குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018
கண்டராதித்தன் கவிதைகள்
கவிஞர் கண்டராதித்தன் அவர்களுக்கு கவிஞர் குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது எனும் செய்தி மகிழ்வு அளித்தது . முந்தய விருது பெற்ற கவிஞர் சபரிநாதன் கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக இணையத்தில் வாசித்திருந்தேன் . விருது அறிவிப்புக்குப் பிறகே அவரது தொகுதிகளை தேடிப் படித்தேன் . இம்முறையும் அவ்வாறே .
புனைவுகள் என்று வருகையில், என் தேர்வில் கவிதைகள் இரண்டாம் நிலையில் நிற்கக் காரணம் கவிதை எனும் இயல் ரசனையின் உச்ச சிகரத்தில் திகழ்வது . ஒவ்வொரு முறையும் முற்றிலும் எனது வாசிப்பு பழக்கங்களை கைவிட்டு புதிய வாசிப்பு சாத்தயங்களை மேற்கொள்ள கோருவது , நின்று உலவ நிலம் இன்றி அப்படியே உயர்த்தி வானில் எறிவது . ஆகவே கவிதை தேர்வில் புதிய களம் நோக்கிய ஆவல் இருந்தாலும் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் தான் அதை அணுகுவேன் . ஆவலில் தேடி சென்று நீங்கள் கை வைக்கும் புதிய கவிதை ஒன்று வெறும் மொழி சிதிலம் என அமைந்து விட்டால் , அல்லது முக்கியமான கவிஞரின் சரியாக அமையாது போன கவிதையே வாசிக்க நேரும் அவருடைய முதல் கவிதையாக அமைந்து போனால் , அது அளிக்கும் ஆயாசம் கொஞ்சம் நஞ்சம் அல்ல . ஆகவே என் வாழ்வனுபவத்துக்கு அணுக்கமாக வந்து விழும் கவிதை எதுவோ அங்கிருந்து ,அது எவருடையதோ அவரது உலகுக்குள் நுழைவது எனது வழிமுறை .
கொள்ளிச்சட்டியுடன் விடுவிடுவென்று நடந்து கொண்டிருந்தேன் . அழக்கூடாது அழக்கூடாது எனக்குள் பல்லாயிரம் முறை சொல்லி என்னை நானே உருவேற்றி இருந்தேன் .மாறும் இதுவும் மாறும் இந்த நாளை கடந்து விடு ,கடந்து விடு ,நடந்து நடந்து கடந்து விடு . சொட்ட சொட்ட நனைந்த உடலுடன் மார்கழி இறுதி நாள் குளிரில் ,கொள்ளி சட்டி கத கதப்பை உணர்ந்தபடி விறு விறு என நடந்தேன் . என் நடைவேகம் மிஞ்ச அவனும் பறையை கொட்டியபடி உடன் வந்தான் . குனிந்த தலை நிமிர்த்தாமல் நடந்தேன் .இணையாக பறை கொட்டி அருகே தொடர்ந்தது அவனது பாதங்கள் .
”டே சாவு கிராக்கி பொணத்த அங்க உட்டுட்டு நீங்க எங்கடா ஓடிக்கிட்டு இருக்கீங்க?” – கிளீனர் கதவை அறைந்து கத்த ,எங்களை கடந்து விரைந்த லாரியால் சுயநினைவு அடைந்தோம் . நடந்த வேகத்தில் என் பின்னால் வந்து கொண்டிருந்த சவ ஊர்வலத்தை எங்கோ போக்குவரத்து நெரிசலில் தவற விட்டிருந்தேன் . கண்தொடும் எல்லை வரை ஊர்வலத்தை காணோம் . போக்குவரத்து செழித்த அந்த மாலை நேர ஜனநெருக்கச் சாலையில் ,நிற்பதா ,அல்லது சுடுகாடு நோக்கி போவதா ,இல்லை திரும்பி சென்று ஊர்வலத்தில் சேர்ந்து கொள்வதா ? பிரமை பிடித்து அபத்தமாக நின்றிருந்தேன் , போதை தாழாமல் பறையை வெளுத்து எறிந்து கொண்டிருந்தான் அவன் . இருபது நிமிடம் கழித்து வந்து சேர்ந்தது ஊர்வலம் , சாபம் போல பொரியை கோபத்துடன் சாலையில் விசிறியடித்தபடி. என்னை முறைத்தபடி முன்னால் வந்து கொண்டிருத்தான் என் தம்பி .
