ம.இலெ. தங்கப்பா அவர்களின் மறைவுக்கு நான் அஞ்சலி எழுதியிருந்தேன். ஆனால் தமிழண்ணல், நன்னன் போன்றவர்களுக்கு அஞ்சலி எழுதவில்லை. இதுகுறித்து ஒரு கடிதம் வந்திருந்தது.
நான் எப்போதுமே பழந்தமிழில் ஈடுபாடுகொண்டவன். புத்திலக்கியம் ஆக்குபவர்களில் இன்று தனித்தமிழில் நாட்டம் கொண்டவன், தனித்தமிழில் படைப்பவன் நான் மட்டுமே என நினைக்கிறேன். வெண்முரசு தனித்தமிழ் இயக்கத்தின் உச்சங்களில் ஒன்று என ஐயமின்றிச் சொல்வேன். ஆகவே எப்போதுமே தமிழறிஞர்களை முன்னிலைப்படுத்தி வருகிறேன்
மொழியில் அடிப்படைவாத நோக்கு கொண்டவர்களிடமும் எனக்கு பிடிப்புண்டு. எந்த வகையான அடிப்படைவாதமும் ஓர் எல்லைவரை ஆழமான பண்பாட்டுச்செயல்பாடே என ஒரு முறை பி.கே.பாலகிருஷ்ணன் சொன்னார். எனக்கும் அதில் நம்பிக்கையுண்டு. சூழியல், இயற்கை வேளாண்மை, மாற்றுமருத்துவம் என அனைத்துத்தளங்களிலும் அடிப்படைவாத நோக்கு கொண்டவர்களை நான் ஏற்றுக்கொள்வது இதனால்தான். ஆனால் என் வரையில் ஒரு நிகர்நிலையை பேணமுயல்வேன்
தமிழண்ணல் மறைந்தபோது உண்மையில் மிகக்கடுமையான ஒரு கட்டுரையை எழுதினேன். அவர் மிக அடிப்படையான சில இலக்கணநூல்களை வைத்துக்கொண்டு பேசிப்பேசித் தமிழறிஞராகக் காட்டிக்கொண்டவர். தமிழின் நெடுமரபை, அதன் விரிவை அறியாதவர். அதன் அனைத்து வளர்ச்சிகளுக்கும் எதிரான அமைப்புசார் விசையாக செயல்பட்டவர்.
பேரா.நன்னன் குறித்த என் எண்ணமும் இதுவே. மிக அடிப்படையான இலக்கணத்தை மட்டும் கண்மூடித்தனமாகப் பேசிவந்தவர். ஆனால் அவ்விலக்கணப்பேச்சினூடாக அப்பட்டமான சாதிவெறியை கக்கிக்கொண்டிருந்தவர். எனக்கு இத்தகைய எதிர்மறை உளநிலைகளில் உழல்பவர்கள் மேல் எப்போதுமே எவ்வகை மதிப்பும் இருந்ததில்லை. சாதிவெறிக்கு மொழிப்பற்றை உறையாக்குவது தமிழில் உள்ள ஒரு நோய்க்க்கூறு.
பேரா.ம.இலெ.தங்கப்பா மேலே சொன்ன அவ்விருவரின் அதே கருத்தியல்தரப்பைச் சேர்ந்தவர். ஆனால் காழ்ப்புகளாக அந்நிலைகளை வளர்த்துக்கொள்ளாதவர். சாதியநோக்குக்கு அப்பால் நின்றவர். ஆகவேதான் அவரால் ஆக்கபூர்வமான பங்களிப்பை ஆற்றமுடிந்தது. அவர் நாஞ்சில்நாடனுக்கு எழுதிய இக்கடிதத்தில் அவருடைய உளநிலை வெளிப்படுகிறது
அவருடைய திராவிட இயக்கப் பிடிப்பு, தமிழ்ப்பற்று அவரை எப்படிச் செயல்படச்செய்தது என்பதை இக்கடிதத்தில் காண்கிறோம். அதேபோல அப்பற்று அவருக்கு எல்லை வகுத்து தன்காலகட்டத்து அறிவியக்கங்களில் இருந்து எப்படி முற்றாக அகற்றியது, எப்படி தேங்கச்செய்தது என்பதையும் காண்கிறோம்
ம.இலெ.தங்கப்பாவின் எளிய கவிதைகளில் ஆங்காங்கே தெரியும் கவித்துவம் அவர் சென்றிருக்கக்கூடிய தொலைவு மேலும் இருந்தது என்பதைக் காட்டுவது. அவருடைய ஆங்கில மொழியாக்கம் அவர் தமிழ்த்தொல்கவிதைகளை இன்றைய கவிதைநோக்கிலேயே அணுகியிருக்கிறார் என்பதற்கான சான்று. அவர் மீதான என் மதிப்பு அவர் விட்டுச்சென்ற இப்பங்களிப்பினாலேயே
——————————————————————————————-