[ I ]
தனித்த மொழி கொண்ட ஒரு கவிஞனின் கவிதையுலகுக்குள் முதல் முறை நுழைவது, ஒரு பயணத்தில், புதிய இடத்தில் உறக்கத்திலிருந்து எழுவது போல. அத்தனை நிச்சயமாக வலது மூலையில் கதவும், நேர் எதிராக ஜன்னலும் இருக்குமென்ற அன்றாட வாழ்வின் பிரஞ்ஞை பதறி துடித்து விலகும் கணம் உருவாக்கும் பதற்றத்தோடு புதிய சூழலுக்குக் கண் விழிப்பது.
சென்ற வருடம், சமீபத்தில் வெளி வந்த கவிதைத் தொகுதிகளை வாசிக்க முனைந்த போது முதல் முறை கண்டராதித்தனின் தொகுதியை வாசித்தேன். ஒரு விஷ்ணுபுரம் முகாமில் அவருடைய “முட்டாள்களிடம் கடவுள் அன்பாய் இருக்கிறார் என்பது உண்மைதான்” என்ற கவிதையை விவாதித்திருந்தோம். அதே வகையான குறுஞ்சித்தரிப்புக் கவிதைகளையே எதிர்பார்த்திருந்த எனக்கு, ‘சஞ்சாரம் சீபத்த’, ‘காலமாற்றத்தின் காதல்’ போன்ற கவிதைகளை வாசித்த போது திகைப்பாக இருந்தது.
கடந்த சில தலைமுறைகளாக வரும் இளம் கவிஞர்கள் அத்தனை பேரின் தொகுதிகளிலும் ஒரு பலகுரல் தன்மை இருக்கிறது. சமகாலக் கவிதை எந்தக் குரலிலும், எந்தத் திசையிலிருந்தும் பேச வாய்ப்பளிக்கிறது. கவிஞர்களுக்கும் பேசுபொருள் சார்ந்த எல்லைகள் இல்லாததால் ஒவ்வொரு சிக்கலையும் ஒவ்வொரு குரலில் பேசிப் பார்க்கின்றனர். அதை தொகுப்பாக வாசிக்கும் போது ஒரே கவிஞன் மாறுவேடமிட்டுக் கொண்டு செய்யும் மிமிக்ரியைப் போல கேட்கிறது. மாறுவேடப் போட்டியின் பொது அம்சமான பகடியை எதிர்பார்த்து அமர்ந்திருக்கையில், உண்மையான கூத்துக் கலைஞன் ஒருவன் தன் கிரீடத்தோடும், தோள் கவசங்களோடும் அந்த வரிசையில் வந்து அமர்ந்திருப்பதைப் போல வந்து அமர்ந்திருக்கின்றன கண்டராதித்தன் கவிதைகள். நம் திகைப்பைக் குழப்பமாக்குவது போல, மேலதிகமாக தருமபுரம் சுவமிநாதனைப் போன்ற குரலில் பாடவும் ஆரம்பித்து விடுகின்றன. கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த நாம் கால்களை எடுத்து வைத்து, முதுகை நேராக்கிக் கொண்டு பக்கத்திலிருப்பவர் முகத்தைப் பார்க்க வேண்டியதாகி விடுகிறது.
அன்று அவருடைய குறுஞ்சித்தரிப்புக் கவிதைகளே எனக்கு விருப்பமானவையாக இருந்தன. ஆச்சர்யமாக, சில மாதங்கள் கழித்து ‘திருச்சாழல்’, ‘சீபத்த’ போன்ற கவிதைகளே மனதில் அவ்வப்போது வந்து கொண்டு இருந்தன. குறுஞ்சித்தரிப்புக் கவிதைகளில் சண்முக சுந்தரம் மட்டும் நினைவிலிருந்தார்.