முட்டாள்களிடம் கடவுள் அன்பாய் இருக்கிறார் என்பது உண்மைதான்”
வித்வான் ஷண்முகசுந்தரம் ஒரு தவில் கலைஞர்
அவர் எல்லோராலும் முட்டாளாக
மதிக்கப்படுபவரென்றால் அது மிகையாகாது
குறிப்பாக அவரது மூத்த சகோதரர் பாலண்ணன்
எவ்வளவு நேர்த்தியாக அடித்தாலும்
ஒரு அடி பிந்திவிடுவது ஷண்முகத்தின் வழக்கம்
அப்போதெல்லாம் பாலண்ணன் லாவகமாக
நாதஸ்வரத்தில் ஒரு இடியிடிப்பார்
சிலர் இவரை ‘தனித்தவில் கலைஞர்’ என்றும்
நகைச்சுவையாகக் கூறுவதுண்டு
அன்று மாவட்ட எல்லையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி
வாசித்துக் கொண்டிருந்த நூறு வித்வான்களில்
ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம்
ஒன்று, முதலாக இருந்தார்
அல்லது
கடைசியாக இருந்தார்
நிகழ்ச்சி முடிந்து
செம கடுப்பில்
அவரை அம்போவென கைவிட்டுக் கிளம்பினர்
தான் ஒரு முட்டாள் என்பதையறியாத
ஷண்முகசுந்தரம்
உண்மையாகவே தனித் தவிலடித்தபடி
நெடுஞ்சாலையில் நடக்கிறார்
டாரஸ் லாரியில் வந்த கடவுள்
நிறுத்தி
வருகிறீர்களா என்று கேட்டார்
அப்போது
ஸ்ரீமான் ஷண்முகசுந்தரத்திற்கு பெருமை பிடிபடவில்லை.
என்ன நடந்திருக்கும் ? ‘ஓரமா போடா சாவு கிராக்கி’ என்று டாரஸ் லாரி ட்ரைவர் திட்டி இருப்பான் . திட்டுகளை மட்டுமே பாராட்டாக பெற்று வாழ்த்து கொண்டிருக்கும் நம்ம வித்வான் அகமகிழ்ந்திருப்பார். அல்லது டாரஸில் கடவுள் சாவு வடிவில் வந்திருக்கலாம். டாரஸ் என்றால் எருமை
பெரும்பாலும் இசை யின் கவிதை உலகை சேர்ந்த கதைக்கவிதை . ஒரு தருணத்தின் மிகச்சிறந்த சித்திரம். ஆனால் வலிந்து உருவாக்கிய அர்த்தம் ஏதும் இல்லை. கருத்திலிருந்து சென்றடைந்த அனுபவம் அல்ல. இது ஓர் எழுத்துவகைமை. இசையின் வழியாக இது எனக்கு அறிமுகமானதனால் இவ்வாறு என்னளவில் வகைப்படுத்திக்கொள்கிறேன்.
இதிலுள்ள அபத்த அம்சம் சோர்வூட்டுவது அல்ல, வாழ்க்கையை ’சர்தான்’ என்று வாழும்படிச் செய்வது. கண்டராத்தித்தனின்
நீண்டகாலம் நண்பனாக இருந்து
விரோதியானவனை வெளியூர்
வீதியில் சந்திக்க நேர்ந்தது
பதற்றத்தில்
வணக்கம் வணக்கம் என்றேன்
அவன் நடந்துகொண்டே
கால்மேல் காலைப்
போட்டுக்கொண்டே போனான்.
