செல்வராணியின் பயணம் -கடிதம்

IMG-20180510-WA0001

செல்வராணியுடன் ஒரு பேட்டி

 

அன்புள்ள ஜெ,

வணக்கம்

செல்வராணியின் இருசக்கர வாகனப்பயணம் குறித்த திரு கிருஷ்ணன் அவர்களின் பதிவினை வாசித்தேன்.

செல்வாராணி கடந்த ஊட்டி முகாமிற்கு திருச்சியிலிருந்து  இருசக்கரவாகனத்தில் வந்தபோதே நான் பிரமித்து அவரைப்பார்த்துக்கொண்டிருந்தேன். அதைவிடவும் ஆச்சர்யப்பட்டது அவரின் உணவுக்கட்டுப்பாட்டினைப்பார்த்து. முகாமில் பங்குபெற்ற நாங்கள் அனைவரும் அங்கு வழங்கப்பட்ட பல்வேறு விதமான சுவையான  சூடான உணவுகளை மகிழ்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் எந்த சலனமும் இல்லாமல் ஒரு சிறு கிண்ணத்தில் துருவிய தேங்காயும் வெல்லமும் கலந்து  சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

அவரின் இந்தபயணமும் எனக்கு பெரும் பிரமிப்பையும் கூடவே மகிழ்வையும் அளித்தது. உங்களின் புறப்பாடு மற்றும் மழைப்பயணங்கள், நண்பர்களுடனான பயணங்களின் அனுபவங்களை எல்லாம் வாசிக்கையில் அதில் பங்குகொள்ள முடியாத ஆதங்கமிருக்கும் எனக்கு எப்பொழுதும். ஆனால் செல்வராணியின் இப்பயணம் எனக்கு மிக்க மகிழ்வளித்தது

சைக்கிள் கூட ஓட்டத்தெரியாத ( அனுமதிக்கப்படாததால் ) எனக்கு இப்பயணம் பெரும் கிளர்ச்சியளித்தது உண்மையில் நானும் செல்வாராணியுட்ன மானசீகமாகப் பயணித்தேன் என்று கூட சொல்லலாம். அவர் புறப்பட்ட அன்றிலிருந்து திரும்ப வரும் வரைக்கும் இரவு உறங்கச்செல்கையிலும் அதிகாலை ஸ்வாமி அலமாரியின் முன்னால் விபூதியிட்டுக்கொள்ளும் போதும அவரை நினைத்துக்கொள்ள ஒரு நாளும் தவறியதில்லை , இப்போ எங்க இருக்கோ செல்வா, என்ன பண்ணுதோ என்று நினைத்துக்கொண்டேதான் காலையில் அடுப்பைப்பற்ற வைப்பேன்.

ஒருமுறை கூட எதற்கு செல்வாவிற்கு இந்த வேண்டாத வேலை என நினைத்ததே இல்லை, பெண்களை வீட்டைவிட்டு எங்கும் அதிகம் செல்ல அனுமதிக்காத கொங்கு பிரதேசத்தை சேர்ந்த ஒருத்தியாய் செல்வாவின் பயணம் எனக்கு உள்ளார்ந்த மகிழ்வினை அளித்தது மேலும் செல்வாவின் உடல்மொழியினை நானறிவேன, அவரால் பத்திரமாக சென்று திரும்பமுடியும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. நீங்களும் அவரின் பயணம் துவங்கிய போது எழுதிய பதிவினில் // தனது எல்லைகளை தானே மீறுவது சாகசம் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். செல்வாவின் இச்சாகசம் எனக்கு ஒரு பெண்ணாக பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தது.

அதுவும், கிடைத்த இடத்தில் கிடைத்ததைச் சாப்பிட்டு அதையும் பயண அனுபவங்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்புமின்றி பேலியோ உணவு எடுத்துக்கொள்பவராக, தன்னந்தனிமையில் அவர் சென்றது எனக்கு வாழ்கையில்  ஒரு மறக்கமுடியாத  நினைவு.

கல்லூரி விடுமுறை முடிந்து, ஜூனில் மீண்டும் திறந்ததும் மாணவிகளிடம் செல்வாவின் பயணம் குறித்து விரிவாக சொல்லக்  காத்திருக்கிறேன்

IMG_1513

கிருஷ்ணன் அவர்களின் பதிவில் முதல் வரியிலேயே ’’தனி நபர்’’ என்று குறிப்பிட்டிருந்தார், அதற்கும் செல்வாவின் ஒரு பதிலில் எனது பெரும்பாலான வருவாயையும், பொழுதையும் பயணத்திற்காக செலவிடுவது என முடிவுசெய்துவிட்டேன் என்பதற்கும் நேரடித்தொடர்பு இருக்கின்றது

தடைகளைத்தாண்டுவது மட்டும் அல்ல, எல்லைகளை உணர்ந்து அதற்குள் உயர உயரப்பறப்பதுவும்தான்  பெண் விடுதலை, அவ்வகையில் எங்களில் பலரைச்சுற்றிலும் கட்டப்பட்டிருக்கும் பிரியமென்றும் பாதுகாப்பென்றும் பெயரிடப்பட்டிருக்கும் முள்வேலிகளிலிருந்தும், அநீதிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு உயரப்பறந்து கொண்டிருக்கும் புதுமைப்பெண் செல்வராணி. ’’பார்த்துத்தீராத நாடு இந்தியா’’ என்னும அவர் கருத்து மிக வசீகரிக்கின்றது, கொஞ்சமாவது நானும் பார்க்கனும் என்னும் ஆவலையும் தூண்டியது

செல்வாவிடமிருந்து தொற்றிக்கொண்ட உற்சாகத்தினால் இந்த ஊட்டி முகாமின்போது  அங்கிருக்கும் peach மரத்தினடியில்  யாரோ நிறுத்தியிருந்த ராயல் என்ஃபீல்டு வாகனத்தின் அருகில் நின்று ஒரு புகைப்படமெடுத்துக்கொண்டேன். நானே நெடும்பயணமொன்றினை அவ்வாகனத்தில் சென்று வந்தது போல் ஒரு தோற்றமிருக்கிறது, புகைப்படத்தை பார்க்கையில் எனக்கு

எங்களில் பலருக்கு சாத்தியமாகாத  ஒன்று செல்வாவிற்கு அவரின் தன்னம்பிக்கையாலும் பயணங்களின் மீதுள்ள காதலினாலும் உங்களைப்போன்றவரகளின் வழிகாட்டுதல்களாலும் சாத்தியமாகி இருக்கின்றது. இப்பயணத்திற்கும் இனிமேலான அனைத்து வெற்றிகரமான பயணங்களுக்கும் செல்வாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

அன்புடன்

லோகமாதேவி

ooty 3

முந்தைய கட்டுரைதூத்துக்குடி மாசு
அடுத்த கட்டுரைபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து