கண்டராதித்தன் கவிதைகளில் மூன்று வகைகள் இருக்கின்றன. முதல் தொகுதியிலேயே [கண்டராதித்தன் கவிதைகள்] மூன்று கீற்றுகளும் தென்படுகின்றன. ஒன்று, ஆண்-பெண் உறவுக் கவிதைகள். இரண்டு, மரபின் சித்திரங்கள் ஊடுருவும் அன்றாட வாழ்க்கைச் சித்திரங்கள். மூன்று, குறுஞ்சித்தரிப்புக் கவிதைகள். முதல் தொகுதியில் அப்படி இருப்பது இயல்புதான். பின் நவீனத்துவம் மரபின் நரிகளை பரிகளாக்கித் தருவதால் அதன் குதிரைகள் சல்லிசும் கூட. எனவே புதுத்தேர் கட்டும் கவிஞன் குதிரை லாயத்திற்குள் புகுந்தவன் போலாகிறான். எத்தனைக் குதிரைகளை கட்ட முடியுமோ அத்தனைக் குதிரைகளையும் தேரில் கட்டிக்கொள்ள விரும்பாத இளங்கவி என்ன கவி? பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு குதிரையாகக் கழற்றி விற்றால்தான் தேரைக் காப்பற்ற முடியும் என்று அறியும் போது அவன் மூத்தக் கவிஞராகிறார். [நவீனத்துவர்களுக்கு இந்த சிக்கலில்லை. அவர்கள் ஆரம்பத்திலிருந்தே ஒற்றை மாட்டு வண்டி வீரர்கள்] அபூர்வமாக கண்டராதித்தன் மூன்று குதிரைகளையும் திருச்சாழல் வரை கட்டி ஒட்டிக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று வகைகளில் இரண்டாம் வகைக் கவிதைகளே முக்கியமானதாக இருக்கின்றன எனக்கு, அவருடைய வெற்றிகரமான குறுஞ்சித்தரிப்புக் கவிதைகளை விடவும்.
தமிழ் நவீனக் கவிஞர்களைப் போல தனித்துவத்தை முன்வைத்த வேறு போக்கினர் இல்லை. ஆனால், அவர்களின் கலைநோக்கின் எல்லை அவர்களின் கவிதைப் பரப்பை சில தலை முறைகளுக்குள் ஒற்றைப் பெரும் பரப்பாக சுருக்கி விட்டது. இந்த நவீனத்துவத்தின் மையப் போக்கிற்குள் போகாத, சில கூறுகளால் தங்களைத் தனித்துக் கொண்ட கவிஞர்களே அடுத்த தலைமுறை வாசகனான எனக்கு இன்றும் முக்கியமாகத் தெரிகின்றனர். தேவதேவன், பிரமிள், மனுஷ்யபுத்திரன் [நீராலானது வரை], பிற்காலத்தைய லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்கள். ரத்தம் சுண்டும், அடிவானில் பறக்கும் கொடிகள், ‘அதுக்கென்ன’ என்ற உணர்வையே தருகின்றது. போதிய அளவுக்கும் நம் ரத்தம் சூழலால் சுண்டப்பட்டு விட்டதால் கூட இருக்கலாம்.
ஆனால், தங்கள் தனித்தன்மையை பிரதானமாகக் கருதாமல் பொது உணர்வு நிலையை முன் வைத்த இளம் தலைமுறைக் கவிஞர்களில் இருக்கும் மெல்லிய நிற வேறுபாட்டின் அடர்த்தி ஆச்சர்யமூட்டுவது. கடந்த இரு பத்தாண்டுகளில் வந்த கவிதையின் பொது மொழி பகடி என பொதுவாக வரையறுக்கப்படுகிறது. மேற்பார்வைக்குள் பார்த்தால் அது ஒரெல்லை வரை அப்படித்தான் தெரியவும் செய்கிறது. ஆனால், இந்தக் கவிஞர்களில் இருக்கும் பேசுபொருள், கவிமொழி, வாழ்க்கை நோக்கு ஆகியவற்றில் இருக்கும் வேறுபாடுகள் அதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை.