…என்ற கவிதையும் பெரிதும் இதே உலகத்தை சேர்ந்ததே . கால்மேல் கால்போட்டு சாலையில் நடப்பதன் கம்பீரத்தை நினைத்தால் வரும் புன்னகையுடன் மட்டுமே இக்கவிதையை எண்ணிக்கொள்ளமுடிகிறது. இசையின்
இந்த முறை
உன்னை உறுதியாக அறுத்து விட்டேன்
இனி எங்கேனும்
வழியில் கண்டால் தலையை ஆட்டிக்கொள்வதென
எப்படி தலையாட்ட வேண்டுமென்று
ஆட்டி ஆட்டிப்பார்ப்பது
இது 119 ஆவது முறை
என்ற கவிதையை நினைத்துக்கொண்டேன். நவீனக் கவிதைகளை வாசிக்கையில் ஒரு கவிதையிலிருந்ஹு இன்னொன்றுக்கு என தொடுத்துக்கொள்வது அவ்வனுபவத்தை நிறைவுறச்செய்கிறது.
கண்டராதித்தனின் மூன்று நாட்கள் கவிதையும் , ஞானப்பூங்கோதைக்கு நாற்பது வயது கவிதையும் பெரிதும் தேவதச்சன் கவிதை உலகை சார்ந்தவை என்று சொல்லி விட முடியும் . இந்த வாளை பரிசாக வைத்துக்கொள் கவிதை யுவன் கவிதை உலகுக்கு அருகில் வருவது . இசை சொல்லாமல் விட்ட இசையின் உலகு ,தேவதச்சன் சொல்லாமல் விட்ட தேவதச்சன் உலகு . யுவன் சொல்லாமல் விட்ட யுவன் உலகு என நான் வகைப்படுத்திக்கொள்கிறேன். இது எனக்கான ஒரு ரசனை முறை. நையாண்டி இல்லாத இசை. விலகல் இல்லாத தேவதச்சன். தத்துவம் இல்லாத யுவன்.
இந்த கவிதைகளை எவற்றையும் ‘போல ஆகாமல் தனிக் கவிதைகளாக நிலைநிறுத்தும் அம்சம் எது ? அதை கண்டராதித்தன் மட்டுமே கண்டு சொல்லும் ”தனித்துவமும் ” ”உண்மையான உள எழுச்சியும் ” என வகைப்படுத்தலாம் . இவற்றுக்கு வெளியில் நின்று எது முற்று முழுதான கண்டராதித்தன் கவிதைகள் என்று பார்த்தால் உடனடியாக சஞ்சாரம் சீபத்த ,மற்றும் திருச்சாழல் இரண்டு கவிதைகளையும் சொல்லலாம் .
ஷங்கர் ராமசுப்ரமண்யன் உள்ளிட்ட கவிஞர்கள் ஒரு வாசகன் கண்டராதித்தன் கவிதைகளை முழுவதும் உள்வாங்க போதுமான அளவு மரபின் மீதான பயிர்ச்சி தேவை ,அப்போதுதான் இவரது கவிதைகளை முழுவதுமாக ரசிக்க இயலும் என கருதுகிறார்கள் . அதை மரபின் மீதான பயிற்ச்சி தேவை என்பதை விட ,அந்த மரபு உருவாகி வந்த பின்புலம் சார்ந்த அறிமுகம் தேவை என நான் சொல்வேன் . உதாரணமாக இந்த கதை .
