ஏழாம் உலகம்- கடிதங்கள்

 

ezham-ulagam

ஜெயமோகன் அவர்களுக்கு,

 

 

தங்களது பதில் கடித்த்திற்கு நன்றி.

 

 

தங்களது ஏழாம் உலகம் படித்து முடித்தேன். படித்து முடித்த போது, என்னுள் எழுந்த உணர்வை விவரிக்க முடியவில்லை. அன்றாடம் நாம் பார்த்தும் பார்க்காத்து போல் போகின்ற மனிதர்களின் கதை. இனி என்னால் அவர்களை சாதரணமாக கடந்து செல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஒரு எழுத்தாளரால் இப்படியும் கூட சொல்லவொன்னாத உணர்ச்சிகளை, வாசகனுக்குள் எழுப்ப முடியுமா? அருமை.

 

 

படித்த பின்பு தான் நான் கடவுள் திரை படம் பார்த்தேன். நாவலுடன் ஒத்திட்டு பார்க்கும் பொழுது படம் பாதி அளவு கூட இல்லை என்பதே என் கருத்து. கட்டாயமாக சினிமா பல விடயங்களில் சமரசம் செய்யப் பட்டிருக்கும். ஒருவேளை வாசிப்பில் ஈடுபாடு இல்லாதோர்க்கு பிடித்திருக்குமென்று நினைக்கிறேன்.

 

 

சுபத்ரா

 

naveen

ஏழாமுலகின் காமம்

 

அன்புள்ள ஜெ,

 

 

தங்கள் தளத்தில் இன்று வெளியான “ஏழாமுலகின் காமம்” –  விஷ்ணு கேள்விக்கு ஒரு பதில் எழுதலாம் எனத் தோன்றியது அதன் நீட்சியே இக்கடிதம். இதில் பிழையேதும் இருந்தால் என்னைத் திருத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

நண்பர்  விஷ்ணுவிற்கு:

 

முதலில் இந்த கேள்விக்கு நான் பதிலெழுதும் காரணம், தாங்கள் அடைந்த சிக்கல்களை நானும் வேறு சில நாவல்களில் என் ஆரம்பநிலை வாசிப்பில் சந்திக்க நேர்ந்ததனாலும், இதற்கான ஜெ. மோ சாரின் ஒரு சில கருத்துகளைக் கேட்டறிந்ததாலும் தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஒரு முறையேனும் சாரை சந்தித்திருந்தால் தங்களிடமிருந்து இக்கேள்வி எழுந்திருக்காது. இலக்கிய வாசிப்பின் முறைகளையும், அதன் தேவைகளையும் மிக தெளிவாக தங்களுக்கு புரியும் வண்ணம் விளக்கியிருப்பார். மேலும் நான் ஏழாம் உலகம் இதுவரை வாசிக்கவில்லை ஆகையால் என் இந்த பதில் ஒரு பொது நாவல்கள் குறித்த பதிலாகத் தான் இருக்கும் என்பதையும் முன்னமே தெரியப்படுத்துகிறேன்.

 

நீங்கள் வாசித்த முதல் இரண்டு நாவல்களும் வெவ்வேறு தளங்களை சார்ந்தவை. அறம் – இவை உண்மை மனிதர்களின் சிறுகதை தொகுப்பு, பனிமனிதன் – குழந்தை நாவல் (தினமணி நாளிதழில் வெளிவந்த கதையின் தொகுப்பு அவை) இங்கே காமம், வஞ்சம், குரோதம், துரோகம் போன்ற நம்மைப் போல் வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கைக்கு மட்டும் இடமில்லாமல் குழந்தைகளுக்கும் ஏதுவான ஒரு நாவலாய் அவை அமைந்தன. இதை தவிர்த்த தமிழ் நாவல்களை நீங்கள் பொது நோக்கில் வாசித்தால் பெரும்பாலும் அவை லௌகீக சிக்கல்களுக்கு உட்பட்டே பேசப்பட்டிருக்கும் (மகாபாரதத்திலிருந்து இன்றைய வெண்முரசு வரை நீங்கள் இது மேலோங்கி நிற்ப்பதைப் பார்க்கலாம்) . இதற்கான காரணங்கள் கீழே,

 

  1. நான் என்ற வாசகன் தன்னை மட்டுமே பார்க்கிறான், ஆனால் நான் என்ற எழுத்தாளன் தன் சமுகத்தின் மொத்தமாக நின்றுப் பார்க்கிறான். அதனிடமிருந்தே அவன் எழுத்தைப் பெருகிறான். நாம் நம் வட்டத்திற்க்குள் நின்றுக் கொண்டு இதனை வாசிக்கும் போது நமக்கு ஒரு பெரும் காழ்புணர்ச்சி/ கசப்புத்தன்மை உணர்வது இயற்க்கை தான். ஆனால் அதனைத் தாண்டி வெளியே வந்து வாசிக்கும் போது தான் ஒரு விரிவான வாசிப்பு நம்மிடம் சிக்கும். உதாரணமாக அம்மா வந்தாள் நாவலை சொல்லலாம் அதிலுள்ள அலங்காரத்தம்மாள் நம் சுற்றத்துள் சந்தித்திராத ஒரு கதாப்பாத்திரம் ஆனால் அப்படி ஒரு கதாப்பாத்திரம் நம் சமுகத்தில் வாழவும் வாய்ப்புண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