பகடி என்ற ஒரு கூறை மட்டும் எடுத்துக் கொண்டால், ஷங்கர் ராம சுப்ரமணியனின் கவிதைகளில் இருக்கும் சிரிப்பு, ஒரு சிறுவனின் கண்களில் மட்டும் மின்னும் சிரிப்பு. மூக்கை, உதடுகளைப் பார்த்தால் சிரிப்புதானா என சந்தேகம் வந்துவிடும் சிரிப்பு. இசையில் இருப்பது ஆதங்கமும், கேவலும். சிரிப்பைப் போல ஒலிப்பது அது. சபரியில் இருப்பது கண்களை மூடி தனக்குள் தானே நிறைந்து சிரிக்கும் சிறுவனின் திளைப்பு.
கண்டராதித்தனில் பகடியின் குரல் போலத் தோன்றும், ‘சங்கரலிங்கனாரின் லீனியர் குடி, சோமன் சாதாரணம், வம்ச கீர்த்தி’ கவிதைகள் இந்த வகை பகடிகளோ, சிரிப்போ அல்ல. அவற்றுக்கு வரலாற்றோடோ, இன்றோடோ பகை ஏதும் இல்லை, இன்றைய தலைமுறையில் இசையைப் போல. தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தனித்த சுயம் கொண்ட நவீனத்துவ கவிக்குரலுமில்லை, நேற்றைய தலைமுறையில் ஞானக்கூத்தனைப் போல.
இரண்டாயிரத்தைனூறு வருட மரபின் ஆழத்தில் இருந்து அத்தனைக் கதாபாத்திரங்களுடனும் எழுந்து வரும் அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது? அதன் இடம் என்ன? யாரும் யாரைப் போலவும் இருக்க வேண்டிய தேவையில்லாததும், யாரைப் போலவும் இருக்கலாம் எனவும் இருக்கும் வினோத விதிமுறை கொண்ட மாறுவேடப் போட்டியில், மரபின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் கூத்துக் கலைஞன் தன் குஞ்சரங்களோடும், கிரீடத்தோடும் வந்து நிற்கும் அவசியமென்ன? அந்த நிரையில் இந்தக் கூத்துக் கலைஞனை வேறுபடுத்துவது எது?
இன்றைய கவிஞர்கள் வேறு எவரிடமும் இல்லாத தமிழ் மரபின் பண்பாட்டுச் சித்திரங்கள் ஊடுருவும் கவிதை வெளி அவருடையவை என்பதே கண்டராதித்தனின் முதன்மைச் சிறப்பு. நவீன கவிதையில் ‘மரபின் வெளிப்பாடு’ சென்ற தலைமுறைக் கவிஞர்களில், அபூர்வமாக நகுலனிடமும், ஒரளவுக்கு ஞானக்கூத்தனிடமும், பெருமளவில் விக்ரமாதித்யனிடமும், பிற்காலத்தைய லக்ஷ்மி மணிவண்ணனிடமும் வெவ்வேறு வகையில் வெளிப்பட்டிருக்கிறது. அது கண்டரிடம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். அந்த தனித்துவமான வெளிப்பாட்டில் இருக்கிறது அவரும், தமிழ்க் கவிதையும் நாளை போக சாத்தியமான ஒரு பாதை. பிரம்மாண்ட நந்தியின் முன் எளியவனாக உணரும் விக்ரமாதித்யன் காலமில்லை இன்று. அதை மேசையில் வைத்து ஒழுங்காக மேய்ந்து கொண்டிரு என்று சொல்லுமளவுக்கு ஞானக்கூத்தனைப் போல நாம் தன்னை பெரிதாகவும் எண்ணிக் கொள்ளவில்லை. மரபு என்ற பெயரில் அன்றாடம் அபத்தமாகும் பொழுது அதைக் கிண்டலடித்தார் ஞானக்கூத்தன். மரபிற்கு பதில் அவர்கள் கனவு கண்ட இலட்சிய நவீனத்துவம் வரவில்லை. அந்த இடத்தில் வணிக, கேளிக்கை சமூகம் உருவாகி வந்திருக்கிறது. அன்று நாம் அடித்து விரட்டிய மூதாதைப் பேச்சிகளே இன்று நமக்கு காவல். ஆகவே நாம் மீண்டும் அதனிடம் ஒட வேண்டியிருக்கிறது. நாமும் அந்த மூதாதையும் சந்திக்கும் இடங்களெல்லாம் கண்ணை உறுத்தும் வண்ணங்கள் பூசப்பட்டிருக்கின்றன. காதைக் கிழிக்கும் பாட்டுச் சத்தம் ஒலிக்கின்றது. தனிமையில் நாம் குடிமேசையில் அமர்ந்திருக்கையில், யாருமறியாமல் அது நம் குரலை எடுத்துக் கொள்கிறது, முன்பு சன்னதத்தில் வந்த அதே மூதாதைக் குரல். இன்று போதையில் சலம்புகிறது. புயலிலே ஒரு தோணியில் வரும் பாண்டியனைப் போல.
