஆணையிட்டால் இம்மக்கள் அவளை மறுக்கமாட்டார்கள்” என்றான். இளைய யாதவர் “மாயை வரட்டும். இங்கு கொற்றவை பூசனை நிகழட்டும். நன்று நிகழுமென்று எதிர்பார்ப்போம்” என்றார். யுதிஷ்டிரர் “எனக்கு நம்பிக்கை வரவில்லை என்றாலும் பிறிதொரு வழியில்லை என்பதையும் உணர்கிறேன்” என்றார். சாத்யகி தலைவணங்கி “ஆணை தலைக்கொள்கிறேன், அரசே” என்றான்.
சாத்யகி தன் அரண்மனைக்கு வந்தபோது தேர்முற்றத்திலேயே அரண்மனைக்குள் மைந்தரின் ஓசைகள் ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டான். சினத்துடன் கடிவாளத்தை ஏவலனிடம் கொடுத்துவிட்டு “என்ன ஓசை அங்கே?” என்றான். ஏவலன் தயங்கி “மைந்தர்கள் விளையாடுகிறார்கள்” என்றான். “விளையாடுகிறார்களா? விளையாடவா அவர்கள் இங்கு வந்தார்கள்? மூடர்கள்! இவர்களை என் குலத்தின் படைத்தொகை என்று அரசர் முன் நிறுத்திய நான் பெருமூடன்!” என்றபடி சாத்யகி படிகளில் ஏறினான். ஏவலன் குனிந்து அவன் காலணிகளை கழற்றுவதற்குள் “யாரங்கே, அசங்கா…” என்று கூவினான்.
உள்ளே ஒலிகள் நின்றன. அசங்கன் படிகளின்மேல் தோன்றி மெல்ல இறங்கிவந்து தலைவணங்கினான். “என்ன அங்கே ஓசை?” என்று சாத்யகி அதட்டினான். “ஒன்றுமில்லை” என்று அவன் சொன்னான். “ஒன்றுமில்லாமலா இந்த ஓசை?” என்று சாத்யகி கூச்சலிட்டான். அசங்கன் “இளையவன் விளையாட்டுக் காட்டுகிறான், மற்றவர்கள் சிரிக்கிறார்கள், அவ்வளவுதான்” என்றான். “என்ன விளையாட்டு?” என்று சாத்யகி கேட்டான். அசங்கன் பேசாமல் நின்றான். “சொல், அறிவிலியா நீ? என்ன விளையாட்டு?” என்று உரக்க கேட்டான் சாத்யகி. அவன் பேசாமல் நிற்க “இது என் ஆணை! சொல்!” என்றான்.
“அவன் யுதிஷ்டிரரை ஏளனம் செய்துகொண்டிருந்தான்” என்றான் அசங்கன். ஓசையெழ பற்களைக் கடித்து “ஆம், எண்ணினேன்” என்றான் சாத்யகி. அசங்கன் பதறி “மிகையாக அல்ல. மென்மையாகத்தான்” என்றான். “என்ன சொன்னான்?” என்றான் சாத்யகி. “அரசர் படைகளிடம் போர் வஞ்சினத்தை உரைத்ததும் அவர்கள் அனைவரும் கலைந்து சென்று சிறுகுழுக்களாக அமர்ந்து அந்த வஞ்சினத்தை புரிந்துகொள்ள முயல்வதாக சொன்னான். அதை விளங்கிக்கொள்ளும் பொருட்டு அறிஞர்களிடமும் சூதர்களிடமும் சென்று வினவுவதாக நடித்துக் காட்டினான்.” சாத்யகி உடலெங்கும் நடுக்கம் பரவ கைகளால் மீசையை முறுக்கியபடி கூர்ந்து நோக்கி “உம்” என்றான். “அவ்வளவுதான்” என்றான் அசங்கன். “முழுமையாக சொல்!” என்றான் சாத்யகி.