 

  1. இரண்டாவது இலக்கியம் பேசும் கருத்து: நீங்கள் குறிப்பிட்ட அதே தகவலை ஒரு செய்தி தாளில் வாசிப்பதற்க்கும், இலக்கிய நாவலில் வாசிப்பதற்கும் தங்களால் சிறிதளவேனும் வேறுபாடு கண்டிருக்க வாய்ப்புள்ளது என யூகிக்கிறேன். நாவல் வாசிப்பு இத்தகைய சிக்கல்களில் இருந்து நம்மை விடுபட்டுச் செல்ல பெரிதும் உதவும் மேலும் இத்தகைய பல தரப்பட்ட மனிதர்களைப் பற்றிய ஒரு காட்சிப் பிம்பத்தை தரும் இன்றில்லை என்றாலும் என்றாவது நீங்கள் ஏதோ ஒரு லௌகீக சிக்கல்களுக்கு உட்பட நேர்ந்தால் அதற்கான தீர்வுகளை வாசிப்பின் மூலம் நீங்கள் முன்னரே கண்டடைந்திருப்பீர்கள். இதற்கும் என் சொந்த உதாரணம் சொல்லலாம், நீங்கள் சொன்ன சந்தர்பங்களை நான் வாசிக்க நேரும் போதெல்லாம்காடு நாவலில் வரும் கிரி கதாப்பாத்திரம் தான் என் மனதில் எழும். கிரி  ஐயரிடம் கேட்கும், “நான் எங்கே தவறினேன்  என்ற ஒற்றை வரி தான் என் மனதில் அசைப்போட்டுக் கொண்டிருக்கும் (இன்று உங்கள் கருத்தை வாசிக்கும் போது கூட) மிக எளிமையான வரி ஆனால் அது மொத்த இலக்கியத்திலிருந்து பெறப்படும்பொழுது மொத்த இலக்கியத்தின் கனமும் அந்த ஒற்றை வரியில் தான் இருக்கிறது எனக் கருதுகிறேன். அதிலிருந்த மீண்டு வந்து அந்நாவல் முழுவதையும் அசைப்போடுகிறேன். இதே கருத்து ஏழாம் உலகம் நாவலிலும் பொதிந்திருக்கும் என்பதில் எனக்கு எவ்வித  ஐயமுமில்லை. நீங்கள் மறுவாசிப்பிற்கு முயற்சித்துப் பாருங்கள் கண்டிப்பாக பொரி சிக்கும்.

 

  1. இறுதியாக தன் கதாப்பாத்திரத்தை தீர்மானிக்கும் உரிமை எழுத்தாளனுக்கு மட்டுமே உரியது அதை மாற்றியமைக்கும் உரிமை நம்மிடமில்லை. நாம் கருத்துக்கள் தெரிவிக்கலாம் நமக்காகவே ஜெ எழுதுகிறார் ஆனால் அதன் போக்கை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதே நான் சொல்லிக் கொள்வது. இதை எளிமையாக்க நீங்கள் ஒரு படம் பார்க்கிறீர்கள் உங்களுக்கு பிடித்தமான ஒரு கதாநாயகனின் படம் ஆனால் நாயகன் இறுதியில் மடிவது போல் கதை முடிகிறது (இது இயக்குனரின் விருப்பம்) தனிப்பட்ட முறையில் இது உங்களை உலுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் கதைக்கு அது தேவை என்கிற பட்சத்தில் ஒரு பொது ஜன விமர்சகராக உங்கள் கோணம் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை உங்களிடமே விட்டுவிடுகிறேன். அதை ஒத்தே தங்கள் இன்றைய கருத்திற்க்கும் பதில் அடங்கியிருக்கின்றன.

 

 

மேல் சொன்ன காரணங்களால் தங்கள் கருத்து நிராகரித்து பேசிவிட்டேன் என்ற அர்த்தத்தில் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு தனி சுவையுள்ளது, தனி ரசனையுள்ளது. உங்கள் சுவை என்னோடு ஒத்துப்போகாமல் இருந்திருக்கலாம் ஆனால் நீங்கள் எழுப்பியே மாற்றியிருக்கலாமே என்ற கேள்விக்கு பதிலாகவே இதனை எழுதினேன்.

 

 

நட்புடன்,

நவின்.Gssv.

 

 

ஏழாம் உலகம் வாங்க

ஏழாம் உலகம் மின்னூல் வாங்க

ஏழாம் உலகம் விமர்சனங்கள் தளம்

முந்தைய கட்டுரைதூத்துக்குடி மாசு -கடிதம்
அடுத்த கட்டுரைதும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்