[ II ]
ஆச்சரியமான ஒரு விஷயம், கடந்த இருபதாண்டு கவிதைகளில் வந்த அனைத்துக் கவிஞர்களும் மரபின் ஏதோ ஒரு கூறோடும் இருக்கிறார்கள், பகடியைப் போலவே. கண்டராதித்தன் கவிதையில் வரும் மரபின் குரல் என்னவாக இருக்கிறது என்பதை பிற கவிஞர்களோடு ஒப்பிட்டு அறிய வேண்டும். ஷங்கர் ராம சுப்ரமணியனில் இருப்பது மரபின் உணர்வு நிலை. சங்கப் பாடல்களில் வரும் மென்ணுணர்வுக் குரல். அவருக்கும் மரபுக்குமான உறவு என்பது நள்ளென்ற யாமத்தில் விழித்திருக்கும் நகரத்து தனியனின் பால்யகால நினைவில் மட்டும் ஒடும் தாமிரபரணி. மரபிலிருந்து அவர் பெற்றுக் கொண்டது பிரதானமாக இந்த உணர்வு நிலையே என்று கருதுகிறேன். இசையில் இருப்பது மரபின் விழுமியங்கள் மட்டும். செவ்வியலில் ஊறும் இசையின் கவிதைகளில் மரபின் படிமங்களோ, நிலக்காட்சிகளோ, ஆலயங்களோ வருவதில்லை. அவருடைய பிணக்கு மரபின் விழுமியங்களுக்கு இன்றைய பொருள் என்ன என்பதே. இந்த வாழ்க்கையை எதன் மீது கட்டி வாழ்வது என்பது அவருடைய கேள்வி. சபரியின் கவிதைகளில் மரபின் நீட்சி என்பது அழகியல் மட்டும். சங்கப் பாடல்களின் செவ்வியல் அமைதியும், காட்சி சித்தரிப்பும், கவித்துவ அமைதியும்.
மேற்கூறிய மூன்று வகையான உறவும் கண்டராதித்தனின் கவிதைகளில் காணக் கிடைப்பதில்லை. பிரதானமாக இருப்பது, மரபின் ஆழமான தொன்மச்சித்திரங்கள், படிமங்கள், தெய்வங்கள், மரபின் கதாபாத்திரங்கள் [சோமன் சாதாரணன், உருவும்-திருவும், சில பொழுது சில படிமங்களோடு இருத்தல், கொடுங்கால் ரத்தக்காட்டேரி]. விக்கிரமாதித்யனுக்குப் பிறகு, லக்ஷ்மி மணிவண்ணனுக்குப் பிறகு, இன்றைய தலைமுறையில் வேறு யாருடைய கவிதைகளிலும் இல்லாத அளவுக்கு, தமிழ் நிலத்தின் கலாச்சார சுவடுகள் இடம் பெறுகின்றன.
முக்கியமாக சந்தம் போன்ற மொழி, ஞானக்கூத்தனுக்குப் பிறகு, இன்றைய தலைமுறையில் ‘கேட்கப்படக்’ கூடிய கவிதைகளை எழுதியிருக்கிறார் [பிழையான விலங்கை நாம் ஏற்பதும், ஏற்காமலிருப்பதும் சட்டப்படி தண்டனைக்குரியது அல்ல, திருச்சாழல், சஞ்சாரம் சீபத்த, அன்னாரைத்தான் ஞாபகம் வருகிறதெனக்கு]. அவற்றின் மொழியால்தான் அவை உடனடியாக நம் நினைவில் அமைந்து கொள்கின்றன.