“முழுமையாகவே…” என்று தொடங்கிய அசங்கன் “இன்னும் ஓரிரு செய்திகள்தான், தந்தையே” என்றான். “முழுமையாக சொல்” என்றான் சாத்யகி. “அவர்கள் அறிஞர்களிடம் சொன்னபோது அந்த வஞ்சின உரையை விரிவாக விளக்கி ஆளுக்கொரு நூல் எழுதி அளித்தார்கள். அந்த நூல்களை புரிந்துகொள்ளும் பொருட்டு அவர்கள் வேறுநாட்டு அறிஞர்களை நாடிச் சென்றார்கள். இறுதியில் அஸ்தினபுரிக்கே சென்று அங்கிருக்கும் அறிஞர்களிடம் அளித்தார்கள். அங்கிருக்கும் அறிஞர்கள் அந்நூல்களை விளக்கி மேலும் நூல்களை எழுதினார்கள். அதன்படி அஸ்தினபுரியின் அரசர் துறவு மேற்கொண்டு கமண்டலமும் கைத்தடியுமாக இமையமலைக்கு சென்றார். இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் துறவு மேற்கொண்டு தென்திசை நோக்கி சென்றார். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.”
சாத்யகி “உம்” என்றான். “அந்த வஞ்சினத்தை விளக்கும்பொருட்டு சூதர்களிடம் கேட்டபோது அதன் பொருளை ஆடலும் பாடலுமாக நடித்துக்காட்டினர். அதை தெளிவாக புரிந்துகொண்ட அனைவருமே உடனே அடுமனைகளுக்குச் சென்று உணவருந்தி மதுவுண்டு களித்து நகருக்குள் இறங்கி மகளிருடன் காதல் விளையாடத்தொடங்கினர். நாட்டில் மகிழ்ச்சி நிலவியது” என்று தாழ்ந்த குரலில் அசங்கன் சொல்லி “எல்லாம் விளையாட்டாகத்தான். அவன் கடுஞ்சொல் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் சற்று சிரித்து…” என்றான். “அவனை வரச்சொல்” என்றான் சாத்யகி. அசங்கன் “மிக இளையவன். அவனுக்கு இன்னும் அகவை முதிர்வே…” என்று தயங்க “வரச்சொல்” என்று உரத்த குரலில் சாத்யகி கூவினான்.
அசங்கன் உள்ளே சென்று சொல்ல மைந்தர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். “இளிவரல் நடித்தவன் எவன்? அவன் முன்னே வரட்டும்” என்றான் சாத்யகி. மைந்தர்கள் அசையாது நிற்க அசங்கன் “அவன் பிழை எதுவும் செய்யவில்லை. அவனிடம் நடித்துக்காட்டும்படி சொன்னது நானே. வேண்டுமென்றால் தாங்கள் என்னை தண்டிக்கலாம், தந்தையே” என்றான். “யாரை தண்டிப்பதென்று எனக்குத் தெரியும். முன்னால் வா” என்றான் சாத்யகி. சினி மெதுவாக முன்னால் வந்து நின்றான். அவனைப் பார்த்ததும் சாத்யகி தன்னையறியாமலே புன்னகை புரிந்தான். அதைக்கண்டு அவனும் புன்னகையுடன் தலை தூக்கி “நான் விளையாட்டாகத்தான்” என்றான்.
“அறிவிலி, அரசரையா ஏளனம் செய்வது?” என்றான் சாத்யகி. ஆனால் புன்னகையால் அவன் குரலில் வலு அழிந்துவிட்டிருந்தது. “நான் வேறு எவரும் இல்லாதபோதுதான்…” என்றான் அவன். சாத்யகி அவன் தோளில் கைவைத்து தன்னருகே இழுத்து உடலுடன் சேர்த்துக்கொண்டு “நாம் சிற்றரசர்கள், மைந்தா. உண்மையில் நாம் அரசர்களே இல்லை. கன்றோட்டும் யாதவர்குடி நாம். துவாரகை எழுந்த பின்னர் நாம் அரசர்கள் என்று சொல்லிக்கொள்கிறோம். சிற்றரசர்களுக்கு படைவீரர்களுக்குரிய விடுதலை இல்லை. அரசர்களுக்குரிய உரிமைகளும் இல்லை. நாம் சொல்வனவற்றுக்கு அரசர்களின் கூற்றுக்குரிய மதிப்பு உண்டு, அச்சொற்களை நிலைநாட்டும் ஆற்றல் நமக்கில்லை” என்றான்.
