நடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்
அன்பின் கங்கா,
வணக்கம். உங்களுடைய கட்டுரையை ஜெமோவின் தளத்தில் வாசித்தேன். (I have read your articles on JK’s other works too.) Loved the flow of thoughts, thanks for sharing.
என் கருத்துக்கள்
சார்பற்ற அன்பின் நிரந்தரத்தை அறியும், வெளிக்காட்டும் பெண் என்பவள் ஜெயகாந்தனின் முன்மாதிரி தலைவி. உறவு நிலைகளில் பெண்ணால் தனித்து (dispassionate) இயங்க முடிகிறது. எல்லாவற்றையும் கடந்து கொண்டே இருக்க முடிகிறது. ஆணிற்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும் குணம் இது. அவள் கடந்து செல்லும் கணத்தை அவன் எதிர்நோக்கிக் கொண்டே பயணிக்கிறான். எத்தனிப்பு யதார்த்தமாகும் பொழுது அவன் குழம்பி விடுகிறான், மரப்பசுவின் கோபாலியைப் போலவோ, கன்னியாகுமரியின் இயக்குனரைப் போலவோ.
ஒரு வகையில் திஜா வின் மரப்பசுவும் ஜெயமோகனின் கன்னியகுமாரியும் ஒரு ஆணின் உச்சகட்ட உணர்வு தள்ளாட்டத்தின் விளிம்பில் நின்று பெண்களை பார்ப்பவை. தலைவிக்கு அவ்வளவு நாடகத்தனமான அழகும் திறமையும் இல்லாவிடினும் அவளால் தோள் குலுக்க இயலும். இயல்பில் அவன் அம்மா வந்தாளின் திரு. அலங்காரத்தைப் போல இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் . இல்லை, காரைக்கால் அம்மையாரின் (புனிதவதி) கணவன் பரமதத்தனைப் போல் இரவோடு இரவாக வெம்மைத் தாளாது ஓடிவிடுவான்.
தனித்திருக்கும் பெண்ணை சமூகம் எச்சரிக்கையுடன் கையாள்கிறது. இவள் எந்த எல்லைக்கும் செல்வாள் என்பது போல. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை தவறாக அன்பெனப்படுவது அடைக்கும் தாழ் என்று சமூகம் வகுத்துள்ளது. சாராமல் வாழும் அன்பு சேராமல் தனித்திருக்கக் செய்யுமோ என்ற அடிப்படை பயம் அதற்கான காரணமாக இருக்கலாம்.
உண்மையில் தனிப்பறவைகளும் வானில் தான் பறக்கும். அவை பறப்பதற்கென வேறு வானென்று ஒன்றில்லை.
பார்க்கவி
***
அன்புள்ள ஜெ
கங்கா ஈஸ்வர் எழுதிய ஜெயகாந்தனின் நடிகை நாடகம் பார்க்கிறாள் கதைபற்றிய கட்டுரை சமீபத்தில் நான் வாசித்த ஒரு நல்ல கட்டுரை. உங்கள் தளத்தை பார்க்கிறேன். இதில் வாசகர்களினால் தொடர்ச்சியாக பேசி நிலைநிறுத்தப்படும் தமிழ் எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர்தான்.
இங்கே உருவாக்கப்பட்டிருந்த விமர்சன அளவுகோலில் ஜெயகாந்தன் இந்த வரிசையிலிருந்து வெளியேதான் நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் தீவிரமான வாசகர்களால் அவர் எப்போதும் இந்த வரிசையில்தான் வைக்கப்படுகிறார். ஜெயகாந்தன் பிரபல இதழ்களில் எழுதியதனால் மட்டுமல்ல பிரபலமாக இருந்ததனாலும் சிற்றிதழில் எழுதிய விமர்சகர்கள் அவரை வெளியே நிறுத்தினர் என்றுதான் கொள்ளவேண்டியிருக்கிறது. உண்மையில் அவர் இறந்தபின்னர் சென்ற பத்துப்பதினைந்தாண்டுகளாக வாசிக்கவந்தவர்களால்தான் அவர் அதிகமாகப் பேசப்படுகிறார்.
அதிலும் பெண்கள் அவரைப்பற்றி இத்தனை ஆழமாகப்பேசுவது அவர் அவர்களுடன் ஆழமாக அறிவார்ந்து உரையாடுகிறார் என்பதையே காட்டுகிறது. இந்தக்கட்டுரையையே நான் உதாரணமாகக் காட்டுவேன். இந்தத்தரத்திலே தமிழில் வேறெந்த எழுத்தாளரைப்பற்றியும் கட்டுரைகள் வருவதில்லை. ஜெயகாந்தனின் பழைய வாசகனாக எனக்கு மிகப்பெரிய நிறைவை இது அளிக்கிறது
சத்தியமூர்த்தி
***
அன்புள்ள ஜெ
கங்கா ஈஸ்வர் ஜெயகாந்தனைப்பற்றி எழுதிய இரு கட்டுரைகளையும் இப்போதுதான் வாசித்தேன். உண்மையில் நான் ஜெயகாந்தனை இப்படி நுணுக்கமாக வாசித்ததில்லை. ஜெயகாந்தனுக்கு உள்ள பிரச்சினை என்னவென்றால் அவர் பிரபல இதழ்களில் எழுதியதனால் அவருடைய எழுத்துக்கள் எல்லாருக்கும் எளிதாகக் கிடைக்கும். ஆகவே சின்னவயசிலேயே வாசித்துவிடுவார்கள். அப்போது வெறும்கதையாகவே அவர்களுக்கு அந்த படைப்புக்கள் வந்துசேரும். அவற்றை ஆழமாக ஆராயும் மனநிலை இருக்காது. பின்னர் சின்னவயசிலே வாசித்த ஞாபகத்தைக்கொண்டுதான் பேசிக்கொண்டிருப்பார்கள்.
இது என் அனுபவம். நான் ஜெயகாந்தன் மறைந்தபிறகுதான் அவர் எழுதியவற்றை வாசித்தேன். நடை கொஞ்சம் பழையதாகத் தெரிந்தாலும் சிந்தனையைச் சீண்டி நெடுந்தூரம் சிந்திக்கவைக்கும் படைப்புகளாகவே அவை இருந்தன. ஜெயகாந்தனை நாம் சரியாக வாசிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் எழுப்பும் பிரச்சினைகளை வாசகர்களாக நாம் எதிர்கொண்டால்மட்டுமே அவை வளர்கின்றன. இல்லாவிட்டால் எளிமையான கருத்துக்களாக மட்டுமே அவை தோற்றமளிக்கும். கங்கா ஈஸ்வர் ஜெயகாந்தனின் கதையை வாசித்து அக்கதையின் கருத்துக்களை எதிர்கொள்கிறார். ஆகவேதான் ஆழமான ஒரு விவாதத்தை அவரால் உருவாக்க முடிகிறது
மகாதேவன்
***