“குறைவான சொற்கள் கொண்டவர்கள் புதுக்கவிஞர்கள்” என்று என்னிடம் முப்பதாண்டுகளுக்கு முன் பிரமிள் சொன்னார். நான் அவருடன் உரையாட நேர்ந்த குறைவான தருணங்களில் ஒன்று அது. அவர் என்னை சுந்தர ராமசாமியை வசைபாடுவதற்கான முகாந்திரமாகவே பயன்படுத்திக்கொள்வார். ஆனால் வழக்கமான ‘பார்ப்பனவாதம்’ பற்றிய வசைகளை என்னிடம் சொல்லமாட்டார். நான் அதை பொருட்டாக நினைக்கமாட்டேன் என அவருக்குத்தெரியும். அவருக்கும் அது ஒரு பொருட்டு அல்ல. அவருக்கு அது ஒரு நல்ல தடி. அதைக்கொண்டு அவரால் சுந்தர ராமசாமியை எளிதில் ஓரம்கட்ட முடியும் என அறிந்திருந்தார். அது தமிழில் எப்படிச் செல்லுபடியாகும் என்பதை வந்த சில ஆண்டுகளில் கற்றுக்கொண்டிருந்தார். என்னிடம் சுந்தர ராமசாமியை நிராகரிக்க புதிய கோணங்களை அவர் கண்டடையவேண்டியிருந்தது. அதில் ஒன்று மேலே சொன்னது
“புதுக்கவிஞர்களிடம் வார்த்தையாப் பாத்தா ஒரு பத்துரூபாச் சில்லறை இருக்கும். ராமசாமிகிட்டே அஞ்சுரூபாதான்” என்றார் பிரமிள். “ஆத்மார்த்தம்னு எழுதறான். போய் கேட்டுவா ஆத்மார்த்தம்னா என்னான்னு. ஆத்மா ஒரு வார்த்தை. அர்த்தம் இன்னொரு வார்த்தை. இங்க அர்த்தம்னா பொருள் இல்லை. அர்த்தங்கிறதுக்கு சம்ஸ்கிருதத்திலே இருப்புன்னு பொருள் உண்டு. சாராம்சமானது உள்ளதுன்னெல்லாம் பொருள் வச்சுக்கலாம். ஆத்மார்த்தம்னா ஆத்மாவோட இருப்புள்ளன்னு பொருள். கேட்டுப்பாரு…”
நீண்டநாட்களுக்குப்பின்னர் தற்செயலாக பிரமிளின் இவ்வரிகளை நினைத்துக்கொண்டேன். ஏன் கவிஞர்களுக்கு வார்த்தைகள் நிறைய இருக்கவேண்டும்? ஏனென்றால் எல்லா வார்த்தைகளும் இங்கே நம் முன்னோர்கள் ஒரு பொருளின்பொருளைக் கண்டடைந்த தருணத்தின் சான்றுநிலைகள். ஒரு முதலறிவுநிலையின் ஒலிக்குறிகள். தலைமுறை தலைமுறைகளாக கைபட்டுக் களிம்பேறியவை. வாழ்ந்தவர்கள் எண்ணியதெல்லாம் வார்த்தைகளாகவே இங்குள்ளன. கவிஞன் வாழும் உலகம் அவ்வார்த்தைகளால் ஆனது. வார்த்தைகளைக் குறைத்துக்கொள்ளும் கவிஞன் கவித்துவத்தாலும் குறைந்துகொண்டே செல்கிறான்
கைக்குழந்தை விளையாட்டுப்பொருட்களை என சொற்களைக் கையாளும்போதே அவன் கவிஞன். யானையை வாலைப்பிடித்து தூக்குவான். கரடியின் காதைப்பிடித்து. கலத்தை கவிழ்த்து கீழிருந்து எடுப்பவன். சொற்கள் மீதான விந்தையான காதலே கவிஞர்களை மொழிக்குள் துழாவச்செய்கிறது. நான் பார்த்தவரை சொற்களால் கிளர்ச்சியடைபவர்களில் முதல்வர் தேவதச்சன். ஒரு சொல்லை நாம் எண்ணியிராத ஒரு வழியினூடாக அணுகிவிட்டாரென்றால் முகம் மலரும். சோடாப்புட்டிக் கண்ணாடிக்குள் சிரிப்பு தேங்கும். தலையை ஆட்டி ஆட்டி தனக்குத்தானே மகிழ்ந்துகொள்வார்.
சொற்களில் அர்த்தங்கள் கொட்டப்பட்டிருக்கின்றன—அந்தக்காலத்தில் அடுக்குக் கலத்தில் பொருட்களை வைப்பதுபோல. காலந்தோறும் மேலும்மேலுமென அடுக்கப்பட்டுள்ளன. எடைக்குத்தக்க வைக்கப்பட்டுள்ளன. நாம் வழக்கமான அன்றாட வாழ்க்கையில் அவற்றை வரிசையாக எடுக்கிறோம் , வரிசையாகத் திரும்ப வைக்கிறோம். கவிஞன் குழந்தைபோல கொட்டிக்கவிழ்த்து காட்டுகையில் நம் முப்பாட்டன் மறந்து விட்டு சென்ற அரும்பொருள் ஒன்றை மீண்டும் கண்டடைகிறோம்.
கண்டராதித்தனின் ஏகாம்பரம் [நானே போட்டுக்கொண்ட தலைப்பு] என்னும் கவிதை அவ்வாறு முற்றிலும் புதிதாகப்பிறந்த ஒரு சொல்.
நான்குகட்டு ஓடுவேய்ந்த
ஏகாம்பரம் இல்லாத வீட்டில்
ஏகாம்பரம் ஏகாம்பரம் என்றேன்
ஏகாம்பரம் இல்லாத
வீட்டிலெல்லாம் மூதேவி
உன் கட்டைக்குரல்தான் முட்டுகிறது
கேடு ஏகாம்பரத்திற்கா ஏகாந்தத்திற்கா
என்றது உள்ளிருந்து வந்த குரல்.
ஏகாம்பரத்தின் வீடே ஆனாலும் வீட்டுக்குள் ஏகாம்பரம் நிறைந்துதான் இருக்கும். ஏக அம்பரம், ஒற்றைப்பெருவானம், கடுவெளி, வெறுமைப்பெருக்கு, இல்லாத இடம் என ஒன்றில்லை. வெளியே நின்று ஏகாம்பரம் ஏகாம்பரம் என்று கூப்பிட்டால் அங்கிருந்து வெளியே சென்றிருக்கும் உருக்கொண்ட ஏகாம்பரத்திற்கு கேட்காது. எல்லா ஓசைகளும் சென்று சேரும் உருவறியா ஏகாம்பரத்துக்கோ அது ஒரு பொருட்டே அல்ல. அங்கே அது முற்றிலும் தனித்திருக்கிறது. ஏக அந்தம். ஒன்றே இறுதியென. மூதேவி உன் கட்டைக்குரல் சென்று முட்டுவது ஏகாம்பரத்திலா ஏகாந்தத்திலா? உள்ளிருந்து கேளாக்குரல்.
அவ்விரு சொற்களையும்கொண்டு விளையாடிக்கொண்டே இருக்கிறேன். ஏகாம்பரத்தை அதுபாட்டுக்கு ஏகாந்தமாக இருக்க விடாது ஒலிக்கும் அந்த ஏகாம்பரம் ஏகாம்பரம் என்னும் கட்டைக்குரல் புன்னகைக்கவும் வைக்கிறது
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018
கண்டராதித்தன் கவிதைகள்
பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு
சாழற்மலர்ச்செண்டு