“பாரதவர்ஷம் முழுக்க சிற்றரசர்கள் அனைவரும் அரசர் என மாற்றுருக்கொண்டு கூத்து மேடையில் நடிக்கும் பாணர்கள்தான். பேரரசர் யயாதியின் உருக்கொண்டு கூத்துமேடையில் எழும் பாணன் யுதிஷ்டிரரை அருகே வாடா மைந்தா என்று அழைக்க முடியுமா என்ன?” என்றான் சாத்யகி. சினி “அழைக்க முடியும், தந்தையே” என்றான். சாத்யகி “எப்படி?” என்றான். “மது அருந்தியிருக்க வேண்டும்” என்றான் சினி. சாத்யகி என்னசெய்வதென்றறியா தவிப்புடன் நோக்க அவன் மேலும் ஊக்கம் கொண்டு “அரசரும் மதுவருந்தியிருக்கவேண்டும்” என்றான். சாத்யகி உடைந்து சிரித்து “உங்களிடம் பேசுமளவுக்கு என்னிடம் சொற்களில்லை. இனி இளிவரல் என்றால் இந்த அறைக்குள் நிகழவேண்டும். ஏவலரோ காவலரோ அறியலாகாது” என்றபின் முகம் மாறி அசங்கனிடம் “நான் இன்றே இந்திரப்பிரஸ்தத்திற்கு கிளம்புகிறேன். இங்குள அனைத்தையும் நீ முறைப்படி நிகழ்த்தவேண்டும்” என்றான்.
அசங்கன் “எங்களை இன்று அரசி அழைத்திருக்கிறார்கள்” என்றான். “அரசியா, எதற்கு?” என்று கேட்டதுமே சாத்யகி நினைவுகூர்ந்து “மெய்யாகவா?” என்றான். அசங்கன் “மெய்யாகவே அரசி என்னுடைய திருமணத்தை எண்ணுகிறார்கள் என்று தோன்றுகிறது” என்றான். சாத்யகி “ஆம், பேரரசி வெறுஞ்சொல் உரைப்பதில்லை” என்றான். “அதை தாங்கள் விரும்பவில்லையா, தந்தையே? நம் குடிக்கு அது உகந்ததல்ல என்று எண்ணுகிறீர்களா?” என்றான் அசங்கன். “என்ன பேச்சு பேசுகிறாய்? பாஞ்சாலத்து இளவரசியை கொள்வதென்பது நம் குடிக்கு தெய்வங்கள் அளிக்கும் கொடை” என்றான் சாத்யகி. “பிறகு ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்றான் அசங்கன்.
“அஞ்சவில்லை. அவர்களுக்கு நிகராக அமரவேண்டுமே என்று எண்ணி பதறுகிறேன், அவ்வளவுதான்.” அசங்கன் “நான் அந்த இளவரசியை சந்திக்கிறேன். எனக்கு எந்தப் பதற்றமுமில்லை. நான் இப்புவியின் முதன்மை அரசனின் தொண்டன். இளைய யாதவர் பெயர் என் நாவில் உள்ளவரை எந்த அவையிலும் எனக்கு தாழ்வுணர்ச்சியில்லை” என்றான். மெல்லிய உளக்கிளர்ச்சியுடன் அவன் விழிகளைப் பார்த்தபின் சாத்யகி “ஆம், உன் அகவையில் நானும் அவ்வாறுதான் இருந்தேன்” என்றான். “பாஞ்சாலத்தரசியை சென்று சந்தியுங்கள். அதற்கு முன் மூதன்னை குந்தியையும் சென்று வணங்கி வாழ்த்துகொள்ளுங்கள். நம் குடிக்கு மூதன்னை அவர். அவருக்கு அனைத்தும் இதற்குள் தெரிந்திருக்கும்.” அசங்கன் “ஆணை” என்றான். “நன்று நிகழட்டும்” என்றான் சாத்யகி.