இந்த இரண்டு கூறுகளும் சேர்ந்து உருவாக்கும் கவிப்பரப்பு பரவசத்தைத் தருகிறது. ஒப்பீட்டளவில் குறுஞ்சித்தரிப்புக் கவிதைகள் இன்னமும் வெற்றிகரமானவையாக இருக்கின்றன. ஆனாலும், இந்தக் கூறையே கண்டராதித்தன் கவிதைகளில் முக்கியமானதாகக் கருதுகிறேன்.
[ III ]
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுஞ்சித்தரிப்புக் கவிதைகள் மீது ஒரு பரவசம் இருந்தது. நவீனத்துவர்கள் தனிமைக்கு படிமங்களைக் கொண்டு எதை செய்தனரோ, அதையே பின் நவீனத்துவக் கவிஞர்கள் அன்றாடத்திற்கு குறுஞ்சித்தரிப்புகளைக் கொண்டு செய்துவிட்டனரோ எனத் தோன்றுகிறது. தமிழில் எழுதப்படும் குறுஞ்சித்தரிப்புக் கவிதைகளின் இரண்டு சிக்கல்களில் ஒன்று, அவை அனைத்தும் அன்றாடத்திலேயே நிற்கின்றன. மற்றது, சிறிய கோணலை உருவாக்குவதிலேயே நிறைவடைந்து விட்டன. அந்தக் கோணல் போதாமலாகி மரபு வரை நீள்வது எந்த அதிர்ச்சியையும் உருவாக்குவதில்லை.
கண்டராதித்தனின் மரபின் நெகிழ்வு கொண்ட கவிமொழிக்கு அதை மீறும் சாத்தியம் இருக்கிறது. அனேகமாக, வேறு எந்தக் கவிக்கும் இல்லாத அளவுக்கு. பக்தி மரபிலும், தொன்மங்களிலும் ஊடுருவியிருக்கிறது அவர் மனம். அதை கவிதையாக்கும் அளவுக்கு மொழியும், இசைமையும் இருக்கிறது. இந்த வாய்ப்புகளைக் கொண்டு அவர் செல்லக் கூடிய தூரம் அதிகம். இன்றைய கவிஞர்கள் யாரும் சென்றிராததும், செல்ல முடியாததும் கூட. ஆனால், அந்த மொழி அன்றாடத்தைப் பேசும் போது [திருச்சாழல், சஞ்சாரம் சீபத்த], அதற்கு அத்தனை நூற்றாண்டுகள் தாண்டிப் போக வேண்டுமா என்ற கேள்வியும் வருகிறது. மாணிக்கவாசகர் காலத்திலும் கூட அன்றாடம், அன்றாடமாகத்தானே இருந்திருக்கப் போகிறது? ஒரு மரபின் அத்தனை உச்சங்களைக் கொண்டும் நம் அன்றாடத்தை எதிர்கொள்ள வேண்டுமா என்ன?
ஒரு கவிஞனிடம் வாசகன் எதை எழுத வேண்டும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் கூட, உலகெங்கும் கலையின் போக்கை பற்றிய விவாதங்களில் ஒரு முறைமை இருக்கிறது. அதை இப்படி வரையறுக்கலாம். ஒரு பண்பாடு என்றென்றைக்கும் இருக்கும் கேள்விகளுக்கு, அந்தந்த காலகட்டத்தின் கருவிகளைக் கொண்டு, தன் நீண்ட உரையாடலின் தொடர்ச்சியாக புதிய விடைகளைக் காண முயல்கிறது. அதன் ஒரு செயல்பாடாகவே அனைத்து கலை மற்றும் அறிவுத் துறைகளும் இயங்குகின்றன. கீழை நாடுகளில் ஒவ்வொரு துறையும் தனக்கேயான அறிதல் முறைகளைக் கொண்டு அதை நிகழ்த்துவது மரபாக இருந்திருக்கிறது. மேலை நாட்டு அறிவுச் சூழல், அந்த அந்தக் காலகட்டத்தின் பிரதான அறிதல் முறையை பிற அறிவுத் துறைகளின் அடிப்படையாகக் கொள்கிறது. கடந்த நாற்பது வருடங்களாக நுண் இயற்பியலையும், உயர் நரம்பியலையும் கொண்டு அனைத்தையும் வகுத்து விட முயல்வதைப் போல. அப்படித்தான் பின் நவீனத்துவ பகடியும் இங்கு வந்து சேர்ந்தது.