சிங்கள மன்னன் ஒருவன் .பௌத்தன் .தனது ஞான குருவுடன் மாணிக்கவாசகருடன் சம்வாதம் புரிய தில்லை வருகிறான் .உடன் அவனது மகள் .அவள் பிறவி ஊமை . குறிப்பிட்ட நாளில் வாதம் துவங்குகிறது . ஞான குரு சிவனின் தோற்ற நிலைகள் குறித்து உள்ளே கேலியை பொதிந்த தர்க்கப்பூர்வமான கேள்விகளை கேட்கிறார் .மாணிக்கவாசகரோ அதற்கு புன்னகையுடன் இதற்கு மன்னன் மகளுக்கே பதில் தெரியுமே , அவரை விடுத்து என்னை ஏன் தேடி வந்தீர்கள் என்று வினவுகிறார் . குரு கடும் சினத்துடன் அவள் பௌத்த நெறி தழுவியவள் ,பிறவி ஊமை என்கிறார் . மாணிக்கவாசகர் மாறாத புன்னகையுடன் வெளியே தெரியும் பெண் அல்ல உள்ளே உண்மையாக இருக்கும் பெண் .அதை அறிய மற்றொரு பெண்ணால் மட்டுமே முடியும் என்று சொல்லி ,சிவனை துதித்து குருவை பெண்ணாக மாற்றுகிறார் ,மன்னன் மகளை பேச வைக்கிறார் . அப்படி இரு பெண்கள் இடையே சிவன் வடிவம் ,நிலை குறித்து நிகழ்ந்த வினா விடை வடிவிலான பாடலே மாணிக்கவாசகர் அருளியே திருச்சாழல் என்பது இங்கே சிதம்பரத்தில் பேசப்படும் கதைகளில் ஒன்று.
இந்தப் பின்புலத்தில் கண்டராதித்தனின் திருச்சாழல் கவிதையை பொருத்தினால் அன்றைய தத்துவ செறிவு கொண்ட பெண்ணிலிருந்து இன்றைய அலுவலக பெண் வரை கண்டராதித்தன் இழுக்கும் சரடு ,அந்த சரடில் அவர் பின்னும் உள்ளத்தின் அடுக்குகள் அதில் எழுத்து வரும் கவிதை அனுபவம் அனைத்தையும் அணுக இயலும் .
அது போலவேதான் சஞ்சாரம் சீபத்த கவிதையும் . கிள்ளிவளவன் ஒரு திருமணத்துக்காக கால் நடையாக கிளம்புகிறான் .அவன் முதலில் சேரும் ஊர் திருநாவலூர் . சுந்தரர் திருமணத்தை சிவன் வந்து தடுத்த ஊர் .அடுத்து வரும் ஊர் திருவதிகை .பெண்மையை துறந்து ,பேய்க்கோலம் ஏற்ற காரைக்கால் அம்மையார் பிறந்த ஊர் , இறுதியாக வரும் ஊர் கோவலூர் . முதல் ஆழ்வார் அனைவரும் ஒன்றாக நின்ற ஊர் , இந்த பின்புலத்தில் இந்த கவிதையை வைத்தால் ,இதில் வரும் கிள்ளி வளவனின் நண்பர்களின் வாழ்வில் துவங்கி ஆழ்வார்கள் நாயன்மார்கள் வரை கண்டராதித்தன் தொடுத்து விரிக்கும் சரடு விளங்கும் .
பெரும்பாதையை விட்டு சிறுபாட்டையை பிடிக்கிறான் வளவன் .இருள் கோதும் அந்தி நேரம் .அத்தி வாசனை வீசும் பாதை.வெண்பசு மிரள ,சரசரத்தது பெயர்சொல்லாதது — சென்ற தலைமுறையில் விழுப்புரம் கடலூர் பகுதியை சேர்ந்த பாட்டிகள் வசம் ஒரு வழக்கம் உண்டு . அது மாலை மயங்கிய பின் சூரியன் உதிக்கும் வரை பாம்பின் பெயரை சொல்லக்கூடாது என்பது . கண்டராதித்தன் கவிதைகளில் மரபு நுட்பமாக மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய சாலையில் நேற்றைய தொன்மம் நடந்துசெல்கிறது.
கண்டராதித்தனின் தனித்தன்மை நிலமும் ,தொன்மமும் ,வழக்காறுகளும் . நம் சூழலின் நவகவிகள் எழுதிய ஒர் மனநிலையிலிருந்து எழுதாத மனநிலையை நோக்கி ஒவ்வொரு நல்ல கவிதையிலும் எழுகிறார். நுண்மையாகச் செதுக்கப்பட்டதும் மிக எளிமையானதுமான ஒர் அணிகலன்கள் போலுள்ளன இக்கவிதைகள். மலர்கள் அவ்வாறுதான் உள்ளன. .
கடலூர் சீனு