அன்புள்ள ஜெ,
நலமா? நான் நலம்.
வெள்ளிக்கிழமை புத்தகக்கடைக்கு சென்ற போது உங்கள் வேறு சில புத்தகங்களோடு கன்னியாகுமரியும் வாங்கக்கிடைத்தது. இரண்டு நாட்களில் படித்தேன். வாசிக்கும்போது மேலோட்டமான ஒரு கதையை போல இருந்தாலும் கொஞ்சம் ஆழமாக வாசிக்க வேண்டியிருந்தது.
சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருமுறை கன்யாகுமரி தேவியை நானும் தரிசிக்க வேண்டும்.
நேற்று அருகில் உள்ள கடற்கரைக்குச் சென்று வந்தேன்.
கன்னியாகுமரி தேவி உற்பட , விமலா, ரமணி,பிரவீனா ,ஷைலஜா என ரவியின் வாழ்வில் வரும் எல்லா பெண்களுமே வெவ்வேறு ரகம்.கிட்டத்தட்ட எல்லாவகையான பெண்களையும் அவர்களின் இயல்புகளையும் இந்த நாவலில் அடக்கிவிட்டீர்கள்.
எனக்கு அதிசயம் என்னவென்றால் ஒரு எழுத்தாளனுக்குள் எப்படி ஒரு உளவியலாளன் இருக்கிறார் என்பது தான்? ரவியின் இயல்புகளை உடைய ,கிட்டத்தட்ட எல்லா இயல்புகளையுமுடைய அல்லது ஒன்றிரண்டு இயல்புகளையாவது கொண்ட ஆண்களை தினசரி வாழ்விலே கடந்து வரவே வேண்டியுள்ளது.
தான் அழைத்துச்சென்ற பெண்ணை 3 பேர் சேந்து வன்புணர்ந்ததில் ,தன் தவறொன்றுமில்லை என்று விலகுகிறான்.எத்தனை கீழ்த்தரமான செயல். .ஆயுளுக்கும் அவன் அந்த குற்ற உணர்ச்சியிலேயே உழழ்கிறான்.
நிஜமாய் சில ஆண்களை பார்த்தால் பாவமாக இருக்கும் , அவர்கள் தங்கள் வாழ்வின் பெண்களை வெல்வதிலேயே கவனமாயிருப்பதால், வாழ்க்கையை தோற்றுவிடுகிறார்கள். பின் அதற்கும் பெண்களையே காரணம் சாட்டுகிறார்கள். சிறுவயதிலிருந்தே அவர்களுக்குள் திணிக்கப்படும் ஆணாதிக்கமும் ,பெண்ணடிமைத்தனமும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
தான் நிராகரித்த பெண் தன் முன் சந்தோஷமாக ,சுதந்திரமாக வாழ்வது எத்தனை பெரிய அவமானமாக்கப்படுகிறது அவனுக்கு,எந்நேரமும் தன்னை அறியாமலே பிட்ச் பிட்ச் என்கிறான்.இது இயலாமையின் தோல்வியின் வெளிப்பாடு தானே.
இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எல்லா ஆண்களும் இதை நிச்சயம் படிக்க வேண்டுமென்பது என் எண்ணம் ஒரு சுய மதிப்பீட்டுக்காக . ஏனெனில் ஒரு ஆணால் இத்தனை ஆழமாக தெளிவாக ஆழ்மனதின் சிறுமைகள் துவேஷங்கள் படமிடப்பட்டு காட்டப்பட்டிருக்கிறது..
மீண்டும் ஒரு திருப்தியான வாசிப்பு மற்றும் கற்றல்.
அநேகம் பிரியங்களுடன்,
நிரோஜினி ரொபர்ட்
அன்புள்ள ஜெ
கன்யாகுமரி நாவலை இப்போதுதான் வாசித்தேன். உங்கள் படைப்புகளில் அதிகம் வாசிக்கப்படாதது என நினைக்கிறேன். அது வெளிவந்த காலகட்டத்தில் எதிர்ப்புகளும் இருந்தன என்று ஞாபகம். கன்யாகுமரி நம்மை ஏன் சீண்டவேண்டும் என ஒரு கட்டுரையை வாசித்த ஞாபகம் உள்ளது
எனக்கு அந்நாவலில் பிடித்த இரு கதாபாத்திரங்கள் விமலாவும் பிரவீணாவும். இருவருமே நம் சமூகம் முன்வைக்கும் ஒழுக்கநெறிகளை கடந்துவிட்ட பெண்கள். இருவருமே செக்ஸை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதை ஒரு விடுமுறை கொண்டாட்டம் மட்டுமே என விமலா பார்க்கிறாள். தன் இலட்சியத்தின் பயணத்தில் ஒரு சாதாரண சமரசம் என பிரவீணா நினைக்கிறாள்.
இந்த இரு பெண்களும்தான் அறிவுஜீவிகள். இருவருக்கும் வாழ்க்கையில் இலட்சியம் இருக்கிறது. கனவுகள் உள்ளன. சுதந்திரமாகவும் உள்ளனர். மற்ற பெண்கள் எல்லாருமே சாதாரணமானவர்கள். அற்பத்தனத்தில் கிடப்பவர்கள். இந்த நாவல் 1998ல் வெளிவந்துள்ளது. இருபது ஆண்டுகள் ஆகின்றன. அன்றைய தலைமுறைக்கு இது அதிர்ச்சி ஊட்டியிருக்கும். பெண்விடுதலை பேசினாலும் பெண்ணை கற்புக்கரசியாகக் காட்டுவதுதான் அன்றைய எழுத்தின் இயல்பு. இந்த தீவிரமான கதாபாத்திரங்களைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள்
இன்றைய சூழலில் கன்யாகுமரி மேலும் ஏற்புடையதாக தோன்றுகிறது. எதிர்காலத்தில் இன்னமும்கூட இது வாசிக்கப்படலாம். இதன் உச்சம் என்பது விமலா காட்டும் அந்தக் கருணையில், அவள் ஓர் அம்மாவாக நிற்பதில்தான் உள்ளது
ஆர்