இன்று அப்படி ஒரு தேவையாக இருப்பது என்று பண்பாட்டை திருப்பி எழுதுவதை சொல்ல வேண்டும். இதைச் சொல்லும் போது பெருங்கதையாடல்கள் அனைத்தும் பேரழிவைக் கொண்டு வரும் என்றே பதிலுரைக்கப்படுகிறது. ஆனால், இணையமும், நுகர்வுக் கலாச்சாரமும், ஊடகங்களும் இன்று பெரிய கதையாடலைப் போல தனி மனிதனை சூழ்ந்திருக்கின்றன. அதை எதிர்கொள்ள அவனிடம் எந்த ஆயதங்களும் இல்லை. பின் நவீனத்துவத்தின் தோல்வி அல்லது தந்திரம் என்பது அது நம்மிடம் எஞ்சிய ஆயுதங்களைக் கீழே போட சொல்கிறது. நம்மைச் சூழ்ந்திருப்பவற்றிடம் அல்ல. அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் எதுவும் அதனிடத்தில் இல்லை. நெடுங்காலம் சிரித்துக் கொண்டே இருக்க முடியாது. அதை எதிர்கொள்வதன் பொருட்டு ஒரு தனி மனிதன் தன் பழைய மரபுக்கு போகவும் இயலாது.
அதே நேரம், இதுவரை மானுடம் அடைந்த அனைத்து விழுமியங்களும், செல்வங்களும் மரபிலேயே இருக்கின்றன. அந்த விழுமியங்களும், செல்வங்களும் தேசியம், மதம், இனம் போன்ற தொகுப்படையாளங்களின் மீது கட்டி எழுப்பபட்டிருக்கின்றன. இன்று கலையின் வேலை என்பது அந்த தொகுப்படையாளங்களை உடைத்து, தனி மனிதனை அளவு கோலாகக் கொண்டு மீண்டும் பெருங்கதையாடல்களை உருவாக்குவதே. அதைச் செய்வதில் கவிதையின் பகடி முக்கிய பங்கு வகிக்கும், நாவல் அளவிற்கே. மாறாக, தனி மனிதனை முன்னிறுத்திய பகடித்தன்மை அல்லது மரபை அன்றாடத்துக்கு இழுத்து வருதல் உருவாக்கும் சிறிய கோணல் சித்திரம் இந்தத் தேவைக்கெதிராக இயங்குவது. அது நகரத்து சாலைகளில் காமதேனு ஒன்று சுவரொட்டியை தின்று கொண்டிருப்பதைக் காண நேர்வதைப் போல ஒரு சோர்வை உருவாக்குகிறது.
இந்த சிக்கலைக் கடக்க இரண்டு வகை சாத்தியங்கள் நம் முன் உள்ளன. அதற்கான செல்திசை சாத்தியங்களைக் காட்டுகின்றன கண்டராதித்தன் கவிதைகள் என்பது அவருடைய முதன்மை பங்களிப்பு. ஒன்று, மரபின் செழுமை கொண்ட கவிமொழியில் நம் இன்றைய சிக்கல்களை, அன்றாடத் தன்மையை விலக்கி பேச முயன்றால் ஒரு வேளை அதை அடையலாம். கண்டராதித்தனே அது போன்ற கவிதைகளை வெற்றிகரமாக எழுதி இருக்கிறார், ‘திருவும் அருவும்’ போல. ஆனால், அந்தக் கவிதையில் வருவது போல அது எப்பொழுதும் தீவிரமாகவோ, உணர்ச்சிகரமாகவோதான் இருக்க வேண்டுமென்பதில்லை. நம் கேள்விகளின் தத்துவ, வரலாற்றுத் தளத்திலேயே அந்த பகடி நிகழலாம். மாணிக்கவாசகரை இங்கு நம் அலுவலகத்துக்கு ஏன் இழுத்து வரவேண்டும்? நாம் அங்கு சென்று அவரைக் ‘கலாய்க்கலாம்’. நமக்கும் அன்றாடத்திலிருந்து விடுப்பு கிடைக்கும்.
இரண்டு, கவிஞனின் தன்னிலையை விட்டும், தனி வாழ்க்கையின் அபத்தங்களை விட்டும் வெளியேறி, பொதுக்குரலில், பொது விஷயங்களை பகடியில் எழுதிப் பார்க்கலாம். தமிழ்ச்சூழல் போல சிரித்துக் கடந்தால் மட்டுமே வாழ முடியும் என்ற அளவுக்கு சீரழிந்த சமூகங்கள் உலகளவில் மிகக் குறைவே. அது கவிஞனுக்கு தரும் வாய்ப்புகள் எண்ணற்றவை.
கண்டராதித்தனின் கவிமொழி தரும் சாத்தியங்களின் வழி தமிழ்க் கவிதைச் சூழல் இந்த கருத்துக்களை விவாதித்துப் பார்க்கலாம். ஏனெனில், தனி மனிதனின் கட்டற்ற விடுதலையை பற்றி பேசிய நவீனத்துவக் கவிதை தனிமையைப் பாடுவதில் முடிந்தது. மரபை நோக்கி அதிகம் சிரித்துவிட்ட பின் நவீனத்துவக் கவிதைப் போக்கு தினசரிக் குறிப்பாக ஆகும் ஆபத்து அருகிலிருக்கிறது எனத் தோன்றுகிறது. ஏற்கனவே முகநூல் நிலைத்தகவல்களை தொகுப்பாக்கி, அதையே கவிதையென்று எண்ணிக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டோம். கொஞ்சம் அதிகமாகத்தான் சிரித்து விட்டோம் போலிருக்கிறது சாழலோ.
[ IV ]
நவீனக் கவிதை இயக்கம் அனேகமாக புகைப்படங்களாலானதும் கூட. அதன் கவிஞர்களின் பிம்ப உருவாக்கத்தோடு இணைந்தது. எனவே அந்தக் கவிஞர்களிடமிருந்து கவிதையை பிரித்து வாசிக்க இயலாதது. அதன் முன்னோடிகளில் ஒருவரான எஸ்ரா பவுண்ட், தன் இளமையில் உலகை ஆட்டுவித்த பொருளியல் சக்திகளின் பிடியிலிருந்து சமூகத்தை விடுவிப்பதைப் பற்றிய பெருங்கனவைக் கொண்டிருந்தார். அவருடைய இளமைக்கால படத்தையும், முதுமைக் கால படத்தையும் காணும் போது எனக்குத் தோன்றும், நவீன கவிஞன் தீயைப் போல எரிந்து பின்பு கரியைப் போல அணைந்தான் என்று. இன்றைய தமிழ்க்கவிக்கு ஒரு பெரிய வாய்ப்பு இருக்கிறது, அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இல்லாத வாய்ப்பு அது. அந்த எரிந்தணைந்த சாம்பலை தன் உடலில் பூசிக் கொண்டு துவங்குவதன் வழியாக, காலத்தில் பின் சென்று முன் செல்லலாம்.வெண்ணீறை பூசி, மன்னுகலை துன்னு பொருள் மறை நான்கை வான் சரடைக் கோவணமாகக் கொண்டவன் நம் அப்பன் என்பதால். கண்டராதித்தனின் புகைப்படத்தைப் பார்க்கும் போது அதை நினைத்துக் கொண்டேன்.
ஏ.வி.மணிகண்டன்
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018
கண்டராதித்தன் கவிதைகள்
பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு
சாழற்மலர்ச்செண்டு
———————————————————————————————————————————————————————-
ஏ. வி மணிகண்டன் எழுத்துக்கள்